search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணை தெய்வம் காஞ்சி மகான்
    X
    கருணை தெய்வம் காஞ்சி மகான்

    கருணை தெய்வம் காஞ்சி மகான் - ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

    கருணை தெய்வம் காஞ்சி மகான் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜப் பெருமாள் ஆலய கருடசேவை உத்சவத்தின் போது ஸ்ரீமடத்தின் வாசலுக்கே வந்து எழுந்தருள்வார் ஸ்ரீவரதராஜப் பெருமாள்.
    அதன்படி அன்றைய தினம் கருடசேவை உத்சவத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீமடத்துக்கு வந்து தரிசனம் தந்தார் வரதராஜர்.
    அப்போது மகா பெரியவாளை உத்சவர் அருகே பாதுகாப்பாக அழைத்துச் சென்று தரிசிப்பதற்கு உதவினார்கள் ராமானுஜமும் சார்லசும்.
    தரிசனம் முடிந்த பின் பெரியவாளை ஸ்ரீமடத்தின் உள்ளே பாதுகாப்பாக - அவரது ஆசாரம் கெடாமல் அழைத்து வந்தார்கள் இந்த இருவரும்.
    வரதராஜரை அருகே சென்று தரிசித்து விட்டு ஸ்ரீமடத்தினுள் செல்லும்போது பெரியவாளிடம் அப்படி ஒரு வேகம். குதூகலம். கம்பீரம். விறுவிறுவென்று நடந்தவர், தன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.
    சிப்பந்திகளுக்கு ஜாடை காண்பித்துத் தன் அருகே அழைத்தார்.
    இருவரில் ஒருவருக்கு மரியாதை செய்ய உத்தரவிட்டார் பெரியவா.
    யார் அந்த ஒருவர்?
    சார்லஸ்!
    சால்வை, பழங்கள், வெற்றிலை பாக்கு என்று விமரிசையாக மரியாதை செய்யச் சொன்னார் பெரியவா. அதன்படி ஸ்ரீமடத்தின் சிப்பந்திகள் சார்லசை உரிய முறையில் கவுரவம் செய்தார்கள்.

    மகா பெரியவா சந்நிதானத்தில் தனக்குக் கிடைத்த இந்த மரியாதையைப் பார்த்த சார்லஸ், நெகிழ்ந்து போனார். வார்த்தைகளால் நன்றி தெரிவிக்க வாயைத் திறந்தார். ஆனால், வார்த்தைகள் வரவில்லை. எனவே, தேம்பிய குரலுடன் கைகளைக் கூப்பி மகா பெரியவாளுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
    வலக்கையை உயர்த்தி ஆசிர்வதித்தது பரப்பிரம்மம்.
    அங்கு இருந்த சிப்பந்திகளிடமும், ராமானுஜத்திடமும் சொல்லி விட்டு வெளியேறினார் சார்லஸ்.
    இவற்றை எல்லாம் பார்த்த ராமானுஜத்துக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. சால்வை மரியாதைகளுடன் வெளியேறுகிற சார்லசையே பூரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் ராமானுஜம்.

    தன் பார்வையில் இருந்து சார்லஸ் அகன்றதும், பெரியவாளின் திருமுகம் பார்த்தார் ராமானுஜம்.
    ஏதேனும் ஒரு காரியத்துக்கு இருவர் சரிசமமாக உதவினால், அந்த உதவிக்காக சம்பந்தப்பட்ட இருவரையும் பாராட்டி கவுரவிப்பதுதானே முறை? அதுதானே நம் வழக்கம்?
    ஆனால், இங்கே காஞ்சி ஸ்ரீமடத்தில் ஒருவருக்குத்தானே மரியாதை கிடைத்திருக்கிறது. இன்னொருவரான ராமானுஜத்துக்கு ஒன்றும் கிடைக்கவில்லையே என்று உங்களுக்குத் தோன்றுகிறதுதானே?!
    உங்களுக்கு மட்டுமல்ல... அந்த இன்னொருவரான ராமானுஜத்துக்கும் இது தோன்றியது.

    ஆனால், பெரியவாளிடம் கேட்க முடியுமா? ‘பெரியவா... சார்லசுக்கு மரியாதை பண்ணிட்டேள்... எனக்கு இன்னும்   பண்ணலையே?’ - இப்படி மனசுக்குள் தோன்றினாலும், தன் உணர்வுகளைச் சற்றும் வெளிக்காட்டிக் கொள்ள வில்லை ராமானுஜம்.
    நடமாடும் தெய்வமான மகா பெரியவாளுக்கு இது தெரியாதா?
    அண்ட சராசரத்தையும், பஞ்சபூதங்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் கலியுக தெய்வம் ஆயிற்றே அவர்! எங்கே எப்படி மரியாதை செய்ய வேண்டும் என்று பெரியவாளுக்குத் தெரியாதா?!
    ராமானுஜத்தை ஒரு கணம் உற்றுப் பார்த்தார் பெரியவா. பிறகு அவரைப் பார்த்துக் கேட்டார்: ‘‘இப்ப ஒன்னோட மனசுல என்ன தோன்றது?’’
    துணுக்குற்றுப் போனார் ராமானுஜம். தன் மனசில் உள்ளதை அப்படியே சொல்கிறாரே பெரியவா! என்றாலும், சொல்ல முடியுமா? சொல்லவில்லை. அமைதி காத்தார்.

    பெரியவா மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார்.
    இப்போதும் ராமானுஜத்திடம் இருந்து பதில் இல்லை.
    எதுவும் பேசாமல் நீண்ட நேரம் மவுனமாக இருக்கும் ராமானுஜத்தைப் பார்த்துப் பெரியவா கேட்டார்: ‘‘உன் மனசுல என்ன தோணித்துன்னு நானே சொல்லட்டுமா?’’
    பெரியவாளைப் பார்த்து ஒரு அசட்டுப் புன்னகை பூத்தார் ராமானுஜம். ஆனால், பதில் இல்லை.

    ராமானுஜத்தின் மவுனத்தைப் பார்த்து விட்டுப் பெரியவா சொன்னார்: ‘‘என்னடா... அவனுக்கு மட்டும் சால்வை போர்த்தி கவுரவம் பண்ணார். நமக்குப் பண்ணலையேனு உனக்குத் தோணித்து இல்லையா?’’
    மனதில் உள்ளதை சட்டென்று சொல்லி விட்ட பின்னால், பூசி மெழுகுவது பலனில்லை. சற்றே நெளிந்த ராமானுஜமும், ‘‘ஆமாம் பெரியவா’’ என்றார் ஏக்கத்துடன்.

    சிரித்தார் பெரியவா. ‘‘நீ என்னைச் சேர்ந்தவன்டா... உனக்கு எதுக்கு இங்கே நான் குடுக்கிற மரியாதை எல்லாம்...’’ என்றாரே பார்க்க வேண்டும்!
    பெரியவா சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டதும் ஏகத்துக்கும் பூரித்துப் போனார் ராமானுஜம். ‘பெரியவாளிடம் இருந்து மரியாதை கிடைத்திருந்தாலும் இத்தனை சந்தோஷம் கிடைத்திருக்காது... அதைவிட உசத்தி,  பெரியவா சொன்ன இந்த வார்த் தைகள். இதுவே போதும்... ஆயுசு முழுக்க ஒரு ஆனந்தத்தைத் தரும்’ என்று நெகிழ்ந்து போனார்.

    தனக்கு இப்படிப்பட்ட ஒரு அனுக்ரஹமா என்று பரவசப்பட்ட ராமானுஜம், ‘‘வாஸ்தவம் பெரியவா’’ என்று சொல்லி விட்டு, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். பிறகு, ‘‘புறப்படறேன் பெரியவா’’ என்று மகானிடம் இருந்து உத்தரவு பெற்றுக் கொண்டு வெளியே வந்தார்.

    ஸ்ரீமடத்தின் வாசலில் இருந்த வரதராஜப் பெருமாள், சின்ன காஞ்சிபுரம் புறப்படத் தயாராக இருந்தார். பட்டாச்சார்யர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.
    கோலாகலமாகப் புறப்பட்டது பெருமாள் வலம்.

    திரளான பக்தர்கள் ‘வரதா... வரதா...’ என்று பக்திப் பெருக்குடன் கோஷமிட்டபடி இந்த வலத்துடன் செல்லத் துவங்கினார்கள்.

    பக்தர்கள் கூட்டத் தோடு கூட்டமாகக் கலந்தார் ராமானுஜம். கைகளைக் கூப்பியபடி பெருமாள் பாசுரம் சொல் லிய வண்ணம் நடந்தார் ராமானுஜம்.

    சின்ன காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஆலயத்தை அடைவதற்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் பிடித்தது.

    பெரிய காஞ்சிபுரத்தில் பெருமாள் கிளம்பும்போது இருந்த அதே உற்சாகத்துடன் காணப் பட்டார்கள் பக்தர்கள்.

    ஆலயத்துக்குள் நுழைவதற்கு முன், அங்குள்ள பதினாறு கால் மண்டபத்தில் தாங்குகட்டைகளைப் போட்டு பெருமாளை நிறுத்தினார்கள்.

    ‘குடை போடுதல்’ என்று சொல்லப்படுகிற ஒரு மரியாதை அங்கே நடக்கும்.
    வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் உத்சவர் பெருமாளுக்கு இங்கே நடக்கிற வழிபாடுகளைத் தரிசிக்க வேண்டும் என்பதற்காகவும், வரதரின் திருமுகத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவும் முன்பக்கம் வந்து கூடினார்கள்.

    இந்தக் கூட்டத்தில் ராமானுஜமும் காணப்பட்டார். ‘பெருமாளுக்கு இங்கே நடக்கிற வழிபாடுகளையும் உளமாரத் தரிசித்து விட்டு வீட்டுக்குப் போகலாம்’ என்பது அவரது எண்ணம். அவரது வீடு சின்ன காஞ்சிபுரத்தில்தான் இருந்தது.
    வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் அர்ச்சகரான சீமா பட்டர்தான் வழிபாடுகளை நடத்திக் கொண்டிருந்தார்.

    கூட்டம் மொத்தமும் பக்திப் பரவசத்தில் திளைத்துக் கொண்டிருந்தது.
    வரதருக்கு என்னென்ன சம்பிரதாய வழிபாடுகள் செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்து முடித்தார் சீமா பட்டர்.

    அடுத்து, பெருமாள் ஆலயத்தினுள் செல்ல வேண்டியதுதான் பாக்கி!
    அந்த நேரத்தில் முன்னால் கூடி இருந்த பக்தர்கள் கூட்டத்தைத் தன் பார்வையால் அலசினார் சீமா பட்டர்.

    ‘யாரைத் தேடுகிறார் சீமா பட்டர்?’ என்று பக்தர்கள் பலரும் குழம்பினார்கள்.
    அந்த வேளையில் சீமா பட்டரின் பார்வையில் சிக்கினார் ராமானுஜம்.
    ‘‘ஏய் இன்கம்டேக்ஸ் ராமானுஜம்... இங்கே வா’’ என்று பெருங்குரல் எடுத்து அழைத்தார்.

    சின்ன காஞ்சிபுரத்திலேயே வசிக்கின்ற காரணத்தால் ராமானுஜத்தை சிறு வயதில் இருந்தே அறிந்தவர் சீமா பட்டர்.

    வைணவ ஆலயத் திருவிழாவில் ‘ராமானுஜம்’ என்ற பெயர் கொண்ட பக்தர்கள் பலரும் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை இந்தப் பக்தர்கள் கூட்டத்தில் பல ராமானுஜம்கள் இருந்தால்..? எந்த ராமானு ஜத்தை அழைக்கிறார் என்கிற குழப்பம் எவருக்கும் வந்து விடக் கூடாது இல்லையா? இதை உத்தேசித்துதான் ‘இன்கம்டேக்ஸ் ராமானுஜம்’ என்று தெள்ளத் தெளிவாக அழைத்திருக்கிறார் சீமா பட்டர்.

    சீமா பட்டரை நன்றாக அறிந்திருந்தாலும், இந்த நேரத்தில் தன் பெயரைச் சொல்லி ஏன் அழைக்கிறார் என்று ராமானுஜத்துக்கும் புரியவில்லை.

    பிறகு, தன்னைத்தான் அழைக்கிறார் என்பது தெளிவாகப் புரிந்த பின் பக்தர்கள் கூட்டத்தை மெள்ள விலக்கி விட்டு, சீமா பட்டர் அருகே நெருங்கிச் சென்றார் ராமானுஜம்.

    உத்சவர் வரதராஜப் பெருமாளுக்கு வெகு அருகே நின்றார். பெருமாளை இத்தனை அருகே நின்று தரிசிக்கிறபோது பரவசப்பட்டுப் போனார் ராமானுஜம். அவரது கண்களில் இருந்து நீர்த் துளிகள் வெளிப்பட்டன.

    சீமா பட்டரின் முகம் பார்த்து, ‘‘ஏன் என்னைக் கூப்பிட்டேள் மாமா?’’ என்று கேட்டார் குரலில் பவ்யத்துடன்.

    அடுத்து அங்கே நடந்தது - பெரிய அதிசயம். மகா பெரியவாளின் அனுக்ரஹம் என்றே சொல்ல வேண்டும்.
    அப்படி என்ன நடந்தது?

    Next Story
    ×