search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார்த்திக் - குஷ்பு
    X
    கார்த்திக் - குஷ்பு

    குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும் - தேடிவந்த அதிர்ஷ்டம்

    நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    அந்த நேரத்தில் எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்பாராத  அழைப்பு வந்தது. அழைப்பு வேறு யாரிடமும் இருந்து அல்ல. பிரபல மலையாளபட டைரக்டர் பாசிலிடம் இருந்துதான். இதற்கு தூண்டு கோலாக இருந்தவர் எனது மேக்அப் மேன்தான். அவர் பாசிலுடன் நெருங்கிய நட்பு வைத்திருந்ததால் என்னைப் பற்றி கூறி இருக்கிறார்.

    அப்போது பாசில் தமிழ், மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் படங்களை இயக்கி கொண்டிருந்தார். தமிழில் பூவே பூச்சூடவா, பூவிழி வாசலிலே, என் பொம்மு குட்டி அம்மாவுக்கு என்ற பெயர் சொல்லும் படங்களை இயக்கி உச்சத்தில் இருந்த நேரம்.

    அவரிடம் இருந்து அழைப்பு வந்ததை என்னால் நம்பவே முடியவில்லை. பாசில் சார் முன்பு போய் நின்றதும் அவர் ஓ.கே. சொல்லிவிட்டார். அப்போதுதான் வருசம்&16 படத்துக்கான ஏற்பாடுகள் நடந்திரு க்கிறது. அந்த படத்தில் நிரோஷாவைத்தான் கதாநாயகியாக போட முடிவு செய்து இருந்திருந்தார்கள். அந்த நேரத்தில் என்னை பார்த்ததும் முடிவு மாறியது. அந்த வாய்ப்பு எனக்கு வந்தது.

    பாசில் என்னை பார்த்ததும் கதாநாயகி நீதான். ஆனால் கதா நாயகன் யார் தெரியுமா என்றார். நான் தெரியாது என்று தலையை ஆட்டினேன். கார்த்திக் தான் கதாநாயகன் என்றார். அதை கேட்டதும் என்னால் நம்பவே முடியவில்லை. கார்த்திக்கா... அவர் நவரச நாயகன் ஆயிற்றே...! அவரை சந்திக்கவாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று எவ்வளவோ பேர் ஏங்கிய கால கட்டம் அது. எனக்கு அவருடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்திருப்பதை கேட்டதும் அங்கேயே துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது.
    என் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை அவரும் கவனித்து இருப்பார். திடீரென்று ஆனால் ஒன்று... என்று இழுத்தார்! நான் என்ன சொல்லப்போகிறாரோ தெரியவில்லையே என்று பதறிவிட்டேன்.

    அவர் சொன்னார் ஒரே ஒரு கண்டிஷன். கார்த்திக்குடன் நடிக்கப் போகிறேன். என் படத்தில் நடிக்கப் போகிறேன் என்று யாரிடமும் வாயை திறக்க கூடாது புரியுதா? என்றார்.நானும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் மாதக் கணக்கில் காத்திருந்தேன்.

    படத்தில் ஜோடி சேருவதற்கு முன்பே நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். எங்கள் நட்பு தொடங்கிய இடம் சோழா ஓட்டல். அது ஒரு வித்தியாசமான அனுபவம். அந்த காலகட்டத்தில் இன்றைய கால கட்டத்தைபோல் தெருவுக்கு தெரு பியூட்டி பார்லர்கள் கிடையாது. உடற்பயிற்சி கூடங்களும் இருக்கவில்லை.

    சோழா ஓட்டலில் ‘ஹெல்த்கிளப்’ என்ற பெயரில் உடற்பயிற்சி கூடம் இருந்தது. அங்குதான் கார்த்திக் தனது நண்பர் களுடன் உடற்பயிற்சி செய்ய வருவார். அதே ஓட்டலில் இருந்த பியூட்டி பார்லருக்கு நான் என் தோழிகளுடன் செல்வேன்.

    அப்படி செல்லும் போதுதான் ஒருநாள் கார்த்திக்கை சந்திக்க நேர்ந்தது. அவர் அப்போது ரசிகர்களால் நவரச நாயகனாக கொண்டாடப்பட்டார்.

    ஏற்க னவே ‘அலை கள் ஓய்வதில்லை’ என்ற படத்தில் அறிமுகமாகி தனது நடிப்பால் ரசிகர்களையும் கவர்ந்தவர். தங்கள் மனம் கவர்ந்த நவசர நாயகனை ஒரு நாள் சந்திக்க மாட்டோமா என்று பலர் ஏங்கிய காலம் அது.

    ஆனால் எனக்கு நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த முதல் சந்திப்பே எங்களுக்குள் நல்ல நட்பாக மலர்ந்தது.
    நான் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருந்தது பற்றியும், தமிழில் பிரபுவுடன் தர்மத் தில் தலைவன் என்ற படத்தில் நடிப்பது பற்றியும் அவரிடம் பேசிக்கொண்டேன்.

    எங்கள் நட்பு அதன்பிறகு நெருக்கமானது. இருவரும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டோம். அவ்வளவு நெருங்கி பழகியும் அவருடன் கதாநாயகியாக நடிக்கப்போவது பற்றி சொல்லாமல் ரகசியம் காத்தேன். ஏனென்றால் அது டைரக்டர் போட்ட வாய்ப்பூட்டு ஆயிற்றே!

    திடீரென்று ஒரு நாள் அழைப்பு வந்தது. படப்பிடிப்புக்காக நாகர்கோவில் போகிறோம் என்றார்கள்.

    அதன்பிறகுதான் இனியும் சொல்லாமல் இருப்பது நல்லதல்ல என்று கார்த்திக்குக்கு போன் செய்து நான் உங்களுடன் ஒரு படம் நடிக்கப்போறேன் தெரிமா என்றேன்.

    அதை கேட்டதும், என்னுடனா...? என்ன படம்? யார் டைரக்டர்? என்று ஆவலுடன் கேட்டார்.

    உண்மையிலேயே அவரும் தெரியா தது போல் பேசுகிறாரா? என்று எனக்கு எதுவுமே புரியவில்லை. ஆனால் என் ரகசியத்தை உடைத்து விட்டேன். ‘பாசில் சார் படம்’ நாளை நாகர்கோவிலில் புறப்பட சொல்லியிருக் கிறார்கள் என்றேன். அதை கேட்டதும் ‘சூப்பர்...சூப்பர்... வாங்க’ என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    நாகர்கோவில் புறப்பட்டோம். அங்குள்ள பத்ம நாபபுரம் அரண் மனையில் படப்பிடிப்பு. அங்குள்ள இயற்கை எழில் சூழ்ந்த சூழல் அருமையாக இருந்தது.

    நவரச நாயகனுடன் அந்த அரண்மனையில் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து... ரசித்து நடித்தேன். படப்பிடிப்பு முடிந்ததும் அந்த அரண் மனையின் ஒவ்வொரு பகுதியையும் ரசித்து பார்த்து வியந்து போவேன். அவ்வளவு அழகாக இருக்கும்.

    சென்னையை விட்டு வெளிப்புறப் படப் பிடிப்புக்கு சென்றதும் அதுவே முதல் முறை. அதுமட்டுமல்ல எங்கோ பிறந்து வளர்ந்து இந்தியாவின் தென் கோடியில் நிற்கிறோம் என்று நினைத்த போது சந்தோஷமாக இருந்தது.

    ஒரு மாதத்துக்கும் மேல் தங்கி இருந்து படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை கிளம் பினோம். அந்த படம்தான் வருசம் 16, எத்தனை வருஷமானாலும் நினைவை விட்டு அகலாத படம்.

    1989&ல் படம் வெளிவந்தது. குறைந்த செலவில் நிறைவான படத்தை தருபவர் என்ற பெயர் பெற்ற பாசில் சாரின் அந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. என்னைப் பொறுத்தவரை அது எனக்கு தேடிவந்த அதிர்ஷ்டம். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான விருதும் கார்த்திக் சாருக்கு கிடைத்தது. அந்த படம் மட்டும் வெற்றி பெறவில்லை. அந்த படத்தில் நடித்ததால் என் வாழ்க்கையும் வெற்றி பெற்றது.
    இந்த தருணத்தில் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.


    Next Story
    ×