search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீரடி சாய் பாபா
    X
    சீரடி சாய் பாபா

    ஆத்ம ஞானம் மேம்படுத்தும்...பாபா காட்டிய பாதை...எல்லா உயிர்களிலும் நிறைந்த பாபா

    பாபா எல்லா உயிரினத்திலும் தான் இருப்பதை சொன்னதோடு மட்டுமின்றி ஏராளமான தடவை அதை பல பக்தர்களிடம் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தும் காட்டி இருக்கிறார்.
    ‘எல்லா உயிரினத்திலும் என்னைத் தரிசிப்பவனே, எனக்கு மிகுந்த விருப்பமானவன்’ என்று சீரடி சாய்பாபா அடிக்கடி தனது பக்தர்களிடம் சொல்வது உண்டு. இதன் மூலமாக பாபா தனது பக்தர்களுக்கு, அனைத்து உயிர்களிடமும் கருணை காட்டும்படி அழகான ஒரு பாதையை காட்டி உள்ளார்.

    பாபா காட்டிய பாதைகளில் இது சற்று தனித்துவம் கொண்டது. அதாவது ‘எல்லா உயிரினங்களுக்கும் பாரபட்சமின்றி உணவு கொடுங்கள் அதுதான் உங்களது ஆத்ம பலத்தை மேம்படுத்தும்’ என்று பாபா தன் பக்தர்களை வலியுறுத்தி உள்ளார்.

    ‘என்னைத் தேடி நீ மிக நீண்ட தொலைவு பயணம் செய்து வர வேண்டும். அப்படி வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஏனெனில் நான் சீரடியில் மட்டுமல்ல எல்லா உயிரினத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறேன் என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். உனக்குள் இருக்கும் வடிவமும், மனசும் தான் இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களிடமும் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள். நான் தான் அந்த மனசாட்சி. இந்த சிந்தனை நெறியை நீ புரிந்து கொண்டால் மட்டும் போதாது, அதை செயல்படுத்தவும் வேண்டும். அப்படி நீ செயல்படுத்தினால் தான் எல்லா உயிரினத்திலும் நான் வியாபித்திருக்கும் உண்மைத்தன்மையை நீ உணர முடியும். அப்படி உணர்ந்தால் உன் தனித்தன்மையை நீ இழப்பாய். என்னோடு ஒன்றாக ஐக்கியமாகி விடுவாய்’ என்று பாபா நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.

    பாபா எல்லா உயிரினத்திலும் தான் இருப்பதை சொன்னதோடு மட்டுமின்றி ஏராளமான தடவை அதை பல பக்தர்களிடம் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தும் காட்டி இருக்கிறார்.

    ஒரு தடவை நானா சாகேப் என்ற பக்தரிடம், ‘எனக்கு போளி சாப்பிட ஆசையாக உள்ளது. உடனே செய்து தாருங்கள்’ என்று கேட்டார். பாபாவின் ஆசையை அறிந்த நானா சாகேப் அங்கும் இங்குமாக ஓடிச்சென்று போளியை தயார் செய்து கொண்டு வந்தார்.
    பாபா முன்பு போளிகள் அடுக்கி வைத்திருந்த தட்டை வைத்தார். ஆனால் பாபா அதில் ஒன்றை கூட தொடவில்லை. அதன் மீது ஏராளமான ஈக்களும், கொசுக்களும்  இருந்தன. எறும்புகளும் போளி மீது ஓடின.

    அவற்றையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டு இருந்த பாபா, ‘சரி நான் சாப்பிட்டு விட்டேன் எடுத்துச்செல்’ என்று கூறினார். நானா சாகேப் குழப்பத்துடன், ‘நீங்கள் எங்கே சாப்பிட்டீர்கள்’ என்று கேட்டார்.

    அதற்கு சாய்பாபா, ‘18 ஆண்டுகளாக நீ என் அருகில் இருக்கிறாய். நீ என்னை புரிந்து கொண்டது இவ்வளவு தானா? 5 அடி உயரம் கொண்ட இந்த உடம்பில் மட்டுமா நான் இருக்கிறேன்-? இந்த போளியை சாப்பிட்ட கொசுக்களிலும், ஈக்களிலும், எறும்புகளிலும் நான் உயிர் வாழ்கிறேன். அவையும், நானும் ஒன்று தான். அவை சாப்பிட்டால் நான் சாப்பிட்டது போன்றது தான். என் வயிறு நிரம்பிவிட்டது எடுத்துச்செல்’ என்றார்.

    இதேபோன்ற அனுபவத்தை லட்சுமி என்ற பக்தையும் அனுபவித்து உள்ளார். ஒரு நாள் லட்சுமியிடம் ‘எனக்கு பசிக்கிறது. சோள ரொட்டிகள் எடுத்துத் வாருங்கள்’ என்று கேட்டார். உடனே லட்சுமி தன் வீட்டிற்கு சென்று சோள ரொட்டி, காய்கறி கூட்டு, சட்னி தயார் செய்து சுடச்சுட எடுத்து வந்தார்.

    பாபாவிடம் கொடுத்து சாப்பிடும் படி சொன்னார். பாபா அதை அங்கிருந்த நாய்க்கு கொடுத்தார். உடனே கோபம் அடைந்த லட்சுமி, ‘என்ன பாபா இப்படி செய்கிறீர்கள். உங்களுக்காகத்தானே சமைத்து எடுத்து வந்தேன்’ என்றார். அதற்கு சாய்பாபா, ‘கவலைப்பட வேண்டாம்,  இந்த நாய்க்கு உயிர் இல்லையா? அந்த நாய்க்கும் எனக்கும் உள்ள பசி ஒரே மாதிரியானது தான். நான் பேசுகிறேன் அந்த நாய் பேசாது. என்றாலும் பசியில் எந்த வித்தியாசமும் இல்லை.

    நாயின் வயிறு நிறைந்தால் நான் திருப்தி அடைகிறேன். பசியால் வாடும் எந்த உயிரினத்திற்கும் உணவு கொடுக்க வேண்டும். அப்படி உணவு கொடுப்பவர் தான் உண்மையில் எனக்கு உணவு தருகிறார் என்று அர்த்தம். இதை என் பக்தர்கள் ஒவ்வொருவரும் சத்திய பிரமாண வாக்குமூலமாக எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்றார்.

    ஒருநாள் பெண் பக்தை ஒருவர் சாய்பாபாவிடம் ஆசி பெற வந்தார். அப்போது அவரிடம் சாய்பாபா, ‘அன்னையே இன்று நீங்கள் எனக்கு உணவு தந்தீர்கள். திருப்தியாக சாப்பிட்டேன்’ என்றார். இதை கேட்டதும் அந்த பெண் பக்தைக்கு குழப்பமாகி விட்டது.
    ‘நான் இன்று உங்களுக்கு உணவு தரவில்லையே’ என்றார். அதற்கு சாய்பாபா, ‘இன்று மதியம் நீ சாப்பிட உட்காரும் முன்பு வயிறு ஒட்டிய நிலையில் வந்த கருப்பு நாய்க்கு உணவு கொடுத்தாய். அதன் பிறகு சேறும் சகதியுமாக வந்த பன்றிக்கு உணவு கொடுத்தாய். அந்த நாயும், பன்றியும் யார் என்று நினைத்தாய்? நானே தான். எனக்கு தான் நீ உணவு கொடுத்தாய்’ என்றார்.

    இதைக் கேட்டதும் அந்த பெண் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. அப்போது சாய்பாபா சிரித்துக் கொண்டே, ‘சில சமயம் நான் ஒரு நாய். சில சமயம் பன்றியாக திரிவேன். சில சமயம் பசுமாடு போல உலாவுவேன். சில சமயம் வீட்டு பூனையாக சுற்றி வருவேன். கொசுவாக கூட நான் பறப்பேன். நீருக்குள் கிடக்கும் உயிரினங்களாகவும் வாழ்வேன். இப்படி எல்லா விதமான உயிரினங்களிலும் இந்த உலகில் நான் உலவிக்கொண்டு தான் இருக்கிறேன்’ என்றார்.

    சில பக்தர்களிடம், ‘நாளை உன் வீட்டுக்கு பூனை வரும், எருமை மாடு வரும், கருப்பு நாய் வரும் அதற்கு உணவு கொடு’ என்பார். பாபா சொன்னது போலவே குறிப்பிட்ட நேரத்துக்கு அந்த உயிரினம் வரும். இப்படி நிறைய தடவை நடந்துள்ளது.

    இது தொடர்பாக பாபா கூறுகையில், ‘இந்த உலகில் உயிரினங்கள் அனைத்திலும் நான் நிறைந்து இருப்பதை புரிந்து கொண்டு அவற்றி-க்கு உதவிகள் செய்பவரையே நான் விரும்புகிறேன். உயிரினங்கள் வேறு, பாபா வேறு என்ற வித்தியாசத்தை இன்றோடு கைவிட்டு விடுங்கள். ஒவ்வொரு உயிரினத்திலும் என்னை எந்த பக்தன் பார்க்கிறானோ அவனே சிறந்தவன். அவனது வழிபாடு தான் என்னை வழிபடுவதற்கான சிறந்த வழிபாட்டு முறையாகும்’ என்று கூறினார்.

    இதைக்கேட்ட ஒரு பக்தர், ‘உங்களிடம் பணம் சம்பாதிக்க வழிகேட்டு தானே நிறைய பக்தர்கள் வருகிறார்கள். நீங்கள் சொல்லும் இந்த தத்துவத்தை யார் உணருகிறார்கள்-?’ என்றார். அதற்கு சாய்பாபா, ‘சொகுசாக வாழ ஆசைப்படுபவர்களை நான் தான் இங்கு வரவழைக்கிறேன். அவர்களுக்கு தேவையானதை கொடுத்துவிட்டு பிறகு அவர்களை குறிப்பிட்ட இலக்கு நோக்கி அழைத்து செல்வேன்’ என்றார்.

    உயிரினங் களில் மட்டுமின்றி பல்வேறு இறைவடிவ மாகவும் சாய்பாபா காட்சி கொடுக்கின்றார். விநாயகராக, லட்சுமி நாராயணராக, தத்தாத்ரேயராக, ஆஞ்சநேயராக, மகாலட்சுமியாக, கிருஷ்ணராக, அல்லாவாக, ஏசுநாதராக பாபா காட்சி கொடுத்து எல்லா இடங்களிலும் தான் இருப்பதை உணர்த்துகின்றார்.

    இது பற்றி சாய் பாபா ஒரு தடவை கூறுகையில், ‘நான் எல்லா வற்றுக்குள்ளும் அவற்றுக்கு அப்பாலும் இருக்கிறேன். உருவம் இல்லாத நான் வெட்டவெளி முழுவதிலும் நிறைந்து இருக்கிறேன், நீரில் இருக்கிறேன், வறண்ட பூமியில் இருக்கிறேன், காடுகளில் இருக்கிறேன், நெருப்பில் இருக்கிறேன், ஆகாயத்தில் இருக்கிறேன், எல்லா இடத்திலும் நான் இருக்கிறேன் எந்த ஒரு குறிப்பிட்ட இடத்திலும் என்னை கட்டுப்படுத்தி வைக்க முடியாது. ஒவ்வொரு உருவத்திலும் என்னைக் கண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்ளும் பக்தன் தான் அணுகிரகம் பெற்றவன்’ என்றார்.

    அப்படியானால் சீரடியில் இருக்கும் பாபா யார் என்று ஒரு தடவை அவரிடம் பக்தர்கள் கேட்டனர். அதற்கு பாபா, ‘இந்த உடல் எனது தற்காலிக வீடு தான். என்னை நீண்ட நாட்களுக்கு முன்பே என் குருநாதர் என்னை இங்கிருந்து அழைத்து சென்று விட்டார். என்றாலும் என் பக்தர்களுக்காக நான் அவர்கள் நினைக்கும் இடத்தில் எல்லாம் காட்சி கொடுக்கிறேன்’ என்றார்.

    பாபா சொன்னது போலவே நாடு முழுவதும் பல இடங்களில் தோன்றியிருக்கிறார். உயிரோடு இருந்த போது மும்பையில் பிச்சை கேட்பவராக வந்து காட்சி கொடுத்தார். நீண்ட தொலைவில் வசிக்கும் தன் பக்தர்கள் பூனை அல்லது நாய்க்கு உணவு கொடுக்க மறுத்தால் அவர்களுக்கு எதாவது ஒரு உருவத்தில் காட்சி கொடுத்து அறிவுறுத்தினார்.

    அவர் 1918&ம் ஆண்டு பரிப்பூரணமான பிறகு சென்னை, கோவையில் காட்சி கொடுத்தார். ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஆலயத்தில் பக்தர் ஒருவர் மிகப்பெரிய மாலை அணிவித்த போது அந்த மாலையின் ஒவ்வொரு பூக்களிலும் ‘ஓம் சாய்’ என்ற எழுத்துக்கள் தோன்றச்செய்து ஆச்சரியப்படுத்தினார்.

    இத்தகைய அதிசயங்கள் உலகம் முழுக்க உள்ள சாய் பக்தர்களிடம் இன்றும் ஏதாவது ஒரு வடிவத்தில் நடந்துகொண்டு தான் இருக்கின்றது. இன்றும் உலகம் முழுக்க தான் வியாபித்து இருப்பதை சாய்பாபா தக்க ஆதாரங்களுடன் நிரூபித்துக்கொண்டு தான் இருக்கிறார்.

    இதிலிருந்து அவர் காட்டும் பாதையை பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது எந்த ஒரு உயிரினத்தையும் அலட்சியமாக நடத்திவிடக்கூடாது. எல்லா உயிரினங்களையும் பாபாவாக கருதி உணவு கொடுக்க வேண்டும். பாதுகாக்க வேண்டும். இதைத்தான் பாபா பல வகைகளில் பக்தர்களிடம் சொல்லிச்சென்றுள்ளார்.

    அவர் காட்டிய இந்த பாதையை இன்றும் சில பக்தர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். யார் ஒருவர் உயிரினங்களுக்கு உணவு கொடுத்து ஆதரவு அளிக்கிறாரோ அவரால் பாபாவை மிக, மிக எளிதாக நெருங்க முடியும்.
    இதேபோன்று தான் அன்னதானம் வழங்குவதையும் பாபா வலியுறுத்தி உள்ளார்.
    Next Story
    ×