search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணை தெய்வம் காஞ்சி மகான்
    X
    கருணை தெய்வம் காஞ்சி மகான்

    கருணை தெய்வம் காஞ்சி மகான் - ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

    கருணை தெய்வம் காஞ்சி மகான் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    காஞ்சி ஸ்ரீமடத்தின் வாசலுக்கே வந்து தரிசனம் தந்து கொண்டிருந்த வரதராஜப் பெருமாளை அருகே சென்று தரிசிக்க மகா பெரியவாளுக்கு ஆசை.

    ஆனால், பெருமாள் அருகே யார் தன்னைப் பத்திரமாக அழைத்துக் கொண்டு போவார் என்று ஒரு தட்டி மறைப்புக்குள் நின்றபடி தரிசித்துக் கொண்டிருந்தார் பெரியவா.

    இந்த வேளையில் வருமானவரித் துறையில் உயர் அதிகாரியாகப் பணி புரிந்த டி.சி.ஏ. ராமானுஜம் அங்கே வந்திருந்தார்.

    ‘பெரியவாளை எப்படியாவது பெருமாள் அருகே பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு தரிசனம் செய்து வைக்க வேண்டும்’ என்று ஆசைப்பட்டார்.
    பெரியவாளால் பெருமாளுக்கு அருகே செல்ல முடியாதா? அவர் உத்தரவிட்டால் இது நடக்காதா?
    அதை விடுங்கள்..!
    பெரியவா விரும்பினால், பெருமாளே அவர் அருகே ஓடி வந்து தரிசனம் தருவார்.
    அப்படியானால்...?
    புரியவில்லையா?
    நடப்பது அனைத்தும் லீலைகளே! யாருக்கோ எதையோ உணர்த்துவதற்காகவும், ஆசிர்வதிப்பதற்கும் தான் திரு விளையாடல்கள் அரங்கேறுகின்றன.

    சின்ன காஞ்சீபுரத்தில் வசித்து வரும் வைணவர் ராமா னுஜத்துக்கு அனுக்ரஹம் செய்வதற்காக இந்தத் திருவிளையாடல்!
    இந்த சம்பவம் நடந்தது 1992-&ம் ஆண்டு. வரத ராஜப் பெருமாள் கோயிலில் கருடசேவை உத்சவ தினம் அன்று!
    சின்ன காஞ்சீபுரத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்குக் கோலா கலமா கப் புறப்பட்டார் வரதராஜர்.
    உள்ளூர் வியாபாரிகளும், பொதுமக்களும் வழியெங்கும் அளித்த மரியாதைகளை ஏற்றுக் கொண்டு காலை சுமார் 9 மணி வாக்கில் காஞ்சி ஸ்ரீமடத்தை அடைந்தார் வரதர்.

    காஞ்சி ஸ்ரீமடத்தின் வாசலி லேயே சுமார் ஒரு மணி நேரம் இருப்பார் வரதராஜர். இது பல ஆண்டுகளாக நடந்து வருகிற வைபவம்.
    ஸ்ரீமடத்தின் சார்பில் பெருமாளுக்கு விசேஷ மரியாதை செய்யப்படும்.

    வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் சார்பில் காஞ்சி பீடாதிபதிகளுக்கு சிறப்பு மரியாதை செய்யப்படும்.
    தட்டி மறைப்புக்குள் இருந்த பெரியவாளை எப்படிப் பெருமாள் அருகே அழைத்துச் செல்வது என்று யோசித்தார் ராமானுஜம்.
    இன்னொருவரும் சேர்ந்து தனக்கு உதவினால் இது சாத்தியப்படும் என்று உணர்ந்தார் ராமானுஜம்.
    சுற்றுமுற்றிலும் பார்த்தார்.

    மத்தியப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த காவல் அதிகாரி சார்லஸ் என்பவர் அங்கே காணப்பட்டார். ராமானுஜத்துக்கு ஏற்கெனவே பழக்கமானவர். காவல்துறையைச் சேர்ந்தவர். ‘இவரும் ஒத்துழைத்தால், பெரியவாளை மிகுந்த பாதுகாப்புடன் - அவரது ஆசாரம் கெடாமல் அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைத்து விடலாம்’ என்று முடிவு செய்தார் ராமானுஜம்.
    ‘‘மிஸ்டர் சார்லஸ்...’’ என்று அந்தக் காவல் அதிகாரி நின்று கொண்டிருந்த இடத்தைப் பார்த்துக் குரல் கொடுத்தார்.
    திரும்பிப் பார்த்தார் சார்லஸ். ‘‘என்ன விஷயம்?’’ என்று கேட்டார்.
    விஷயத்தைச் சொன்னார் ராமானுஜம்.

    ‘‘எப்படிப் பண்ணணும்னு சொல்லு... அதற்கேற்றபடி நான் செய்யறேன்’’ என்றார் சார்லஸ் உற்சாகமாக.
    ‘‘பெரியவாளை நாம ரெண்டு பேரும் பெருமாள் அருகே கூட்டிட்டுப் போகப் போறோம். நீ அந்தப் பக்கம் ரெண்டு கையையும் விரித்தபடி வா. இந்தப் பக்கம் நான் ரெண்டு கையையும் விரித்தபடி வரேன். பெரியவா மேல தப்பித் தவறி நானோ, நீயோ பட்டு விடக் கூடாது. அவருக்கும் நமக்குமான இடைவெளி அப்படியே இருக்கணும். ஓகேவா?’’ - ராமானுஜம் கேட்டார்.
    நமக்கே தெய்வத்தைக் காண்பிப்பவர்கள் மகான்கள்.

    குருமார்களின் அருள் இல்லாமல் நம்மால் தெய்வத்தைத் தரிசிக்க முடியாது. ஆனால், இங்கே பாருங்கள்... பக்தனான ராமானுஜம், தான் கொண்டாடும் குருநாதரை அருகே அழைத்துச் சென்று தெய்வத்தைத் தரிசனம் செய்து வைக்கப் போகிறார்.

    நன்றாக நினைவில் கொள்ளுங்கள்... எல்லாம் பெரியவா நிகழ்த்துகிற லீலைகளே!
    பெரியவா மெள்ள நடந்து செல்கிறார்... அவரது இரு புறமும் ராமானுஜமும், சார்லசும்!
    பெரியவா அருகே எவரும் நெருங்கி விடக் கூடாது... எவரும் பெரியவா மீது பட்டு விடக் கூடாது என்று கூடுதல் எச்சரிக்கை உணர்வுடன் நடந்தார்கள் இருவரும்.

    பாதுகாப்பான சூழ்நிலையில் பெருமாள் அருகே பெரியவா வந்து கொண்டிருப்பதைப் பார்த்த ஒட்டுமொத்த பக்தர்கள் கூட்டமும் பய பக்தியுடன் வழி விட்டது.

    பெருமாளை நெருங்க நெருங்க பரவசமானார் பெரியவா.
    வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் பட்டாச் சார்யர்கள் மிகவும் நெகிழ்ந்து போனார்கள். கைகளைக் குவித்துப் பெரியவாளை வரவேற்றனர்.

    பெருமாளுக்கு வெகு அருகே நின்று அவரை உருக்கமாக வழிபட்டார் பெரியவா.
    பெருமாளுக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    நடமாடும் தெய்வமான மகா பெரியவாளுக்கு மாலை, மரியாதைகள் செய்யப்பட்டன. சடாரி சார்த்தப்பட்டது.

    எதற்குப் பெரியவா ஆசைப்பட்டாரோ, அது பூர்த்தி ஆகி விட்டது.

    ‘கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டு விடக் கூடாது’ என்று அங்கே கூடி இருந்த பக்தர்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மனதில் கொண்டு தள்ளி இருந்தபடியே நமஸ்கரித்தார்கள். கைகளைக் கூப்பி நடமாடும் பரமேஸ்வர சொரூபத்தை வணங்கினார்கள்.

    ராமானுஜத்துக்கு சந்தோஷமான சந்தோஷம். காரணம், பெரியவாளுக்கு அருகே இருந்து அவரும் பெருமாளைத் தரிசித்து விட்டார். கிடைத்தற்கு அரிய பாக்கியமாயிற்றே! அவருடைய விழிகளில் ஆனந்தக் கண்ணீர் சுரந்தது.

    எந்த நிலையில் பெரியவாளைத் தட்டி மறைப்பில் இருந்து அழைத்து வந்தார்களோ, அதே நிலையில் - அதாவது இரு கைகளையும் விரித்தபடி காணப்பட்டார்கள் ராமானுஜமும் சார்லசும். பெரியவாளை நெருங்கி தரிசிக்க வருபவர்களைப் பார்வையாலும் குரலாலும் விரட்டி னார்கள் ராமானு ஜமும் சார்லசும்.

    ‘‘போலா மா?’’ - ராமா னுஜத்தைப் பார்த்து ஜாடையில் கேட்டார் பெரியவா.
    ‘‘பெரி யவா உத்தரவு’’ என்றார் ராமானுஜம்.
    ‘போக லாமா?’ என்று கேட்ட பெரியவா இன்னும் ஓர் அங்குலம்கூட நகரவில்லை. பெருமாளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

    வரதரின் முகத்தில் தென்பட்ட பூரிப்பைப் பார்த்ததும், அங்கிருந்து நகர்வ தற்குப் பெரியவாளுக்கு மனமில்லை போலும்.
    கண் கொட்டாமல் பெருமாளைத் தரிசித்தபடியே, ‘‘போகலாம்...’’ என்றார் பெரியவா. தொடர்ந்து, ‘‘ஆனா, ஒரு கண்டிஷன்’’ என்றார்.
    ‘‘சொல்லுங்கோ பெரியவா... நீங்க என்ன சொன்னாலும் அதன்படி நிறைவேற்ற அடியேனும் சார்லசும் இங்கே இருக்கோம்’’ என்றார் ராமானுஜம்.
    ‘‘தட்டி மறைப்புலேர்ந்து உங்க கூட வர்றப்ப, பெருமாளைப் பார்த்துண்டே வந்தேன். அதுபோல் இப்பவும் பெருமாளைப் பார்த்துண்டேதான் நான் வருவேன்.’’

    திகைத்துப் போனார் ராமானுஜம். ‘பெருமாளைப் பார்த்துண்டே வரணும்னா பெரியவா ரிவர்ஸ்ல வரணுமே... இந்தத் தள்ளாத வயதுல பெரியவாளுக்கு இது சாத்தியமா?’ என்று யோசித்தார்.

    காரணம், அடிகளைப் பின்னால் எடுத்து வைத்துப் பெரியவா பின்னாலேயே நடந்து வருகிறபோது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அதற்குத் தான் காரணம் ஆகி விடுவோமே என்று பயந்தார் ராமானுஜம். ‘இப்படி ஒரு கண்டிஷனை பெரியவா போடுவார் என்று தெரிந்தால், ஆரம்பத்திலேயே ஒதுங்கி இருப்பேனே’ என்றெல்லாம் யோசித்தார்.

    ஒரு சில விநாடிகளுக்கு இப்படி யோசித்த ராமானுஜம், ‘சரி... பெரியவா ஆசைப்பட்டபடியே பத்திரமா கூட்டிண்டு போயிடுவோம். எதுவும் நம் கையில் இல்லை. அந்த மகானுக்குத் தெரியாததா?’ என்று பெரியவாளின் திருமுகம் பார்த்தார்.
    ‘‘போகலாமா? பெருமாளுக்கு நான் முதுகு காட்டக் கூடாது. அதனால பெருமாளைத் தரிசித்தபடியே பின்னால நடந்து வருவேன்.
    ஜாக்கிரதையா என்னை அழைச்சிண்டு போங்கோ’’ என்றார் பெரியவா.
    சார்லசும் ராமானுஜமும் கன ஜாக்கிரதையாக நடக்க ஆரம்பித்தார்கள்.
    பின்னாலேயே நடந்து வரும் அந்த நடமாடும் தெய்வத்தைப் பார்த்து, கூடி இருந்த பக்தர்கள் தங்கள் கன்னங்களில் போட்டுக் கொண்டு தரிசித்தார்கள்.

    பின்னாலேயே நடந்து போய் ஸ்ரீமடத்தின் வாசலைத் தொட்டதும், மீண்டும் ஒரு முறை இருந்த இடத்தில் இருந்து பெருமாளைத் தரிசித்து விட்டுத் திரும்பினார். விறுவிறு வென்று ஸ்ரீமடத்தினுள் நுழைந்தார்.
    ராமானுஜமும் சார்லசும் பெரியவாளைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.
    தன் இருக்கைக்குச் சென்றதும், அதில் அமர்ந்து கொண்டார் பெரியவா.
    அருகில் இருந்த சிப்பந்திகளுக்கு ஜாடை காட்டி, அழைத்தார்.
    பெருமாளிடம் இருந்து தனக்குக் கிடைத்த மரியாதையை, தன்னை அழைத்துச் சென்ற அன்பருக்கும் செய்ய விரும்பினார் பெரியவா.
    யாருக்கு மரியாதை?
    சார்லசுக்கா? ராமானுஜத்துக்கா?
    காரணம் - ஒருவருக்கு மட்டுமே மரியாதை செய்தார் பெரியவா.

    Next Story
    ×