search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பதஞ்சலி அருளிய யோகம்
    X
    பதஞ்சலி அருளிய யோகம்

    ஆரோக்கியம் நம் கையில் - பதஞ்சலி அருளிய யோகம்

    வேத உண்மைகளை பிரம்மசூத்திரமாக வியாசரும், பக்தி சூத்திரத்தை நாரதரும், செய்வதைப்போல யோகா சூத்திரம் பதஞ்சலியால் செய்யப்பட்டது.
    ஞான சாதனங்களும் கர்மா முதலியவைகளும், அவைகளை உபதேசிக்கின்ற சாஸ்திரங்களும் தரிசன சப்தத்தால் சொல்லப்படுகின்றது.  ஞானமானது எதனால் உண்டாகின்றதோ அதனை தரிசனம் என்று சொல்லப்பட்டதாகின்றது.  அத்தகைய தரிசனப் பதத்தால் சொல்லப்படும் சாஸ்திரங்கள் ஆறு வகைப்படும்.
    அவையாவன:
    சாங்கியம்
    யோகம்
    நியாயம்
    வைசேஷிகம்
    பூர்வமீமாம்ஸை
    உத்திரமீமாம்ஸை
    அவைகளை கீழ்கண்ட ஆறு மகரிஷிகள் முறையே செய்தவர்களாவார்கள்.
    சாங்கியம் -  கபிலர்
    யோகம் -  பதஞ்சலி மகரிஷி
    நியாயம் - கௌதமர்
    வைசேஷிகம் -  கணநாதர்
    பூர்வமீமாம்ஸை - ஜெய்மினி
    உத்திரமீமாம்ஸை -  வியாசர்
    இரண்டாவதான யோக தரிசனம் முதன் முதலில் ஹிரண்யகர்ப்பரால் (பிரம்மாவால்) செய்யப்பட்ட யோகா சாஸ்திரத்தை சுருக்கமாகவும் தெளிவாகவும்  பதஞ்சலி மஹரிஷியானவர் சமஸ்கிருதத்தில் சூத்திர வடிவமாய் உபதேசித்து அருளியிருக்கின்றார்.
    வேத உண்மைகளை பிரம்மசூத்திரமாக வியாசரும், பக்தி சூத்திரத்தை நாரதரும், செய்வதைப்போல யோகா சூத்திரம் பதஞ்சலியால் செய்யப்பட்டது.
    இவர் இந்த உலகிற்கு மிக உபயோகமான 3  சாஸ்திரங்கள்  செய்திருக்கிறார். அவையாவன:

    1  யோகா சாஸ்திரத்திற்கு 195  யோகா சூத்திரங்கள் எழுத்திருக்கிறார்.
    2  வியாக்கிரபாதர் எழுதிய வியக்காரணத்திற்கு மஹாபாஷ்யம் (மொழி இலக்கணம்) எழுதியிருக்கிறார்.  
    3 உபவேதமாகிய ஆயுர் வேதத்திற்கு சரகம் என்னும் கிரந்தத்தை செய்திருக்கிறார். இதற்கு ஆத்ரேய சம்கிதை என்ற ஒரு பெயரும் உண்டு.

    மனதிற்கு உபகாரமானது யோக சூத்திரம். இது மனதை நிறுத்தி  சித்த சுத்தி உண்டாக்கும் வழியை காட்டிக் கொடுக்கிறது.  வாக்கிற்கு (சப்தத்திற்கு- ஒலிக்கு) உபயோகமாக வியாகர்ண மஹாபாஷ்யம் விளங்குகிறது. இதனால் நாம் பிழையில்லாமல் பேசவும், பேசிய ஒலியினால் நற்பயன் அடையவும் உதவுகிறது. மந்திரங்கள் ஏற்பட ஏதுவாயிற்று, காய (உடம்பு) சிகிச்சைக்கு ஆயுர்வேத சரகம் என்ற ஆத்ரேய சம்கதையானது மிக்க பலனளித்து வருகிறது. இவ்வாறு மூன்று காரணங்களுக்கும் (மனோ, வாக்கு, காயம்) மூன்று சாஸ்திரங்களை செய்து கொடுத்தவர் பதஞ்சலி மகரிஷியாவார்.

    ஒரு சமயம் தன்னால் இயற்றப்பட்ட வியாகர்ண மஹாபாஷ்யத்தை உலகிற்கு எடுத்துத் சொல்ல, உலகிலிருந்து 1000 சிஷ்யர்களை திரட்டி அவர்களுக்குப் போதிக்க 1000 தலைகளைக் கொண்ட ஆதிசேஷன் அவதாரம் எடுத்துக் கொண்டு சிதம்பரத்தில் 1000ங்கால் மண்டபத்தில் தனக்கும் சிஷ்யர்களுக்கும் மத்தியில் ஒரு திரையிட்டு ஆரம்பித்தார். அப்பொழுது தன் சிஷ்யர்களுக்கு கீழ்கண்ட நிபந்தனைகளை விதித்தார்.  

    1 யாருக்கு எந்த சந்தேகம் ஏற்பட்டாலும் உடனுக்குடன் கேட்டு தெளிவடைய வேண்டும், தான் போதிக்கும் பொழுது திரையை விளக்கிப் பார்க்க கூடாது, ஏனெனில் தன் ஆயிரம் தலைகளில் உள்ள ஜோதிபிரகாசம் தாங்க முடியாமல் சிஷ்யர்கள் தீய்ந்து சாம்பலாக நேரிடும் என்றும்.

    2 தான் போதிக்கும் பொழுது யாராவது தன் உத்திரவு இல்லாமல் வெளியே போனால் அவன் பிரம்மராட்சனாக ஆவார் என்றும் இரு கட்டளைகளை இட்டு தொடங்கினார்.

    அவர் கட்டளைகளை மீறிய 999 பேர்கள் தீய்ந்து சாம்பலாகி விட்டார்கள்.  ஒருவன் கௌட தேசத்திரிலிருந்து வந்த மந்த புத்தியுள்ள கௌபாதர் என்பவன் வெளியே சென்றதால் பிரம்மராட்சனாக உருவம் பெற்று பின்பு  பதஞ்சலி மஹரிஷியின் அனுகிரஹத்தால் உபதேசம் பெற்ற பிறகு அவராலேயே தனக்கு ஏற்பட்ட சாப விமோசனத்தையும் அடைந்து மகா உன்னத பதவியை அடைந்திருக்கிறான் என்ற ஒரு பெரிய கதையும் இருக்கிறது.

    சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட 195 யோக சூத்திரங்களை தமிழில் 3000  பாடல்களாக உண்டாக்கிக் கொடுத்தவர் திருமூலர். பதஞ்சலிதான், திருமூலராக அவதரித்தார் என்றும் தெரிய வருகிறது. அதற்கு திருமந்திரம் என்று பெயர்.
    யோக சூத்திரங்கள் நான்கு பாதங்களைக் கொண்டது, அவையாவன:
    சமாதி பாதம்
    சாதனா பாதம்
    விபூதி பாதம்
    கைவல்ய பாதம்

    உலகில் பிறந்த ஒவ்வொருவரும் முக்தி என்ற மோட்சம் பெரும் பதவியினை அடையவே விரும்புகிறோம். இதைத்தான் யோகா வழியிலே சமாதி அல்லது கைவல்யம் மற்றும் பரிபூர்ண நிலை என்று அழைப்பர்.

    இந்த நிலை எவ்வாறு கிடைக்கும் என்ற வழியை  முதன் முதலில் சிவபெருமான் பிரம்மனுக்கு உபதேசித்தார்.  இது விளக்கமாகவும், சுருக்கமாகவும். யோகா சிகோய நிஷத் என்ற உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. உபநிஷத்து ஆரம்பமே பிரம்மன்  தன் சந்தேகத்தை எடுத்துச் சொல்ல சிவபெருமான் அதற்கான விடை அளிக்கிறார்.

    பிரம்மனின் கேள்வி: ஏ ஒளிவடிவே சங்கரா  எல்லா உயிர்களும் அறியாமையாகிய வலையில் சூழப்பட்டவர்களாய் இன்ப துன்பங்களால் வருந்துகிறார்கள்.  அவர்களுக்கு விடுதலை எவ்வாற்றானாகும். அருளால் கூறுவீராக. மற்றும் அறியாமையாகிய வலையை கிழிப்பதும் எல்லாச் சித்திகளையும் செய்வித்து இன்பத்தையே தருவதுமான வழியாக கூறுவீராக.
    இவ்வாறு பிரம்மன் கேட்க அந்த மகேஸ்வரன் விடை கூறினார். தாமரையில் தோன்றியவனே! தன்னில் வேரில்லாத மேலான முத்திப் பதமானது. பல வழிகளால் அடைதற்கு அரியது. ஆனாலும் யோகத்தைப் பயின்று சித்தியை அடைந்த சித்தர்களின் வழியால் அது (முக்தி) நிச்சயம் அடைய படுகின்றது.  வேறு வழியால் அடையத்தக்கது என்று முடிவாக கூறியிருப்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். மேற்குறிப்பிட்ட வினா விடையிலுள்ள உண்மை இரகசியங்களை அறிந்து நம் வாழ்க்கையை கடைபிடித்தால் நிச்சயம் முக்தி மோட்சம் சமாதி பரிபூர்ண நிலை கிடைக்கும்.

    பதஞ்சலி மஹரிஷி ஒவ்வொரு மனிதனும், உடல் ஆரோக்கியமாக வாழவும், உள் அமைதியாக வாழவும், தனக்குள் இருக்கின்ற உயிர் ஆற்றலை உணரவும், அருமையான அஷ்டாங்க யோகமாக எட்டுப்படிகளாக அருளியுள்ளார். ஒவ்வொரு மனிதனும், வாழ்வில் வளமாக, நலமாக, ஆரோக்கியமாக வாழ முதலில் நமது எண்ணம், சொல், செயல் மூன்றும் புனிதமாக இருக்க வேண்டும், மனம் செம்மையாக இருக்க வேண்டும், அது நாம் செய்யும் யோகப் பயிற்சியின் மூலம் தான் அடைய முடியும்.  

    தீய எண்ணம் உதிக்கும் பொழுதே விழிப்புடன் அதனை விருத்தியடையச் செய்யாமல் நல்ல எண்ணங்களை வளர்க்கும் ஆற்றல் யோகப்பயிற்சிக்கு உள்ளது. பதஞ்சலி மஹரிஷி அருளிய முழுமையான உடல், மன ஆரோக்கியத்திற்கு எளிமையான யோகாசனம், தியானம் பற்றி இப்பொழுது காண்போம்.

    அருமையான பலன் தரும் அர்த்த ஹாலாசனம்:
    இடுப்பு வலி, அஜீரணம், வாயு பிரச்சனை தீரும், அல்சர் புற்று நோய் மலச்சிக்கல் வராது.

    செய்முறை:
    விரிப்பில் நேராக படுக்கவும், இரு கால்களையும் சேர்த்து வைக்கவும், இரு கால்களையும் ஒரு அடி பூமியிலிருந்து உயர்த்தவும். 10 விநாடிகள் இருக்கவும்.  பின் மெதுவாக காலை தரையில் வைக்கவும். பின் இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து 90 டிகிரிக்கு இடுப்பை உயர்த்தாமல் இரு கால்களையும் படத்தில் உள்ளது போல் நேராக வைக்கவும். சாதாரண மூச்சில் 10 எண்ணிக்கை இருக்கவும். பின் மெதுவாக கால்களை தரையில் வைக்கவும்.  இது போல் மூன்று முறைகள் செய்யவும்.
    பலன்கள்:
    அல்சர், வயிற்று புற்று நோய் வராமல் தடுக்கும்.
    வாயு கோளாறு நீங்கும்.
    மலச்சிக்கல் நீங்கும்.
    உடல் எடை, அதிக வயிற்று தசை குறையும்.
    மாரடைப்பு வராது, இதயம் பலப்படும்.
    நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கும்.
    மூல வியாதி வராது.
    மூட்டு வலி, வயிற்று வலி வராது.
    பெண்களுக்கு கருப்பை கோளாறுகள் வராது.
    நன்கு பசி எடுக்கும்.

    மன அமைதிக்கு  பதஞ்சலி மஹரிஷி யோகத்தில் உள்ள எளிய தியானம்:
    படத்தில் உள்ளது போல் பத்மாசனம் போடுங்கள். பத்மாசனம் போட முடியாதவர்கள் சுகாசனத்தில் நிமிர்ந்து அமரவும். கைகள் சின் முத்திரை. பெருவிரல் ஆள்காட்டி விரல் நுனியை இணைக்கவும். இரு நாசி வழியாக மூச்சை முதலில் வெளிவிடவும். உடன், முடிந்த அளவு மூச்சை அடக்கவும். பின் மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளிவிடவும், உடன் ஐந்து விநாடிகள் மூச்சை அடக்கவும்.  இதுபோல் 5  முறைகள் செய்யவும்.  பின் இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் நெற்றிப்புருவ மத்தியில் தியானிக்கவும். பத்து நிமிடங்கள் தியானிக்கவும்.

    மூச்சை மெதுவாக வெளிவிட்டு உடன் 5  விநாடிகள் மூச்சை அடக்கினால் எண்ணங்கள் ஒடுங்கும்.  மன அமைதி கிட்டும்.  எண்ணங்கள் விருத்தியடையாது. மனதில் எப்பொழுதும் சலனங்கள் இருக்காது.  இந்த தியானம் காலை, மதியம், மாலை, இரவு படுக்கு முன் செய்யுங்கள்.  ஒரு மண்டலம் 48  நாட்கள் செய்தால் மனம் சாந்தமாகும்.  

    தீய எண்ணங்களை அழித்தலே யோகம். நல்ல எண்ணங்களே எப்பொழுது நிலைத்திருக்கும்.  விழிப்புடன் இருப்போம், உடலும், மனதும் அமைதியானாள் உடல் ஆரோக்கியம் தானே கை கூடும். உடல் உள் உறுப்புக்கள் நல்ல பிராண ஆற்றல் பெற்று இயங்கும். உடலையும், மனதையும் நமக்குள் இருக்கும் உயிர் ஆற்றலுடன், இறை சக்தியுடன் இணையச் செய்வதே யோகம். அதற்கு இந்த இரண்டு பயிற்சிகளை தினமும் செய்யுங்கள்.
    இந்த தியானத்தின் பலன்கள்:
    மன அழுத்தம் நீங்கும்.
    மன அமைதி கிட்டும்
    இரத்த அழுத்தம் வராது
    இதயம் நன்கு இயங்கும்
    இதயத் துடிப்பு சீராகும்
    நுரையீரல் நன்கு இயங்கும்
    சுறுசுறுப்பாக, உற்சாகமாக வாழலாம்
    தீய எண்ணங்கள் வளராது
    தன்னம்பிக்கை கிடைக்கும்
    மூளை செல்கள் நன்கு இரத்த ஓட்டம் பெற்று இயங்கும்.
    ஆழ்ந்த நித்திரை கிட்டும்.
    பொறாமை, கவலை, டென்ஷன் நீங்கும்.
    எத்தனையோ பல வகையான யோகப் பயிற்சிகளை  பதஞ்சலி மஹரிஷி வழங்கியுள்ளார்.  அதில் இன்றைய காலகட்டத்திற்கேற்ப மிக எளிமையான மேற்குறிப்பிட்ட ஒரு ஆசனத்தையும், எளிய தியானத்தையும் தினமும் காலை, மாலை 15  நிமிடங்கள் செய்யுங்கள்.  மகத்தான பலன்கள் கிடைக்கும். எளிய பயிற்சியின் மூலம் சிறப்பாக நலமாக வாழலாம்.   

    Next Story
    ×