search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறை வாஸ்து விதி
    X
    அறை வாஸ்து விதி

    வீடும் வாழ்வும்: அறைகளும் வாஸ்து விதிகளும்- ஜோதிடச்சுடர் எம்.எஸ். இராமலிங்கம்

    ஒரு வேளை அடுக்கு மாடியில் குடியிருக்கும் உங்கள் வீட்டில் இப்படி அறை அமையுமாயின் மேற்கண்டவாறு பயன்படுத்திக் கொள்ளலாம்.


    நமது கட்டுரையைத் தொடரும் அனேக நேயர்கள் ஏராளமான கேள்விகளைக் கேட்கிறீர்கள்.

    குறிப்பாக செவ்வக வடிவிலோ அல்லது சதுர வடிவிலோ வீடு கட்டும் போது உள்ளே அறைகளை எவ்வாறு அமைக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.இது பற்றிய விளக்கங்களை இந்த வாரக் கட்டுரையில் காணலாம்.

    எப்போதுமே ஒரு வீடு என்று எடுத்துக் கொண்டால் அதில் பிரதானமான இடம் எனில் வடகிழக்கு மூலைதான். வடக்கும், கிழக்கும் இணைகிற இடமே இந்த வடகிழக்காகும். இந்த வடகிழக்கு மூலையை வீட்டில் எப்போதும் இறைவன் வாழும் இடமாக எண்ணி சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். ஆகையால்தான் இந்த வடகிழக்கு மூலையில் பூஜை அறை அமைத்துக் கொள்வது சிறப்பு.

    இந்த மூலையில் அமைந்துள்ள உங்கள் வீட்டின் அறையில் கணமான, பாரமான பொருட்களை நிரந்தரமாக அங்கு வைப்பது வாஸ்து தோ‌ஷமாகும்.

    குறிப்பாக இந்த அறையில் உள் பக்கத்தில் கபோர்டுகள் அமைப்பதோ, பரண்கள் வைத்துக் கட்டிக் கொள்வதோ கூடாது.

    பழைய பொருட்களை வீட்டிற்கு வேண்டாத சாமான்களை இந்த அறையில் போட்டு வைப்பது கூடாது. வடகிழக்கில் நீர் புழக்கம் நல்லது என்பதற்காக வாஷிங்மெசின் போன்றவற்றை வைத்து இயக்க கூடாது. வீட்டின் மற்ற அறைகளின் தளங்களை விட இந்த அறையின் தரைத்தளமானது சற்றே பள்ளமாக இருப்பது நல்லது.

    சில வீடுகளில் கிழக்கு நோக்கித் தலைவாசல் வைத்து வடகிழக்கு மூலையில் கார் பார்க்கிங் செய்து கொள்கிறார்கள். இது கடுமையான வாஸ்து தோ‌ஷத்தைக் கொடுக்கும்.

    குறிப்பாக அந்த வீட்டில் பிறக்கும் ஆண் வாரிசாகப்பட்டவர் வேலைக்காக அந்த வீட்டை விட்டு வெளியில் வாழும்படியும் அல்லது வெளி நாடுகளுக்குச் சென்று செட்டில் ஆகிவிடுவதும் இல்லை எனில் திருமணம் ஆனபின் மனைவியோடு மனைவி வீட்டில் செட்டில் ஆவதும் போன்ற ஏதேனும் ஒன்று நிகழுவதுண்டு.

    சில வீடுகளில் இந்த விவரங்கள் தெரியாமல் வடகிழக்கு மூலையில் சமையல் அறை அமைத்து விடுவதுண்டு. இதுவும் வாஸ்துவின்படி தோ‌ஷத்தைக் கொடுக்கும். அந்த வீட்டில் வாழும் தம்பதியினரிடையே கடுமையான வாக்கு வாதங்கள் மற்றும் ஒருவர் மேல் மற்றொருவர் சந்தேகங்கள் ஏற்பட்டு குடும்ப வாழ்க்கை நரகமாகிப் போவதுண்டு. எனவே வடகிழக்கு மூலையில் சமையல் அறை வரக்கூடாது. சில இடங்களில் இந்த வடகிழக்கு மூலையில் படுக்கை அறை அமைவதுண்டு. இந்த குறிப்பிட்ட படுக்கை அறையில் வயதானவர்கள் அதாவது தாத்தா பாட்டி போன்றவர்கள் தங்குவது சிறப்பு.

    இளம் தம்பதியினர் இந்த வடகிழக்குப் படுக்கை அறையில் தங்கும் போது தங்களின் உடல் பலத்தை இழந்து உடல் பலவீனம் ஏற்பட்டு நிம்மதி இழந்து போவதுண்டு.


    ஜோதிடச்சுடர் எம்.எஸ். இராமலிங்கம்

    ஆனால் இந்த வடகிழக்கு மூலையில் உள்ள படுக்கை அறையில் வளரும் பிள்ளைகளான 16 வயதுக்கு உட்பட்டவர்கள் தூங்குவது அந்த பிள்ளைகளுக்கு ஏராளமான நன்மைகள் செய்யும்.

    அதாவது வடகிழக்கு மூலைப் படுக்கை அறையில் மிக இளம் பிள்ளைகள் அல்லது மிக வயோதிகர் தூங்குவது நன்மை தரும்.

    இதுபோல இந்த வடகிழக்கு மூலையில் உள்ள அறையில் பிள்ளைகள் படிக்கும் படிப்பறையாகவோ நூலக அறையாகவோ இசைப்பாடம் பயில அந்த இசை உபகரணங்கள் வைத்துப் புழங்குவதோ ஏராளமான நன்மைகள் தரும்.

    மேலும் பூஜை அறை, மெடிட்டேசன் செய்யும் அறை, யோகா பயிற்சி செய்யும் இடமாகவும் பாவிக்கலாம். இந்த வடகிழக்கில்தான் கிணறு போர் போடுவது நல்ல நீர் தேக்கும் தொட்டி என பூமிக்கடியில் இந்த அனைத்தையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

    இதேபோல வீட்டை அழகுறக் கட்டுவதாய் எண்ணி வடகிழக்கு மூலையை விட்டு விட்டு வீட்டைக் கட்டக்கூடாது. வடகிழக்கு உடைந்து இருப்பது கட்டாமல் விடுவது எப்படியாயினும் கடுமையான வாஸ்து தோ‌ஷங்களைத் தரும்.

    வடகிழக்கு மூலையில் உள்ள அறையில் அல்லது ஹாலில் அமர்ந்து பேசும் நல்ல காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நல்லபடியாக முடியும்.

    வேலை வேண்டி விண்ணப்பம் செய்பவர்கள் கூட வடகிழக்கு மூலை அறையின் வடக்கு பாகத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து செய்யும் போது பெரும்பாலும் வெற்றி அடையலாம். சிலர் வீட்டில் அமர்ந்து கொண்டே சொந்த தொழில் செய்வார்கள். இவர்களும் இப்படியான வடகிழக்கு மூலையில் உள்ள அறையில் வடக்கு நோக்கி அமர்ந்து வேலை செய்தால் தொழில் மென்மேலும் வளர்ந்து மகிழ்ச்சி தரும்.

    பணம் வைத்து பணம் சம்பாதிக்கும் வட்டித் தொழில், ஷேர்மார்க்கெட்டிங், ஜோதிடம், சட்ட வல்லுனர்களின் அலுவலகம், மருத்துவம் பார்ப்பவர் இப்படியான அனைவருக்கும் இந்த வடகிழக்கு மூலையில் வடக்கு நோக்கி அமர்ந்து தொழில் செய்வது மகாசிறப்பு.

    கிழக்கு நோக்கி வீடு கட்டி, வடகிழக்கு மூலையில் அலுவலகம் வைத்துக் கொண்டு, ரியல் எஸ்டேட் எனும் நிலம் வாங்கி விற்கும் தொழில் செய்வது மிகச்சிறப்பு. இப்படி வளர்ந்தவர்களை நானே என் அனுபவத்தில் கண்டுள்ளேன். இதுபோல ஒரு வீட்டின் கிழக்கு மையப் பகுதியானது இந்திரன் ஸ்தானம் எனப்படும். இந்த இடத்தில் படுக்கை அறை அமைந்தால் இந்த அறையையும் இளம் வயதினர் பயன்படுத்திக் கொள்ளலாம். குழந்தைகள் படிக்கும் அறையாகவும் வீட்டில் குழந்தைகள் விளையாடும் இடமாகவும் பகல் பொழுதை போக்கும் அறையாகவும் பயன்படுத்தலாம்.

    இந்த அறைக்குள் நுழைய வாசல் வைக்கும் போது வடகிழக்கிலோ அல்லது வடமேற்கில் இருந்தோ உள்ளே நுழையும்படி வாசல் வைத்துக் கொள்ளலாம். கிழக்குச் சுவற்றில் மட்டும் ஜன்னல் வைத்துக் கொள்ளலாம்.

    இந்த அறையின் உள்ளே தெற்குச் சுவரை ஒட்டி கட்டில் போட்டு மேற்கில் தலையும் மேற்குச்சுவரை ஒட்டி கட்டில் போட்டு தெற்கில் தலை வைத்தும் படுத்துத் தூங்கலாம். இந்த அறைக்குள் கழிவறை அமைக்கும் போது அறையின் மேற்கு பகுதியில் தெற்கு வடக்காக கழிவறை அமைத்தும் பயன் படுத்தலாம். அந்த கழிவறைக்குள் கிளாஸ்செட் மற்றும் வாஸ்பேசின் சுவர் எனும் அனைத்தையும் மேற்கு சுவற்றில் அல்லது மேற்கு சுவரை ஒட்டி அமைத்துக் கொள்ள வேண்டும்.

    இதேபோல இந்த கிழக்கு மையத்தில் உள்ள இந்த அறையில் கண்டபடி தேவையற்ற பொருட்களைப் போட்டு வைக்கக்கூடாது. இந்த அறையின் மேற்கு சுவற்றில் மட்டும் பரண் அமைத்துக் கொள்ளலாம். கபோர்டு அமைக்க வேண்டுமெனில் இந்த அறையின் தெற்குச் சுவற்றில் கபோடுகள் அமைத்துக் கொள்ளலாம். வடகிழக்குப் பகுதியில் உள்ள அறைக்கு என்ன முக்கியத்துவம் தருகிறோமோ அந்த அளவு இந்த அறையும் முக்கியமானதே.

    உங்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கும் பட்சத்தில் இளைய பிள்ளைக்கு இந்த அறையை கொடுக்கலாம். பொதுவாக ஆண் பிள்ளைகளுக்கு இந்த அறை மிகச்சிறப்பைக் கொடுக்கும். அண்ணன், தம்பி கூட்டுக்குடும்பம் எனில் இந்த இடம் தம்பி குடும்பத்தாருக்கு அதிக நன்மைகள் தரும். இதுபோல் இளம் பிள்ளைகள் பெற்றிருக்கும் தாய்மார்கள் இந்த அறையை பயன்படுத்தக்கூடாது. வீட்டில் மிக விலை உயர்ந்த பொருட்களைச் சேமிக்க பாதுகாக்க இந்த அறையை பயன்படுத்தலாம்.

    எதிலும் அதிக நாட்டம் இல்லாதவர்கள் திருமண வாழ்வில் நம்பிக்கை குறைந்தவர்கள், நேரம் பார்த்து வேலை செய்யத் தெரியாதவர்கள் இந்த அறையை பயன்படுத்த நல்ல மாற்றங்கள் தெரியும்.

    குறிப்பாக நரம்பு சார்ந்த உடல் பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த கிழக்கு மத்திய அறையை பயன்படுத்த உடல் சார்ந்த தொல்லைகள் அகலும்.

    பெண் பிள்ளைகள் குறிப்பாக நாட்டிய நடனம் கற்றுக்கொள்வது, இசை கற்றுக்கொள்வது என அனைத்திற்கும் இது மிகச்சிறந்த இடம்.

    குறிப்பாக பரம்பரைத் தொழில் செய்பவர்கள் இந்த அறையில் அமர்ந்து கணக்கு வழக்குகளை பார்க்க சீரான தொழில் யோகம் உண்டாகும். மாற்றுத்திறனாளிகள் நம்பிக்கை பெறுவதற்கும், படிக்க முடியாத பிள்ளைகள் கல்வியில் தேர்ச்சி பெறுவதற்கும் இந்த அறை மிகச் சிறப்பைக் கொடுக்கும். இந்த அறையில் வடக்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் பிள்ளைகள் அமர்ந்து படிக்க நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

    குறிப்பாக இந்த அறையில் அமர்ந்து பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க முற்பட்டால் தீர்வு கிடைக்காமல் போவதுடன் பிரச்சினை புதிய பரிணாமம் பெற்று பெறும் குழப்பத்தைக் கொடுத்து விடும். வயதானவர்கள் ஓய்வு எடுப்பதற்கு மிக அருமையான இடம், ஊஞ்சல் மாட்டிக்கொள்ள பொருத்தமான இடம். ஆனால் இன்றைய அடுக்கு மாடிக் குடியிருப்புக் கலாசாரத்தில் இவைகளை எப்படி கைகொள்வது என்பது பெரும் கேள்விக் குறிதான்.

    ஒரு வேளை அடுக்கு மாடியில் குடியிருக்கும் உங்கள் வீட்டில் இப்படி அறை அமையுமாயின் மேற்கண்டவாறு பயன்படுத்திக் கொள்ளலாம்.

    அடுத்தபடியாக மூன்றாவதாக வருவது தென்கிழக்கு மூலையில் உள்ள அறையாகும். இது அனேக வீடுகளில் சமையல் அறையாக இருக்கும்.

    இது தெற்கும், கிழக்கும் இணையும் அக்னி மூலையாகும். அக்னி மூலை என்ற வார்த்தையே இந்த இடம் அக்னி பகவானுக்கும் சொந்தமான இடம் என்பதைக் காட்டுகிறது. எனவே சமையல் அறைக்கு பொருத்தமான பகுதியாகும். சில இடங்களில் வடமேற்கில் சமையல் அறை வைத்து விட்டு தென்கிழக்கில் கார் பார்க்கிங் வைத்து வீடு கட்டுவதுண்டு. தென்கிழக்கில் கார் நிறுத்துமிடமாகவும் பயன்படுத்தலாம். ஆனால் வடகிழக்கு மூலையை விட இந்த தென்கிழக்கு சற்று உயரமாக இருக்க வேண்டும்.

    ஒரு வேளை தென்கிழக்கில் படுக்கை அறை அமைந்தால் இந்த அறையில் அந்த வீட்டின் வளர்ந்த பெண் பிள்ளைகள் படுக்கும் அறையாகப் பயன்படுத்தலாம்.

    இல்லையெனில் விருந்தாளிகள் வந்தால் தங்கி விட்டு போகும் அறையாக பயன்படுத்தலாம். இந்த தென்கிழக்கு மூலையில் உள்ள இந்த அறையில் தெற்குச் சுவற்றிலும், மேற்கு சுவற்றிலும் பரண்கள் மற்றும் கபோர்டுகள் அமைக்கலாம். இந்த அறைக்கு வடகிழக்கில் இருந்தும், வடமேற்கில் இருந்தும் உள்ளே நுழையும்படி வாசல் வைத்துக் கொள்ளலாம்.

    இந்த அறையில் குளியல் அறையானது மேற்குப் பக்கத்தில் பாதிக்கு வடபாகத்தில் தெற்கு வடக்காக கட்டிக் கொள்ளலாம். இந்த குளியல் அறைக்குள் கிளாஸ்செட் எனும் கழிவரை உபகரணங்கள் வடமேற்கில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    இதுபோல இந்த தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள அறையில் வயதானவர்கள் தங்குவது அவர்களின் உடல் நலத்தில் பெரும் பாதிப்பைத் தரும். மேலும் ஒரு வேளை இங்கு வாகனம் நிறுத்துமிடம் அமைத்துக் கொண்டால் அந்த இடத்தில் கழிவு நீர் தொட்டியோ, கிணறோ நீர் சேமிப்புத் தொட்டியோ அமைக்கக் கூடாது. ஆனால் வீட்டுக்குத்தேவையான மின்சாரப் பலகை மீட்டர்கள் சுவிட்கள் இவைகளை தென்கிழக்கில் அமைக்கலாம். ஆனால் படுக்கை அறை அல்லது வாகன நிறுத்துமிடம் அமைவதைவிட சமையல் அறை அமைவதே உத்தமம். சில வீடுகளில் தென்கிழக்கு உள்வாங்கி அல்லது இடமின்றி இருந்தாலோ, தென்கிழக்கு மூலை பயனற்றுக்கிடந்தாலோ அந்த வீட்டில் வளரும் பிள்ளைகள் திருமண ஆசைகளின்றி வாழ வேண்டிய வயதுகளை வீணாக்கிக் கொண்டு இருப்பார்கள்.

    ஒரு வீட்டில் சுபமங்கல வி‌ஷயங்கள் நடைபெற வேண்டுமாயின் அந்த வீட்டின் தென்கிழக்கு மூலையானது வாஸ்துபடியாக சரியாக அமைய வேண்டும்.

    இந்த தென்கிழக்கு மூலையில் கோளாறுகள் ஏற்படுமாயின் தேவையற்ற வில்லங்கம், விவகாரங்கள், சட்டப் போராட்டங்கள் உண்டாகி வெட்டிச் செலவுகள் மட்டுமே அங்கு நடைபெறும்.மேலும் தென்கிழக்கு மூலையில் வாஸ்து தோ‌ஷம் உண்டாயின் குறிப்பாக அந்த வீட்டில் பெண்கள் அடிமைகள் போல் வாழும் நிலை உண்டாகும்.

    பெண்கள் குதூகலமாக இல்லாத குடும்பங்கள் சூனியம்தான். ஓர் குலவிருத்தி வேண்டுமாயின் அந்த வீட்டில் பெண்கள், பெண் பிள்ளைகள் சுகமாகவும், சுதந்திரமாகவும் வாழ வேண்டும். இல்லையெனில் அந்தக் குடும்பம் வாழையடி வாழையாக வாழ்வது மிகக்கடினம்.

    பொதுவாக வாஸ்துவின்படி வீடு கட்ட ஆசைப்படும் அனேகம் பேர் குறிப்பாக வடகிழக்கு, தென்மேற்கு இரண்டும் சரியாக இருந்தால் போதும் என்று நினைக்கிறீர்கள். இது மிகவும் தவறு. தென்கிழக்கு மூலைதான் உடம்புக்குத் தேவையான எனர்ஜியை கொடுக்கிற இடம் என்பதை மறந்து போகக் கூடாது.

    வீட்டுக்கு மட்டுமல்ல தொழிற்சாலையாக இருந்தாலும், தென்கிழக்கு மூலை மிக அதிகமாகக் கவனிக்கப்பட வேண்டும். குறிப்பாக தென்கிழக்கு மூலையானது பள்ளம் ஆக இருப்பது, கிணறு இருப்பது கடுமையான தோ‌ஷமாகும். இதுவரை இந்த கட்டுரையில் படித்தது போக இனியும் தெற்கு மூலை, தென்மேற்கு மூலை, மேற்கு மூலை, வடமேற்கு மூலை, வடக்கு மூலை ஆகிய இடங்களில் அறைகள் அமைந்தால் வரும் நன்மை தீமைகள் மற்றும் அந்த அறைகளில் எப்படி மாற்றங்கள் செய்யலாம் என்ற விவரங்களைப் பார்க்க உள்ளோம்.

    மானிடப் பிறவி எப்படி ஏதாவது உறுப்பு பழுதடைந்து போனால் நாம் அந்த குறையை ஊனம் என்கிறேமோ, அப்படித்தான் வீட்டில் ஏதாவது குறை ஏற்பட்டால் அதை வாஸ்து சாஸ்திரம் தோ‌ஷம் என்கிறது. மேலும் நம்மவர்கள் கட்டும் வீட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக் காரணம் என்னவெனில் ஒரு வீட்டைக் கட்டினால் அதில் குறைந்தபட்சம் 30 ஆண்டுகளாவது வாழுவதுண்டு.

    வீட்டை தினசரி மாற்றிக்கொள்ள முடியாது. எனவே வீடு கட்டும் போதே வாஸ்துபடி கட்டிக் கொள்வது சிறப்பு.

    தொடர்புக்கு: msramalingamastrologer@gmail.com

    Next Story
    ×