search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஷ்பு
    X
    குஷ்பு

    குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும் - பெல்ட் அடியால் துடித்துப்போவேன்

    நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    வெளியில் இருந்து அப்பா வீடு திரும்பும்போது ‘ஸ்வீட்’ வாங்கி வருவார் என்று பிள்ளைகள் ஆவலுடன் காத்திருப்பார்கள் என்பார்கள்.

    என்னோடு படித்த தோழிகள், தோழர்களும் சொல்வார்கள். அப்பா ‘ஸ்வீட்’ வாங்கி தந்தார். விளையாட்டு பொருட்கள் வாங்கி தந்தார் என்பார்கள். அதை கேட்கும்போது ‘நம் அப்பா மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்? என்று அழுகை அழுகையாய் வரும்.

    அப்பா வீட்டுக்கு வருகிறார் என்றாலே ‘அய்யய்யோ வந்துட்டாரே... என்ன செய்வாரோ தெரிய லிலே, என்று பயந்து கொண்டிருப்பேன். அதற்கு காரணம் சம்பந்தமே இல்லாமல் அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கும்போதே இருவருக்கும் இடையே உருவாகும் வாக்குவாதம் சண்டை யாகிவிடும்.

    அம்மா ஒரு வார்த்தை எதிர்த்து பேசி விட்டால் போதும் கோபத்தின் உச்சிக்கு போய்விடுவார். அவ்வாறு அவருக்கு கோபம் வந்துவிட்டால் இடுப்பில் கட்டியிருக்கும் பெல்ட்டை கழட்டி அம்மாவை கண்மூடித்தன மாக அடிப்பார்.

    அம்மாவை ஏன் அடிக்கிறீர்கள்? என்று கேட்பேன். அவ்வளவு தான். நீயும் எதிர்த்து பேச ஆரம்பித்துவிட்டாயா என்று கோபத்தில் என்னையும் பெல்ட்டால் அடித்து வெளுத்து விடுவார். பெல்ட்டின் பக்கிள் பட்டு கை, கால்களில் வீங்கி ரத்தக்கட்டே ஏற்பட்டதுண்டு.

    இப்படி எத்தனையோ நாட்கள் அடி வாங்கி இருக்கிறேன். அவரை ஒரு வார்த்தை கூட பேசிவிடக்கூடாது. அவர் எதை சொன்னாலும் சரி. அது சரியாக இருந்தாலும் சரி. தவறாக இருந்தாலும் சரி. அப்படியே ஏற்றுக்கொண்டு தலையை ஆட்டிவிட வேண்டும். இல்லாவிட்டால் இப்படித்தான் வெறிபிடித்தவர் போல் அடித்து துவைத்து விடுவார்.

    வீட்டுக்குள் இவ்வளவு பிரச்சினை நடந்த போதும் அக்கம் பக்கத்து வீடுகளில் அம்மா அதைப்பற்றி வாய் திறக்கமாட்டார்.

    ஆனால் நான் தான் தெருவில் என்னோடு விளையாடும் தோழர்களிடம் ‘ஏன் தான் என் அப்பா இப்படி இருக்கிறாரோ தெரியவில்லை. இன்றும் அடித்தார்டா... என்றி சொல்லி அழுவேன்.

    அந்த வயதில் தெரிந்த ஆறுதல் வார்த்தை ‘அழாதே...’ மட்டும் தான். அதை சொல்லி என்னை ஆறுதல் படுத்துவார்கள். சிறிது நேரத்தில் ஜாலியாக விளையாட தொடங்கி விடுவோம்.

    பண்டிகை காலம் வந்தால் எங்கள் காலனியே அமர்க்களப்படும். ‘ஈத்’ திருநாளில் பிரியாணி செய்து தெரிந்தவர் வீடுகளுக்கு அம்மா கொடுப்பார்.

    அவர் சொல்லும் வீடுகளுக்கு சென்று பிரியாணியை கொடுத்து வருவது என் வேலை. அதற்கு ஆர்வமுடன் செல்வேன். அதற்கும் ஒரு காரணம் உண்டு.

    பிரியாணி கொண்டு செல்லும் வீடுகளில் அதை வாங்கிக் கொண்டு சும்மா அனுப்ப மாட்டார்கள். சாக்லேட், மிட்டாய் எதாவது தருவார்கள். அதற்கு ஆசைப்பட்டு எத்தனை வீடுகள் என்றாலும் சலிக்காமல் செல்வேன்.

    ஈத் கொண்டாடுவது எங்கள் குடும்பம் மட்டும் தான். ஆனால் தீபாவளி வந்துவிட்டால் போதும். காலனியே அமர்க்களப்படும்.

    தெருவில் பட்டாசுகள் வெடிப்பது அவ்வளவு ஜாலியாக இருக்கும். பட்டாசு வெடிப்பதில் கொஞ்சம் பயம் இருந்தாலும் கொளுத்துவதில் அப்படி ஒரு சந்தோசம். நானும் பையன்களுடன் போட்டி போட்டு பயங்கர சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசு களையே வெடிப்பேன்.

    வீடுகளில் இருந்து பெரியவர்கள் ‘ஏய், நகத் பார்த்துடி...’ என்று சத்தம் போடுவார்கள். ஆனால் அந்த வயதில் ஆபத்தை நினைத்து பயப்பட தோன்றாது. போட்டி போட்டு பட்டாசு கொளுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அப்போது இருக்கும்.

    இரவில் பட்டாசை வெடித்துவிட்டு பொழுது விடிந்ததும் இனிப்பு, கார வகைகளுக்காக காத்திருப்போம். பல வீடுகளில் இருந்து இனிப்பு பலகாரங்களை கொடுத்து அனுப்புவார்கள். தித்திக்க... தித்திக்க..., திகட்ட... திகட்ட தீபாவளி பலகாரங்களை தின்று மகிழ்வோம். அவை சோதனை நிறைந்த காலமாக இருந்தாலும் மகிழ்ச்சி நிறைந்த வசந்த காலம்.

    அந்த குழந்தை பருவ மும், வளர் இளம் பருவமும் மீண்டும் வரப்போவதில்லை என்று நினைத்தாலும் இனிமை தரும் வசந்தகாலம். என் மூத்த அண்ணன் வேறு பள்ளியில் படித்தான். மற்ற இரு அண்ணன்கள் இருவரும் என்னுடன் ஒரே பள்ளியில் படித்தார்கள்.

    எனது மூத்த அண்ணனுக்கும் எனக்கும் இடையே வயது வித்தியாசம் 7 ஆண்டுகள். எனவே அவருடனான நெருக்கம் என்பது ஒருவித மரியாதை கலந்து இருக்கும். இரண்டு அண்ணன்களையும் விளையாடும் போது கோபத்தில் அடித்துவிடுவேன்.ஆனால் பெரிய அண்ணனிடம் நட்பு ஆழமாக இருந்தாலும் மரியாதையுடன் நடந்து கொள்வேன்.

    அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இடையே யான குழந்தைகளிடம் அன்பு, பாசத்தை காட்டுவதில் இருந்த வேறுபாடு நேர் எதிர் மறையானது.

    அப்பாவை பார்த்து எந்த அளவுக்கு ஓடி ஒளிந்து பயந்து நடுங்கினோமோ அந்த அளவுக்கு அம்மாவை பார்த்ததும் நெருங்கினோம்.

    சில நேரங்களில் வீட்டில் அமர்ந்திருப்பேன். தெருவில் பசங்க விளையாடி கொண்டிருப் பார்கள். நான் எனக்கு துணையாக விளையாட தோழிகளை காணவில்லையே என்றுதான் தேடிக்கொண்டிருப்பேன்.

    ஆனால் அம்மா என்னை பார்த்ததும், தனியா இப்படி உட்காராதே சோம்பேறி ஆகிவிடுவாய். உன்னைப்போல் உள்ள பிள்ளைகள் தெருவில் விளையாடுகிறார்கள் பார். நீயும் போய் விளையாடு என்பார்.

    அத்தனைபேரும் பசங்கம்மா என்றால் ‘அதனால் என்ன? அவர்களும் உன்னுடன் படிப்பவர்கள் தானே...! அப்புறம் என்ன தயக்கம்? போ... போய் விளையாடு என்பார்.

    இப்படி சிறு வயதில் இருந்தே எல்லோரிடமும் பழகவும் தைரியத்தை வளர்த்து கொள்ளவும் அம்மா ஏற்படுத்தித்தந்த நம்பிக்கை தான் இன்று வரை என்னை வழிநடத்தி செல்கிறது.
    Next Story
    ×