search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கூடுவிட்டுக் கூடு பாய்ந்தவர்கள்
    X
    கூடுவிட்டுக் கூடு பாய்ந்தவர்கள்

    ஆன்மிக அமுதம் - கூடுவிட்டுக் கூடு பாய்ந்தவர்கள்

    கூடுவிட்டுக் கூடு பாய்ந்தவர்கள் குறித்து திருப்பூர் கிருஷ்ணன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    தவ ஆற்றல் நிறைந்த ஆன்மிகப் பெரியோர்கள் சித்துக்கள் நிகழ்த்துவதில் வல்லவர்கள். ராமாயணத்தில் அனுமன் சித்துக்களில் கைதேர்ந்தவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

    சித்துக்கள் பலவகை என்றாலும் பொதுவாக எட்டு எனப்படுகிறது. `அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்` ஆகியவை அவை.
    அணிமா என்றால் மிகச் சிறிய உருவெடுத்தல். மகிமா மிகப் பெரும் உருவெடுத்தல். அதுபோல் லகிமா காற்றில் பறக்கும் வகையில் கனமற்றதாக மாறுதல். கரிமா மிகுந்த கனமுடையவராய்த் தன்னை ஆக்கிக் கொள்ளுதல். பிராத்தி என்பது மனத்தால் நினைத்த அனைத்தையும் அடைதல். பிராகாமியம் என்பது உயிரைப் பிரித்து இன்னோர் உடலில் செலுத்துதல். ஈசத்துவம் என்பது தேவர்களுக்கும் ஆணையிடல். வசித்துவம் என்பது அனைத்தையும் வசப்படுத்துதல்.

    அணிமா சித்தில் தேர்ச்சி பெற்ற அனுமன் சோவெனப் பெய்யும் பெருமழையின் இடையே மழைநீர் மேலே படாதவாறு மிக மெல்லிய உருவெடுத்து மழைச்சாரலின் இடையில் நடக்கக் கூடியவன் என்று கம்ப ராமாயணத்திற்கு உரை எழுதிய வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் குறிப்பிடுகிறார்.

    திருவண்ணாமலையில் வாழ்ந்த சேஷாத்ரி பரப்பிரும்மம் இரவில் உறங்கும்போது தன் உடல் உறுப்புகளான கை கால் தலை இவற்றைத் தனித்தனியே பிரித்து வைத்து உறங்குவார் என்றும் காலையில் அவற்றை ஒன்றாகப் பூட்டிக் கொண்டு எழுந்து விடுவார் என்றும் ஒரு தகவல் உள்ளது.

    ஷிர்டி பாபா தமக்கு உணவுப் பொட்டலம் கொண்டுவரும் அன்பர்களின் பொட்டலத்தின் மேலே கட்டப்பட்டுள்ள நூலைத் தனியே எடுத்துவைத்துக் கொள்வாராம். இரவில் அந்த நூலை இரண்டு மரங்களின் இடையே கட்டி அந்த நூலில் படுத்து ஆனந்தமாக உறங்குவாராம்.

    வள்ளலார் வாழ்வில் அவர் இரும்பைப் பொன்னாக்கிய செய்தி வருகிறது. ஆனால் பொன்னை அவர் ஒருசிறிதும் லட்சியம் செய்யவில்லை.
    எண்வகைச் சித்துக்களில் ஒன்றான கூடுவிட்டுக் கூடு பாய்தல் என்பதே சம்ஸ்க்ருதத்தில் `பரகாயப் பிரவேசம்` எனப்படுகிறது.

    நமது ஆன்மிக மரபில் கூடுவிட்டுக் கூடுபாயும் சித்தில் தேர்ச்சி பெற்ற பல பெரியோர்கள் இருந்திருக்கிறார்கள். என்றாலும் இதை நிகழ்த்திக் காட்டியவர்கள் என மூன்று துறவியரைக் குறிப்பாகச் சொல்லலாம்.

    ஒருவர் காலடியில் பிறந்து காலடியால் பாரத தேசம் முழுவதிலும் நடந்தவரும் அத்வைத தத்துவத்தை நிறுவியவருமான ஆதிசங்கரர்.இன்னொருவர் திருமந்திரம் என்னும் ஒப்புயர்வற்ற செய்யுள் நூலை அருளிய திருமூலர்.மூன்றாமவர் தித்திக்கும் திருப்புகழை அருளிய அருணகிரிநாதர்.*ஆதிசங்கரர் மண்டனமிச்ரருடன் வாதத்தில் ஈடுபட்டார். மண்டனமிச்ரர் பிரம்மாவின் அவதாரம். அவர் மனைவி சரசவாணியோ சரஸ்வதியின் அவதாரம்.

    சங்கரரும் மண்டனமிச்ரரும் சரிசமமான புலமை உடையவர்கள். அவர்களிடையே வாதப் போட்டி என்றால் யார் வென்றார் என்ற முடிவை எப்படி அறிவது?
    சரசவாணி இருவர் கழுத்திலும் பூமாலைகளை அணிந்துகொள்ளச் சொன்னாள். யார் மாலை முதலில் வாடுகிறதோ அவரே தோற்றவர் எனத் தெரிந்துகொள்ளலாம் என்றாள்.

    ஒருவகையில் அது உண்மையும் கூட. தோற்பவர் உடலில் தோல்வியைத் தாங்க இயலாததால் உஷ்ணம் தோன்றுவது இயல்பு. உஷ்ணம் கழுத்தில் அணிந்து கொண்டுள்ள மாலையை வாடச் செய்வதும் இயல்பு தானே?

    போட்டியில் சங்கரர் தோற்றால் அவர் இல்லறம் ஏற்க வேண்டும் என்றும் மண்டனமிச்ரர் தோற்றால் அவர் துறவறம் பூண வேண்டும் என்றும் நிபந்தனை.
    என்ன சங்கடம்! வாதம் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே மண்டனமிச்ரரின் மாலை வாடத் தொடங்கியது. சரசவாணி தன் கணவர் தன்னை விட்டுப் பிரிந்து சன்யாசியாகி விடுவாரோ என மனத்தில் அச்சம் கொண்டாள்.  

    எனவே அவள் சாமர்த்தியமாக ஒரு கோரிக் கையை வைத்தாள். `இல்லறத்தில் கணவனும் மனைவியும் சரிபாதி என்பதால் சங்கரர் தன்னையும் வென்றால்தானே போட்டி முழுமையாகும்?` என்று கேட்டாள். சங்கரர் அவளுடனும் வாதம் செய்ய உடன்பட்டார்.

    சரசவாணி கடகடவென்று கேள்விகளைக் கேட்கத் தொடங்கினாள். அனைத்துக் கேள்விகளுக்கும் உடனுக்குடனே உரிய விடை அளித்தார் சங்கரர்.
    சரசவாணி திகைத்தாள். எந்தத் துறையில் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லிவிடுகிறாரே சங்கரர்? அவர் பதில் சொல்ல இயலாத துறை எது? யோசித்தாள். சடாரென ஒரு முடிவெடுத்தாள்.

    `இல்லற இன்பம் என்றால் என்ன?` என்று, ஒரு துறவியை நோக்கிக் கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டாள்.
    இதற்கு சங்கரர் எப்படி பதில் சொல்ல முடியும்? தூய துறவி இல்லற இன்பம் குறித்து எப்படி அறிவார்?
    கேள்வியைக் கேட்ட சரசவாணிக்கே தன் கணவரைத் தன்னிடமே தக்க வைத்துக் கொள்வதற்காக இப்படி ஒரு கேள்வியைக் கேட்டோமே என்று நாணம் தோன்றியது. அந்தக் கேள்விக்கு பதிலளிக்கக் கொஞ்சகாலம் அவகாசம் தருவதாகச் சொல்லி அப்போதைக்குப் போட்டியைத் தள்ளி வைத்தாள்.

    சங்கரர் தன் துறவுநெறிக்குப் பழுதில்லாமல் அந்தக் கேள்விக்கு விடை காண்பது எப்படி எனச் சிந்தித்தவாறே, கானகத்தின் வழியே சீடர்களுடன் நடக்கலானார்.
    அப்போது, விலங்குகளை வேட்டையாட வந்த அமருகன் என்ற மன்னன் அங்கே இறந்து கிடப்பதைக் கண்டார்.

    தன் சன்யாச ஆசிரமத்திற்குக் குறை நேராமல், கேட்கப்பட்ட கேள்விக்கு மன்னனின் உடல்மூலம் பதிலறிய முற்பட்டார். தன் உயிரை மன்னன் உடலில் செலுத்திக் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து மன்னனாக மாறினார் என்றும் கொஞ்ச காலம் புதிய உடலில் மன்னனாக வாழ்ந்தார் என்றும் சங்கரர் வரலாறு கூறுகிறது.
    மறுபடி சங்கரர் தன் உடலில் புகாதவாறு எதிரிகள் அந்த உடலை எரிக்க முற்பட்டார்கள். அதை ஞான திருஷ்டியால் உணர்ந்த சங்கரர் தன் உடலில் மீண்டும் வந்து புகுந்தார்.
    ஆனால் என்ன செய்ய? அடியவர்களுக்கு அருள்புரியும் அவரது வலக்கரம் அதற்குள் எரிந்துவிட்டிருந்தது.சங்கரரின் சீடர்கள் பதறித் துடித்தார்கள். இறைவனை வேண்டி வலக்கரத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு சங்கரரைப் பிரார்த்தித்தார்கள்.`லட்சுமீ நரசிம்ம மமதேஹி கராவலம்பம், லட்சுமி நரசிம்மரே எனக்குக் கைகொடுப்பாய்!` என்ற சுலோகத்தின் மூலம் நரசிம்மரைப் பிரார்த்தனை செய்தார் சங்கரர்.அப்போதுதான் அந்த அற்புதம் நடந்தது. வலது தோள்பட்டையிலிருந்து புத்தம் புதிதாய் ஒரு கரம் முளைத்தது!இவ்விதம் சோதனைக்காகத் தானே விரும்பிக் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தார் சங்கரர் என்கிறது அவரது திவ்ய சரிதம்.  

    *கருணையினால் கூடுவிட்டுக் கூடுபாய்ந்த வரலாறு தமிழின் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவரான திருமூலருடையது.
    சுந்தரநாதர் என்ற துறவி கைலாயத்திலிருந்து தென்னகம் வந்தார். ஸ்ரீசைலம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சீபுரம், திருவதிகை, திருவாவடுதுறை எனப் பற்பல தலங்களில் இறைச் சக்தியை வணங்கினார்.

    சாத்தனூர் அருகே வரும்போது உள்ளத்தை நெகிழவைக்கும் ஒரு காட்சியைக் கண்டார். ஆடுமாடுகளை மேய்க்கும் மூலன் என்ற ஆட்டிடையன் காட்டில் இறந்து கிடந்தான். அவனால் மேய்க்கப்பட்ட ஆனிரைகள் இல்லம் திரும்பாது கண்ணீர் வடித்தவாறு சுற்றிலும் நின்று கொண்டிருந்தன.
    ஆனிரைகளின் துயரத்தைக் கண்ட சுந்தரநாதரின் உள்ளம் உருகியது. அவற்றை அவற்றிற்குரிய வீட்டின் கொட்டடியில் பாதுகாப்பாகக் கொண்டுசேர்க்க எண்ணினார்.
    தரையில் படுத்துத் தன் உயிரை உடலிலிருந்து பிரித்தார். மூலன் உடலில் தன் உயிரைச் செலுத்தினார்.

    இப்போது புதிய மூலன் எழுந்து நின்றான். ஆனிரைகள் மகிழ்ச்சி கொண்டன. அவையே வழிகாட்ட அவற்றை உரிய இடத்தில் சேர்ப்பித்தார்.
    மீண்டும் தம் உடலை அடைய வேண்டிக் கானகம் வந்தார். என்ன கொடுமை! அவரது முந்தைய உடலை வனவிலங்குகள் கடித்துக் குதறியிருந்தன. புதிய உடலிலேயே வாழவேண்டிய நிர்பந்தம் நேர்ந்தது அவருக்கு.

    அதுவே இறைவன் சித்தம் என்றுணர்ந்து தவத்தில் ஆழ்ந்தார் அவர். அவரது தவ ஆற்றல் கண்டு அவரை மூலன் என்று அழைக்காமல் திருமூலர் என்றே அழைக்கத் தொடங்கினார்கள் மக்கள். புதிய உடல் பெற்ற அந்தத் திருமூலருக்கு திருவிடைமருதூரில் சமாதிக் கோயில் உள்ளது. 
     
    *அருணகிரிநாதர் வாழ்விலும் அவரது இறுதிக் காலத்தில் அவர் கூடுவிட்டுக் கூடுபாய்ந்த நிகழ்ச்சி வருகிறது. அவர் கூடுவிட்டுக் கூடுபாயக் காரணம் அவரின் எதிரிகள் செய்த சூழ்ச்சி.

    பிரபுட தேவராயன் என்ற விஜயநகர மன்னன் அருணகிரியாரை ஆதரித்துவந்தான். சம்பந்தாண்டான் என்ற பெயருடைய ஒருவன் அருணகிரியார் மேல் அளவற்ற பொறாமை கொண்டான்.

    மன்னன் மனத்தை மாற்றி இந்திரலோகத்துப் பாரிஜாத மலரைப் பெற்றுவருமாறு அருணகிரிநாதரிடம் கேட்கச் சொன்னான். அதை எதிரியின் சதி என உணராது மன்னனின் விருப்பம் என்றே நினைத்தார் அருணகிரி.

    இறந்துகிடந்த கிளியின் உடலில் தன் உயிரைச் செலுத்தி இந்திரலோகம் நோக்கிப் பறந்தார். பாரிஜாத மலரைப் பெற்றுத் திரும்பினார். அவர் விண்ணுலக மலரைப் பெற்று மண்ணுலகம் வருவதற்குள் அவர் பொன்னுடலை எரித்துவிட்டான் சம்பந்தாண்டான்.

    தன் பழைய உடலை நிரந்தரமாக இழந்த அருணகிரிநாதக் கிளி மலரை மன்னனிடம் அளித்து விடைபெற்றுக் கயிலை நோக்கிப் பறந்துசென்றது. அன்னை மீனாட்சி அந்தக் கிளியை அன்போடு வரவேற்றுத் தன் கரத்தில் ஏந்திக் கொண்டாள். மீனாட்சியின் கரத்தில் உள்ள கிளி அருணகிரிக் கிளிதான் என்கிறது அருணகிரிநாதரின் திருச்சரிதம்.

    சங்கரரும் திருமூலரும் மனித உடலில் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தவர்கள். அருணகிரிநாதர் பறவையின் உடலில் பரகாயப் பிரவேசம் செய்தவர்.சங்கரர் ஒரு சோதனைக்காகத் தம் சித்தினை நிகழ்த்தினார். திருமூலர் அந்தச் சித்தை நிகழ்த்தக் காரணம் அவரது கருணை. அருணகிரிநாதர் ஒரு சூழ்ச்சிக்கு ஆட்பட்டு அந்தச் சித்தினை நிகழ்த்த நேர்ந்தது.

    ஆன்மிகத்தால் நிகழும் அற்புதங்கள் ஆச்சரியகரமானவை. நம் ஆன்மிக வரலாறு வியக்கவைக்கும் சம்பவங்களை உள்ளடக்கியது.
    Next Story
    ×