search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தர்கள் நிறைந்த சிவன்மலை
    X
    சித்தர்கள் நிறைந்த சிவன்மலை

    கந்தன் புகழ் பாடும் கந்தர் அலங்காரம் - சித்தர்கள் நிறைந்த சிவன்மலை

    அனைத்திற்கும் மூலமாய் இருக்கும் முருகனே இந்தப் பிரபஞ்சத்தின் சக்தியாய் இருக்கிறான். அவனின் அருள் ஆட்சி நடக்கும் தலங்களில் சிறப்பானது சிவன் மலை.
    முருகன் நாமத்தின் பெருமை என்ன?”
    அவனின் நாமத்தையே உச்சரிப் பவர்களுக்கு இகபர சவுபாக்கியங்கள் அனைத்தையும் அளித்து, தன் பாத நிழலில் அடைக்கலம் கொடுப்பான் முருகன்.குகாய நம ஓம் என்றால் குறைகள் களைவான். சரவணபவ என்றால் சங்கடங்கள் தீர்ப்பான். கந்தா என்றால் கர்ம வினைகளைத் தீர்ப்பான்.

    அவனையே நம்பி நாம் செயலாற்றினால் கந்தன் நம் கருமங்களை  எல்லாம் தீர்த்து வழித்துணையாக வருவான். அவனை நம்பும் அடியவர் முன் அவனின் தாளும், சிலம்பும், தண்டையும், வந்து நிற்கும்போது நல்லநாள், கோள் வினைகள் என்று எதுவும் கிடையாது.

    நாள் என்ன செய்யும்? எல்லா நாளும் நல்ல நாளே. கர்ம வினை என்று சொல்லக்கூடிய தீவினைகள் நம்மை நெருங்காது.

    அடியவர்களைத் தேடி வந்த கோள்கள் என்ன செய்ய முடியும்? கொடிய எமன்தான் என்ன செய்வான்? குமரக் கடவுளின் இரண்டு திருவடிகளும், சிலம்பும், சலங்கையும், தண்டைகளும், ஆறு திருமுகமும், பன்னிரு தோள்களும், கடம்ப மலர் மாலையும் அடியவர்கள் முன் வந்து தோன்றும்போது அங்கு எதுவும் நல்லதாகவே நடக்கும். சேயோன் என்று, அழைக்கப்படும் முருகன், எந்த வடிவில் இருந்தாலும் நம்மைக் காக்க ஓடோடி வருவான். இதையே “கோலமர் மஞ்ஞை தன்னில் குலவிய குமரன் தன்னைப் பாலனென் றிருந்தேன் அந்நாள் பரிசிலை உணர்ந்தி லேன்யான் என்கிறது குறிஞ்சிப் பாடல் ஒன்று.

    நீலமாமயில் மீதமர்ந்த பாலனே யாவர்க்கும் மூலகாரணமாய் இருக்கிறான். அவனே மூல மூர்த்தி என்றே இலக்கியங்கள் போற்றுகிறது.  அனைத்திற்கும் மூலமாய் இருக்கும் முருகனே இந்தப் பிரபஞ்சத்தின் சக்தியாய் இருக்கிறான். அவனின் அருள் ஆட்சி நடக்கும் தலங்களில் சிறப்பானது சிவன் மலை.

    சிவன் திரிபுரத்தை அழிக்க மேருமலையை வில்லாக வளைத்த போது அதிலிருந்து சிதறிய ஒரு பகுதியே சிவன்மலை. இங்கு பார்வதி, மற்றும் அகத்தியர் ஈசனை நோக்கி தவம் இருந்தார்கள் என்கிறது தலவரலாறு. மேலும்  வள்ளிமலைக்குச் சென்று வள்ளியை மணமுடித்த பின் அவளுடன் வந்து கோவில் கொண்ட இடம் சிவன் மலை.

    கடல் மட்டத்திலிருந்து நானூறு அடி உயரத்தில் குன்றின் மீது அமைந்துள்ளது கோவில். நானூற்றித் தொன்னூற்று ஆறு படிகள் உள்ள இக்கோவிலைப் பற்றி பத்தாம்  நூற்றாண் டிலேயே குறிப்புகள் உள்ளன. மலையேறும் படிக்கு சாத்தியப்படி என்று பெயர். முற்காலத்தில் பல வழக்குகள் இப்படியில் நடை பெற்று, சரியான தீர்ப்புகள் வழங்கப்பட்டது.

    ஒவ்வொரு நவகிரகங்கள் தலங்களுக்குச் சென்று வழிபடும் பலன் இத்தலத்து நவகிரகங்களை வழிபடுவதன் மூலம் கிடைக்கிறது.

    தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள இத்தலம், அருணகிரியாரால் பாடப்பெற்ற சிறப்புடையது. இங்கு மூலவராக முருகனே இருக்கிறான். தாயார் வள்ளி, தெய்வானை.

    இங்கு கோவிலுக்கு வெளியில் தீபத்தூன் உள்ளது. அத்தூணின் அடிப்புறத்தில் விநாயகர், சூலம், மயில், தண்ட பாணி வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு உள்ளே தெற்குப் பிரகாரத்தில் ஈசன் அம்பிகை கோவில் கொண்டுள் ளனர். கிழக்குப் பார்த்த சன்னதி. மேற்குப் பிரகாரத் தில், தென்மேற்கு மூலை யில் கன்னிமூலை விநாயகரும், வடமேற்கில் தண்டபாணியும்  உள்ளனர். கருவறையின் வெளிச் சுவற்றில் தட்சிணா மூர்த்தி,துர்க்கை, சண்டி கேஸ்வரர் உள்ளார்கள்.

    பிரகாரம் சுற்றி வந்து, கொடி மரம், பலிபீடம் கடந்தால். முருகனின் கருவறை இருக்கிறது. வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார் சுப்ரமண்யர். தொரட்டி மரம் தல விருட்சமாக இருக்கிறது.

    புண்ணியம் செய்தவர்களே இங்கு வந்து கந்தனைத் தரிசிக்க முடியும். இங்கு பல சித்தர்கள் சூட்சும ரூபத்தில் வந்து முருகனைத் தரிசித்துச் செல்கிறார்கள். முருகன் அருளால் ஒரு சிலர் கண்களுக்கு அவர்கள் தென்படுவதுண்டு.

    இங்குள்ள காசித் தீர்த்தம் முருகனே உண்டாக்கியது. சிவன் மீது கொண்ட  பக்தி காரணமாக ஒரு பெண் காசி சென்று நீராட விரும்பினாள். ஆனால் காசி செல்ல வசதி இல்லாததால் இத்தலத்து முருகனை வேண்டி வழிபட முருகனே காசி தீர்த்தத்தை சிவன்மலைக்கு வரவழைத்தான்.

    இங்கு முதல் வழிபாடு முருகனுக்கே. இங்கு நவக்கிரகங்கள் சூரியனைப் பார்த்தபடி உள்ளன. மலையைச் சுற்றி அஷ்ட துர்க்கைகள் இருப்பதால் இங்கு மலையே மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

    இங்கு ஈசன் கைலாச நாதர் என்றும், அம்பிகை ஞானாம்பிகை என்றும் அழைக்கப் படுகிறார்கள். நவ கன்னியருக்கும், உமை அம்மைக்கும் தரிசனம் தந்த தலம் சிவன்மலை. இங்கு உத்தரவுப் பெட்டி என்ற  சிறப்பான ஒரு விஷயம் பின்பற்றப்படுகிறது. நடக்கப் போகும் நிகழ்வுகளின் முன் அறிவிப்பாக இப்பொருள்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.பட்டாலி என்ற கிராமமே சிவன்மலை அமைந்த பகுதியாகும்.

    இங்கு தைப்பூசம், வைகாசி விசாகம், மாசி மகம், பங்குனி உத்திரம் போன்றவை மிகச் சிறப்பாக கொண்டாடப் படுகின்றன. கிட்டத்தட்ட, இரண்டாயிரம் வருடங்கள் பழமையான கோயில் சிவன்மலை. தைப்பூசத் தேர்த்திருவிழா பதினாறு நாட்கள் நடை பெறுகிறது.

    கந்தர் சஷ்டி, கார்த்திகை ஜோதி, வைகாசி விசாகம்,நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி என்று ஆண்டு முழுவதும் இங்கு திருவிழாக்கள்தான். சைதன்ய சொரூபமாக சிவவாக்கிய சித்தர் இங்கு வாழ்ந்து வருவதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. உட்பிரகாரத்தில் குகையில் அமர்ந்த நிலையில் சித்தர் இருக்கும் காட்சி உள்ளது.

    திருமணத் தடை, குழந்தை பாக்கியம், தொழில், நோய் என அனைத்துக் குறைகளையும் நீக்கும் கருணா மூர்த்தியாகக் காட்சி அளிக்கிறான் முருகன். இங்கு முருகா சரணம் சொல்லி, நவக்கிரகங்களை ஒன்பது சுற்று, சுற்றி வழிபட்டால் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் விலகும்.

    மலைமேல் சுரலோக நாயகி சமேத ஜுரகறேஸ்வரர் உள்ளார். காய்ச்சல் வந்தவர்கள் மிளகு ரசம் வைத்து, இங்கு வந்து பூஜை செய்து பின் உண்டால் எப்படிப்பட்ட காய்ச்சலும் விலகும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இங்கு அணையாத தீபம் ஒன்று எரிந்து கொண்டே இருக்கிறது. வள்ளி இங்கு அறச்சாலை அமைத்து, முருகனை நோக்கித் தவமிருந்து கந்தனை மணந்ததாகக் கூறப்படுகிறது. வள்ளியைக் கவர்ந்து வந்து முருகன் மணந்ததால் ஏற்பட்ட போரில் இறந்த வீரர்கள், வள்ளி திருமணத்திற்குப் பிறகு உயிர் பெற்று எழுந்து, மகிழ்ச்சிக் கூக்குரல் இட்டதால் பட்டாலி  எனப் பெயர் பெற்றது என்று சிவன்மலைக் குறவஞ்சி கூறுகிறது.

    முருகனை வணங்கு பவர்களை நாள்களும் கோள்களும் ஒன்றும் செய்யாது. கிரகங்களின் கோளாறால் நோயினால் அவதிப்பட்ட முகுந்த சக்ரவர்த்தி சிவன்மலை முருகனை வேண்டி நோய் நீங்கப் பெற்றான்.

    “இருகுழை யிடறிக் காது மோதுவ ,
    பரிமள நளினத் தோடு சீறுவ, இணையறு வினையைத்
    தாவி மீளுவ வதிசூர எமபடர் படைகெட் டோட நாடுவ“

    என்னும் திருப்புகழில் நிகர் இல்லாத முன் வினைகளைத தீர்ப்பவன். எமனின் சேனைகள் அஞ்சி ஓடும்படி செய்பவன். காம வெள்ளத்தில் மூழ்கி, பாவக் குழிக்குள் போய் விழாமல் தன் வேலால் ஓடச் செய்பவன். நம்பியவர்களைக் காக்கும் உன் திருவடி நிழலில் பொருந்தி வாழும் வாழ்க்கை, என்றாவது கிடைக்குமா? பார்வதி தேவி பெற்றருளியவனும், பட்டாலியூரில் வீற்றிருப்பவனுமாகிய முருகப் பெருமானே நம்மைக் காக்க வல்லவன்.

    இதையே நக்கீரர் “உன்னை யொழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின் செல்லேன்- பன்னிருகை கோலப்பா வானோர் கொடியவினை தீர்த் தருளும் வேலப்பா செந்தி வாழ்வே. என்று கூறுகிறார்.

    உயிர் வேறு, மெய் வேறு என்றில்லாமல் உயிர்மெய்யாக இருக்கிறான் முருகன். “அருள் பெறல் மரபிற் பெரும் பெயர் முருக” என்கிறது ஒரு பாடல். பிறராலே பெறுவதற்கு அறிய இலக்கணங்களை உடையவன் முருகன் என்பது இதன் பொருள். மனிதர்களிடம் இல்லாத அரிய நற்குணங்களை உடையவன் என்பதால் அவனே பெருமைக்கு உரிய வன் ஆகிறான்.

    முருகன் என்றாலே முழுமை உடையவன். முருகு என்ற சொல் அவனின் பல சிறப்புகளைக் குறிக்கிறது. அவனின் பண்புகளை, நீங்காத அழகுடைய, என்றும் இளமை உடையவன் என்று குறிக்கும் சொல். நறுமணம் உடைய திருமேனி உடையவன். இதையே வள்ளலார் “கந்தமிகு நின்மேனி”- என்கிறார்.

    முருகா என்றால் முன்கூட்டியே வரு வதை உரைப்பவன். இதையே உத்தரவுப் பெட்டி மூலம் நாட்டின் நன்மைக்காகவும் உரைக்கிறான் முருகன். சிவன்மலை முருகனை சிந்தையில் வைத்திருப்போர், சீரான, சவுபாக்கிய வாழ்வு வாழ்வர்.

    Next Story
    ×