search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார்த்திக் - குஷ்பு
    X
    கார்த்திக் - குஷ்பு

    குஷ்பு ... என்னும் நான் சந்தித்ததும் சிந்தித்ததும்...சண்டையை மறந்தோம் - இணைந்தோம்

    நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    கார்த்திக்குக்கும் எனக்கும் இடையிலான நட்பு, இந்தியில் கோவிந்தாவுடன் ஏற்பட்ட நட்பை போல் ஆழமானது... பலமானது!
    அப்படிப்பட்ட நட்புக்கும் பிரிவு வந்தது தான் துரதிருஷ்டம். ஆனால் எங்களுக்குள் ஏன் அப்படி ஒரு சண்டை வந்தது என்பதற்கான காரணம் இன்று வரை எனக்கு புரியவில்லை.

    சின்னபிள்ளைகள் போல் முட்டிக்கொண்டு ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டே இருந்தோம். எங்களுக்குள் உருவான அந்த சண்டையும் அதனால் ஏற்பட்ட பிரிவும்  தாங்க முடியாத வேதனையை தந்தாலும் இருவரும் பிடிவாதத்தால் அதை தாங்கி கொண்டோம் என்பதுதான் உண்மை.

    எங்களுக்குள் சண்டை ஏற்பட்ட போது கிழக்கு வாசல் படப்பிடிப்பு வேறு நடந்து கொண்டிருந்தது. படப்பிடிப்பின் போது எங்களுக்குள் இருந்த சண்டையை வெளிக்காட்டாமல் டைரக்டர் சொன்னபடி காட்சிகளில் சிறப்பாக நடித்தோம். ஆனால்  ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வதில்லை.

    ஒருநாள் படப்பிடிப்பு ஒரு கிராமத்தில் நடைபெற்றது. அப்போது எங்களை பார்ப்பதற்காக பெரும் கூட்டம் திரண்டது. என்னுடைய காட்சி ஒரு இடத்தில் படமாக்கப்பட்டது.

    அதற்கு சற்று தொலைவில் கார்த்திக் நடித்த காட்சி படமாக்கப்பட்டது. கண்ணுக்கு தெரியும் தூரத்தில்தான் இருவரும் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு திரண்டு இருந்தவர்களில் ஒருவர் என்னிடம் தவறான எண்ணத்தில் இடுப்பில் கையை வைத்து விட்டார்.

    உடனே திரும்பி அவரை கையை பிடித்து பளார் என்று அடித்தேன். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதை பார்த்ததும் அங்கிருந்து கார்த்திக் ஓடி வந்தார். சண்டையை மறந்து என்னிடம் என்ன...என்ன... என்றார். நான் விவரத்தை சொன்னேன். அதை கேட்டதும் அவருக்கும் ஆத்திரம். தனது பங்குக்கு அவரும் வெளுத்து கட்டினார். அதோடு விடாமல் போலீசில் அவரை ஒப்படைத்து விட்டுதான் அங்கிருந்து சென்றார்.
    இதுதான் கார்த்திக்.

    ஒரு பக்கம் சண்டை இருந்தாலும், பாசம், அன்பு இரண்டும் மனதில் இருந்துகொண்டேதான் இருந்தது. இப்படியே சுமார் 2 ஆண்டுகள் ஓடி விட்டன.  சண்டை சமாதானம் ஆகும் நேரமும் வந்தது.
    அதற்கு வழி வகுத்தது விக்னேஷ்வர் படம்.

    கோவை மணி தயாரிப்பில் ரகு சார் இயக்கத்தில் விக்னேஷ்வர் படத்தை எடுக்க முடிவு செய்து இருந்தார்கள். வழக்கம் போலவே நாங்கள் இருவரும் அந்த படத்தில் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை.
    ஆனால் அந்த படத்தில் எங்களைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்பதில் ரகு சாரும் விடாப்பிடியாக இருந்தார். என்னிடம் ‘ஏம்மா... எனக்கு நல்ல கதை கிடைத்திருக்கிறது. இந்த கதா பாத்திரங்களில் நீயும், கார்த்திக்கும் ஜோடியாக நடித்தால் படம் பிரமாதமாக இருக்கும். நீங்கள் இருவரும் மனம் விட்டு பேசினால் நிச்சயம் சமாதானமாகி விடுவீர்கள் என்று என்னை வற்புறுத்தி சமாதானப்படுத்தினார்.

    நானும் வேறு வழியில்லாமல்,  “வேண்டுமானால் கார்த்திக்கிடம் போய் கேளுங்கள் அவர் ஒத்துக்கொண்டால் நானும் ஒத்துக் கொள்கிறேன்” என்றேன்.

    அதே போல் ரகு சாரும் கார்த்திக்கிடம் போய் பேசி இருக்கிறார். நான் சொன்ன அதே பதிலைத்தான் அவரும் சொல்லி இருக்கிறார். ‘அவள் ஒத்துக்கொண்டால் நானும் ஒத்துக் கொள்கிறேன், என்று கூறினாராம். அதை கேட்டு வந்து என்னிடம் பேசினார்.
    இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘விக்னேஷ்வர்’ படத்தில் நடிக்க இருவரும் ஒத்துக்கொண்டோம்.  படப்பிடிப்பு தளத்தில் முதல் நாள் சந்திப்பு. இருவருக்குள்ளும் எந்த சண்டையும் இருந்ததுபோல் காட்டிக்கொள்ளவே இல்லை. ஒருவருக்கொருவர் ஹாய் சொன்னோம்... சண்டையை மறந்து ஆரத்தழுவிக்கொண்டோம்.

    அந்த கணம் முதல் எங்களுக்குள் இருந்த  சண்டை மறந்து சந்தோசம் பிறந்தது. அதன் பிறகு எங்களுக்குள் ஏற்பட்ட நட்பு யாராலும் பிரிக்க முடியாதபடி இறுக்கமானது. நெருக்கமானது. இன்று வரை அப்படியே இருக்கிறது. 
    இன்று கார்த்திக் எனது நண்பர் என்பதையும் தாண்டி எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருக்கிறார்.

    கார்த்திக்கின் இயற்பெயர் முரளி. நாங்கள் யாரும் அவரை கார்த்திக் என்று கூப்பிடுவது கிடையாது. முரளி என்றுதான் அழைப்போம். என் பிள்ளைகளும் அவரை ‘முரளியப்பா’ என்று தான் அழைப்பார்கள். பிள்ளைகளிடமும் அவ்வளவு பாசமாக இருப்பார்.
    அவருக்கு ஒன்று என்றால் எங்களால் தாங்க முடியாது. துடித்துப்போவோம். அதே போல் தான் அவரும்.  

    எங்கள் வீட்டு நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் முரளியும் இருப்பார். அவரது வீட்டு நிகழ்ச்சியில் நாங்களும் இருப்போம். அந்த அளவுக்கு முரளியுடனான எங்கள் குடும்ப நட்பு குதூகலமாக பூத்து குலுங்குகிறது.

    ஒருமுறை கோபிசெட்டிப்பாளையத்தில் இருந்து படப்பிடிப்பை முடித்துவிட்டு ரெயிலில் சென்னைக்கு புறப்பட்டேன். அப்போது அவருக்கு வேறு ரெயிலில் டிக்கெட் இருந்தது. நாங்கள் அவரை எங்களோடு வாருங்கள். டிக்கெட் பரிசோதகரிடம் சொல்லி சமாளித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தோம். அதன்படியே ஒரே ரெயிலில் பயணித்தோம். அப்போது எனது சின்ன மகள் அவரிடம் இருந்து அவர் மடியிலேயே தூங்கிவிட்டாள். கார்த்திக்கை பொறுத்த வரை ஒரு குணமுண்டு. அவராகவே பேசவேண்டும் என்று முடிவு செய்தால் மட்டும்தான் யாராக இருந்தாலும் சரி அவரிடம் பேச முடியும்.

    Next Story
    ×