search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஷ்பு
    X
    குஷ்பு

    குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும் - கொடைக்கானல் குளிரில் நடுங்க வைத்த டைரக்டர்

    நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    ‘அரச்ச சந்தனம். மணக்கும் குங்குமம் அழகு நெற்றியிலே’...
    இந்த பாடலை அவ்வளவு எளிதில் தமிழ் ரசிகர்கள் மறந்துவிடுவார்களா? இன்றும் அந்த பாடலை கேட்கும் போது மெய்சிலிர்த்து போகிறதே! இந்த பாடல் மட்டுமல்ல இதேபோல் தேனினும் இனிய ‘தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே’, ‘போவோமா ஊர்கோலம்’, ‘அட உச்சந்தல உச்சியில’, ‘குயில புடிச்சி கூண்டில் அடச்சி பாட சொல்லுகிற உலகம்’, ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பாடல்களையும் தாங்கி காலங்களையும் வென்று நிற்கும் படம் ‘சின்னதம்பி’.

    ‘மைடியர் மார்த்தாண்டன்’ படத்திற்கு அடுத்ததாக ‘சின்னதம்பி’ படத்தை கே.பாலு தயாரிக்க பி.வாசு சார் இயக்கத்தில் எடுப்பதற்கு முடி வெடுத்துள்ளார்கள். படத்தின் நாயகியாக  கனகாவை தேர்வு செய்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் நான் சந்திரநாத் டைரக்ஷனில் நடித்த ‘ஆரத்தி எடுங்கடி’ படக்காட்சிகளை டைரக்டர் வாசு சார் பார்த்திருக்கிறார்.

    அந்த படக் காட்சிகளில் உணர்ச்சி பொங்க நான் நடித்திருப்பேன். அதைப் பார்த்ததும் ‘சின்னதம்பி’ படத்திற்கும் இவள் பொருத்தமாக இருப்பாள் என்று கருதி இருக்கிறார். தனது விருப்பத்தை தயாரிப்பாளர் பாலுவிடம் கூறி இருக்கிறார்.
    ஆனால் தயாரிப்பாளரோ தயங்கி இருக்கிறார். குஷ்பு இப்போது தான் பிரபலமாகி வருகிறார். உணர்ச்சிகரமான காட்சிகளில் எப்படி நடிப்பாரோ? தெரியவில்லை.

    எனவே திட்டமிட்டப்படி கனகாவையே நடிக்க வைப்போம் என்று கூறியிருக்கிறார். உடனே வாசு சார், ‘டைரக்டர் நான்தானே. எனக்கு தெரியாதா’ என்று கேட்டு இருக்கிறார். அதுமட்டுமல்ல பிரபுவிடமும், ‘என்ன பிரபு இந்த பாத்திரத்துக்கு குஷ்பு சரியான தேர்வு தானே’ என்று சொல்லியிருக்கிறார்.

    ஏற்கனவே நான் 2 படங்களில் பிரபுவுடன் நடித்து இருந்ததால் நான் சிறப்பாக நடிப்பேன் என்று அவரும் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு தயாரிப்பாளரும் சம்மதித்து இருக்கிறார். படப்பிடிப்பு தொடங்கியது. சின்னதம்பி வளரத்தொடங்கினான். கோபிசெட்டி பாளையம், சென்னை ஆகிய இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்புகள் நடந்தது. சின்னத்தம்பியால் என் புகழ் சிகரம் தொட்டது என்றே சொல்ல வேண்டும்.

    சின்னதம்பியை தொடர்ந்து பி.வாசு சார் டைரக்ஷனில் அடுத்த படத்துக்கு கொடைக்கானல் ஏரியில் படப்பிடிப்பு. கொடைக்கானலை பார்த்து ரசித்தவர்கள் அந்த ஏரியின் அழகை அதிகாலையில் ரசித்து இருந்தால் மெய் மறந்து போயிருப்பார்கள்.
    அதிகாலையில் ஏரியின் மேற்பரப்பில் பனிமேகம் தவழும், சூரியன் உதிக்கத் தொடங்கியதும் அது மறைந்து விடும். கொடைக்கானலை பார்த்து ரசிக்க செல்பவர்கள் நிச்சயம் இந்த காட்சியை பார்க்காமல் இருக்க மாட்டார்கள். வாசு சாரும் அந்த அற்புத காட்சியை ரசிகர்களுக்கு விருந்து படைக்க திட்டமிட்டு இருந்தார். காலை 6 மணிக்குள் ஷூட்டிங் வந்துவிட வேண்டும். தாமதமாகி விடக்கூடாது. 6.15 மணிக்கெல்லாம் பனித்திரை விலகி விடும் என்று முந்தைய நாள் இரவில் சொல்லிச்சென்றார்.
    நானும் அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து காஸ்டியூம் போட தயாரானேன். ஆனால் போட்டு முடிய 6 மணி ஆகிவிட்டது. 6.15 மணிக்கு நான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றேன். அதற்குள் பனித்திரை விலகி இருந்தது.

    அதைப்பார்த்து வாசு சார் செமகோபத்தில் நின்று கொண்டு இருந்தார். என்னை பார்த்ததும் கன்னா பின்னாவென்று திட்டினார். தோளில் கிடந்த துண்டை உதறியபடி இது தான் ஒரு முன்னணி நடிகையின் லட்சணமா? கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? என்று திட்டிக்கொண்டே இருந்தார்.

    எல்லா நடிகர்களும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. காஸ்டியூம் போட தாமதமாகிவிட்டது என்றேன். ‘அதற்காக பனி காத்திருக்குமா? சீக்கிரம் எழுந்து சீக்கிரம் முடித்திருக்க வேண்டும்’ என்று கடுமையான ஆத்திரத்தில் திட்டினார். நான் அழுது கொண்டு இருந்ததை கூட அவர் பொருட்படுத்தவில்லை.

    ‘இதை யெல்லாம் கண்டுகாதீங்க. அவர் அப்படி தான் திட்டுவார். ஆனால் மனதுக்குள் எதுவும் வைத்துக்கொள்ள மாட்டார். பலாப்பழம் மாதிரியானவர் அவர். வெளியே பார்ப்பதற்கு முள் இருக்கும். ஆனால் உள்ளே தித்திக்கும் சுவை இருக்கும்’ என்று ஆறுதல் படுத்தினார்கள். ஆனால் என் மனம் ஆறுதல் அடையவில்லை. ஆனால் அடுத்த சில நாட்களிலேயே வாசு சார் எப்படிப்பட்டவர் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

    ஒரே ஓட்டலில் தான் எல்லோரும் தங்கி இருந்தோம். யூனிட்டில் எல்லோருக்கும் ஒரே சமையல் தான். எனக்கு உணவில் அதிக  காரம் சேர்ப்பது ஒத்துக்கொள்ளாது. ஆனால் அங்கு பரிமாறப்பட்ட உணவுகள் அனைத்தும் அதிக காரமாக இருந்தது.  இதனால் என்னால் சாப்பிட முடியவில்லை.

    தொடர்ந்து 4 நாட்கள் இரவில் சாப்பிடாமல் இருந்தேன். வெறும் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு தூங்கிவிடுவேன். மறுநாள் காலையில் எழுந்து ஷூட்டிங் செல்வேன். எனக்கு துணையாக இருந்த ஆண்டி வாசு சாரிடம் சொன்னால் என்ன என்றார்.
    அவர் திட்டுவார். வேண்டாம் என்று கூறிவிட்டேன். அடுத்த நாள் இரவில் பசியால் நான் மிகவும் சோர்ந்து போய் இருந்ததால் ஆண்டி நேரடியாக எதிர் அறையில் தங்கி இருந்த வாசு சாரை பார்க்க சென்றார்.

    கதவை தட்டியதும் வாசு சார் எழுந்து வந்தார். ஆண்டியின் பின்னால் நான் அழுதுகொண்டே நின்றேன். அதைப் பார்த்ததும் பதறிப்போய் விட்டார். ஏதோ தப்பு நடந்துவிட்டதோ? என்று நினைத்து என்னம்மா... என்றார். 4 நாட்களாக குஷ்பு இரவில் பட்டினியாக இருக்கிறார். எதுவும் சாப்பிடவில்லை என்றார். அதைக்கேட்டதும் நாம் திட்டியதால் தான் சாப்பிடவில்லையோ என நினைத்து சற்று  பதட்டத்துடனேயே  ஏன்? என்றார்.

    அவளுக்கு காரம் ஒத்துக்கொள்ளாது. ஆனால் இங்கு தரும் உணவு முழுவதும் காரமாக உள்ளது என்ற விவரத்தை ஆண்டி எடுத்துச்சொன்னார். அதைக்கேட்ட வாசு சார் யாரிடமும் சொல்லவில்லையா என்றார். சொன்னேன்... யாரும் கண்டுக்கவில்லை. என்னால் காரத்தை வாயில் வைக்க முடியவில்லை. இப்போதும் பசி தாங்க முடியவில்லை என்று சொல்லிக்கொண்டே அழுதேன்.
    என்னிடம் சொல்லியிருக்க வேண்டியது தானே என்றார். நீங்கள் திட்டுவீர்கள் என்று பயந்தேன் என்றதும் என்ன பொண்ணும்மா நீ? இப்படியா பட்டினி கிடப்பது. சாப்பிடாமல் எப்படி நடிக்க முடியும் என்றபடி கோபத்தில் சமையல் காரர்களை அழைத்தார்.

    ‘குஷ்புவுக்கு காரம் ஒத்துக்காது என்று கூறிய பிறகும் ஏன் தனியாக சமைத்து கொடுக்கவில்லை. அதைவிட உங்களுக்கு வேறு என்ன வேலை? யார் என்ன  சாப்பிட விரும்புகிறார்களோ அப்படி தான் சமைத்து கொடுக்க வேண்டும். நாளையில் இருந்து குஷ்புவுக்கு காரம் இல்லாமல் நல்ல உணவுகள் சமைத்து கொடுக்கவேண்டும். இல்ல... தொலைச்சுப்புடுவேன்’ என்று கண்டித்து அனுப்பினார்.

    மறுநாளில் இருந்து எனக்கு ராஜபோகம் தான். நன்றாக கவனித்தார்கள். வாசு சாரும் தினமும் குஷ்பு சாப்பிட்டாளா என்று ஒவ்வொருவரிடமும் விசாரித்து இருக்கிறார். இந்த சம்பவத்திற்கு பிறகு வாசு சாரும் நானும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம்.  இன்று வரை என் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்பவர். ஒரு நாள் நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் விழுந்து கிடந்த கோலத்தை பார்த்து பதறி துடித்துவிட்டார்....
    Next Story
    ×