search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணை தெய்வம் காஞ்சி மகான்
    X
    கருணை தெய்வம் காஞ்சி மகான்

    கருணை தெய்வம் காஞ்சி மகான் - ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

    கருணை தெய்வம் காஞ்சி மகான் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    காஞ்சி ஸ்ரீமடத்தின் பக்தர்களாக விளங்கும் எத்தனையோ முக்கியஸ்தர்கள் கேட்டும் பதில் சொல்லாத பெரியவா, முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமனின் மனைவி ஜானகி கேட்டதும், சற்றும் யோசிக்காமல் ‘சதாரா’ என்று பதில் சொன்னார்.

    ஸ்ரீமடத்தின் அதிகாரிகள், சந்நியாசிகள், பெரியவாளின் அன்புக்கு உட்பட்ட பிரபலங்கள் என்று பலர் கேட்டும் பதில் சொல்லாத பெரியவா, இந்த அம்மையாருக்கு மட்டும் ஏன் உடனடியாக பதில் சொல்ல வேண்டும்? காரணம் புரியவில்லை அல்லவா? இருக்கிறது.தன் மகனை இழந்த சோகம் தாங்க முடியாமல் ஆறுதல் வேண்டி மகா பெரியவாளிடம் ஒரு நாள் ஜானகி வந்தார் என்று ஏற்கெனவே பார்த்தோம் அல்லவா?அப்போது ஜானகிக்கு ஆறுதல் சொல்லும் விதமாக, ‘அந்தப் பையன் போயிட்டானேனு துக்கப்படாதே... நானே உன் பையனா இருக்கேன்’ என்று பெரியவா தேற்றினாரே...எப்பேர்ப்பட்ட வார்த்தைகள்... ‘நானே உன் பையனா இருக்கேன்.’

    மனிதர்களான நாமெல்லாம் ஒரு ஆறுதல் சொன்னால், அது சும்மா பெயரளவுக்குத்தான். ‘உனக்காக உயிரையும் குடுப்பேன்டா’ என்று சொன்ன நண்பர்கள் பின்னாட்களில் நம் உயிரையே எடுக்கும் அளவுக்கு மாறிப் போனதையும் பார்த்திருக்கிறோம்.பெரும்பாலான மனிதர்கள் கொடுக்கின்ற வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறக்க விட வேண்டியவைதான்.

    ஆனால், ஜானகிக்கு மகா பெரியவா என்ன வாக்குறுதி கொடுத்தார் என்று பார்த்தோம் அல்லவா? அதற்கு ஏற்றாற்போல் நடந்து கொள்ள வேண்டும் அல்லவா?அதனால்தான் எவர் கேட்டும் பதில் சொல்லாத பெரியவா, தாய் ஸ்தானத்தில் இருக்கிற ஜானகி கேட்டதும், பதில் சொல்லி விட்டார்.தாய் ஒரு கேள்வி கேட்டு மகன் பதில் சொல்லாமல் இருக்க முடியுமா?அதனால்தான், தாயின் கேள்விக்கு பதில் சொல்லி, பலரையும் மவுனத்தையும் கலைத்தார் பெரியவா.

    சொல் ஒன்று; செயல் ஒன்று என்பது பெரியவாளிடம் கிடையாது. என்ன சொன்னாரோ, அதன்படி நடக்கவும் செய்தார் நடமாடும் தெய்வம். மகா பெரியவாளின் இந்த யாத்திரையில் தமிழகத்தைக் கடந்து ஆந்திரா வழியே பயணித்துக் கொண்டிருந்தார்.

    செல்கிற வழியில் எங்கெங்கு தோன்றுகிறதோ, அங்கெல்லாம் தங்கி ஓய்வெடுத்தார். இளைப்பாறினார். பிக்ஷை (மகா பெரியவா சாப்பிடுவதை ‘பிக்ஷை’ என்பார்கள். சாப்பாடு என்று அதைச் சொல்லக் கூடாது) ஏற்றுக் கொண்டார். பக்தர்களுக்கு அருள் வழங்கினார்.

    ஆந்திராவில் ஒரு கிராமத்தின் வழியே பெரியவா சென்று கொண்டிருந்தார். உச்சி வெயில் கொளுத்துகிற வேளை... வழியில் பழைமையான ஒரு சிவாலயம் பெரியவா கண்களில் பட்டது. ‘‘இந்தக் கோயில்ல பிக்ஷையை முடிச்சுடலாம். நீங்களும் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கோங்கோ’’ என்று தன்னுடன் வருபவர்களைப் பார்த்துச் சொன்னார் பெரியவா.

    கொளுத்துகிற வெயிலில் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று பெரியவா சொன்னதில் தொண்டர்களுக்கு ஒரே குஷி.பெரியவா வந்திருக்கிற தகவல் ஆலயத்தின் குருக்களுக்குச் சொல்லப்பட்டது. ஆலயத்தின் சார்பாகவும், ஊர்மக்கள் சார்பாகவும் பூர்ண கும்பம் கொடுத்து பெரி யவாளை உள்ளே அழைத்துச் சென்றார்கள். தரிசனம் ஆனது. குருக்க ளுக்கு வீட்டுக்குச் செல்கிற அவசரம். ஏதோ நினைப்பில் நித்தமும் ஆலயத் தைப் பூட்டுவதைப் போல் கோயில் வாசலின் பிரதான கதவைப் பூட்டிக் கொண்டு சென்று விட்டார்.

    ஆலயத்தினுள்ளே ஒரு மூலையில் ‘தேமே’ என்று சாய்ந்து ஓய்வெடுத்துக் கொண்டி ருந்தார் பரப்பிரம்மம்.தொண்டர்களும் அசதியில் காணப்பட்டார்கள். எனவேதான், பெரியவாளும் தொண்டர்களும் கோயிலுக்குள் இருக்கிறார்கள் என்கிற நினைப்பே அந்தக் குருக்களுக்கு ஏற்படவில்லை.

    தங்கள் பகுதிக்கு காஞ்சீபுரத்தில் இருந்து ஒரு சந்நியாசி வந்திருக்கிறார் என்பது தெரிந்து உள்ளூர் மக்களும் அக்கம்பக்கத்து கிராமத்தவர்களும் பெருமளவு கோயில் வாசலில் திரண்டார்கள். அவரவர்கள் தங்கள் சக்திக்கு ஏற்றாற்போல் அரிசி, பருப்பு, இதர தானியங்கள், காய்கறி என்று மூட்டை மூட்டையாக எடுத்து வந்திருந்தார்கள்.

    பெரியவாளைத் தரிசிக்கக் கோயில் வாசலுக்கு வந்தவர்களுக்கு ஏமாற்றம். கோயில் கதவுதான் பூட்டப்பட்டிருக்கிறதே... குருக்கள் ஏதோ நினைப்பில் பூட்டி விட்டு அல்லவா சென்றிருக்கிறார்?! ஓய்வில் இருந்த பரப்பிரம்மம் திடீரென கண் விழித்தது. வெளியே திரண்டிருக்கும் பக்தர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கும் சத்தம் மெள்ளக் காதில் விழுந்தது.கோயில் கதவு பூட்டப்பட்டிருப்பதை உடன் இருப்பவர்கள் மூலம் அறிந்து கொண்டார்.

    கைங்கர்யம் செய்யும் குமரேசன் என்கிற தொண்டரைக் கூப்பிட்டு, ‘‘எதையாவது போட்டு கொஞ்சம் உசரமா மேலே ஏறிக்கோ. அந்தக் கோயில் மணியோட கயித்தைப் பிடித்து இழுத்து அடி’’ என்றார் பெரியவா. மிகவும் பிரமாண்டமான மணி. எதையாவது போட்டு மேலே ஏறினால்தான் கயிறைப் பிடித்து இழுத்து மணியை ஒலிக்க வைக்க முடியும். பெரியவா சொன்னதை அடுத்த ஒரு சில விநாடிகளில் நிறைவேற்றினார் குமரேசன்.

    இந்த மதிய வேளையில் கோயில் மணி ஒலிப்பதைக் கேட்டதும், அதே வீதியில் தன் கிரஹத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த குருக்கள் அதிர்ந்து போனார். ஆணியில் மாட்டி வைத்திருந்த சாவிக் கொத்தை அவசரம் அவசரமாக எடுத்துக் கொண்டு கோயிலை நோக்கி ஓடி வந்தார். வாசலில் பக்தர்கள் கூட்டம். ஒவ்வொருவரும் தாங்கள் கொண்டு வந்திருந்த காணிக்கை மூட்டையை ஓரமாக சாய்த்து வைத்திருந்தார்கள். கோயில் கதவைத் திறக்கும்போதுதான் ‘பெரியவா உள்ளே இருக்கிறார்’ என்பது குருக்களுக்குத் தெரிந்தது. எத்தகைய அபசாரம் செய்து விட்டோம் என்பது அவருக்கு அப்போதுதான் புரிந்தது.

    கண்கள் கலங்க பெரியவாளை நோக்கி ஓடினார். அவருக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து, மன்னிக்குமாறு வேண்டினார்.கலியுக தெய்வமாக விளங்கும் பெரியவா புன்னகையுடன் குருக்களைப் பார்த்து ஆசி வழங்கினார். இதற்குள் வெளியே கூடி இருந்த கிராமத்து மக்கள் திமுதிமுவென ஆலயத்தினுள் வந்து விட்டார்கள். பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்து, தாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களை சமர்ப்பித்தார்கள். சற்று நேரத்தில் பார்த்தால் அரிசி மூட்டைகள், பருப்பு மூட்டைகள், வாழையிலைக் கட்டுகள், வாழைத்தார்கள், காய் கறிகள், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் இதர தானியங்கள் என்று கடை விரித்தது போல் காணப்பட்டது.  

    பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்யும் தொண்டர்கள் முகத்தில் பரவசமான பரவசம். காரணம் - தங்கள் அன்பின் காணிக்கையாகக் கிராம மக்கள் கொண்டு வந்து குவித்திருக்கும் இந்தப் பொருட்கள். ‘இன்னும் கொஞ்ச நாட்களுக்கு எங்கே போனாலும் சாப்பாட்டுக்குப் பஞ்சம் இருக்காது. வர்றவாளுக்கு நன்னா அன்னதானம் போட முடியும்’ என்று தங்களுக்குள் உற்சாகமாகப் பேசிக் கொண்டார்கள்.

    பெரியவா யாத்திரையுடன் வந்து கொண்டிருக்கிற வண்டிகளில் எல்லாவற்றையும் ஏற்றி விடலாம். அப்படியே இடம் போதவில்லை என்றால், இந்தக் கிராமத்தவர்களிடம் கேட்டால் ஏதேனும் மாட்டு வண்டியை ஏற்பாடு செய்து கொடுத்து விடுவார்கள். அடுத்த முகாம் போய் எல்லாவற்றையும் இறக்கிக் கொண்டு வண்டியைத் திருப்பி அனுப்பி விடலாம் என்றெல்லாம் வழிகளை யோசித்தார்கள்.

    கிராமங்களில் இருந்து வந்தவர்களிடம் அன்பொழுகப் பேசினார் பெரியவா. அவர்களில் பாடத் தெரிந்தவரை அழைத்து பக்திப் பாடல்களைப் பாடச் சொன்னார். ஒரு வரியை அவர் பாட... கிராமத்தவர்கள் அதே வரியை பின்பாட்டாகப் பாடினார்கள்.

    வெள்ளந்தியான அந்தக் கிராமவாசிகளின் அன்றாட வாழ்க்கை முறையைத் தெரிந்து கொண்டு, அவர்களுக்குப் பக்தியைப் பற்றியும் பாடம் எடுத்தார் நடமாடும் சர்வேஸ்வரன்.கிராமத்தவர்களுக்கு சந் தோஷம் என்றால், மழைதான். பயிர்களுக்கு எது ஆனந்தம் தருகிறதோ, அதுதான் அவர்களுக்கும் ஆனந்தம்.

    மழை போல் இதமளித்த பெரியவாளின் ஆசி வார்த்தைகள் அவர்க ளுக்கு நிஜ மழையைப் போல் சந்தோஷத்தைக் கொடுத்தன. பெரியவாளின் திருமுகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    வெயிலின் உக்கிரம் சற்று இறங்கியவுடன், ‘அடுத்த ஊருக்குப் போய் விடலாம்... யாத்தி ரையைத் துவங்கலாம்’ என்று தீர்மானித்து மெள்ள எழுந்தார் பெரியவா.

    கிராம மக்கள் ஒவ்வொருவரும் மீண்டும் பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்து புறப்பட்டார்கள்.ஆலய குருக்களுக்கு சந்தோஷமான சந்தோஷம். இத்தனை நேரம் இந்த மகான் இங்கு தங்கியதை பெரிய பேறாக எண்ணிப் பூரித்தார். பெரியவாளுக்கும் அவரது தொண்டர்களுக்கும் தன் நன்றியைத் தெரிவித்தார்.

    பெரியவா கிளம்பப் போகிறார் என்பதைப் புரிந்து கொண்ட தொண்டர்கள் எழுந்தார்கள். பரபரப்பானார்கள்.
    ‘இந்த மூட்டைகளை எல்லாம் வண்டிகளில் அடுக்க வேண்டும். அதிக எடை இல்லாத சில மூட்டைகளைத் தோள்களில் சுமந்து சென்று விடலாம்’ என்று தீர்மானித்து மூட்டைகளின் அருகே சென்றார்கள்.
    ‘‘டேய்ய்ய்...’’
    - பெரியவாளின் அதிகாரக் குரல் அவர்களைத் தடுத்து நிறுத்தியது.
    குரல் ஒலித்த வேகம் கண்டு சற்று மிரண்டுதான் போனார்கள்.

    Next Story
    ×