search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கந்தன்
    X
    கந்தன்

    கந்தன் புகழ் பாடும் கந்தர் அலங்காரம் - வளமான வாழ்வருளும் வயலூர்

    முகம் ஆறுடைய குருபரனைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டாலன்றி மனித சமூகம் மேன்மை அடைய வழி இல்லை என்கிறார் அருணகிரியார்.
    ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல்
    அளியில் விளைந்ததொரா நந்தத் தேனை யாநாதியிலே
    வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
    தெளிய விளம்பிய வாமுக மாறுடைத் தேசிகனே!  -கந்தரலங்காரம்.


    அழகு என்பது எது?

    மனதிற்கு ஆனந்தம் தருவது. இனிமையும் மகிழ்ச்சியும் தருவது. நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவது எதுவோ அதுவே அழகு எனப்படுகிறது.

    அழகென்ற சொல்லுக்கு முருகா என்கிறார் கவிஞர்.
    பார்க்கப், பார்க்கத் தெவிட்டாத பேரானந்த ஒளி வெள்ளம் கந்தன்.
    “கந்தனைக் காணும் தோறும் கவினுறும் என் உள்ளம்”
    காக்கும் கடவுளைக் கை தொழுதேத்து வோம்.”
    என்று பாடி உருகி கந்தனைப் போற்று கிறார்கள். இதையே அருணகிரி நாதர், முருகன் தானே ஒளிரும் தனிச்சுடர், அக இருளை நீக்குவது. மெய்ஞானத்தால் நுணுகி அறிய வேண்டியது. உள்ளத்தில் ஒளிந்திருக்கும் ஒளிச் சுடர். ஞான ஒளி என்கிறார் தன் கந்தர் அலங்காரத்தில். மலைகளில் விளையும் கொம்புத் தேன் பருகினால்தான் இன்பம் தரும். ஆனால் சிவானந்தத் தேனாகிய கந்தனை நினைக்கும்தோறும், அவனைப் பற்றிப் பேசுந்தோறும் இன்பம் அளித்து தெவிட்டாத முக்தி அளிப்பது.

    கந்தர் அலங்காரம் முருகனை ஆதியில்லாதது என்கிறது. மாயையில் மூழ்கியிருக்கிற நம் மனதை அதிலிருந்து மீட்டு, தனக்குள் தானே மூழ்கி உருகும் பேரின்ப நிலையை முருகன் அருளுகிறான்.

    தன்னந்தனி நின்று தானறிய
    இன்னம் ஒருவர்க்கி சைப்பதுவே “- என்கிறது கந்தர் அநுபூதி.

    முகம் ஆறுடைய குருபரனைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டாலன்றி மனித சமூகம் மேன்மை அடைய வழி இல்லை என்கிறார் அருணகிரியார். முருகன் தனக்கு உபதேசித்த ஒப்பற்ற ஒரு நிலையை அற்புதமென்று பரவசத்துடன் கூறுகிறார்.

    வாழ்வின் லட்சியத்தை அடைய நமக்கு உறுதுணையாக நிற்பது முருகன் நாமம். நம்மைக் காத்து ஞானஒளி அளிக்கவே கந்தன் காட்சி அளிக்கிறான் பல்வேறு இடங்களில். அதில் சிறப்பு வாய்ந்த இடம் வயலூர்.

    திருவண்ணாமலையில் அருணகிரியாரைத் தடுத்தாட் கொண்ட முருகன், அவரை “முத் தைத் தரு” எனப் பாட வைக்கிறான். அதன் பிறகு பாடல்கள் எழுதாமல் பல இடங்களில் சுற்றித் திரிந்த அருணகிரியார் அசரீரியாக வயலூருக்கு வா என்ற குரல் கேட்டு  அங்கு செல்கிறார்.  அங்கு சென்று பல நாட்கள் ஆகியும் பெருமானின் தரிசனம் கிடைக்க வில்லை.
    வேதனையுடன் “அசரீரி பொய்யோ?” என்று கத்தினார். உடனே முருகன் அவர் எதிரில் தரிசனம் தந்து தன் வேலால் அவர் நாக்கில் ஓம் என்று எழுதினான். அதன்பிறகே, அவர் பல தலங்களுக்குச் சென்று நா மணக்கும் நல்ல திருப்புகழ் பாடல்களைப் பாடினார்.

    எனவே எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள் இங்கு வந்து முருகனை வணங்கி பிரார்த்தனை செய்தால் நல்ல கற்பனை வளம், எழுத்தாற்றல் தருவான் இறைவன் என்கிறார்கள். பல முனிவர்கள், அடியார்களுக்கு அருள் புரிந்த இத்தலத்து முருகப் பெருமானை வேண்டினால், வறுமை ஒழியும், திருமணத் தடை நீங்கும்.

    தோஷம் உள்ள குழந்தைகளை இங்கு தத்து கொடுக்கும் நடைமுறை இருக்கிறது. உரிய காலம் வரை முருகனுக்கு தத்து கொடுத்து தோஷம் நீங்கியதும் தத்து திருப்புதல் நிகழ்கிறது. இப்படி தத்து கொடுக்கப் பட்ட பிள்ளைகள் வாழ்வில் பல நல்ல நிலைக்கு உயர்ந்து வாழ்வாங்கு வாழ்கிறார்கள்.

    “வயலூரானை வணங்க வாழ்வளிப்பான்” என்பது வழக்கு மொழி.
    இம்மையிலேயே அனைத்து சவுபாக்கியங்களையும் அருள் வான் கந்தன். அனைத்தும் தந்தருளும் ஞானவேலன். சிவபாலன் தன் வேலினால் சக்தி தீர்த்தம் உண்டாக்கி, அந்த நீரை எடுத்து அம்மையப்பனுக்கு அபிஷேகம் செய்த தலம் வயலூர்.  எனவே இத்  தீர்த்தம் மிகவும் சக்தி வாய்ந்தது என்கிறது வயலூர்  தல புராணம்.

    திருச்சியில் இருந்து பதினைந்து கி.மீ தொலைவில் பசுமையான வயல்கள் சூழ அமைந்த சிறிய கிராமம் வயலூர்.  ஒன்பதாம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கோவில் என்று கல்வெட்டுகளும், ஆய்வுகளும் தெரிவிக்கிறது.

    இறைவன் ஆதிநாதர், அம்பாள் ஆதிநாயகி என்றாலும் இங்கு முருகனே சிறப்பு. ஆதி வயலூர், குமார வயலூர் என்று அழைக்கப் படும் இத்தலம் முருகனின் சிறப்பு வாய்ந்த தலங்களில் முதன்மையானது. இது சிவத்தலம் என்றாலும் முருகனே விசேஷ மூர்த்தியாக கொண்டாடப் படுகிறார்.

    சிவன் சன்னதிக்குப் பின்புறம் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தரும் முருகனை வணங்கினால், வேண்டுவன எல்லாம் தருவான்.
    இங்கு அருணகிரியாருக்கு காட்சி தந்த பொய்யாமொழி கணபதி சன்னதி மிக விசேஷமானது. இவரைப் போற்றி அருணகிரியார் காப்புச் செய்யுள் ஒன்றும் பாடியுள்ளார். இவருக்கு அருகில்  அருணகிரியாருக்கும்  தனி பீடம் உள்ளது.
    நாக சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் அன்று சக்தித் தீர்த்தத்தில் நீராடி முருகனை வேண்டினால் உடனே திருமணம் நடக்கும். நோய் நீங்க, கல்வி அறிவு பெருக, செல்வம் கொழிக்க  என அனைத்தும் அருள்வான் முருகன்.

    அன்னையும், பிதாவுமே நமக்கு முதல் தெய்வம் என்பதை இங்கு பெருமான் விளக்குகிறார். அவர்களை முன்னிறுத்தி தான் பின்னிருந்து அருள் பாலிக்கிறார். வயலூர் முருகனின் புகழை  உலகறியச் செய்தவர் திருமுருக கிருபானந்த சுவாமிகள். வாரியார் சுவாமிகள் இக்கோவில் கோபுரத்தைக் கட்டி கும்பாபிஷேகம் செய்தார். பல திருப்பணிகளை செய்துள்ளார். தன் வாழ்நாள் முழுக்க வய்யலூரானை வணங்கியே சொற்பொழிவுகளை ஆரம்பிப்பார்.

    மூலஸ்தானத்தில் முருகனின் மயில் வடக்கு பார்த்து நிற்கிறது. தேவமயில் என்று பெயர். மற்ற தலங்களில் தாய் தந்தையரை முருகன் தனித்து நின்று பூசை செய்வான் ஆனால் இங்கு வள்ளி, தெய்வானையும் இணைந்து பூஜை செய்வது சிறப்பு.

    ஒவ்வொரு கோவில் ஒவ்வொரு பிரச்சினைக்குத் தீர்வு தரும் தலமாக அமையும். ஆனால் வயலூர் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு தரும் தலமாக இருக்கிறது. “முருகா என்றிட முவ்வினைகளும்” தீரும் என்கிறார்கள்.

    கந்த சஷ்டியின்போது முருகன் தெய்வானை திருமணமும், பங்குனி உத்திரத்தின்போது வள்ளி, முருகன் திருமணமும் நடை பெறுகிறது.

    முருகனுக்கு என்றே அர்ப்பணிக்கப்பட்ட கோவில் வயலூர். வைகாசி விசாகம், கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் இங்கு வெகு சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.

    நடப்பது எதுவும் நம் செயல் இல்லை கந்தன் கை பிடித்து அழைத்துச் செல்கிறான். அவன் அருளால் அவன் காட்டும் வழியில் சென்றால் அற்புதமான வாழ்வை அளித்து மோட்சம் என்னும் பேரானந்த நிலையையும் அவன் அளிப்பான்.

    என் செயலால் நான் பிறக்கவும், இறக்கவும், இல்லை. என் எண்ணத்தால்  உன்னைத் துதிக்கவும், என் கண் கொண்டு உன்னைப் பார்க்கவும், என் செயலால் நான் நடக்கவும் இல்லை. வினையின் வசமாக வரும் நோய்களை நான் பொசுக்கவும், இன்ப துன்பங்களை நான் தாங்கிக் கொள்ளவும், என்னை வழி நடத்தியவன் நீயே.

    செவிக்கு அமுதம் போன்ற உபதேச மொழி களைக் கூறிய இறையோனே, கண்ணாடி போல் தெளிவான தடாகத்தை வேலால் உண்டாக்கியவனே, பொன்போன்ற மேனியுடைய ஈசனின் மைந்தனே, குறத்தியின் மணவாளனே, மும்மூர்த்திகளுக்கு ஒப்பான வயலூர் குமரனே” என்று புகழ்கிறார் அருணகிரியார்.

    “என்னால் பிறக்கவும், என்னால் இறக்கவும்,
    என்னால் துதிக்கவும் கண்களாலே
    என்னால் அழைக்கவும், என்னால்  நடக்கவும்
    என்னால் இருக்கவும் பெண்டீர் வீடு
    ..........................................................
    தங்கரூபன் மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
    மன்னா மூவர்க்கொரு தம்பிரானே”
    என்ற திருப்புகழை வயலூர் முருகனை நினைத்து மனம் உருகிப் பாடினால் தீராத வினைகளை எல்லாம் தீர்த்து வைப்பான் முருகன்.
    “இதையே ஒளியில் விளைந்த உயர்ஞான” என்ற தன் கந்தர் அலங்காரத்தில் புகழ்ந்து கூறுகிறார் அருணகிரியார்.

    முருகனை மட்டுமே வணங்குவது கவுமார வழிபாடு எனப்படும். அதற்கான வழிபாட்டுத் தலங்களில் முதன்மையாக விளங்குகிறது வயலூர்.. அக்னி வழிபட்ட தலம். இது முக்தித் தலம் எனவும் சிறப்புப் பெற்றது.

    மனைவியுடன் முருகன் ஈசனை பூசிப்பது இத்தலத்தின் சிறப்பு. எனவே இங்கு திருமணம் நடத்துவது விசேஷமானது என்று கூறுகிறார்கள். வன்னி மரம் இங்கு தல விருட்சமாக இருக்கிறது. பல சித்தர்கள் தேடி வந்து முருகனைத் தஞ்சம் அடைந்து முக்தி அடைந்த இடம். அருணகிரியார் இங்கு நீண்ட காலம் தங்கியிருந்து  வயலூரானைப் போற்றி பதினெட்டு பாடல்கள் பாடியுள்ளார்.
    “அழகு கோயில் மீதில் மருவிய பெருமானே” என்று அருணகிரியார் பாடியதைப் போல் சுற்றிலும் அழகிய வயல்கள், வாய்க்கால் சூழ்ந்து, பசுமையுடன் கந்தனைப்போல் கவினுறக் காட்சி அளிக்கிறது வயலூர்.

    கந்தபுராணத்தில் ஏழாவது காண்டமாகிய உபதேச காண்டத் தைப் பாடிய ஞானவரோதர் என்பவருக்கும் அருள் புரிந்திருக்கிறார் வயலூர் ஸ்ரீ சுப்ரமணியசுவாமி. இவர்தான் விராலிமலை தலபுராணமும் பாடியவர்.

    உள்ளே நுழைந்ததும் சிவ சொரூபமே முதலில் நாம் காண்பது. பின் பொய்யாக் கணபதி சன்னதி, அதன் பின் சுப்பிரமணியரின் சன்னதி. காணக் கண்கோடி வேண்டும் என்பது போல் அழகு மிளிரக் காட்சி அளிக்கிறான் கந்தன். பழனியில் செலுத்த வேண்டிய பிரார்த்தனைகளை இங்கு செலுத்தலாம்.

    கந்தனைக் கண்குளிரத் தரிசித்தபின் கவலைகள் அனைத்தும் பறந்து விடும்.
    Next Story
    ×