search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார்த்திகையும் தீபமும்
    X
    கார்த்திகையும் தீபமும்

    ஆன்மிக அமுதம் - கார்த்திகையும் தீபமும்

    ஆன்மிக அமுதம் எனும் தலைப்பில் கார்த்திகையும் தீபமும் குறித்து திருப்பூர் கிருஷ்ணன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    சிவபெருமானுக்கு தென்னிந்தியாவில் ஐந்து முக்கியமான ஆலயங்கள் உண்டு. அந்தத் தலங்கள் பஞ்சபூதத் தலங்கள் எனப்படுகின்றன. அந்த ஐந்து தலங்களில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்து விதமான வடிவில் சிவன் அருள்புரிகிறார்.

     காஞ்சீபுரம் கோவில் நிலத்திற்கான தலம். காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சிவபெருமான் பிருத்வி லிங்கமாக அருள்பாலிக்கிறார். திருவானைக்காவில் அப்பு லிங்கமாக தண்ணீர்த் தலத்தில் காட்சி தருகிறார். திருக்காளத்தியில் உள்ளது காற்று வடிவத்தை உணர்த்தும் வாயு லிங்கம். சிதம்பரத்தில் உள்ளது ஆகாச லிங்கம். நெருப்பின் உருவகமாக அமைந்தது திருவண்ணாமலையில் உள்ள ஜோதிலிங்கம்.

    கார்த்திகை வழிபாடு திருவண்ணாமலையில் சிறப்பாக நடைபெறக் காரணம் அங்குள்ள சிவபெருமான் ஜோதி வடிவானவர் என்பதே. சிவனின் அடிமுடியைத் தேடி பிரம்மனும் திருமாலும் புறப்பட்டார்கள். பிரம்மன் அன்னப் பறவை வடிவெடுத்து மேலே மேலே பறந்து சென்றும் சிவபெருமானின் முடியைக் காண முடியவில்லை. திருமால் வராக வடிவெடுத்து பூமியைக் குடைந்து கீழே கீழே சென்றபோதும் சிவனின் அடியைக் காண இயலவில்லை.

    பின்னர் இருவரும் மனமுருகி சிவனைப் பிரார்த்தித்தபோது சிவபெருமான் ஜோதி வடிவில் ஆகாயம் அளவில் காட்சி தந்தார் என்கிறது திருவண்ணாமலையின் தலபுராணம். எனவேதான் இச்சம்பவம் நடந்த கார்த்திகை நாளன்று மாபெரும் தீபமேற்றித் திருவண்ணாமலையில் சிவனை வழிபடுகிறோம்.

    விளக்கையே சிவகுடும்பத்தின் குறியீடாகக் காணும் மரபும் உண்டு. விளக்கின் சுடர் சிவபெருமான். அதன் சூடு பராசக்தி. அதன் செம்மை நிறம் விநாயகன். அதில் தோன்றும் ஒளி முருகன் என்கிறது ஒரு பழமையான வெண்பா.

    `சுடரே சிவபெருமான் சூடு பராசக்தி
    திடமார் கணநாதன் செம்மை - படரொளியே
    கந்தவே ளோடும் கருதுங்கால் சற்றேனும்
    வந்ததோ பேத வழக்கு`

    தீபத்திற்கு ஒரு விசேஷ குணம் உண்டு. அது மேல்நோக்கியே எரியும். தீப் பந்தத்தைத் தலைகீழாய்ப் பிடித்தாலும் சுடர் மேல்நோக்கித் தான் எரியுமே அன்றிக் கீழ்நோக்கி எரியாது. தண்ணீருக்கும் நெருப்புக்கும் உள்ள முக்கிய வேறுபாடு அதுதான். தண்ணீர் எப்போதும் கீழ்நோக்கியே பாயும். நெருப்பு எப்போதும் மேல்நோக்கியே  எரியும். நம் மனமும் உயர்ந்த எண்ணங்களோடு மேல்நோக்கிச் செல்ல வேண்டும் என்பதுதான் விளக்கை வழிபடுவதன் நோக்கம்.

    `விளக்கை ஏற்றி வெளியை அறிமின்
    விளக்கின் முன்னே வேதனை மாறும்
    விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
    விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.`

    என்று திருமூலரின் திருமந்திரமும் விளக்கின் பெருமையை விளக்குகிறது.
    அன்ன விளக்கு, மயில் விளக்கு, கிளி விளக்கு, காமாட்சி விளக்கு என்றெல்லாம் விளக்கில் உள்ள உருவத்தை வைத்து விதவிதமாக அழைக்கப்படும் பலவகை விளக்குகள் உண்டு. ஒரு பெண் கையில் அகலை ஏந்தி நிற்பதுபோல் உள்ள விளக்கு பாவை விளக்கு. சிறிய வடிவம் முதல் நிஜமாக ஒரு பெண்ணே நிற்பதுபோன்ற பெரிய வடிவம் வரை பலவகையில் பாவை விளக்குகள் உள்ளன.

    திருப்பூர் கிருஷ்ணன்
    திருப்பூர் கிருஷ்ணன்

    உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. அவை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பன. உடல் ஐம்புலன்களால் ஆனது. அவை மெய் வாய், கண், மூக்கு, செவி என்பன. உடலும் நன்றாயிருக்க வேண்டும், உலகமும் நன்றாயிருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் பஞ்ச முக விளக்கு கோயில் வழிபாடுகளில் ஏற்றப்படுகிறது.

    ஆலயங்களிலோ வீட்டின் பூஜையறையிலோ தொடர்ந்து ஒரு விளக்கினை ஏற்றி வைப்பதை அகண்ட தீபம் ஏற்றுவது என்கிறார்கள். கோயிலில் ஏற்றப்படும் இத்தகைய விளக்கினை நந்தா விளக்கு என்றும் தூண்டா விளக்கு என்றும் சொல்வதுண்டு. பண்டிகைக் காலங்களில் கோயில்களிலும் நவராத்திரி சிவராத்திரி போன்ற நாட்களில் இல்லங்களிலும் அகண்ட தீபம் ஏற்றுவதுண்டு.

    குத்து விளக்கு ஏற்றுவது என்பது இல்லங்களிலும் ஆலயங்களிலும் உள்ள மரபு. குத்துவிளக்கு கீழே ஆசனம், நடுப்பகுதியில் தண்டு, மேலே எண்ணெய் ஊற்றும் அகல் என மூன்று பகுதிகளைக் கொண்டது. ஆசனப் பகுதி பிரம்மனையும் தண்டுப் பகுதி திருமாலையும் அகல் பகுதி சிவனையும் குறிப்பது என்பதால் குத்துவிளக்கு மும்மூர்த்திகளின் வடிவம் எனப் போற்றப்படுகிறது.

    மாவினால் விளக்கு போலச் செய்து அதில் நெய்யூற்றி விளக்கேற்றுவது மாவிளக்குப் போடுதல் எனப்படுகிறது. குலதெய்வத்துக்கு மாவிளக்கு ஏற்றுவதாக வேண்டிக் கொண்டு இல்லத்தில் சுப நகழ்ச்சிகள் நடப்பதற்கு முன் மாவிளக்குப் போடும் மரபு பல வீடுகளில் நடைமுறையில் உள்ளது.

    *நமிநந்தி அடிகள் தண்ணீரால் விளக் கேற்றியது பற்றிச் சேக்கிழாரின் பெரியபுராணம் விவரிக்கிறது.
    *சீரடி பாபா தன் மசூதியில் ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொன்றாக நான்கு அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது வழக்கம். விளக்குகளை ஏற்ற எண்ணை வேண்டுமே? அதை அவர் பல கடைகளில் யாசித்துப் பெறுவதும் வழக்கம்.

    ஒருநாள் விளக்கெரிக்க எண்ணை கேட்டபோது எல்லா வியாபாரிகளுமே பேசி வைத்துக்கொண்டு எண்ணை தர மறுத்து விட்டார்கள். பாபா நகைத்தவாறே மசூதியை நோக்கி நடந்தார். இவர் எப்படி தீபங்களை ஏற்றுவார் பார்க்கலாம் என்று வியாபாரிகள் வேடிக்கை பார்க்க வந்தார்கள். பாபா மண்பானையில் குடிப்பதற்காக வைத்திருந்த தண்ணீரைக் குவளையில் எடுத்து, எல்லா விளக்குகளிலும் ஊற்றினார். பின் திரியை ஏற்றினார். பாபாவின் கட்டளைக்குத் திரிகள் அடிபணிந்த அற்புதத்தை என்ன சொல்ல!
    பஞ்ச பூதங்களும் பாபா கட்டுப்பாட்டில் தானே இருந்தன? நெருப்பு பஞ்ச பூதங்களில் ஒன்று தானே?

    எல்லா விளக்குகளும் தண்ணீரால் சுடர்விட்டு எரியத் தொடங்கின. இந்த அதிசயத்தைப் பார்த்த வியாபாரிகள் பாபாவின் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்கள் என்கிறது பாபாவின் திருச்சரிதம்.

    *வள்ளலார் கருங்குழி கிராமத்தில் ஒரு ரெட்டியார் இல்லத்தில் தங்கியிருந்த காலம். ஒருநாள் இரவு ஒரு சிறிய விளக்கை ஏற்றி வைத்துவிட்டு அவர் தங்கியிருந்த கருங்குழி ரெட்டியார் வீட்டினரெல்லாம் உறவினர் வீட்டுத் திருமணத்தின் பொருட்டு வேறு ஊர் போனார்கள்.தனிமையில் இருந்த வள்ளலாரின் மனம் பக்தியில் ஆழ்ந்தது. தம்மை மறந்து அந்த விளக்கின் ஒளியில் அருட்பாக்களை விறுவிறுவென எழுதலானார்.  

    விளக்கில் எண்ணைய் தீரத் தொடங்கியது. வெளிச்சம் மங்கியது. வள்ளலார் பக்தி உணர்வில் மெய்ம்மறந்தவராய் அருகே தாம் குடிப்பதற்காக வைத்திருந்த தண்ணீரை  எண்ணை என்று கருதி விளக்கில் விட்டு, மறுபடி தொடர்ந்து எழுதலானார்.

    என்ன ஆச்சரியம். தண்ணீரை எண்ணையாய் ஏற்றிய விளக்கு இரவெல்லாம் எரிந்துகொண்டே இருந்தது. விளக்கில் பக்திப் பெருக்கோடு அடுத்தடுத்து வார்க்கப்பட்டது பானைத் தண்ணீர்தான்.

    அதிகாலையில் திரும்பிய ரெட்டியார் குடும்பத்தினர், தண்ணீரால் விளக்கெரியும் அதிசயத்தைப் பார்த்து மலைத்தார்கள் என்கிறது வள்ளலார் வரலாறு. இறைவனை ஜோதி வடிவமாக வழிபடும் மரபு வள்ளலார் நெறியில் உண்டு. `அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை` என்பது வள்ளலார் அன்பர்களின் மந்திரமாகவும் முழக்கமாகவும் உள்ளது. வள்ளலார் தைப்பூச விழாவை ஜோதி தரிசன விழாவாகக் கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்தியவர்.

    *நாம் கார்த்திகையை விளக்குகள் ஏற்றிக் கொண்டாடுவதுபோல் வட இந்தியர்கள் தீபாவளியை விளக்குகள் ஏற்றிக் கொண்டாடுகிறார்கள். தீபாவளி என்ற சொல்லே தீபம் ஆவளி என்ற இரு சொற்களின் சேர்க்கைதான். ஆவளி என்றால் வரிசை என்று பொருள். தீபாவளி என்ற சொல்லுக்குத் தீபங்களின் வரிசை என்றுதான் பொருள். அக்பர் அவையில் இந்துஸ்தானி இசை விற்பன்னரான தான்சேன் தீபக் ராகத்தைப் பாடியதாகவும் அந்த ராகத்தின் மூலம் எரியாத விளக்குகளை எரியச் செய்ததாகவும் தான்சேன் வரலாறு தெரிவிக்கிறது.

    தீப ஆரத்தி எடுத்து புனிதமான கங்கை நதியை வழிபடும் வழக்கம் வடக்கே உண்டு. காசி, ஹரித்வார் போன்ற திருத்தலங்களில் கங்கைக் கரையோரம் ஒவ்வொருநாள் மாலையும் நடைபெறும் தீப ஆரத்தி கண்கொள்ளாக் காட்சி.
    சபரி மலையில் மகரவிளக்கு பூஜைக்கு முன்னால் பம்பை நதியில் விளக்கு உற்சவம் நடக்கும். பம்பா உற்சவம் என்றே இது அழைக்கப்படுகிறது.

    தோணிகளைப் போலச் செய்து அதில் நூற்றுக் கணக்கான விளக்குகளை ஏற்றி பம்பை நதியில் மிதக்க விடுவார்கள். ஐயப்பமார்களின் சரண கோஷம் ஒலிக்க அந்த விளக்குகள் மிதந்து செல்லும் காட்சி வர்ணிக்க இயலாத எழில் நிறைந்தது.

    இன்றும் சபரிமலையில் முக்கியமான விழாவாக மகரஜோதி விழா நடைபெறுகிறது. மகர ஜோதி தரிசனத்தைக் காண பல லட்சம் பக்தர்கள் கடும் விரதம் இருந்து இருமுடி கட்டிக் கொண்டு சபரிமலை செல்கிறார்கள்.
    திருவிளக்குப் பூஜை செய்வது மங்கலங் களைத் தரும் என்பது நம் நம்பிக்கை. விளக்கையே தேவியாகக் கருதி மலர்களால் அர்ச்சனை நிகழ்த்துவதே திருவிளக்கு பூஜை.

    `விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே
    ஜோதி மணிவிளக்கே சீதேவிப் பொன் மணியே`
    எனத் தொடங்கும் திருவிளக்கு அகவல் பாடல் விளக்கு பூஜைக்கானது. இந்த அகவலை நாள்தோறும் சொல்வதே மங்கலங்களைத் தரும்.

    `எல்லா விளக்கும் விளக்கல்ல சான் றோர்க்குப்
    பொய்யா விளக்கே விளக்கு`

    என்கிறார் திருவள்ளுவர். இந்தக் குறள் வாய்மை என்ற அதிகாரத்தில் வருகிறது. புற இருளைப் போக்கி ஒளிதரும் விளக்குகள் எல்லாம் விளக்கல்ல, மன இருளைப் போக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்கு என்று சொல்லி வாய்மையின் பெருமையை விளக்கு கிறார் வள்ளுவப் பெருந்தகை. அரிச்சந்திரன் பொய்யாமையாகிய விளக்கின் ஒளியில் மன இருளற்று வாழ்ந்தவன்.

    நாம் புறஇருள் நீங்க விளக்கை ஏற்றிச் சிவனை வழிபடும்போது அகஇருள் நீங்கவும் விளக்கு பூஜை செய்து அந்தச் சிவனையே பிரார்த்திப்போம்.  
    Next Story
    ×