search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீரடி சாய் பாபா
    X
    சீரடி சாய் பாபா

    ஆத்ம ஞானம் மேம்படுத்தும்...பாபா காட்டிய பாதை...சகலமும் தரும் சாய் சத் சரிதம்

    சத் சரிதத்தில் உள்ள கருத்துக்களை படிக்க படிக்க வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதை பக்தர்கள் உணர்வதால்தான் நிறைய பேர் அதை வாங்கி அன்பளிப்பாகவும் கொடுக்கிறார்கள்.
    சாய் பக்தர்களுக்கு பாபா கொடுத்த மிகப்பெரிய பொக்கிஷங்களில் ஒன்று சாய் சத் சரிதம். கண் கண்ட தெய்வமாக வாழ்ந்த சாய்பாபாவின் வாழ்க்கை நடைமுறைகள், அவர் செய்த அற்புதங்கள், நிகழ்த்தி காட்டிய வினோதங்கள் உள்பட நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டதாக சாய் சத் சரிதம் திகழ்கிறது.

    சாய் பக்தர்களுக்கு புனித நூலாக திகழும் இந்த நூலை எழுதியவர் ஹேமந்த்பந்த் என்ற கோவிந்தராவ் ரகுநாத் தபோல்கர். இவர் மும்பை பந்த்ராவில் பிறந் தவர். அதிக படிப்பறிவு இல்லாதவர். ஆனால் ஆன்மீக இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்.

    சாய்பாபா தன்னைப்பற்றிய தகவல்களை இந்த உலகுக்கு தெரிவிக்கத்தேர்வு செய்தவர் களில் இந்த ஹேமந்த்பந்தும் ஒருவர் ஆவார். சாய் பாபாவுக்கு இவர் நானாசாகேப் மூலம் 1910-ம் ஆண்டுதான் அறிமுகமானார். அடிக் கடி சீரடி சென்ற தபோல்கருக்கு 1916&ம் ஆண்டு சாய்பாபா பற்றிய வரலாறை எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

    ஷாமா என்பவர் மூலம் அவர் பாபாவை அணுகி அனுமதி கேட்டார். உடனே பாபா, “என்னை பற்றி எழுத இவருக்கு நானே உதவி செய்வேன். அந்த வரலாறை எழுதுவ தில் இவர் ஒரு புறக்கருவியாகவே இருப்பார். என்னுடைய வரலாற்றை நானே எழுதி என் பக்தர்களின் ஆவலை பூர்த்தி செய்ய வேண்டும். எனவே தபோல்கர் தனது அகங்காரங்களை கைவிட்டு சமர்பிக்கட்டும்.
    அவர் ஒருபோதும் தனது சொந்த கருத்துக்களை இதில் திணிக்க கூடாது. மற்றவர்கள் கருத்தை எந்த காரணம் கொண்டும் மாற்றக்கூடாது. இங்ஙனம் செய்தால் மட்டுமே நான் மிகவும் உதவி செய்வேன் என்றார்.

    பாபாவின் இந்த நிபந்தனையை தபோல்கர் ஏற்றுக்கொண்டு எழுத தொடங்கினார். ஆனால் அவர் எழுதி முடிக்கும் முன்பே பாபா பரிபூரணமாகிவிட்டார். 1929-ல் சத் சரிதம் புத்தகம் மராத்தி மொழியில் முழுமையாக எழுதப்பட்டு வெளியிடப்பட்டது.
    யார் ஒருவர் சாய் சத் சரிதம் புத்தகத்தை படிக்கிறாரோ அவருக்கு பாபாவின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். பாபாவின் அற்புதங்களை படிக்க படிக்க விலைமதிப்பில்லாத ஞானம், பக்தி உண்டா கும். அவரது கதைகள் சராசரி மனிதர்களின் வாழ்க்கையில் நல்ல தெளிவை ஏற்படுத்தும்.

    பாபாவின் போதனைகளை யார் ஒருவர் உள்வாங்கிக்கொள்கிறார்களோ அவர்களுக்கு அஷ்டாங்க யோகம், தியான பேரின்பம் செய்த அளவுக்கு நன்மைகள் வந்து சேரும். இதன் காரணமாக வாழ்வில் பேரானந்த பெருநிலையை எட்ட முடியும்.

    முதலில் இந்தநிலைக்கு செல்ல முடியாவிட்டாலும் பாபாவின் சத் சரிதத்தை படிக்க படிக்க நம்மை நாமே உணர முடியும். பாபா சொல்லி இருக்கும் அறிவுரைகள் நமக்குள் நம்பிக் கையை ஏற்படுத்தும். இதுமட்டுமின்றி வேறு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று சாய்பாபாவே சொல்லி உள்ளார். அதையும் கேளுங்கள்.

    எனது புகழைப்பாடுபவனும், சரித்திரத்தை சுவையாக சொல்பவனும் எப்போதும் என்னைப் பார்க்க முடியும். அவர்களுக்கு முன்னும், பின்னும் அவர்களை சுற்றியே நான் இருந்து கொண்டிருக்கிறேன்.

    சத் சரிதத்தில் உள்ள கதைகளை கேட்டு உணருபவர்கள் ஆத்மார்த்தமாகவும், இதய பூர்வமாகவும் என்னிடம் அன்பை பெறுவார்கள். அவர்களுக்கு இயற்கையாகவே மகிழ்ச்சி உண்டாகும்.

    என்னுடைய கீர்த்தனைகளை யார் ஒருவர் ஆழ்மனதில் இருந்து பாடுகிறாரோ அவருக்கு முழுமையான பேரின்பம் கிடைக்கும். அவருக்கு மன அமைதியையும், திருப்தியையும் நான் அருளுவேன். இது சத்தியமான வார்த்தை.

    என் பக்தன் என் மீது நம்பிக்கை வைத்து  என்னிடம் சரணடைந்தால் அவனுக்கு தேவையான அனைத்தையும் நான் செய்வேன். வேறு எதிலும் பற்று இல்லாமல் எனது கதைகளை படிப்பவனுக்கும், அதை சிந்தித்துக்கொண்டிருப்பவனுக்கும் நான் கைத்தூக்கி விடுவேன். இது நான் சொல்லும் சத்திய பிரமாண வாக்குமூலம்.

    யாரிடம் என் நாமமும், பக்தியும், என்னை பற்றிய குறிப்புகள் கொண்ட புராணமும் இருக்கிறதோ அவர்களிடம் தடம் புரளச் செய்யும் வேறு எந்த சிந்தனையும் வராது. அவர்களது இதயத்தில் நான் மட்டுமே இருப்பேன்.

    சத் சரிதத்தில் உள்ள கதைகளை கேட்டாலே போதும் வியாதிகள் குணமாகும். ஆபத்து காலத்தில் இருப்பவர்கள் என்னை பற்றி படித்தால் அவர்களை நான் மரணத்தின் பிடியில் இருந்து கூட மீட்டெடுப்பேன்.

    எனவே என்னை பற்றிய கதைகளை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள். அதன்பிறகு நான் சொன்ன கருத்துக் களையும், நிகழ்ச்சிகளையும் உங்கள் ஆழ் மனதுக்குள் பிரதிபலித்து பாருங்கள். அடுத்தகட்டமாக அந்த பிரதிபலிப்பையே தியானமாக மாற்றுங்கள். தியானம் செய்ய, செய்ய கிடைக்கும் பலனை பாருங்கள். நிச்சயம் நீங்கள் உன்னதமான திருப்தியை பெறுவீர்கள்.
    இத்தகைய நிலையை எந்த பக்தன் அடைகிறானோ அவனுக்கு “நான்” என்ற உணர்வு மறைந்து போகும். “நானே அவன்” என்ற உணர்வு தோன்றும்.

    இவ்வாறு சாய்பாபா சாய் சத் சரிதம் படிப்பதால் ஏற்படும் நன்மைகளை தான் வாழ்ந்த காலத்திலேயே சொல்லி விட்டார். எனவே சாய் சத் சரிதத்தை பய பக்தியோடு படியுங்கள். பெரும்பாலான சாய் பக்தர்கள் சத் சரிதத்தை படித்து முடித்திருப்பார்கள்.
    ஆனால் உன்மையான உணர்வுடன் எத்தனை பேர் படித்திருப்பார்கள் என்று சொல்ல இயலாது. வெறும் பலனை எதிர்பார்த்து ஒரே ஒரு வாரம் மட்டுமே படித்தவர்களாக இருப்பார்கள். அதனால் உண்மையில் எந்த பலனும் இல்லை. பய பக்தியோடு, நம்பிக்கையோடு சத் சரிதத்தை படிக்க வேண்டும். அப்படி படித்தால்தான் நமது ஆழ்மனம் உண்மையான ஆன்மீக குறிக்கோளை நோக்கி நகரும்.

    இதை பாபா சீரடியில் வாழ்ந்த காலத்தில் நிறைய பக்தர்களிடம் நடத்தி காட்டி இருக்கிறார். மும்பையை சேர்ந்த ஸாடே என்ற பக்தர் சீரடிக்கு வந்த போது ஒரு வாரத்திற்கு குரு சரித்திர பாராயணத்தை படிக்க வைத்தார். பிறகு மீண்டும் ஒரு தடவை படிக்க சொன்னார். இப்படி பாபா தனது பக்தர்களிடம் பாராயணம் செய்ய வைப்பதை கடமையாகவே கொண்டிருந்தார்.
    ஆகையால் சாய் சத் சரிதத்தை அவசியம் ஒவ்வொரு பாபா பக்தரும் படிக்க வேண்டும். ஒரு வாரத்திற்குள் சாய் சத் சரிதத்தை படித்து முடித்தால் நாம் கேட்ட வரங்களையெல்லாம் சாய்பாபா நிறைவேற்றி தருவார் என்பது உலகம் முழுக்க வாழும் பாபா பக்தர்களின் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    இப்படி ஒரு வாரம் சத் சரிதம் பாராயணம் செய்வதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளன. பாபா படம் அல்லது சிலையை தயார் செய்து வைத்து கொள்ளவும். அதன் அருகில் ஆசனத்தின் மேல் சுத்தமான துணி விரித்து அதன் மேல் சத் சரிதம் புத்தகத்தை வைத்து பூஜைகள் நடத்தவும்.

    ஏதாவது ஒரு வாரம் வியாழக்கிழமை சத் சரிதம் படிக்க தொடங்கவும். சத் சரிதம் மொத்தம் 50 அத்தியாயங்களைக் கொண்டது. இவற்றை 7 நாட்களில் படித்து முடிக்க வேண்டும். முதல் நாள் (வியாழக்கிழமை) 1 முதல் 7 அத்தியாயம் வரை படிக்க வேண்டும்.
    வெள்ளிக்கிழமை 8 முதல் 15, சனிக்கிழமை 16 முதல் 22, ஞாயிற்றுக்கிழமை 23 முதல் 30, திங்கட்கிழமை 31 முதல் 37, செவ்வாய்க்கிழமை 38 முதல் 44, புதன்கிழமை 45 முதல் 50 என்ற வகையில் படித்து முடிக்க வேண்டும்.

    50&வது அத்தியாயத்துக்குப் பிறகு உள்ள முடிவுரை, ஆரத்தி, ஸ்ரீ சாய்பாபா அஷ்டோத்ர சதநாமவளி ஆகியவற்றையும் இறுதியில் சேர்த்துப் படிக்கலாம்.
    தினமும் காலையில் குளித்து விட்டு பூஜை அறையில் கிழக்கு நோக்கி அமர்ந்து சாய்பாபா உருவத்தை மனதுக்குள் கொண்டு வந்து சத் சரிதத்தை பாராயணம் செய்ய வேண்டும். அந்த சமயத்தில் மனதில் பக்தியும், அமைதியும் நிரம்பி இருக்க வேண்டும்.
    சத் சரிதம் பாராயணம் நிறைவு செய்யும் நாளில் பாபாவுக்கு நைவேத்தியம் படைத்து பூஜைகள் செய்து வழிபட வேண்டும். அந்த பூஜைக்கு உறவினர்கள், நண்பர்களையும் அழைக்கலாம். உங்கள் சக்திக்கேற்றவாறு அவர்களுக்கு விருந்து கொடுத்து, தட்சணையும் கூட கொடுக்கலாம். இத்தகைய வழிபாடுகள் மூலம் சத் சரிதத்தின் பலன்களை பெற முடியும்.

    குறிப்பாக சத் சரிதத்தை நம்பிக்கையோடு படிப்பவர்களுக்கு வாழ்வில் அனைத்து செல்வங்களும் கிடைக்கும். தினமும் சத் சரிதம் படித்து வந்தால் பாபா கூறி உள்ள நல்ல கருத்துக்களை நம் மனதுக்குள் உள்வாங்கிக் கொள்ள முடியும். நாளடைவில் சில கருத்துக்கள் நம் ஆழ் மனதுக்குள் நிலைபெற்று விடும்.

    இதன்காரணமாக நமது வாழ்க்கை அமைதியான சூழ்நிலைக்கு மாறும். ஒரு கட்டுக்கோப்பான நிலையை சாய் சத் சரிதம் கொண்டு வந்து சேர்க்கும். இதனால் பக்தர்களின் வாழ்க்கை நெறி தவறாத ஒன்றாக இருக்கும்.

    இத்தகைய சிறப்புடைய சாய் சத் சரிதம் முதலில் மராட்டிய மொழியில் எழுதப்பட்டது. பிறகு ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்பட 13 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. நேபாள மொழியில் கூட சத் சரிதம் மொழி பெயர்க்கப்பட்டு இருக்கிறது.
    சாய் சத் சரித நூலை சீரடி சாய்பாபா டிரெஸ்ட் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறது. தமிழில் மொழி பெயர்த்து வெளியாகி உள்ள நூலை 75 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். இதுவரை 22 பதிப்புகளில் பல லட்சம் சாய் சத் சரிதம் தமிழ் புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன.

    சத் சரிதத்தில் உள்ள கருத்துக்களை படிக்க படிக்க வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதை பக்தர்கள் உணர்வதால்தான் நிறைய பேர் அதை வாங்கி அன்பளிப்பாகவும் கொடுக்கிறார்கள். எனவே சத் சரிதம் படிக்க வேண்டும் என்பது பாபா காட்டிய வழி.
    முடிந்தால் தினமும் சத் சரிதம் பாராயணம் செய்யுங்கள். அது உங்கள் வாழ்க்கையை   கற்பனைக்கும் எட்டாத வகையில் மேம்படுத்தும்.

    சாய் சத் சரிதம் படிக்க, படிக்க அது நம் உயிர் மூச்சாகவே மாறிவிடும். நமது மனநிலையில் வைராக்கியம் பலப்படும். நாளடைவில் நம் மனம் தெய்வீக சக்தி மண்டலமாக மாறி விடும்.

    இந்த உண்மையைப் புரிந்து கொண்டு சாய் சத் சரிதம் படித்தவர்களுக்கு சாய்பாபா ஏதாவது ஒரு வகையில் காட்சிக் கொடுத்து ஆசீர்வதித்துள்ளார். லட்சக்கணக்கான பக்தர்களின் அனுபவங்களே இதற்கு ஆதாரம்.

    சத் சரிதத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயம் படித்தால் அது எல்லையற்ற ஆனந்தத்தை கொடுக்கும். ஆசைகள் நிறைவேறும். பாபா பாத கமலங்களை உங்கள் மனதால் நினைப்பதால் சம்சார சாகரத்தை எளிதில் கடப்பீர்கள் என்று சத் சரிதத்தின் முடிவுரையில் கூறப்பட்டுள்ளது. இதை மனதில் கொண்டு இன்றே சத் சரிதம் படிக்கத் தொடங்குங்கள்.

    இதேபோன்று சாய் பாபாவை தினமும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதும் அவசியமாகும். இதற்கும் பாபா வழிகாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதை அடுத்த வாரம் காணலாம்.
    Next Story
    ×