search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நல்ல சம்பந்தி யாருக்கு அமையும்
    X
    நல்ல சம்பந்தி யாருக்கு அமையும்

    நல்ல சம்பந்தி யாருக்கு அமையும்? பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி

    திருமணம் என்ற நிகழ்வில் தம்பதிகளின் ஒற்றுமையை விட சம்பந்திகளின் ஒருமித்த கருத்து மிக முக்கியமான அங்கமாகி விட்டது.
    ஒருவரின் பிறப்பு முதல் வாழ்நாள் முழுவதும் அனைத்து சம்பவங்களும் ஜாதகரின் வயதிற்கேற்ப அதன் தசாபுத்தி காலங்களில் தான் ஏற்படுகின்றன. அதன் அடிப்படையில் ஜாதகரின் வயதிற்கு ஏற்ப இல்வாழ்க்கை சக்கரம் சுழன்று செயல்பட 7-ம் பாவகம் மிக முக்கியம். 7-ம் இடம் என்பது நண்பர்கள், வாழ்க்கைத்துணை, சம்பந்தி, தொழில் கூட்டாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களைப் பற்றிக் கூறும் இடமாகும். அதன்படி இளம்வயதில் நண்பர்களைத்தரும் 7-ம் இடம் வாலிப பருவத்தில் வாழ்க்கைத் துணையையும், மத்திய வயதில் சம்பந்தம் செய்வதை பற்றியும் கூறும். அதாவது சமுதாய அங்கீகாரம், சமுதாயத் தொடர்பை உருவாக்கிக் கொடுக்கும் இடம் ஏழாமிடம்.

    உறவுகளின் உன்னதத்தை உணர்த்துவது 7-ம் பாவகம். ஒரு மனிதனின் ஜாதக அமைப்புப்படி 7-ம் பாவகமும் அதன் அதிபதியும் அதில் அமரும் கிரகங்களும் ஜாதகரை சிறப்பு பெற்ற மனிதனாக உயர்த்துகிறது. அதே நேரத்தில் உறவுகளால்  மன உளைச்சலை தருவதிலும்  7-ம் இடமே முன்னணி வகிக்கிறது.

    பொதுவாக மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும்  தன் வாழ்நாளில் தனக்கு கிடைக்காத, தன்னால் அனுபவிக்க முடியாத அனைத்தும் தன் வாரிசுகளுக்கு கிடைக்க வேண்டும், கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதில் அதீத எண்ணம் உண்டு. கல்வி, பொருளாதாரம், திருமண வாழ்க்கை என அனைத்து விசயங்களிலும் தன் விருப்பப் படியே தனது பிள்ளைகளின் வாழ்நாள் சம்பவங்கள் நடைபெற வேண்டும் என்று மனக்கோட்டை கட்டுகிறார்கள். இதில் திருமணம் என்ற நிகழ்வில் தம்பதிகளின் ஒற்றுமையை விட சம்பந்திகளின்  ஒருமித்த கருத்து மிக முக்கியமான அங்கமாகி விட்டது.

    தம்பதிகளுக்கு திருமணப் பொருத்தம் பார்க்காமல் சம்பந்திகளுக்கு பொருத்தம் பார்க்க வேண்டிய நிலை உருவாகிவிட்டது. திருமணத்தால் உருவாகும்  மாமியார், மாமனார், நாத்தனார் என்ற புதிய உறவுகளின் வருகை சிலருக்கு மனதை மகிழ்விக்கும் விதமாகவும் பலருக்கு வாழ்க்கையே கேள்விக்குறியாகும் விதத்திலும் இருக்கிறது.

    7-ம் இடத்தில் அமர்ந்த  கிரகங்களால் சம்பந்திகளுக்கு ஏற்படும் இன்னல்களையும் அதற்கான தீர்வுகளையும்   பார்க்கலாம்.
    ஏழில் சூரியன்:- 7-ம் இடத்தோடு சூரியன் சம்பந்தம் பெறுபவர்கள் தனக்கு வரக்கூடிய சம்பந்தி பற்றி  மிகைப்படுத்தலான  பகல் கனவுகளை கண்டு ஒரு கோட்டை கட்டி சாம்ராஜ்ஜியம் நடத்துவார்கள்.சமூக அந்தஸ்தைத் தரும் பதவி, தொழில், பணவசதியுடன், பெரிய கூட்டுக் குடும்பமாக இருக்க  வேண்டும் என்று நினைப்பார்கள். தன் கனவுக் கற்பனை  கோட்டையில் இருக்கும் சம்பந்தமே  தன் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிகுதியாக இருக்கும்.

    மருமகள் அல்லது மருமகனின் அழகு,உத்தியோகம், கவுரவம் அந்தஸ்து, வரதட்சணை, சீர் என பல கனவுகள் இருக்கும். இதில் சிறு குறை இருந்தாலும் திருமணம் கேன்சல் தான். இதற்காக பல வரனை பார்த்து ஒதுக்குவார்கள். அதனால் இவர்களின் பிள்ளைகளுக்கு  எளிதில் திருமணம் நடக்காது. திருமணத்திற்குப் பிறகும் சம்பந்தியை ஏதாவது குற்றம் கூறி வதைப்பார்கள். இது போல் கவுரவம், அந்தஸ்து பற்றிப் பேசும் சம்பந்தியிடம் இருந்து தப்பிக்க சிவாலயத்தில் உள்ள சூரியனின் சந்நிதியில் கோதுமை அல்வா அல்லது கோதுமை பாயாசம் படைத்து சிவப்பு வஸ்திரம் சாற்றி   அர்ச்சனை செய்து வழிபட்டால் சம்பந்தி சாதுவாக மாறுவார்.

    சந்திரன்:- சந்திரன் ஒரு குளிர்ந்த கிரகம்.  திருமண உறவில் சந்திரன் உடலையும் மனதையும் குறிக்கும் காரக கிரகம். சந்திரன் என்றால் நீர். நீரும் மனமும் ஒரு நிலையில் நிற்காது. இங்கும் அங்கும் அலைந்து கொண்டே இருக்கும். திருமண விசயத்தில் வரன் குறித்து தெளிவாக முடிவு செய்யும் தன்மை இருக்காது. சம்பந்திகளின் முன்னால் தங்களை சம்பந்தியாகப் பெற்றது பூர்வ  ஜென்மம் என்று புகழ் பாடுவார்கள். அவர்கள் சென்ற பிறகு  நல்ல சம்பந்தத்தை தவற விட்டதற்கு கடவுள் கொடுத்த தண்டனை இந்த சம்பந்தம் என வசைபாடுவார்கள். எதையும் வெளிப்படையாக, நேரடியாக பேசமாட்டார்கள்.

    நீர் எப்படி வடிவமைக்கப்பட்ட இடத்தில் நிற்குமோ அதே போல் இருக்கும் இடத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள்.
    முன்னுக்கு பின் முரணான எண்ணங்கள் உள்ள சம்பந்தியிடம்  இணக்கம் உண்டாக திங்கட்கிழமைகளில் கங்கை நீரால் அபிஷேகம் செய்து  பார்வதி, பரமேஸ்வரரை  வணங்க வேண்டும் அல்லது பச்சரிசி மாவில் மாவிளக்கு செய்து பிரதோஷ வேளையில் நந்திக்கு நெய் தீபம் ஏற்றினால் சம்பந்தி பனிபோல் உருகுவார்.

    செவ்வாய்:- 7-ம் இடத்தோடு செவ்வாய் சம்பந்தம் பெறுபவர்கள் மிலிட்டரி போல் வீட்டில் ஆட்சி நடத்துவார்கள்.  எல்லோரும் தனக்கு கட்டுப்பட்டு தன் ஆளுமைக்குள் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

    காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை அனைத்தும் டைம் டேபிள் படி நடக்க வேண்டும் என்று மணல் கயிறு கண்டிஷன் போடுவார்கள். கல்யாணத்திற்கு முன்பே அது வேண்டும், இது வேண்டும் என்று மிரட்டுவார்கள். அடங்கிப் போகிறவர்களிடம் ஆட்டம் காட்டுவார்கள். இவர்கள் சம்பந்திகளை சக மனிதராகக் கூட மதிக்க மாட்டார்கள். கோப உணர்வு மிகுதியால் அவமானப்படுத்துவார்கள்.

    தன்னை விட வலிய சம்பந்தமாக இருந்தால் அடக்கி வாசிப்பார்கள். இது முரட்டுத்தனமான கிரகம் என்பதால் எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற தைரியம் இருக்கும். சம்பந்தி பிரச்சினைக்காக போலீஸ் நிலையம் வரைச் செல்பவர்கள், பல பிள்ளைகளின் வாழ்க்கையை கெடுக்கும் பெற்றோர்கள், நன்றாக வாழும் தம்பதிகளை ஈகோவால் பிரிப்பவர்கள், செவ்வாய் கிழமை சிவப்பு நிற ஆடை அணிந்து விரதம் இருந்து முருகனை வழிபட்டு வந்தால்  நல்ல பலன் கிடைக்கும்.

    புதன்:& புதன் புத்திசாலித்தனத்தை குறிக்கும் காரக கிரகமாகும்.  7-ம் இடத்திற்கு புதன் சம்பந்தம் பெறுபவர்களுக்கு எளிதில் நல்ல சம்பந்தி கிடைப்பார்கள்.  அதிகமாக நெருங்கிய உறவில் சம்பந்தம் செய்வார்கள். பிள்ளைகளின் காதல் கலப்பு திருமணத்தை ஆதரிப்பார்கள். பிள்ளைகளுக்காக சம்பந்தியை அனுசரிப்பார்கள். புத்திசாலித்தனத்தால் பேசியே சம்பந்தியை மசியச் செய்வார்கள்.

    புதுமை விரும்பிகள் என்பதால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்  பிள்ளைகளின் எதிர் காலத்தை பற்றி மட்டும் சிந்திப்பவர்கள். தம்பதிகளுக்கு வாழ்வின் எற்ற இறக்கத்தை சமாளிக்கும் வாழ்க்கை தத்துவத்தை போதிப்பவர்கள். ஊருக்காகவும் உறவுக்காகவும்  வாழாமல் உள் அன்போடு மாமா, மச்சான் என்று உறவாடி மகிழ்ச்சியோடு சந்தோசமாக வாழ்வார்கள். முக்கிய முடிவுகளுக்கு சம்பந்தியை மதி மந்திரியாக மதித்து ஆலோசனை கேட்பார்கள்.  மேலும் சுப பலனை அதிகரிக்க தினமும் விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்ய வேண்டும்.

    குரு

    7-ம் இடத்தோடு குரு சம்பந்தம் பெற்றால் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆச்சாரம், பண வசதி நிறைந்த சம்பந்தத்தை எதிர்பார்ப்பார்கள். திருமணம்  முடியும் வரை ஒற்றுமையாக இருக்கும் சம்பந்திகள் திருமணத்திற்கு பின்பே பிரச்சினை ஏற்படுத்துவார்கள். நின்றால் குற்றம் நடந்தால் குற்றம் என்று சிறிய செயலுக்கு கூட குறை கண்டுபிடித்து அதை பெரிது படுத்துவார்கள். அதே நேரத்தில் சைவ, அசைவ சாப்பாடு, இறை நம்பிக்கை போன்ற காரணத்தால் பெரிய வாதம் நடக்கும்.
    சிலருக்கு திருமணத்திற்குப் பின் குழந்தையின்மை, குழந்தையை வளர்க்க போதிய பொருளாதாரமின்மை, நகையை அடமானம் வைத்தல், நடத்தையில் மாறுபாடு போன்ற காரணத்தால் சம்பந்திகள் சண்டை பஞ்சாயத்து பேசும் வகையில் மாறும். ஒருவருக்கு மற்றவர் மேல் நம்பிக்கை நாணயம் குறைவதே ஏற்படும் பிரச்சினைகளுக்கு  காரணமாகிறது. திருச்செந்தூர் முருகனை வழிபடலாம் அல்லது வசதியற்றவர்களின் திருமணத்திற்கு தாலிக்கு பொன் தானம் தர நல்லிணக்கம் உண்டாகும்.

    சுக்கிரன்:- 7-ம் இடத்தோடு சுக்கிரன் சம்பந்தம் பெறுபவர்கள் தங்கள் தகுதிக்கு மீறிய ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வசதியான இடத்தில் சம்பந்தம் செய்கிறார்கள். இது போன்ற சம்பந்தத்தால்   கணவனால்  மனைவிக்கு பிரயோஜனமற்ற நிலை அல்லது  மனைவியை பராமரிக்க முடியாத நிலை அல்லது பிரச்சினைக்கு உரிய மனைவியை அடைவார்கள்.

    இது குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சம்பந்தி சண்டையாக மாறும். கருத்து வேறுபாட்டைத் தவிர்க்க வெள்ளிக் கிழமைகளில் காலை 6-மணி முதல் 7 மணிக்குள் சுக்கிர ஒரையில் நெய் தீபம் ஏற்றி லலிதா சகஸ்ரநாமப் பாராயணம் செய்ய வேண்டும்.

    சனி:& ஒருவரின் வாழ்க்கை தரம் வேகமாக உயர்வதற்கும், தாழ்வதற்கும் சனி மிக முக்கிய காரணமாகும்.சனி என்றால் கர்ம பந்தம் . கர்ம பந்தம் இல்லாத ஒருவருடன் சம்பந்தம் ஏற்படாது. அந்த வகையில் ஏழில் சனி முழுமையான கர்மபந்தம். பூர்வ ஜென்ம விட்ட குறையின் தொடர்ச்சி. 7ம் இடத்திற்கு சனி சம்பந்தம் பெறுபவர்கள் ஒரு குடும்பத்தின் குறைகளை பெரிது படுத்தாமல் அனுசரித்து செல்லும் சம்பந்தம்.

    மேலும் இவர்கள் மிகவும் வயதான காலத்தில் சம்பந்தம் செய்வதால் சகிப்புத்தன்மையோடு நடந்து கொள்கிறார்கள். ஆனால் இவர்களின் பிள்ளைகளுக்குள் ஒத்துப் போவது இல்லை. பலர் வயது முதிர்ந்த பெரியவர்களை பராமரிக்க முடியாமல் வெறுப்பால் பிரிகிறார்கள்  அல்லது தொழில் நிமித்தம் காரணமாகவும் தம்பதிகள் பிரிந்து வாழ்கிறார்கள். சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டால் மாற்றம் உண்டாகும்.

    ராகு&கேது:- 7-ம்  இடத்தோடு ராகு&கேது சம்பந்தம் பெற்றால் அல்லது 7-ல்  நீசம் பெற்ற கிரகம் நின்றால்  பிள்ளைகளின் திருமண வாழ்வில் மாமனார் மாமியார், நாத்தனார் போன்ற நெருங்கிய உறவுகளின் தலையீடு, வரதட்சணை கொடுமை தீராத நோய் மற்றும் கடன் பிரச்சினையை மறைத்து திருமணம் நடத்திய குற்றம், கணவரிடம் இருந்து கிடைக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் உரிமைகள் கிடைக்காததால்   சம்பந்திகள் சண்டைக்காக கோர்ட் படி வரை ஏறுகிறார்கள்.

    சிலருக்கு பிள்ளைகளின்  காதல் கலப்பு திருமணத்தால் குலத்தோடு ஒன்று சேர முடியாத காரணத்தால் பிள்ளைகளின் வாழ்வாதாரத்திற்காக   சம்பந்திகள் சண்டை வீதி வரை வந்து அவமானம் உண்டாகிறது.

    பஞ்சமி திதியில் கருட வழிபாடு செய்வதுடன் சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால்  மாற்றம் உண்டாகும்.
    சமுதாய கட்டமைப்பு கூட்டுக் குடும்பமாக இருந்த காலத்தில் ஒரு பெற்றோருக்கு குறைந்த பட்சம் 5 பிள்ளைகளாவது இருந்தனர். கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்த  பிள்ளைகளுக்கு குடும்ப உறவுகளுடன் பழகும் நெளிவு சுளிவு தெரியும். அதனால் திருமணத்திற்குப் பிறகு சம்பந்திகள் அன்யோன்யமாக மாப்பிள்ளை, மச்சான் என்று உறவு கொண்டாடி மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

    தற்போது தனிக் குடித்தனம் பெருகி விட்ட இந்த காலத்தில் அதிகபட்சம் ஒரிரு பிள்ளைகள் மட்டுமே இருப்பதால் பெற்றோர்கள் பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவிலும் அதீத அக்கறையுடன் அன்பு மழையாக பொழிகிறார்கள்.

    அதேபோல் பிள்ளைகளும் பெற்றோர்களுடைய அன்பை  மட்டுமே பகிர்ந்து கொண்டதால் பிற உறவுகளுடன் பழகும் நெளிவு சுழிவு தெரிவதில்லை.

    மேலும் தற்போது வயதான பெற்றோர்களை  பராமரிக்கும் பொறுப்பு ஆண், பெண் பிள்ளைகளைச் சாருவதால் திருமணத்திற்குப் பிறகு பிறந்த வீடா? புகுந்த வீடா? என்ற கேள்வி பெண் பிள்ளைகளுக்கு வந்து விடுகிறது. பெற்றோரா? மாமனார் மாமியாரா? என்ற நிர்பந்தம் ஆண் பிள்ளைகளுக்கு எழுகிறது.

    ஆண் வாரிசு இல்லாத சில பெற்றோர்கள் வேலைக்கு செல்லும் பெண் குழந்தைகளின் வாரிசுகளை பராமரிக்கவோ, வாழ்வாதாரத்திற்கோ, உடல் நலக்குறைவாலோ பெண் பிள்ளையின் பராமரிப்பில் வாழ வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.  
    தம்பதிகளின் ஜாதகத்தில் சுக்கிரன், சந்திரன் சம்பந்தம் இல்லாதவரை  மாமனார் , மாமியாரை  அனுசரித்துச் செல்கிறார்கள். ஒருவரின் ஜாதகத்தில் 3-ம் இடம் மாமனாரையும் 10ம் இடம் மாமியாரையும் குறிக்கும். இது போன்ற இக்கட்டான சந்தர்ப்ப சூழ்நிலையில் 3,10ம் இடம் சுபத்துவம் பெற்றவர்கள் புத்தி சாதுர்யத்தால் தெளிவாகத் திட்டமிட்டு சம்பந்திகளுக்குள் கருத்து வேறுபாடு வராமல் அழகாக சமாளித்து விடுகிறார்கள்.

    3, 10- ம் இடம் அசுபத்துவம் பெற்றவர்கள் சூழ்நிலையை அனுசரிக்கத் தெரியாததால் இரு வீட்டுப் பெரியவர்களுக்கும் மோதல் ஏற்படுகிறது. இது தவிர பெற்றோர்களின் குறுகிய மனப்பான்மை மற்றும்  பிள்ளைகளின் வருமானத்தை விட்டுத் தர மனம் இல்லாமல் பொய் சொல்லி தம்பதிகளுக்குள் கலகம் ஏற்படுத்துவதால்   பல தம்பதிகள் வாழ்வு நிலை குலைந்துள்ளது.
     சம்பந்திகள்  பிள்ளைகளின் பாசத்தை பயன்படுத்தி தம்பதிகளை ஈகோவால் பிரிப்பது பெரும் பாவம். உண்மையில் பிரச்சினை இருந்தாலும் பெரியோர்கள் அவசியமின்றி தலையிடாமல் இருந்தால் தம்பதிகளின் ஊடல் கூடலாகும். அதே போல் பிள்ளைகளின் எதிர் காலம் கருதி  எதையும் பெரிது படுத்தாமல் சுமூகமாக தீர்வு காண முயல்வது சாலச் சிறந்தது.

    Next Story
    ×