search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஷ்பு
    X
    குஷ்பு

    குஷ்பு என்னும் நான்... சந்தித்ததும் சிந்தித்ததும்...கண்ணீர் சிந்த வைத்த குடும்ப பிரச்சினை

    நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    மெட்ராஸ்...
    நல்ல மெட்ராஸ்!
    இந்தியில் தொடங்கிய எனது திரை உலக  பயணம் தெலுங்கிலும், கன்னடத்திலும் வேகம் பிடித்தது. தெலுங்கைப் போலவே கன்னடத்திலும் வி.ரவிச்சந்திரனுக்கு ஜோடியாக ‘ரனதீரா’ மற்றும் நாகர்ஜுனாவுடன் ஒரு படம் ஒன்று முன்னணி கதா நாயகர்களுடன் நடித்து வெளிவந்த பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்ததால் கன்னடத்திலும் ‘பிசி’ நடிகையானேன்.

    அந்த காலக்கட்டத்தில் மும்பைக்கு அடுத்ததாக சென்னையில் தான் சினிமா ஷூட்டிங் நடக்கும். இங்கு தான் பிரசாத், வாகினி, ஏ.வி.எம். என்று புகழ்பெற்ற ஸ்டுடியோக்கள் இருந்தன. படப்பிடிப்பு தளங்கள். தொழில்நுட்ப கருவிகள் உள்ளிட்ட திரைப்ட தொழிலுக்கு தேவை யான அனைத் வசதி களும் இருந்தன.

    அதனால் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா என்று பல மாநில மொழி படப்பிடிப்புகளும் சென்னையில் தான் நடக்கும். எனவே நானும் சென்னைக்கு குடிபெயர்ந்தேன்.

    அப்போது மெட்ராஸ் என்று கேள்விப் பட்டிருந்தேன். ஆனால் அது எங்கு இருக்கிறது. எப்படி இருக்கும் என்று எதுவுமே தெரியாது.  மெட்ராசுக்கு போகிறோம் என்ற உணர்வுடன் புறப்பட்டு மெட்ராஸ் வந்து சேர்ந்தோம்.

    கன்னடம், தெலுங்கு என்று இரு மொழிகளிலும் ஓய்வில்லாத அளவுக்கு படப்பிடிப்புகள் நடந்தன. நான் பிறந்து வளர்ந்த மும்பைக்கும் பிழைப்பு தேடி வந்த சென்னைக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகளை பார்த்து ஆச்சரியப்பட்டேன்.

    மக்களின் கலாச்சாரம், குறிப்பாக நடை, உடை, பாவனை, பழக்க வழக்கங்கள் அனைத்துமே மாறுபட்டு தெரிந்தாலும் என்னை கவர்ந்தது. ஏற்கனவே தமிழக உணவு வகைளை ஹேமமாலினி வீட்டில் ரசித்து சாப்பிட்டு பழகி இருந்ததால் சென்னைக்கு வந்த பிறகு உணவு பழக்கத் தில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

    படப்பிடிப்பின்போது இட்லி, பொங்கல், வடை என்று லெகுவான உணவுகளையே விரும்பி சாப்பிடுவேன். சினிமாவின் மூலம் ஓரளவு வருமானம் வரத் தொடங்கியது.

    ராஜா அண்ணாமலைபுரத்தில வாடகை வீட்டில் குடியேறினோம். அண்ணன்கள் 3 பேர், அப்பா, அம்மா அனைவரும் ஒரே வீட்டில்தான் இருந்தோம். அண்ணன்களுக்கு வேலை இல்லை. மொழி பிரச்சினையால் அவர்களால் வேலை தேடவும் முடியவில்லை.
    ஆனாலும் கிடைத்த வருமானத்தில் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் தான் வாழ்ந்தோம். நான் புதிதாக ஒரு மாருதி ஆம்னிகார் வாங்கினேன். அந்த காரில்தான் படப்பிடிப்புக்கு செல்வேன்.

    அந்த நேரத்தில் குடும்ப பிரச்சினையால் சில நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்தது. அம்மாவுக்கும், அப்பாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குடும்பத்துக்குள் புயலாய் வீசி நிம்மதியை குலைத்தது.

    அதேநேரம் என்னிடமும் தென்னிந்திய மொழி படங்கள் வேண்டாம். மீண்டும் மும்பைக்கு சென்றுவிடுவோம் என்று அப்பா தொந்தரவு கொடுக்க தொடங்கினார். அது கூடுதலாக என்னை சிரமத்துக்குள்ளாக்கியது.

    என்னிடம் கால்ஷீட் வாங்கி இருந்த தயாரிப்பாளர்களிடம் சென்று முழு தொகையும்  தந்தால்தான் குஷ்பு நடிக்க வருவாள் என்று சிலரிடம் முழுத் தொகையையும் அப்பா வசூலித்து விட்டார்.

    சிலர் அப்பாவின் குணத்தை அறிந்து பணத்தை கொக்காமல் ‘உன் அப்பா முழுத்தொகையையும் நீ கேட்பதாக வந்து கேட்கிறார். நீ கேட்டியாம்மா’ என்று என்னிடம் கேட்பார்கள். அவர் களிடம் கொடுத்து விடாதீர் கள். கேட்டால் முழுத் தொகையையும் குஷ்புவிடம் கொடுத்துவிட்டேன் என்று கூறிவிடுங்கள் என்று சொல்லி தடுத்துவிட்டேன்.

    இருப்பினும் வரவு& செலவு கணக்குகளை அவரே பார்த்து வந்ததால் வங்கி கணக்கில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து கொண்டு, நான் வாங்கி வைத்திருந்த நகைகளையும் எடுத்து கொண்டு சென்று விட்டார்.

    போகும் போதும் சும்மாபோகவில்லை. பேய்  போகும்போது மரக்கிளையை ஒடித்து போட்டு விட்டு போகும் என்பார்களே அதேபோல் எங்களை பிடித்து வதைத்து கொண்டிருந்த அப்பா என்ற பேய் எனது கார் கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்திவிட்டு சென்றது.

    எனது உழைப்பில் நான் ஆசைப்பட்டு வாங்கிய கார் உடைந்து கிடப்பதை பார்த்து என் இதயமும் நொறுங்கி போனது. ஒரு நாள் முழுவதும் என்னால் சாப்பிட கூட முடியவில்லை. அம்மாதான் ஆறுதல் படுத்தினார்.

    மறுநாள் தான் வங்கி கணக்கை பார்த்து பணம் அனைத்தையும் எடுத்து இருந்ததை தெரிந்து கொண்டேன். வீட்டில்  வைத்திருந்த நகையையும் காணவில்லை. அதுவரை நான் உழைத்து சேர்த்தவை மொத்தமும் போய்விட்டது. அதை நினைத்து பல நாட்கள் அழுததுதான் மிச்சம்.

    அந்த சம்பவம் எங்கள் குடும்பத்தை மிகவும்  பாதித்தது. நான் ஒருத்தி சம்பாதித்த பணத்தில் தான் குடும்பத்தை ஓட்டவேண்டி இருந்தது.

    வீட்டு வாடகை கொடுக்க முடியாமலும், சாப்பாட்டுக்கே வழியில்லாமலும் கஷ்டப்பட்டோம். ஒருவேளை சாப்பாடு கிடைக்காமல் பட்டினி கிடந்த நாட்களும் உண்டு.

    சில நாட்களில் சமைத்த சாதம் எங்கள் அனைவருக்கும் போதாது. எனவே நானும், அம்மாவும் சாப்பிட்டு விட்டதாக பொய் சொல்லிவிட்டு அண்ணண்கள் மூன்று பேருக்கும் சாதத்தை பரிமாறுவோம்.அதன்பிறகு நாங்கள் வடித்த கஞ்சியை மட்டுமே குடித்து விட்டு பசியோடு படுத்திருப்போம்.

    என் அருகில் படுத்திருக்கும் அம்மாவின் கண்களில் இருந்து கண்ணீர் வடியும். எங்களுக்காக இவ்வளவு கஷ்டப்படுகிறாயே. ஒரு வேளை சோறுகூட உனக்கு கிடைக்கவில்லையே என்று அழுவார்.என் மனதுக்குள்ளும் பொங்கி வரும் அழுகையை அடக்கி கொண்டு சுமைதாங்கியாக இருந்து கொள்வேன். அழாதேம்மா... நிச்சயம் நமக்கும் நல்ல காலம் வரும் என்று ஆறுதல் சொல்வேன்.

    அத்தனை சுமைகளையும், சோகத்தையும் சுமந்து கொண்டிருந்தாலும் படப்பிடிப்பு தளத் துக்கு சென்றால் எல்லா வற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு நடிப்பில் கவனமாக இருப்பேன். அப்படி ஒரு நாள் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது சூப்பர் ஸ்டார் ரஜினி வந்திருக்கிறார். அவரை பார்த்ததும் எல்லோரும் அவருக்கு மரியாதை செலுத் தினார்கள். ஆனால் எனக்கு அப்போது ரஜினியை பற்றி எதுவும் தெரியாது.

    இந்திப்படங்களில் அப்போது அவர் புகழ்பெற்றிருக்கவில்லை. ஒருவேளை இந்தியிலும் நடித்திருந்தால் நிச்சயம் அறிந்து இருப்பேன். அவரைப்பற்றி தெரியாததால் அவரிடம் இருந்து வந்த வாய்ப்பையும் நழுவ விட்டேன். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் தமிழ் திரை உலகிலும் என் சினிமா பயணத்திலும் முத்திரை பதித்த முக்கியமான நபரை சந்தித்தேன்... சாதித்தேன்...

    Next Story
    ×