search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரிய சித்தி தரும் ஹோரை சூட்சுமம்
    X
    காரிய சித்தி தரும் ஹோரை சூட்சுமம்

    காரிய சித்தி தரும் ஹோரை சூட்சுமம் - பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி

    ஹோரை அறிந்து நடப்பவனை யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள் வாக்கு.சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு வானவியல் அறிஞர்கள் ஹோரைகளை உருவாக்கினர்.
    ஒவ்வொருநாளும் தன்னுடைய  கடமை களுக்காக ஒடிக்கொண்டிருக்கும் மனிதர்கள் வாழ்க்கையை எளிமையாக்கித்  தரும் ஜோதிடத்தின் ஒரு பகுதியான ஹோரையை பலர் கடைபிடிப்பதில்லை அல்லது அறிந்திருப் பதில்லை.ஹோரையைப்பற்றி முழுமை யாக அறிந்து கொண்டு தமது பணிகளை மேற் கொண்டால் நேரம் குறைவு படுவதோடு அச்சம், மனச்சுமை குறையும்.சிந்தனையில் தெளிவும், அன்றாட மன உளைச்சலில் இருந்து விடுபடும் அருமருந்தாகவும்  அமையும்.வாழ்க்கையை எந்தவித குழப்பமும் இல்லாமல் நிறைவு செய்ய தேவையான அனைத்து விதமான உபாயங் களும் ஹோரையில் உள்ளது.

    ஜோதிடத்தை விரும்புவர் விரும்பாதவர் என அனைவரது வாழ்க்கையும் நவகிரகங்களாலே வழி நடத்தப்படுகிறது. மனிதர்களின் வாழ்வை ஒவ்வொரு விநாடியும் வழி நடத்தும் நவகிரகங்களே ஹோரையாக செயல்படுகிறது. சுப பலன்களை மிகைப்படுத்தி காரிய சித்தி தரும்  ஹோரை பற்றிய அறிய தகவல்களை காணலாம்.

    ஹோரை அறிந்து நடப்பவனை யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள் வாக்கு.சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு வானவியல் அறிஞர்கள் ஹோரைகளை உருவாக்கினர்.

    ஹோரை என்றால் ஆதிக்கம் என்று பொருள். சூரிய உதயம் தொடங்கி  ஒவ்வொரு குறிப்பிட்ட நேரமும் ஒரு கிரகத் தின் ஆதிக்கத்திலேயே இருக்கும்.அந்த குறிப்பிட்ட கிரகம் அந்த நேரத்தின் ஹோரை அதிபதியாக இருப்பார். ஹோரை யானது சூரியன், சுக்ரன், புதன், சந்திரன்,சனி,குரு மற்றும் செவ்வாய் என்ற அடிப்படையில் வரிசைக் கிரகமாக வரும்.ஒரு ஹோரையின் அளவு 1 மணி நேரமாகும்.ஒவ்வொரு கிழமை யின் துவக்கத்திலும் அந்தக் கிழமையின் அதிபதி கிரகத்தின் முதல் ஹோரையாகவே இருக்கும்.

    உதாரணமாக ஞாயிற்றுகிழமை காலை 6- மணி முதல் 7 மணி வரை சூரிய ஹோரை  என்றால் இதை யடுத்து 7  மணி முதல் -8 மணி வரை சுக்ரன் ஹோரை, 8- முதல் 9 மணி வரை புதன் ஹோரை, 9- முதல் 10  மணி வரை சந்திரன் ஹோரை, 10- முதல் 11  மணி வரை சனி ஹோரை, 11 -முதல் 12 மணி வரை குரு ஹோரை, 12- முதல் 1 மணி வரை செவ்வாய் ஹோரை. இதையடுத்து மீண்டும் சூரிய ஹோரை என சுழற்சி முறையில் வரும்.

    பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஹோரைகள் கணக்கிடப்படுகின்றன. ஏழு கிரகங்களுக்கு மட்டுமே  ஹோரை உண்டு.ராகு,கேது நிழல் கிரகங்கள் என்பதால் அவற்றுக்கு ஹோரை கிடையாது.

    ஹோரைகளில் குரு,புதன்,சுக்ரன், சந் திரன் ஆகியவை   சுப ஹோரைகளாகவும் சூரியன், செவ்வாய்,சனி ஆகியவைகள் அசுப ஹோரை களாகவும் பிரிக்கப்படுகிறது.

    ஹோரையின் பயன்கள்

    சூரிய ஹோரை:-இதை உத்தியோக ஹோரை எனலாம்.அரசு தொடர்பான காரியங் களில் ஈடுபடுதல், அரசியல் தலைவர்கள்,  பிரபலங்கள்,உயர் அதிகாரிகளை சந்திக்க, அரசின் உதவியை நாட,வேலைக்கு விண் ணப்பிக்க, இண்டர்வியூ செல்ல,தந்தையின் உதவி கேட்க,பெரியோர்களின் ஆதரவைப் பெற, வழக்கு தொடர்பான விசயங்கள்,சிவ வழிபாடு, பதவி ஏற்றல், ஆகியவற்றை செய்ய லாம் . சுபகாரியங்கள் செய்ய இந்த ஹோரை ஏற்றதல்ல. இந்த ஹோரையில்   பொருள்  காணாமல் போனால் கிடைப்பது அரிது.மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம்.

    சந்திரன் ஹோரை:- இதை அமுத ஹோரை எனலாம். பொதுவாக எல்லா சுபகாரியங்களுக்கும் சந்திர ஹோரையை தேர்ந்தெடுத்தால் சிரமமின்றி எளிதாக துரிதமாக நடந்து முடியும்.இந்த ஹோரையின் வளர்பிறை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம். பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்களுக்கு மிகவும் ஏற்றது.

    சந்திரன் வேகமாக செயல்படும் கிரகம் என்பதால் வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ  செய்யும் பயணங்களில் விரைவும், வெற்றியும் உண்டாகும்.கதை, கவிதை,கட்டுரை எழுதுதல், சுப காரியம் பற்றிப் பேச, அம்பாள் வழிபாடு செய்ய,வைத்தியம் செய்ய சுபம் உண்டு. திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல்,தாயின் உதவியை நாடல், கண் சிகிச்சை ஆகியவற்றைச் செய்யலாம்.இந்த ஹோரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது.அமாவாசை, பிரதமை தேய்பிறை கால சந்திர ஹோரையை தவிர்ப்பது நலம்.

    செவ்வாய் ஹோரை:- இது துரோகம் தரும் ஹோரையாகும். காரியத் தடை மற்றும்  காரசாரமான சண்டை,  கலகமூட்டும் கிரக ஹோரையாகும். இந்த நேரத்தில் கடன் வாங்குவதையும் புதிய முயற்சிகளையும்,சுப காரியத்தையும் தவிர்க்க வேண்டும்.இந்த நேரத்தில் பிரயாணத்தை துவங்கினால்  தடை, தாமதம்,விபத்து, ரத்தகாயங்கள் உண்டாகும்.ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவி கள் போன்றவற்றை இந்த ஹோரையில் மேற் கொள்ளலாம். இந்த  நேரத்தில் பொருள்கள் காணாமல் போனால் உடனே முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும்.தாமதித்தால் கிடைக்காது.

    புதன் ஹோரை:-  இது இரட்டிப்பு லாபம் தரும் ஹோரையாகும்.கல்வி தொடர்பான எல்லா விஷயங்களையும் செய்யலாம். ஜாதகம் பார்க்க,கணக்குப் பார்க்க, வங்கியில் புது கணக்கு தொடங்க.மாமன் வகை உறவுகளின் உதவியை நாடல்.வக்கீல்களை பார்க்க, நல்ல விஷயங்களுக்கு தூது போக, புதிய வியாபாரம், தொழில், உத்தியோகம் முயற்சி, உயில் பற்றி முடிவெடுக்க, சொத்துப் பத்திரம் வாங்க, நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, முக்கியமான ஆவணங்கள் எழுத, கையெழுத்திட , புதிய தொழில் ஒப்பந் தம் பேச, கையெழுத்திட சிறப்பான பலன் உண்டு. நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும், மகாவிஷ்ணுவை  வழிபடவும் உகந்த நேரம். இந்த ஹோரையில் காணாமல் போகும் பொருள் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும்.

    குரு ஹோரை:-  இது தன ஹோரையாகும்.  100 சதவீதம் சுப ஹோரையாகும்.  எல்லா விதத்திலும் சுபத்தையும், லாபத்தையும் தருவது குரு ஹோரையாகும்.குரு ஹோரையில் எல்லா விதமான சுபகாரியங்களையும் செய்யலாம். கல்வி, வித்யாரம்பம், ஆலய வழிபாடு செய்தல், வியாபாரம் பேச, விதை விதைக்க, திருமணம் செய்ய,வளைகாப்பு நடத்த, செயற்கை கருத்தரிப்பிற்கு முயற்சி செய்ய,குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்த,  திருமணத்திற்கு மாங்கல்யம் வாங்க. தங்கம், ஆடை, ஆபரணம் வாங்க,  வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்ய.முருகன், தெட்சிணா மூர்த்தி ஆகியோரை வணங்க, பெண்கள்கணவரிடம் விரும்பியதை கேட்க, யாகங்கள், ஹோமங்கள் நடத்த சிறப்பு. முதல் முதலில் சந்திக்கும் ஒருவருக்கும்.புது மணத் தம்பதிகளுக்கும் விருந்து,உபசாரம் செய்யக்கூடாது.இந்த நேரத்தில் காணாமல் போனபொருள்களைப் பற்றி வெளியில் சொன் னாலே போதும் உடனே கிடைத்து விடும்.

    சுக்ரன்:- இது சுகம் தரும் ஹோரையாகும்.சகல சுபகாரியங்களுக்கும் உகந்தது இந்த ஹோரை. சங்கீதம், ஆடல், பாடல் கற்க, கவிதை,கட்டுரை கதை எழுத, காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட, பணம் வாங்க, கொடுத்த கடன் வசூல் செய்ய,பிரிந்த கணவன்,மனைவியிடம் பேச்சு வார்த்தை நடத்த,சேர,பெண் பார்க்க உன்னதமான ஹோரை.  பெண்கள் தொடர்பு கொண்ட சகல காரியங்களிலும் நன்மை ஏற்படும். விவசாயத்திற்கும், பயணங்களுக்கும்  நல்லது.ஆடை, ஆபரணங்கள் வாங்குதல், அணிதல், அலங்கார ஆடம்பர பொருட்கள் வாங்குதல், உல்லாச பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடுதல், படப்பிடிப்பு தொடங்க,  வங்கிகளில் புதிய கணக்கு துவங்க,வீடு, வாகனம் கிரயம் பண்ண, விருந்துக்குச் செல்ல, சாந்தி முகூர்த்தம் நடத்த உகந்தது.  மகாலட்சுமி, ஆண்டாள் வழிபாடு செய்தால் வெற்றி உறுதி.  இந்த நேரத்தில் பணம் கொடுக்கக் கூடாது.இந்த ஹோரையில் காணாமல் போன பொருள்  மேற்கு திசையில் சில நாட்களில் கிடைக்கும்.

    சனி ஹோரை:- இதை சோரம் தரும் ஹோரை எனலாம்.கடன் அடைக்க, பித்ருக்கள் சாந்தி வழிபாடு செய்ய, நடைபயணம் துவங்க, மரக்கன்று நட, பிரசித்தி பெற்ற புனித  தலங் களுக்கு செல்வது போன்றவற்றுக்கு  சனி ஹோரை சிறப்பானது. முழுமையாக அசுபத் தன்மை நிறைந்த சனி ஹோரையில் எந்த  சுப காரியத்திலும் ஈடுபடக் கூடாது.மீறி செய்தால் அக்காரியத்தில் தடை, தாமதம், தோல்விகள் ஏற்படும்.  கண்டங்கள், வாகன விபத்துக்கள் சனி ஹோரையில்தான் நிகழும் என்பதால் பிரயாணத்தை தொடங்கக் கூடாது. இந்த நேரத்தில் நோய்க்கு முதன் முதலாக மருந்து சாப்பிடக்கூடாது.மருத்துவரை சந்திக்க கூடாது.பிறந்த குழந்தையை போய்ப்பார்க்க கூடாது. துக்கம் விசாரிக்க கூடாது. சுருக்கமாக இந்த ஹோரையில் சமைத்த உணவு கூட பயன்படாது.
    நவ கிரகங்களில் ஒன்றுக்கொன்று கடும் பகை கிரகங்களும் உண்டு.அதனால் தோல்வி தரும் கிரக ஹோரைகளும் உண்டு. இந்த கிழமையில் இந்த ஹோரை வரும் போது எந்த காரியத்தையும் துவங்க கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட கிழமைகளில் தோல்வி தரும் ஹோரை விவரம் வருமாறு:-

    கிழமை-  ஹோரை    
    ஞாயிறு-  சுக்கிரன்      
    திங்கள்-  சுக்கிரன், புதன்     
    செவ்வாய்- புதன்      
    புதன்-   குரு, சந்திரன்    
    வியாழன்-  சுக்ரன், புதன்     
    வெள்ளி-  குரு,சந்திரன்    
    சனி-  சந்திரன்    

    பன்னிரண்டு ராசியினருக்கும் பலன் தரும் ஹோரைகள் விபரம்:-

    ராசி    ஹோரைகள்    
    மேஷம்-    சூரியன், குரு, சுக்ரன்.     
    ரிஷபம்-    சந்திரன், புதன், குரு, சுக்ரன்.       
    மிதுனம்-    சந்திரன், புதன், குரு, சுக்ரன்.      
    கடகம்-    சந்திரன், குரு,சுக்ரன்.       
    சிம்மம்-    சூரியன், சந்திரன், குரு.     
    கன்னி-    சந்திரன், புதன், குரு,சுக்ரன்.     
    துலாம்-    புதன், குரு,சுக்ரன்.     
    விருச்சிகம்-  சந்திரன், குரு, சுக்ரன்.     
    தனுசு-    சூரியன், குரு, சுக்ரன்.     
    மகரம்-     சந்திரன், புதன், சுக்ரன்.    
    கும்பம்-     சந்திரன், புதன், சுக்ரன்.     
    மீனம்-    சூரியன், குரு, சுக்ரன்.    

    ஒவ்வொரு நாளின் ஹோரையை மிக எளிதாக தினசரி காலண்டரின் பின்புறம் அல்லது பஞ்சாங்கத்தின்  உதவியுடன் எளிதில் அறிந்து கொள்ளலாம். அன்றைய கிழமைக்கு நேரே குறிப்பிட்டுள்ள நேரத்தில் என்ன ஹோரை என்று போடப்பட்டு இருக்கும்.இதற்கு ஜோதிடம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.  தவிர்க்க வேண்டிய நேரங்களை தவிர்ப்பதுடன் நல்ல ஹோரையில் நல்ல காரியங் களை செய்வதால்அவை நிலைத்து, நீடித்து நின்று பலன் தரும்.  காலத்தின் இந்த ரகசிய கணக்கை அனைவரும் தெரிந்து வைத் திருப்பதில் தவறில்லை.  காரியசித்தியை மிகைப்படுத்தும் ஹோரை சூட்சுமங்களை அறிந்து கொண்டு பயன்படுத்தினால் தேவையில்லாத மனக்குழப்பங்கள் குறையும். சுய ஜாதக ரீதியாக அனுகூலமற்ற காலங்களில் ஹோரையின் பயன்பாடு நூறு சதவிகித வெற்றியை பெற்றுத் தரும் என்பதில் சிறிதும் அய்யமில்லை.
    Next Story
    ×