search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருப்பமான வாழ்வருளும் விராலிமலை
    X
    விருப்பமான வாழ்வருளும் விராலிமலை

    கந்தன் புகழ் பாடும் கந்தர் அலங்காரம் - விருப்பமான வாழ்வருளும் விராலிமலை

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் சாலையை ஒட்டியே அமைந்துள்ளது மலை. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழமையான இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
    இறைவன் இருப்பது எங்கே?

    அவன் கோவிலில் இல்லை. தன்னையே நினைத்து உருகும் பக்தர்களின் அகத்தையே தன் இல்லமாகக் கொண்டு நிற்கிறான்.
    அவனே சகலமும் என்று அறியும் ஞானம் பக்தியினால் மட்டுமே வருகிறது. அதன்மூலம் அவனை அடையும் வழியினையும் அவன்தான் காட்ட வேண்டும். மனம் முழுவதும் அன்பு மயமாகி, முருகனின் பாதார விந்தங்களே சரணம் என்று அடைந்து விட்டால் சகலவிதமான பக்தியையும் அவனே தந்து விடுவான்.

    ‘காளைக் குமரேசனெனக் கருதித் தாளைப் பணியத் தவமெய்தியவா” என்று அனுபூதியில் குமரேசனின் பாதத்தைப் பணிவதே தவம் என்கிறார். கர்ம வினைகளால் வரும் துன்பங்கள் நீக்குவது முருகனின் பாதங்களே.

    புகை இருப்பதால்தான் நெருப்பு இருக்கிறது என்று உணர்வது போல் அவன் அருளால், அவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை கொண்டுதான் அவனை அடைய முடியும். அவனை குழந்தையாகக் கருதி வணங்கினாலும், நீளமா மயில் மீது ஏறி வரும் மூர்த்தி நம் பகைவர்களை வெல்லக் கூடிய திறன் படைத்தவர்.

    “கோலமா மஞ்ஞை தன்னில் குலவிய குமரன் தன்னைப்
    பாலனென் றிருந்தேன் அந்நாள் பரிசிலை உணர்ந்திலேன் யான்”
    என்கிறது ஒரு பாடல்.

    அடியார்க்கு அருள் செய்யும் கோலம் குழந்தை கோலம். பகைவரை அழிக்கும் கோலம் வீரக் கோலம். பகை வர்களை அழித்து, நல் லோரைக் காக் கும் திறன் வாய்ந்த முரு கனை நம் உள் ளத்தில் வைத்து வணங்க வேண்டும்.
    முருகா சரணம் என வணங்கினால், முவ் வினைகளும் நீங்கும்.

    தன்னை நாடி வரும் பக்தர்களின் வினைகளைத் தீர்க்கவே குன்று தோறும் கோயில் கொண்டுள்ளான் முருகன். ஆறுபடை வீடுகளையும் தாண்டி அவனின் சிறப்பு வாய்ந்த தலங்கள் பல உண்டு. உள்ளத்தில் அவனை நிறுத்தி வணங்குபவர்களுக்கு விரும்பியதை விரும்பியபடி தருகிறான் முருகன்.

    தூய்மையான தன் மனதை பகவானுக்கு சமர்ப்பணம் செய்யும் பக்தர்களின்  மனதில் அவன் வந்து அமர்ந்து விடுகிறான். நாம் எந்த நிலையில் இருந்தாலும், நமக்குத் துணையாக இருப்பவன் கந்தன். அவன் தாளைப் பிடித்தாலன்றி நாம் இந்தக் கடலைத் தாண்ட முடியாது.

    முருகனின் பாதம் பணிய முடியவில்லையே என்று கவலை வேண்டாம். அவன் வேறு, அடியார் வேறல்ல என்கிறார். முருகனின் வாகனமான மயில் ஓம்காரம். அந்த ஓம்காரத்தை அடைய  முருகா, கந்தா குஹா என்று சொல்லிக் கொண்டே படி ஏற வேண்டும்.
    விராலிமலையில் ஒவ்வொரு படிகளும் முருகனின் நாமங்களைக் கூறுகின்றன. அங்குள்ள மயில்கள் குஹா, குஹா என்றே கூவுகின்றன.

    இங்கு வள்ளி திருமணம் நடந்தது என்று கூறப்படுகிறது. மூலவர் முருகன் பத்து அடி உயரத்தில் இருப்பது மிகச் சிறப்பான விஷயம். இங்கு பதினான்காம் நூற்றாண்டு காலக் கல்வெட்டுகள் காணப் படுகின்றன. விஜய நகரப் பேரரசரின் வழி வந்த இரண்டாம் தேவ ராயரின் காலக் கல்வெட்டுகள் இவை.

    இப்போது கோவில் இருக்கும் இடத்தில் குரா என்னும் மரம் ஒன்று இருந்தது. வேங்கை ஒன்றை துரத்திக் கொண்டு வேடன் ஒருவன் வருகையில் இந்த மரத்திடம் வந்ததும் வேங்கை மறைந்து விட்டது.

    அன்றிலிருந்து இந்த மரத்தில் இறைவன் இருப்பதாக எண்ணியே வழிபாடு நடந் திருக்கிறது. வயலூரில் இருந்து அருணகிரியாரை விராலிமலைக்கு வா என்று முருகன் உத்தரவிட இங்கு வந்த அவருக்கு அஷ்டமா சித்திகளை முருகன் அருளினான். வேடன் வடிவத்தில் வந்து முருகன் அவருக்கு வழி காட்டி, இத் தலத்திற்கு வரச் செய்தான். விராலிமலை முருகனைப் பற்றி பதினெட்டுப் பாடல்கள் பாடியுள்ளார் அருணகிரியார்.

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் சாலையை ஒட்டியே அமைந்துள்ளது மலை. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழமையான இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவர் வள்ளி, தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார். பிரகாரத்தில் மூல கணபதி, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், வீரபாகு, கால பைரவர், அருணகிரி நாதர் சன்னதிகள் உள்ளன.
    வீரபாகுவின் திருமேனி ஐந்து அடி உயரம் உள்ளது மிகச் சிறப்பு.

    எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு சுருட்டு நிவேதனம் செய்யப் படுகிறது. அடியாரின் உணர்வுகளுக்கு முருகன் மதிப்பளிக்கிறான் என்ற உண்மை இதன் மூலம் அறியப்படுகிறது.

    குமாரவாடி என்ற ஜமீனைச் சேர்ந்த கருப்புமுத்து பிள்ளை என்பவர் தீவிர முருக பக்தர். வெள்ளிக்கிழமை தோறும் முருகனை தரிசித்த பின்னரே உணவு உண்பார். ஒருமுறை அவர் முருகனை தரிசிக்க வந்தபோது பலத்த மழை.ஒரு மேட்டுப் பாங்கான இடத்தில் தங்கினார். மழை விட்டபாடில்லை.

    கனத்த மழை. வெள்ளம் கரை புரண்டு ஓடியது. பக்தருக்குப் பசித்தது. உணவில்லை. பசிக்கு ஒரு சுருட்டும், நெருப்பும் இருந்தால் தேவலாம் என்று நினைத்தபோது  முருகன் அவர்முன் தோன்றி சுருட்டும், நெருப்பும் கொடுக்கிறான்.

    கருப்பு முத்துப் பிள்ளைக்கு மகிழ்ச்சி. மறுநாள் வெள்ளம் வடிந்து கோவிலுக்கு வந்த அவர் விஷயத்தைச் சொல்ல அனைவருக்கும் வியப்பு. பக்தரின் கோரிக்கையை ஏற்று, அன்று முதல் முருகனுக்கு சுருட்டு நைவேத்தியம் செய்யப்படுகிறது.

    ஒருமுறை இதைக் கேள்விப் பட்ட மன்னர். இதைத் தடுத்து விட்டார்.அன்று மாலையே அவருக்குத் தீராத வயிற்று வலி. எந்த மருந்தும் பயன் தரவில்லை. ஒருநாள் அவர் கனவில் முருகன் தோன்றி சுருட்டு நிவேதனத்தைத் தடுக்க வேண்டாம் என்று கூற மன்னர் தன் உத்தரவை  நீக்கிக் கொண்டார். உடனே அவரின் வயிற்றுவலி நீங்கியது.

    பொதுவாக கோவில் களில் பிரம்மோற்சவம் ஒருமுறை தான் நடக்கும். ஆனால் இங்கு விசாகம், தைப்பூச நன்னாட்களில் இரண்டு பிரம்மோற்சவம் நடக்கிறது. கந்த சஷ்டி, பங் குனி உத்திரம்,  போன்ற நாட்களில் இங்கு திருவிழாக்கள் நடக்கிறது.
    ஜனவரி மற்றும் சித்திரை முதல் நாள் இங்கு திருப்புகழ் திருப்படித் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இதன் தீர்த்தம் நாக தீர்த்தம். மயில்கள் நிறைந்த தலம். கந்தன் வீற்றிருக்கும் மயில் அசுர மயில் என்று அழைக்கப் படுகிறது.

    குழந்தை பாக்கியம், திருமணம், வேலை, செல்வம், கல்வி என்று விரும்பிய அனைத்தும் அருளும் தலமாக விராலிமலை விளங்குகிறது. முடி எடுத்து காது குத்தல், பால்குடம், காவடி எடுத்தல் என்று நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.

    மலையில் நிறைய விராலி மரங்கள் உள்ளதாலும், தள விருட்சமாக விராலி மரமே உள்ளதாலும் இத்தலத்திற்கு விராலிமலை என்ற பெயர் வந்ததாகக் கூறுகிறார்கள். திருச்சியில் இருந்து மதுரை செல்லும் வழியில் இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள விராலிமலை திருப்புகழ் முருகனின் பெருமைகளைப் பாடுகிறது.

    “கொடாதவனையே புகழ்ந்து குபேரனெனவே மொழிந்து
    குலாவியவமே திரிந்து புவிமீதே
    ஏடாத சுமையே சுமந்து எணாத கழியால் மெலிந்து
    எலா வறுமை தீர அன்று அருள் பேணேன்” - - -என்கிறார்.
    செல்வத்துக்காக பிறரைப் புகழ்ந்து பாடி, வறுமையால் வாடித் திரிந்த நான் உன் பெயரைச் சொல்லாமல் வீணே காலம் கழித்தேன். ஆறு ஆதாரங்களாகிய குண்டலினி சக்கரங்களின் நடுவில் ஞானப் பிழம்பாக உயிரோடு கலந்து பெருமானே நீ இருக்கின்றாய் என்று பாடுகிறார் அருணகிரியார்.
    படாத குளிர் சோலை யண்டமளாவி யுயர் வாய் வளர்ந்து
    பசேலெனவுமே தழைந்து -- - - - - - - - தினமேதான்
    விடாது மழை மாரி சிந்த அநேக மலர் வாவி பொங்க
    விராலிமலை மீது கந்த பெருமானே “- என்று பாடுகிறார்.
    அழைத்ததும் உடனே ஓடி வருகிறவன் கந்தன்.
    வேதங்களாலும் காண இயலாதவன். தெய்வீகத்தன்மை வாய்ந்த நாதத்தாலும் காண இயலாதவன் என்கிறது கந்தர் கலிவெண்பா
    “பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய
    பாமேவு தெய்வப் பழமறையும்- தேமேவு
    நாதமும் நாதாந்த முடிவும் நவை தீர்ந்த
    போதமும் காணாத போதமாய்  இருக்கிறான்”.
    என்கிறது கந்தர் கலிவெண்பா.
    குன்றுதோறும் அமர்ந்திருக்கும் குமரன் நம் குறை தீர்க்கவே ஓடி வருகிறான். அஞ்சேல் என்று அபயக் கரம் நீட்டிக் காக்கவே மயில் மீது அமர்ந்து ஓடி வருகிறான் முருகன். நம் அறிவுக்கு அப்பாற்பட்டவனாக இருந்தாலும், எல்லைகள் அற்றவனாக இருந் தாலும், அன்பிற்குக் கட்டுப்பட்டவனாக, பக்தி யால் உணரக்கூடியவனாகவே இருக் கிறான். முருகனுக்கு நம் உள்ளத்தில் கோவில் கட்ட வேண்டும்.
    முருகா என்றால் முப்பொழுதும் காக்கிறான் விராலிமலை முருகன்.

    Next Story
    ×