search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன அமைதி தரும் மருதமலை
    X
    மன அமைதி தரும் மருதமலை

    கந்தன் புகழ் பாடும் கந்தர் அலங்காரம் - மன அமைதி தரும் மருதமலை

    வாழ்வின் துன்பங்களுக்கும், அதனால் மன அமைதி இழக்கவும் ஐம்புலன்களால் செயல்படும் உயிரின் நிலைதான் காரணம்.
    மனித வாழ்வின் சுழற்சிக்குக் காரணம் எது?
    ஐம்புலன்களால் பின்னப்பட்ட மாயை மனதே காரணம்.
    இம்மண்ணுலக வாழ்வை நிலையென்று எண்ணி, அதுவே உண்மையான இன்பம் என்று கூத்தாடுகின்றன நம் ஐம்புலன்கள். அதனோடு இணைந்து உயிர் பற்பலவாறு சுழன்று கொண்டிருக்கிறது. அப்பாசம் என்னும் நஞ்சை இறைவா உன் கருணையால் ஈடேற்று என்கிறது கந்தர் அலங்காரம்.

    இளங் குழந்தையாய் இருந்தபோது எட்டு குலமலைகள் பாதியாய்ப் பிளக்கவும், மேருமலை நடுங் கவும், தேவர்கள் துன்பம் நீங்க சப்பாணி கொட்டிய பன்னிரு கரமுடைய சண்முகனே நீ அடியேனுடைய பாசத்தை அகற்ற வேண்டும் என்று விண்ணப்பம் வைக்கிறார் அருணகிரியார்.

    வாழ்வின் துன்பங்களுக்கும், அதனால் மன அமைதி இழக்கவும் ஐம்புலன்களால் செயல்படும் உயிரின் நிலைதான் காரணம். பந்த பாசங்களால் சிக்குண்ட மனித மனம், தன்வீடு, சொந்தம், என்று பாசத்தில் சிக்கி அல்லல்படுகிறது. தானே பேராசையால் சிக்கிக் கொண்டு சுழலில் இருந்து மீள வழி தெரியாமல் மன அமைதி இழந்து தத்தளிக்கிறது அவர்களைக் காப் பாற்றிக் கரை சேர்க்கும் தோணியாய் திகழ்கிறது மருதமலை.

    கந்தர் அலங்காரத்தில் பாடியதுபோல் தேவர் களின் துன்பம் தீர்த்தவன் குமரன். நம் குறைகளையும் தீர்க்க எழுந்தோடி வருவான்.  எல்லையற்ற கருணையோடு மனி தனைப் படைத்த இறைவன் அவனுக்கு துன்பமும், துயரமும் தருவதில்லை. இந்த வாழ்வில் நம் சித்திரவதைகள் எல்லாம் நாமே ஏற்படுத்திக் கொண்டவைதான்.

    நம் அறியாமை, பேராசை, சிற்றின்பத்தின் மீது பற்று, ஆணவம் என்று பல குணங்கள் காரணமாகிறது.

    குயவன் பானை செய்வதுபோல் இறைவன் இவ்வுலகைப் படைக்கிறான். நாம் மாயையினால் அதைப் போட்டு உடைத்து விடுகிறோம். அவன் கொடுத்த பொக்கிஷத்தை பத்திரமாகப் பாதுகாப்பது நம் கடமை. பக்தியினால் மட்டுமே நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்?

    பக்தி செலுத்தும் அன்பரின் துயர் தீர்க்க ஓடோடி வருவான் கந்தன். முருகனின் ஏழாவது படைவீடாக கருதப்படும் இத்தலம் அருணகிரியாரால் பாடப்பட்டது. இறைவன் தண்டாயுதபாணி, சுப்பிரமணியம், மருதாசல மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

    முற்காலத்தில் வேட்டுவகுல மன்னர்களால் பராமரிக்கப்பட்ட இக்கோவில் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கல்வெட்டுகள் குறிக்கிறது. கோவில் அருகில் புகழ்பெற்ற பாம்பாட்டிச் சித்தரின் குகைக் கோவில் உள் ளது. இங்கு சில காலம் தங்கி, பல பயனுள்ள மூலிகைகள், மருத்துவக் குறிப்புகள் எழுதி வைத்தார்.

    மலையின் அடிவாரத்தில் இருந்து மேலே செல்லும் போது தொடக்கத்தில் தான் தோன்றி விநாயகர் சன்னதி யும், அதனைத் தாண்டி இடும்பன் சன்னதியும் அமைந்துள்ளது. பாதையின் முடிவில் கோவிலுக்குள் செல்லும் இறுதிப் படிக்கட்டுகள் ஆதிமூலஸ்தானத்திற்கு நேர் எதிராக உள்ளது. இங்கு சுப்ர மணியர் சுயம்புவாக உள்ளார்.

    இது முருகனின் தனிப்பட்ட கோவிலாக இருந்தாலும், வெளி மண்டபத்தில் பட்டீஸ்வரர், ம்ரகதாம்பிகையுடன் சோமஸ்கந்தனாக காட்சி அளிக்கிறார். வெளிமண்டபத்தில் நவக்கிரகச் சன்னதி அமைந்துள்ளது. ராஜகோபுர நுழைவாயிலைத் தாண்டினால் கல்லாலான கொடிமரத்தின் முன்பு வலம்புரி விநாயகர், அவர்முன் வைக்கப்பட்டுள்ள பெரிய மயில்முக குத்து விளக்கு குறிப்பிடப் பட வேண்டியது. விளக்கின் ஆமை வடிவ பீடமும், அதன் தண்டி லுள்ள பாம்பு உருவங்களும் சிறப்பானதாகும்.

    பாம்பாட்டிச் சித்தரால் வடிவமைக்கப் பட்ட சிலையே கருவறையில் இருக்கிறது. பழனி முருகனைப் போலவே கையில் தண்டத்துடன், இடது கையை இடுப்பில் வைத்தபடி காட்சி தருகிறார். தலையில் குடுமி இருக்கிறது. தினமும் ராஜ அலங்காரம், விபூதிக் காப்பு, சந்தனக் காப்பு என்று அலங் காரங்களுடன் காட்சி தருகிறார்.

    அர்த்தஜாமப் பூஜையின் போது மட்டுமே தண்டாயுதபாணிக் கோலம். முருகனுக்கு பூஜை முடிந்ததும் பாம்பாட்டிச் சித்தருக்கு பூஜை செய்யப் படுகிறது. தினமும் இவரது சன்னதியில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி வைத்து விடுவார்கள். காலையில் அது குறைந்திருக்கும். இப்பாலில் சித்தர் தினமும் முருகனுக்கு அபிஷேகம் செய்வதாக ஐதீகம்.

    சித்தருக்கு பாம்பு வடிவில் முருகன் காட்சி அளித்ததால் பாறையின் மேல் நாக வடிவம் காணப்படுகிறது. இதன் பின்புறம் உள்ள பீடத்தில் விநாயகர் பெற்றோருடன் காட்சி அளிக்கிறார். மேலும் இங்கு அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கோரக்கட்டை என ஐந்து மரங்கள் இணைந்து வளர்ந்திருக்கும் மரத்தின் அடியில் விநாயகர் அமர்ந்திருக்கிறார்.

    மருத மரங்கள் நிறைந்து, நோய் தீர்க்கும் மூலிகைகள் நிரம்பிய மலையில் அமர்ந்து அருள் செய்பவர் என்பதால் முருகன் மருதாசல மூர்த்தி என அழைக்கப் படுகிறார். மருத மரமே தல விருட்சம். மலையில் உள்ள மருத மரத்தின் அடியிலிருந்து உற்பத்தியாகி வருகிறது மருது சுனை. இத்தீர்த்தமே முருகனின் அபிஷேகத்திற்குப் பயன்படுகிறது.

    இங்கு மற்றொரு சிறப்பு தான்தோன்றி விநாயகருக்கு யானைத் தலை மட்டுமே. உடல் இல்லை. சுயம்பு விநாயகரான இவருக்கே முதல் பூஜை.  முற்காலத்தில் இங்கு திருடர்கள் வந்து கொள்ளையடித்துச் சென்றபோது,  முருகன் குதிரையில் வந்து அவர்களை மறித்து பொருள்களை மீட்டுக் கொடுத்தார். கொள்ளையர்களை பாறைகளாக மாற்றினார்.

    பாறையில் குதிரை கால் குளம்பு பட்டு ஒரு பள்ளம் உண்டாகியது. அதற்கு “குதிரைக் குளம்பு கல்” என்று பெயர். இங்கு முருகன் சுயம்புவாக இருக்கிறார். இவரது சன்னதி ஆதி மூலஸ்தானம் எனப்படுகிறது

    முருகா என்றாலே ஓடோடி வருவான் முருகன். தன்னை தவ மிருந்து வழிபடு வோருக்கு அனைத் தும்  அருள்பவன் கந் தன். தைப்பூச நாளில் பால்குடம்  தூக்கி வந்து அபிஷேகம் செய் கிறார்கள். வன்னி மரத்தில் குழந்தை வரம் வேண்டி கயிறு, தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்கிறார்கள். பாம்பாட்டிச் சித்தர் சன்னதியில் தரப்படும் விபூதி பல நோய்களைத் தீர்க்கக் கூடியது.
    ஒளியில் பிறந்தவன், ஒளியை விட வேகமாகச் செல்லும் மின்னல் போன்றவன் முருகன். எனவேதான் முருகா என்றதும் அபயம் என வருபவன் கந்தன். ஈசனின் நெற்றிக் கண்ணில் பிறந்து அந்த ஒளியின் பிரகாசத்தில் உலகின் இருளை நீக்குபவன்.

    சரவணப் பொய்கையில் ஆறு சுடர்களாக மாறி கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்ட கார்த்திகேயனின் பாதம் என் தலைமீது பட வேண்டும் என்கிறார் கந்தர் அந்தாதியில் அருணகிரியார்.
    செப்பும் கவசங் கரபா லகதெய்வ வாவியம்பு
    செப்புங் கவசங் கரிமரு காவெனச் சின்ன முன்னே
    செப்புங் கவசம் பெறுவார் கணுந்தெய்வம் யானை தனச்
    செப்புங் கவசம் புனைபுயன் பாதமென் சென்னியதே.
    என்று பாடுகிறார்.

    நா மணக்க உருகி, உருகி முருகனைப் பாடியவர் அருணகிரியார். இவர் கொங்கு நாட்டுக்கு மூன்று முறை தல யாத்திரை செய்து முப்பத்தஞ்சு தலங்களுக்குச் சென்று நூற்று அறுபது பாடல்கள் பாடியுள்ளார்.
    “திரிபுரம் அதனை ஒரு நொடியதனில் எரிசெய்தருளிய சிவன் வாழ்வே!
    சினமுடை அசுரர் மனமது வேறுவ மயிலத்து முடுக்கி விடுவோனே”
    என்கிறார். தன் அடியார் வினை தீர்க்க மயிலை முடுக்கி விடுகிறான் முருகன். பெரிய மலையை ஊடுருவக் கூடிய வேலினைச் செலுத்துபவன். அவனின் மயில் எட்டுத் திசை களை சுற்றி, பக்தர்களின் இடர்களை தீர்க்கும் என்று மயில் விருத்தத்தில்
    “தடக் கொற்ற வேல்மயிலே,! இடர்தீரத்
    தனிவிடில் நீ வடக்கிற் கிரிக்கு அப்புறத்தும்
    நின்றோகையின் வட்டம் இட்டுக் கடற்கு     அப்புறத்தும்
    கதிர்க்கு அப்புறத்தும் கநக சக்கரத்திற்கு     அப்புறத்தும்
    திசைக்கு அப்புறத்தும் திரிகுவையே!”

    என்கிறார். மயில்கள் உலாவும் அழகான மருதமலையில்  அடர்ந்த மரங்கள் நிறைந்த மலையின் பின்னணி மயில் தோகை விரித்தாடுவது போல் இருக்கிறது.  பசுமையான மரங் கள் சூழ அழகனை இன்னும் அழகு செய்கிறது மருதமலை. பாம்பின்மீது படுத்து உறங்கும் திருமாலின், மருகனே, மருத மலைக்கு அணியாக இருப் பவன் என்கிறார் தன் திருப் புகழில்.
    அடியார், அமரர்கள் துயரும் நீங்கும்படியாக அருள்பவன் முருகன். தன்னை நம்பியவர்களை கை விடாத கருணை வள் ளல் கந்தன். சாண்டோ சின் னப்பா தேவர், பித்துக்குளி முருகதாஸ் போன்றவர்கள் மருதமலை முருகனையே நம்பி வாழ்வின் மேலான நிலையை அடைந்தவர்கள்.

    ஒவ்வொரு தை முதல்தேதியும், மருதமலை படி விழா சிறப்பாக நடந்தபோது பித்துக்குளி முருகதாஸ் தவறாமல் கலந்து கொண்டு திருப்புகழை மனம் உருகப் பாடிக் கொண்டு மலையேறி முருகனை சேவிப்பார். தற்போது படிவிழா நடப்பதில்லை. மீண்டும் அதை நடத்த வேண்டும் என்பது பக்தர்களின் ஆசை. முருகனுக்கு விசேஷமாக தங்கத் தேர் இழுக்கப் படுகிறது. தகதகக்கும் தங்கத் தேரில் ஜோதி வடிவினன் வலம் வருவது காண வேண்டிய கண்கொள்ளாக் காட்சி.

    தேவர் அவர்கள் மருதமலை முருகனின் தீவிர பக்தர். ஒவ்வொரு படத்திலும் கிடைக்கும் லாபத்தை நான்காகப் பிரித்து ஒரு பங்கை முருகன் கோவில் திருப்பணிக்குக் கொடுப்பார்.  முருகன்தான் தன் வெற்றிகளுக்குக் காரணம் என்று நம்பிய அவர் மருதமலை கோவிலுக்கு நிறைய திருப்பணிகளை செய்திருக்கிறார்.

    அருட்பெரும்ஜோதி வடிவாகத் திகழும் முருகன் அடியார்களின் உள்ளத்தில் ஆன்ம ஒளியாக இருக்கிறான். மருதமலை ஆண்ட வனை மனமுருகிப் பாடினால் மகிழ்வான வாழ்வளிப்பான்.

    Next Story
    ×