search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவிஞர் வாலி
    X
    கவிஞர் வாலி

    7500 பாடல்கள் எழுதிய கவிஞர் வாலிக்கு இன்று பிறந்த நாள்

    கவிஞர் வாலியின் பிறந்த நாளான இன்று அவரை பற்றிய சுவாரஸ்சியமான தகவல் குறித்து கவிஞர் முத்துலிங்கம் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    வாலியைக் காவியக்கவிஞர் என்று அடை மொழி கொடுத்து அழைத்துச் சிறப்பித்தவர் கலைஞர். இளையராஜாவுக்கு இசைஞானி என்றும், கமலஹாசனுக்கு கலைஞானி என்றும் கவிஞர் வைரமுத்துக்கு கவிப்பேரரசு என்றும் அடைமொழி கொடுத்துச் சிறப்பித்தவரும் கலைஞர்தான். இந்த அடை மொழியை அவர்களுக்குக் கொடுக்கும் முன்னாலேயே வெற்றிச் சிகரத்தில் ஏறி நின்றவர்கள் அவர்கள்.

    வாலி ஆயிரக்கணக்கான பாடல்களை சினிமாவில் எழுதியிருந்தாலும் முதன்முதலில் அவர் பாடல் எழுதிய படம் ‘அழகர் மலைக் கள்ளன் படத்தில் ’‘நிலவும் தாரையும் நீயம்மா - இந்த உலகம் ஒரு நாள் உனதம்மா’ என்று தொடங்கும் அந்தப்பாடல். தெலுங்கு இசையமைப்பாளர் கோபாலம் இசையில் பி.சுசீலா பாடிய பாடல் அது. இந்தப் படத்திற்குப் பிறகு வாலிக்குப் படம் எதுவும் அமையவில்லை.

    நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குநர் ப.நீலகண்டனிடம் இணை இயக்குநராகவும் வசனகர்த்தாவாகவும் திகழ்ந்த மா.லட்சுமணன் என்பவர் மூலம் எம்.ஜி.ஆர். நடித்த ‘நல்லவன் வாழ்வான்’ என்ற படத்திற்குப் பாடல் எழுத வாய்ப்புக்கிடைத்தது. வாலியும் அவருடன் தியாகராயா நகர் கிளப் ஹவுசில் இருந்த இன்னொரு நண்பரும் அந்தக் கம்பெனிக்குச் சென்று இயக்குநர் நீலகண்டனைச் சந்தித்தார்கள். உங்களில் யார் வாலி என்று நீலகண்டன் கேட்டிருக்கிறார். நான் தான் வாலி என்று வாலி சொல்ல, அப்படி என்றால் அவரை வெளியே போய் இருக்கச் சொல்லுங்கள் என்று இயக்குநர் அவரை வெளியே அனுப்பிவிட்டார். அப்படி அவரால் வெளியே அனுப்பப்பட்ட நண்பர் தான் பின்னாளில் நகைச்சுவை நடிப்பில் கொடி கட்டிப் பறந்த நடிகர் நாகேஷ்.

    அண்ணா கதை வசனம் எழுதிய அந்தப் படத்திற்கு இசையமைத்தவர் டி.ஆர்.பாப்பா, அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் வாலியின் பாடலை நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் அந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்வதற்குப் பல தடங்கல்கள் ஏற்பட்டன.

    ஒலிப்பதிவு நாளன்று பெருமழை பெய்ததால் வேறொரு நாளுக்கு அது ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் ஒலிப்பதிவு நாளன்று ஸ்டுடியோ முழுவதுமே மின்சாரத்துண்டிப்பு ஏற்பட்டு விட்டது. ஒருவாரம் கழித்து மீண்டும் ஒரு நாள் ஒலிப்பதிவு செய்யும் நேரத்தில் ஒலிப்பதிவுக் கருவியில் கோளாறு ஏற்பட்டு அன்றைக்கும் அந்தப் பாடல் ஒலிப்பதிவு ஆகவில்லை. இயக்குனர் நீலகண்டன் அதிர்ச்சியாகிவிட்டார்.

    இயற்கையே வாலிபாட்டை வேண்டாமென்று தடுக்கிறதோ என்று எண்ணிய நீலகண்டன், மறு நாள் மருதகாசியை அழைத்து இந்தப்பாடல் ஒலிப்பதிவாகாமல் ஏற்படுகின்ற தடங்கலைச் சொல்லி காட்சியை விளக்கி நீங்கள் பாடல் எழுத வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். வாலி எழுதிய பாடலைக் காட்டுங்கள் என்று மருதகாசி வாங்கிப் பார்த்திருக்கிறார்.

    இதைவிட இந்த காட்சிக்கு நான் என்ன எழுதிவிடப் போகிறேன். இந்தப் பையனுடைய வார்த்தைப் பிரயோகத்தைப் பார்க்கும்போது சினிமா உலகில் மிகப் பெரிய ஆளாக வருவான் என்று நினைக்கிறேன். இவனிடம் காத்திருந்து நீங்கள் பாடல் எழுதி வாங்க வேண்டிய சூழ்நிலைவரும். ஆகவே எந்தத் தடங்கல் வந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், வாலி எழுதிய பாடலையே ஒலிப்பதிவு செய்யுங்கள் நன்றாக வரும். என்னால் ஒரு கவிஞனின் வளர்ச்சி பாதிக்கப்படக்கூடாது என்று சொல்லிவிட்டு மருதகாசி போய்விட்டார். அதன் பிறகுதான் வாலியின் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. ‘சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறிய தாலே’ என்ற இந்த பாடல்தான் எம்.ஜி.ஆர்.படத்திற்கு வாலி எழுதிய முதல் பாடல். வாலி பாடல் அந்தப் படத்தில் இடம் பெறுவதற்கு மருதகாசியும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறார்.

    எம்.ஜி.ஆர். படத்திற்கு எழுதிய பிறகும் ஓராண்டு வரை வாலிக்குப் படங்கள் எதுவும் கிடைக்கவில்லை. 
     எழுத்தாளர் மா.ரா., கதை வசனம் எழுதிய எஸ்.எஸ்.ஆர். விஜயகுமாரி நடித்த நீங்காத நினைவு என்ற படத்திற்கு கே.வி.மகாதேவன் இசையில் இரண்டு பாடல்களை எழுதவைத்து மா.ரா. முதன் முதலில் வாலிக்கு 600 ரூபாய் வாங்கிக்கொடுத்தார்.
    மொத்தமாக 600 ரூபாயை வாலி அப்போது தான் பார்த்தார். என்னுடைய ஓராண்டுக்கான சாப்பாட்டுப்பிரச்சினை இதன் மூலம் தீர்ந்தது என்று வாலியே சொல்லியிருக்கிறார்.

    அடுத்து மா.ரா. கதை வசனம் எழுதிய முக்தா பிலிம்ஸ் தயாரித்த ‘இதயத்தில் நீ என்ற படத்திற்குப் பாடல் எழுதும் வாய்ப்பை மா.ரா.வே. ஏற்படுத்திக் கொடுத்தார். இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் விஸ்வநாதன் ராம மூர்த்தி.இந்தப் படத்திலிருந்துதான் வாலிக்கு ஒருதிருப்பம் ஏற்பட்டது.

    இந்தப் படத்தில் வாலி எழுதிய முதல் பாடல் “பூவரையும் பூங்கொடியே பூமாலை போடவா பொன் மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா” என்று தொடங்கும் இந்தப் பல்லவிக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துவிட்டு நான் போடுகின்ற மெட்டுக்குத்தான் நீங்கள் சரணம் எழுத வேண்டும் என்று சொல்லிவிட்டு மெட்டுப் போட்டுக் காட்டியிருக்கிறார். விரைவாக இவரும் பாடல் எழுதிவிட்டார். கண்ணதாசனைப் போல் இவரும் விரைவாக எழுதுகிறாரே என்று இன்னொரு பாடலுக்கான சிச்சுவேஷனையும் சொல்லுங்கள் இவரே அந்தப் பாடலையும் எழுதட்டும் என்று சொல்லியிருக்கிறார் விஸ்வநாதன். உடனே
    “உறவு என்றொரு சொல்லிருந்தால்
    பிரிவு என்றொரு பொருளிருக்கும்
    காதல் என்றொரு கதையிருந்தால்
    கனவு என்றொரு முடிவிருக்கும்”
    என்று எழுதிக் காண்பித்திருக்கிறார் வாலி. அதைப்பார்த்த விஸ்வநாதன் இத்தனை நாளும் எங்கிருந்தீர்கள் வாலி என்று கட்டிப்பிடித்துப் பாராட்டினாராம்.

    அதன் பிறகு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்து இயக்கிய கற்பகம் என்ற படத்திற்கு எல்லாப் பாடல்களையும் எழுதும் வாய்ப்புக்கிடைத்தது. அதற்குக் காரணமும் விஸ்வநாதன் தான். ஒரு படத்திற்கு முழுப்பாடலையும் வாலி முதன் முதல் எழுதியது இந்தப்படத்தில்தான். இந்தப் படத்தில் தான் கே.ஆர்.விஜயா அறிமுகம் ஆனார்.

    அதன் பின்னர் வேலுமணி தயாரித்த ஒரு படத்தில் இவரை வைத்து ஒரு பாடல் எழுதலாம் என்று வாலியை அழைத்துப்போய் அறிமுகப்படுத்தி ‘கற்பகம்’ படத்திற்கு ஒலிப்பதிவு ªச்யயப்பட்ட பாடல்களையெல்லாம் டேப்ரிக்கார்டரில் போட்டுக் காட்டியிருக்கிறார் விஸ்வநாதன். இவ்வளவு நன்றாக எழுதக் கூடிய இவருக்கு ஒரு பாடல் ஏன் கொடுக்க வேண்டும். அடுத்து எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் தயாரிக்கிறேன். அதில் வாலியே எல்லாப் பாடல்களையும் எழுதட்டும் என்று வேலுமணி சொல்லிவிட்டார். அப்படி எம்.ஜி.ஆர் படங்களில் எல்லாப் பாடல்களையும் வாலி எழுதிய முதல் படம் படகோட்டி. இதற்குப் படகோட்டி பேர்வைத்தவரும் வாலிதான். அப்படி பேர் வைத்ததற்காகத் தனியாக 100 ரூபாய் வேலுமணி கொடுத்தாராம். 

    அந்தப் படத்தில் வாலி எழுதிய முதல் பாடல் ‘என்னை எடுத்து தன்னைக் கொடுத்துப் போனவன் போனான்டி’ என்ற பாடல். அடுத்து அவர் எழுதிய பாடல்
    கொடுத்ததெல்லாம் கொடுத்தேன் - நான் 
    யாருக்காகக் கொடுத்தேன்
    ஒருத்தருக்கா கொடுத்தேன் - இல்லை
    ஊருக்காகக் கொடுத்தேன் - இந்தப்
    பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர் கொடுத்த தெல்லாம் கொடுத்தேன் நான் யாருக்காகக் கொடுத்தேன் என்று நான் கொடுத்தது போல் சொல்லாமல் கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான் என்று யாரோ கொடுத்ததுபோல் மாற்றிக் கொள்ளுங்கள் என்று வேலுமணியிடம் சொல்லிவிட்டு டேப்ரிக்கார்டரில் இருந்த அந்தப் பாடலை படப்பிடிப்பு அரங்கிற்குக் கொண்டு சென்று எல்லோரும் கேட்கும்படி எம்.ஜி.ஆர்.போட்டுக்காட்டியிருக்கிறார்.

    அப்போது அங்கிருந்த ஆரூர்தாஸ் அரசியல் மேடைகளில் உங்களைக் கண்ணதாசன் கடுமையாக விமர்சித்தாலும் சினிமாவிற்கு எப்படி உங்களுக்கு எழுத வேண்டுமோ அப்படி எழுதியிருக்கிறார் கண்ணதாசன் இஸ் ஏகிரேட் என்று பாராட்டியிருக்கிறார்.
    நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன். அதன் பிறகுதான் வாலி என்ற புதுக்கவிஞர் எழுதியது என்று தெரிந்து கொண்டேன். ஏற்கனவே நல்லவன் வாழ்வான் என்ற படத்திற்கு எழுதியிருக்கிறாராம். அப்படிச் சொன்ன பிறகுதான் வாலி என்ற பெயர் நினைவுக்கு வந்தது என்று சொல்லிவிட்டு வாலியை அழைத்து எல்லாப் பாடல்களையும் அவரை வைத்தே எழுதிக் கொள்ளுங்கள் என்று வேலுமணியிடம் கேட்டுக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

    அதன் பிறகு திருக்கழுக்குன்றத்தில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் பேசும் போது இனிமேல் என் படத்திற்கு வாலி என்ற கவிஞர்தான் பாடல் எழுதுவார் என்று பகிரங்கமாக எம்.ஜி.ஆர். அறிவித்தார். அதன் பிறகு எம்.ஜி.ஆர். நடித்த 56 படங்களுக்குப் பாடல் எழுதினார். அதுபோல் சிவாஜி நடித்த 52 படங்களுக்கும் பாடல் எழுதி புகழின் உச்சம் தொட்டார். இதற்கெல்லாம் காரணம் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் தான்.

    நான் விசுவநாதனைச் சந்திக்கும் வரை சாப்பிட எனக்குச் சோறு கிடைக்கவில்லை, சந்தித்தபிறகு சாப்பிட எனக்கு நேரம் கிடைக்க வில்லை என்று வாலி சொல்லியிருக்கிறார். விஸ்வநாதன் என்னைத் தொடும்வரை தரித்திரம் என்னைத் தொட்டது. அவர் தொட்டதும் சரித்திரம் என்னைத்தொட்டது என்றும் சொல்லி இருக்கிறார். அவரது உயர்வுக்குக் காரணம் எம்.ஜி.ஆரும், எம்.எஸ்.விசுவநாதனும்தான் என்றால் அது மிகையல்ல.

    கண்ணதாசன் கொடிகட்டிப் பறந்த காலத்தில் பாடல் எழுத வந்து அவருக்கு இணையாய்க் கோட்டை கட்டி வாழ்ந்தவர் வாலி ஒருவர்தான். எது கண்ணதாசன் பாடல் எது வாலி பாடல் என்று தெரியாமல் விஸ்வநாதன்கூடப்பெயரை மாற்றிச் சொல்லியிருக்கிறார். ஒருமுறை கண்ண தாசனே வானொலியில் ஒலிபரப்பப்பட்ட ஒரு பாடலைக் கேட்டுவிட்டு பக்கத்தில் இருந்த விஸ்வநாதனிடம் இன்றைக்குக் கேட்டாலும் நான் எழுதிய இந்தப்பாடல் எவ்வளவு இனிமையாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். அண்ணே அது நீங்கள் எழுதிய பாடல் அல்ல. வாலி எழுதிய பாடல் என்றிருக்கிறார் விஸ்வநாதன், அந்தப்பாடல் தான் மாதவிப்பொன்மயிலாள் தோகை விரித்தாள் என்ற பாடல். பாடல் இடம் பெற்ற படம் இருமலர்கள்.

    உடனே எம்.எஸ்.விஸ்வநாதனை அழைத்துக் கொண்டு வாலி வீட்டுக்குச்சென்று பாராட்டினாராம் கண்ணதாசன். 
    இதுவரை திரைப்பாடல் எழுதியவர்களில் 7,500 பாடல் களுக்கு மேல் எழுதி உலகச் சாதனை படைத்தவர் வாலி ஒருவர் தான். கண்ணதாசன் 3,500 பாடல்கள் வரை எழுதி இருக்கிறார். வைரமுத்து 5,000 பாடல் களைக் கடந்துவிட்டார். இப்போது வெளிவந்த ‘லாபம்’ என்ற படம் வரையிலும் 1664 பாடல்கள் நான் எழுதியிருக்கிறேன்.

    மலேசியா, இலங்கை , சிங்கப்பூர் என பல நாடுகளில் இருந்து அழைத்தும் வாலி அங்கு செல்ல விரும்பவில்லை. அவரிடம் பாஸ் போர்ட்டும் இல்லை.

    கவிஞர்களில் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது கவிஞர் வாலி ஒருவர்தான். எனது மூத்த அண்ணனாகவே அவரைநான் பாவித்தேன். அது போலத்தான் அவரும். பத்திரிகைக்கு எழுதினாலும் கவியரங்கத்திற்கு, எழுதினாலும் என்னிடம் காட்டிவிட்டுத்தான் கொண்டு செல்வார். 

    எம்.ஜி.ஆரின் கொள்கைப் பாடல்களாக இன்றைக்கு இருப்பவையெல்லாம் பெரும்பாலும் அவரின் பாடல்கள்தான். வாழ்க கவிஞர் வாலியின் புகழ்.
    Next Story
    ×