search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீரடி சாய் பாபா
    X
    சீரடி சாய் பாபா

    ஆத்ம ஞானம் மேம்படுத்தும்...பாபா காட்டிய பாதை...அன்னதானம் செய்யுங்கள்

    சீரடி சாய்பாபா தன்னை நாடி வரும் பக்தர்களிடம் அன்னதானம் செய்யுங்கள் என்று தவறாமல் சொல்லி வந்தார். சில குறிப்பிட்ட பக்தர்களிடம் அன்னதானம் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கூறினார்.
    தானம் செய்வதை நம் முன்னோர்கள் மிக முக்கியமான கடமைகளில் ஒரு கடமையாக வைத்திருந்தனர். நல்லது, கெட்டது எது நடந்தாலும் தானம் செய்தனர். பரிகாரத்தில் தானத்துக்கு முதலிடம் கொடுத்தனர்.

    தானத்தில் எத்தனையோ வகைகள் உள்ளன. உடை தானம், வீடு தானம், எண்ணை தானம், சொர்ண தானம், நிலம் தானம், கல்வி தானம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் அன்னதானமே முதன்மையானது. நிகரற்றது.

    அன்னதானம் செய்பவர்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பது ஐதீகம் ஆகும்.  யார் ஒருவர் தவறாமல் அன்னதானம் செய்கிறாரோ அவருக்கு பூர்வ புண்ணிய பலன்கள் மிக எளிதாக கிடைக்கும் என்று சொல்வார்கள். குறிப்பாக ஆத்ம பலத்தை அதிகரிக்கச் செய்யக்கூடிய மிகப்பெரிய ஆற்றல் அன்னதானத்திற்கு மட்டுமே உண்டு.

    இதனால்தான் சீரடி சாய்பாபா தன்னை நாடி வரும் பக்தர்களிடம் அன்னதானம் செய்யுங்கள் என்று தவறாமல் சொல்லி வந்தார். சில குறிப்பிட்ட பக்தர்களிடம் அன்னதானம் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கூறினார். சில பக்தர்களை கட்டாயப்படுத்தி அன்னதானம் செய்ய வைத்தார்.

    அறிவுரை கூறுவதோடு அவர் நின்றுவிட வில்லை. தாமே அன்னதானம் செய்து தன் பக்தர்களுக்கு முன் உதாரணமாகவும் திகழ்ந்தார். இன்னும் சொல்லப்போனால் சீரடியில் திரண்ட நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு அவர் தினமும் பசியாற்றினார்.
    இந்த கடமைக்காக அவர் யார் உதவியையும் ஒருபோதும் எதிர்பார்த்ததே இல்லை. தானே கடைக்கு சென்று அரிசி, கோதுமை, காய்கறிகளை வாங்கி வருவார். அவற்றை தன் கைப்பட உணவு வகைகளாக சமைத்தார். பிறகு பக்தர்களை தன் அருகில் அமர வைத்து அன்னதானம் வழங்கினார்.

    1910-ம் ஆண்டு வரை பல்லாயிரக் கணக்கான பக்தர் களுக்கு சாய்பாபா சீரடியில் அன்னதானம் வழங்கி உள்ளார். அவரது அன்னதானம் பற்றிய ஏராளமான தகவல்கள் அவர் காலத்தில் வாழ்ந்த பக்தர்களால் எழுதி வைக்கப்பட்டன. அந்த குறிப்புகள் ஆவ ணங்களில் இன்றும் உள்ளன.

    1910-ம் ஆண்டுக்கு பிறகு சாய்பாபாவை ஆரத்தி செய்வதும், சாவடி ஊர்வலத்துக்கு அழைத்து செல்வதும் அதிகரித்தது. இதற்காக நிறைய பக்தர்கள் வரத்தொடங்கினார்கள். அவர்களுக்கு சில பக்தர்கள் அன்னதானம் வழங்கினார்கள்.

    அந்தவகையில் சாய்பாபாவின் இருப்பிடத் தில் பக்தர்களால் உணவு வகைகள் குவிய தொடங்கின. பாபாவுக்கு நைவேத்தியம் படைப்பதாக சொல்லி ஏராளமான பக்தர்கள் உணவு வகைகளை வீட்டில் இருந்து சமைத்து கொண்டு வந்தனர். இதனால் 1910-ம் ஆண்டுக்கு பிறகு சாய்பாபா தன் கைப்பட உணவு சமைக்க வேண்டும் என்ற நிலை மாறியது.

    பாபா கேட்காமலேயே பக்தர்கள் தேவைக்கும் அதிகமாகவே உணவு வகைகளை எடுத்து வந்தனர். இதன்மூலம் அன்னதானத்தின் அவசியத்தை அவர் பக்தர்கள் மனதில் உருவாக்கி இருந்தார்.

    அன்னதானம் பற்றி சாய்பாபா கூறுகையில், “அன்னத்தில் இருந்துதான் உயிர்கள் தோன்றுகின்றன. அந்த அன்னத்தில் இறைவன் கலந்து இருக்கிறான். எனவே அன்னதானம் செய்யும்போது இறைவன் மனம் குளிர்ந்து திருப்தி அடைகிறான். ஆகவே உங்களால் முடியும் போதெல்லாம் அன்னதானம் செய்ய தவறாதீர்கள்” என்று சொல்வார்.

    தற்போதைய வாழ்வியல் நடைமுறையில் பெரும்பாலும் பிரதிபலன்களை எதிர்பார்த்தே அன்னதானம் செய்கிறார்கள். சாய்பாபா இதை கண்டித்தார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்னதானம் செய்ய வேண்டும் என்று கூறினார். எதிர்பார்ப்புடன் அன்னதானம் செய்வதைவிட செய்யாமல் இருப்பதே நல்லது என்று அவர் தன் பக்தர்களை எச்சரிக்கவும் செய்தார்.

    பசியோடு இருப்பவர்களுக்கு உணவு கொடுப்பது உங்களை முக்தி பாதைக்கு அழைத்து செல்லும் என்று சாய்பாபா அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். பாபா காட்டிய பல்வேறு வகையான ஆன்மீக பாதைகளில் அன்னதானம் செய்யுங்கள் என்ற இந்த பாதை  மிகவும் முக்கியமானது.

    பணக்கார பக்தர்களை கண்டால், “அன்னதானம் செய்வதை தலையாய கடமையாக கொண்டு வாழ வேண்டும்” என்று சொல்ல தவறமாட்டார். சில பக்தர்களை சீரடியிலேயே அன்னதானம் செய்ய வைத்தார்.

    அப்படி அன்னதானம் நடைபெறும் நாட்களில் அவர் பக்தர்களோடு அமர்ந்து கொள்வார். சில பக்தர்களுக்கு தன் கைப்பட உணவு பரிமாறுவார். அந்த காட்சி மிகவும் அலாதியானதாக இருக்கும். மசூதி மாடத்தில் சாய்ந்து கொண்டு பக்தர்கள் அன்னதானம் பெறுவதை அவர் மகிழ்ச்சி பொங்க பார்த்துக்கொண்டே இருப்பார்.

    சாய்பாபாவின் கையில் இருந்து ஒரு பருக்கை சோறு பெறுவது மிகப்பெரிய பாக்கியம் என்று கருதிவந்த பக்தர்கள் ஆவலுடன் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். சோறு, சப்பாத்தி, வடை, அப்பம், பூரி, பலவித பாயாசங்கள் என்று அறுசுவை உணவை தினம், தினம் பாபா அந்த பக்தர்களுக்கு வழங்கினார்.

    பாபா வழங்கிய அன்னதானம் பெரும்பாலும்  கூட்டுக்கலவை உணவு வகைகள் கொண்டதாக இருக்கும். பக்தர்கள் கொண்டு வரும் அனைத்து உணவுகளையும் ஒன்றாக கலந்து சில சமயம் அவர்  தானம் செய்வார். எப்போது அன்னதானம் செய்தாலும் முதலில் இறைவனுக்கு படைத்து விட்டு பிறகு பக்தர்களுக்கு வழங்குவதை அவர் வழக்கத்தில் வைத்து இருந்தார். பக்தர்கள் சாப்பிட தொடங்கியதும் அவர்களைப் பார்த்துக்கொண்டே இருப்பார். சில குறிப்பிட்ட பக்தர்கள் ஏதாவது ஒரு உணவை மிக விரும்பி சாப்பிடுவார்கள். உடனே அந்த வகை உணவை அந்த பக்தருக்கு அவர் கூடுதலாக வழங்க சொல்வார். ஒரு சமயம் பக்தர் ஒருவர் சப்பாத்தி, பருப்பு இரண்டையும் விரும்பி சாப்பிடுவதை அறிந்ததும், பாபா அவற்றை எடுத்து வந்து நெய் கலந்து தன் கைப்பட அந்த பக்தருக்கு பரிமாறினார்.

    வயிறு நிரம்பும் வரை சாப்பிடுங்கள் என்று பாபா சொல்லிக்கொண்டே இருப்பார். சில பக்தர்களுக்கு மோர் கொண்டு வந்து கொடுப்பார். மோர் குடித்தால் நல்லது என்று சொல்லி குடிக்க வைப்பார். மிச்சம் வைக்காதீர்கள். முழுமையாக குடித்து விடுங்கள் என்று அன்புக்கட்டளையும் பிறப்பிப்பது உண்டு. இப்படி சாய்பாபா அன்னதானத்தை மிகப்பெரிய திருவிழா போல தினமும் ஆனந்தமாக நடத்தினார்.

    அதேசமயத்தில் அகங்காரத்துடன் யாராவது நைவேத்தியம் செய்ய வந்தால் அவர்களை அவர் விரட்டி விடவும் தயங்கவில்லை. அகங்காரம், ஆணவம் இல்லாமல் எந்த உணவு கொடுத்தாலும் அவர் வாங்கிக்கொள்ள மறுத்தது இல்லை.
    அன்னதானம் செய்யும்போது ஜாதி, மதம் பார்க்ககூடாது. ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் பார்க்கக்கூடாது என்ற எழுதாத விதியை சாய்பாபா கடைப்பிடிக்க வைத்தார். யாராவது ஒருவர் பசிக்கிறது என்று சொன்னால், உடனே கொடுத்துவிடு என்பதே சாய் பாபாவின் தாரக மந்திரமாக இருந்தது.

    பாபா காட்டிய இந்த சீரிய பாதையை பல பக்தர்கள் இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள். உலகம் முழுக்க உள்ள பாபா ஆலயங்களில் அன்னதானம் செய்வது என்பது  சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. வியாழக்கிழமைகளில் 3 வேளையும் அறுசுவை உணவு வழங்கும் பாபா ஆலயங்கள் நிறைய தோன்றிவிட்டன.

    சில இடங்களில் பாபா ஆலயம் ஒரே ஒரு அறையுடன் மிக சாதாரணமாக இருக்கும். ஆனால் வியாழக்கிழமைகளில் அந்த ஆலயத்தில் நடக்கும் அன்னதானம் பிரமிக்க வைப்பதாக இருக்கும். யார் அரிசி வாங்கிக் கொடுக்கிறார்? யார் மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கிறார்? என்பதே தெரியாது. அந்த அளவுக்கு பாபா காட்டிய அன்னதானம் செய்யுங்கள் என்ற பாதை பக்தர்கள் மனதில் ஆழப் பதிந்துவிட்டது.

    பெரும்பாலான பக்தர்கள் வியாழக்கிழமை களில் மட்டுமே அன்னதானம் செய்வதை வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள். பாபாவை பொறுத்தவரை இதில் அவர் எந்த வரையறையையும் செய்யவில்லை. எப்போது முடிகிறதோ அந்த நாட்களில் எல்லாம் அன்னதானம் செய்யுங்கள் என்பதைதான் பாபா சுட்டிக்காட்டி உள்ளார். எனவே பாபா பக்தர்கள் எப்போது அன்னதானம் செய்தாலும் அது பாபாவை சென்றடையும் என்பதை உறுதியாக நம்பலாம்.

    அன்னதானம் செய்பவர்கள் ஒருநாள் கூட அலட்சியத்துடன் நடந்து கொள்ளக்கூடாது. எத்தனைபேர் உணவு சாப்பிட வந்தாலும் அத்தனை பேருக்கும் உணவு கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

    அன்னதானம் செய்வதை போலவே மற்ற தானங்களையும் ஏமாற்றாமல் பிரதிபலன் பாராமல் செய்ய வேண்டும் என்று பாபா வலியுறுத்தி உள்ளார். மேலும் யாசகம் கேட்டு வருபவர்களிடம் அதிகார தோரணையுடன் நடந்து கொள்ளக்கூடாது என்றும் கூறி உள்ளார்.

    உணவோ, பணமோ, பொருளோ எது கேட்டாலும் பொய் பேசாமல் வழங்க வேண்டும் என்று பாபா அடிக்கடி சொல்வதுண்டு. ஒருவேளை இந்த தானங்களை செய்ய முடியாத நிலையில் இருந்தால் நிதானமாக அதை தெரிவிக்கவேண்டும் என்றும் அவர் கூறுவது உண்டு.

    தனக்கு நெருக்கமான பக்தர்களிடம் தானம் செய்யாமல் இங்கே வராதீர்கள் என்று பாபா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. நானாசாகேப் என்ற பக்தர் ஒரு தடவை தன் வீட்டில் பிச்சை கேட்க வந்திருந்த ஒரு பெண்ணுக்கு அரிசி கொடுக்க மறுத்தார். நானா சாகேப்பின் மனைவி அரைப்படி அரிசியை அந்த பிச்சைக்கார பெண்ணுக்கு தானமாக கொடுத்தார்.

    ஆனால் அந்த பிச்சைக்கார பெண் வீட்டில் இருக்கும் 4 படி அரிசியையும் தாருங்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். அந்த பெண்ணை நானாசாகேப் திட்டி, அடித்து விரட்டிவிட்டார். மறுநாள் நானாசாகேப் சீரடிக்கு சென்ற போது சாய்பாபா அவருடன் பேச மறுத்துவிட்டார்.

    “ஏன் பாபா என்னுடன் பேசாமல் இருக்கிறீர்கள்?” என்று நானா கேட்ட போது, “என்னிடம் பொய் பேசுபவர்களை கண்டால் பிடிக்காது. நான் சொல்லும் ஆலோசனைகளை ஏற்று நடக்காவிட்டால் இங்கு வரக்கூடாது” என்றார். அதற்கு நானா, “நான் என்ன தவறு செய்தேன்?” என்று கேட்டார்.

    உடனே சாய்பாபா, “நேற்று உன் வீட்டுக்கு வந்த பிச்சை எடுக்கும் பெண்ணுக்கு அரிசி கொடுக்காமல் துரத்திவிட்டாயே! இது என்ன நியாயம்?” என்று கர்ஜித்தார். “என் பக்தன் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், என்ன செய்தாலும் எனக்குத்தெரியும். மறந்துவிடாதே நான் சொன்னபடி தான, தர்மங்கள் செய்! அது தான் உன் ஆன்ம பாதைக்கு நல்லது” என்றார்.

    இந்த சம்பவத்துக்கு பிறகு சாய்பாபா பக்தர்கள் தங்களை பாபா தினமும் கண்காணிக்கிறார் என்பதை உணர்ந்தனர். பாபா காட்டிய பாதையில் தவறாமல் அன்னதானம் செய்தனர். இன்று மற்ற வழிபாட்டு தலங்களில் இல்லாத அளவுக்கு பாபா ஆலயங்களில் அன்னதானம் மிக மிக விமரிசையாக நடைபெறுகிறது.

    பாபா காட்டிய இந்த பாதையை நீங்களும் பின்பற்றுங்கள். பாபாவை நெருங்குவதற்கு இந்த பாதை மிக எளிதான பாதையாகும். பாபாவின் அன்னதான தகவல்கள் அடுத்த வாரமும் தொடரும்.
    Next Story
    ×