search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடல் பருமனைக் குறைக்கும் வாழைக் கிழங்கு
    X
    உடல் பருமனைக் குறைக்கும் வாழைக் கிழங்கு

    இயற்கைத் தரும் இனிய வாழ்வு - உடல் பருமனைக் குறைக்கும் வாழைக் கிழங்கு

    நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் நிரம்பிய வாழைக் கிழங்கு சமைத்து உண்ணத் தகுந்தது மட்டுமல்ல உடல் நலனுக்கு மிகவும் உகந்ததும் ஆகும்.
    வாழை இலையில் உண்பது நலனுக்கு ஏற்றது. இது நாம் அறிந்திராத புதிய செய்தியல்ல. காலங்காலமாக அனைத்து சிறப்பு நிகழ்ச்சிகளிலும் வாழையிலையில் விருந்தளிப்பது நமது பண்பாடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. அதிலும் நுனி வாழையிலையில் விருந்தளிப்பது சிறப்பான தகுதியாகக் கருதப்படுகிறது. வாழையில் நுனி என்பது இளமையின் அடையாளம்.

    அடியென்பது முதுமையின் குறியீடு. வாழை மரம் அடி முதல் நுனி வரை பலன் தரக்கூடியது என்பது நமக்குத் தெரிந்த செய்தி தான். ஆனால் மரத்தின் இறுதி இலக்காகிய காய்க்குலை முற்றிய பிறகு வாழை தன் ஆயுளை முடித்துக் கொள்கிறது. காய்க் குலைத் தள்ளியதோடு இன்னொரு கன்றையும் உருவாக்கி விட்டுத் தான் தனது ஆயுளை முடித்துக் கொள்கிறது. அத்தோடு பல கன்றுகளை உருவாக்க வல்ல அடிக் கிழங்கையும் வாழை தனது வேரில் உருவாக்கி வைத்து விடுகிறது.

    பொதுவாக வாழை மரம் நட்டு அறுவடை செய்த பிறகு மாற்றுப் பயிர் செய்கிற பொழுது இந்த அடிக் கிழங்கினை தோண்டி எடுத்து நிலத்திற்கு வெளியே எறிந்து விடுவார்கள். அவ்வாறு எறியப்பட்ட பகுதியில் நீர் வளம் இருக்குமாயின் கிழங்கு மீண்டும் துளிர்த்து ஒன்றிற்குப் பல கன்றுகளை ஈனத் தொடங்கி விடும். நீர் ஓட்டம் இல்லையெனில் அப்படியே அந்தக் கிழங்கு காய்ந்து சுருங்கி வதங்கி விடும். இந்தக் கிழங்கின் சிறப்புக் குணம் உணர்ந்த வேளாண் மக்கள் சிலர் தண்டினை மட்டும் அகற்றி விட்டு கிழங்குகளை நிலத்தினுள் அழுகச் செய்துவிடுவார்கள். அழுகிய கிழங்கு மாற்றுப் பயிர்களுக்கு நல்ல உரமாக இருக்கும்.

    ஆனால் உணவுப் பொருளாகப் பயன்படுத்தும் பழக்கம் பரவலாக இல்லை. உணவுப்பற்றாக்குறை நிலவும் பகுதிகளில் தாவரங்களின் அனைத்துப் பகுதிகளையும் எப்படிப் பயன்படுத்துவதென்று நுணுகிப் பார்த்து தமது உணவாக்கிக் கொள்வார்கள். வாழைக் கிழங்குப் பயன்பாடு மலேசிய, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து நாடுகளில் பரவலாக உண்டு. தமிழகத்திலும் உண்டு எனினும் அனைவரும் அதன் பயன்பாடு அறிந்தவர்களாக இல்லை.

    நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் நிரம்பிய வாழைக் கிழங்கு சமைத்து உண்ணத் தகுந்தது மட்டுமல்ல உடல் நலனுக்கு மிகவும் உகந்ததும் ஆகும். கெட்டித் தன்மை வாய்ந்த உருளை, சக்கரவள்ளி, மரவள்ளி போன்ற கிழங்குகள் மாவுத் தன்மை உடையவை ஆகும். அதனால் அக்கிழங்குகள் சத்து மிக்கவையாக இருந்தாலும் உடலில் அமிலத்தை அதிகப்படுத்துவதாக இருக்கின்றன. அதனால் தான் பலரும் மேற்படிக் கிழங்குகளை உண்டதும் வாயுத் தொல்லை, உடல் தசை இறுக்கம், நெஞ்செரிச்சல்  போன்ற உபாதைகளுக்கு உள்ளாகிறார்கள்.

    முள்ளங்கி, காரட், பீட்ரூட் போன்றவை நிலத்திற்கு அடியில் விளையும் கிழங்கு வகைகளைச் சேர்ந்தவையாக இருந்தாலும் நீர்த் தன்மையைக் கொண்டிருப்பதால் வாயுத் தொல்லையைத் தருவதில்லை என்பதோடு வாயுவையும், அமிலத்தையும் முறிக்கும் பண்பினைக் கொண்டுள்ளன. வாழைக் கிழங்கும் அதுபோலத் தான் நிறைய நார்ச்சத்தும், நீர்ச் சத்தும் கொண்டிருப்பதால் அமிலத்தை முறிக்கும் பண்பைக் கொண்டுள்ளது.

    நிலத்திற்கு அடியில் தனது சத்துக்களைச் சேமிக்கும் தன்மை உடைய தாவர விளைபொருட்கள் தசைக்கும், தசைநார்களுக்கும் ஊட்டம் அளிப்பவை. அந்த வகையில் வாழைக்கிழங்கும் நமது உடலின் தசைக்கும் தசை நார்களுக்கும் ஊக்கம் தரக் கூடியதாக  இருக்கிறது. வாழைக் கிழங்கு தரும் சத்துக்கள் சற்றே கூடுதல் ஊக்கம் கொண்டவை என்பதால் அனைத்து வயதினரும் ஏற்பது அவ்வளவு பொருத்தமாக இருக்காது.

    குறிப்பாக 10 வயதிற்கு உட்பட்டவர்களும், 60 வயதிற்கு மேற்பட்ட உடலுழைப்பு இல்லாதவர்களும் இதனைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல் சளி, ஆஸ்மா தொடர்பான நோயுள்ளவர்களும் வாழைக் கிழங்கில் சமைத்த உணவைத் தவிர்ப்பது நல்லது.

    வாழைக் கிழங்கின் நீர்த் தன்மை நமது உடலில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றுவதில் வாழைத் தண்டினைப் போலவே சிறப்பான பங்கு வகிக்கிறது. கூடுதலாக இனப் பெருக்கத்திற்கு உரிய கரு உருவாக்கம், கருப்பையைப் பலப்படுத்துதல் போன்றவற்றிற்கும் துணை புரிகிறது. முளைப்புத் திறன் மிகுந்த வாழைக் கிழங்கு எலும்பு மஞ்சை வரை உடனடியாக வினை புரிவதால் விந்தணு உருவாக்கத்திலும் குறிப்பிடத் தகுந்த பங்கு வகிக்கிறது. எனவே ஆண்  பெண் இருபாலரும் குழந்தைப் பேற்றுக் காலத்தில் உணவில் வாழைக் கிழங்கு சேர்த்துக் கொள்வது நல்லது.

    மேலே சொன்னது போல உடலில் உள்ள நீரை வெளியேற்றுவதில் வாழைக்கு உரிய பங்கினை வாழைக் கிழங்கும் சிறப்பாகவே நிறைவேற்றும் என்பதால்  மிகையுணவால்  ஏற்பட்ட பருமன் மருந்து மாத்திரைகளால் பருமன் என அனைத்து வகையான உடல் பருமனையும் குறைப்பதில் வாழைக் கிழங்கு சிறப்பான துணை செய்கிறது. வாழைக் கிழங்கினை சமைத்து உண்பதோடு இல்லாமல் நேரடியாகச் சாறாக வடித்தும் அருந்தலாம்.

    வாழைத் தண்டு சாறு தயாரிப்பது போல அல்லாமல் கிழங்கினை மேற்தோல் சீவி சுமார் 100 கிராம் அளவு எடுத்துக் கொண்டு அதனைப் பொடியாக அரிந்து அகன்ற பாத்திரத்தில் சுமார் 200 மில்லி நீரில் போட்டு சுமார் பத்துகிராம் அளவு உப்புப் போட்டு பத்து நிமிடம் வைத்திருக்க வேண்டும். நேரம் கழிந்த பிறகு பாத்திரத்துடன் இரண்டு சுற்று சுற்றி அந்தநீரை வெளியே வடித்து விட வேண்டும். இது கிழங்கு புதையுண்டிருந்த நிலத்தில் மிகையான உரம், உடலுக்கு ஒவ்வாத மண் சத்துக்களை நீக்க ஏதுவாக இருக்கும்.

    பின்னர் மீண்டும் அரிந்த துண்டுகளை நீரில் சுமார் பத்துத் துளிகள் எலுமிச்சைச் சாறும், ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் சேர்த்து 30 நிமிடம் ஊற விட வேண்டும். ஊறிய பின்னர் சுத்தமான கையால் கிழங்கினைப் பிசைய வேண்டும்.  துண்டுகள் மசிய வேண்டும் என்பதில்லை. ஊறிய நீர் மட்டும் சாறு பிழியப்பட்டால் போதும். சற்றே விழு விழுப்பாக உள்ள இந்தச் சாற்றில் சிறிதளவு உப்பு சேர்த்து நிதானமாகப் பருக வேண்டும்.

    வாழைக் கிழங்கு சாற்றில் மாவுத் தன்மை இருப்பதால் இந்தச் சாறு பருகிய வேளையில் வேறெதுவும் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருத்தல் நல்லது. வாயுத் தொல்லை, குடல் புண், வாய்ப் புண், பல்வலி போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்தச் சாறு நல்ல மருந்தாக இருக்கும். காலில் நீண்ட நாட்கள் ஆறாத புண் உடையவர்களும் இந்தச் சாற்றினை அருந்தலாம். விந்தணு எண்ணிக்கைக் குறைபாடு உடையவர்களுக்கும் இந்தச் சாறு நல்ல பலனைக் கொடுக்கும். சதைக் கட்டுமானத்திற்காகக் கடினமான உடற் பயிற்சி செய்பவர்களுக்கும் நல்ல ஊக்கம் கொடுக்கும். மெலிந்த உடல்வாகு உடையவர்கள் யோகப் பயிற்சி செய்யவும் துணை புரியும்.
    வாழைக் கிழங்கைச் சாறாக எடுப்பதோடு மேலே சொன்ன விதமாகப் பொடியாக அரிந்து போட்டு உப்புப் போட்டு அலசி நீரை வடித்த பின்பு அடுப்பில் ஏற்றி சுமார் 200 மில்லி நீர் விட்டு எலுமிச்சைச் சாறும், மிளகுத் தூளும், மஞ்சள் தூளும் சிறிதளவே விட்டு நன்றாகக் கொதி விட்டு இறக்கி சூப்பாகப் பருகலாம். எலும்புருக்கி எனும் காச நோய்க்கு அரிய மருந்தாக இருக்கும் இந்த சூப்பு. சாதாரணமாகவே மெலிந்த உடல்வாகினர், பலவீனமான உடல் உடையவர்கள், மார்பெலும்புக்கூடு உட்புறமாக வளைந்த தன்மை உடையவர்களுக்கு இது நல்ல பலனைக் கொடுக்கும் இந்த வாழைக் கிழங்கு சூப்பு.

    கடுமையான நோயில் இருந்து நீண்ட நாட்கள் மருந்து எடுத்து பலவீனப்பட்டவர்களுக்கும் உடனடியாக மீண்டெழ இந்த சூப்பு நல்லது. ஆஸ்த்துமா தொல்லை உடையவர்களுக்கு மாட்டுக்கறி சூப்பு பரிந்துரைக்கப்படும். சிலருக்கு ஊண் உணவு ஒவ்வாது. அதுபோன்றவர்கள் அதற்கு நிகரான பலன் தரக்கூடிய வாழைக் கிழங்கு சூப்பினை அருந்தலாம். சூப்பு என்றாலே அது காரசாரமாக இருக்க வேண்டும் என்ற கருத்துப் பரவலாக நிலவுகிறது. சூப்பு என்பது மூலப் பொருளின் சாரத்தைத் தான்  முதன்மையாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர பிற துணை பொருட்கள் அதில் ஆதிக்கம் செலுத்தும் வண்ணம் அதிக சுவை சேர்ப்பது கூடாது.
    வெறும் சூப்பினை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்கிறபோது அதன் வெப்பத்தைத் தணிக்கும் விதமாக சிறிதளவு நல்லெண்ணையோ அல்லது நெய்யோ சேர்த்துக் கொள்ளலாம். மிதமிஞ்சிய அளவில் இஞ்சியும், பூண்டும் சேர்த்தால் மூலப் பொருளாகிய இறைச்சி எலும்பு, காய்கறி, கீரை போன்றவற்றின் அடிப்படைப் பண்பு சிதைந்து விடும். அதிலும் குறிப்பாக சூப்புக்காக ஏற்றப்படும் வெப்பமும், சூப்புக்குரிய மூலப் பொருட்களின் நீரும் காரத் தன்மையானவேயே. எனவே மிளகு அல்லது இஞ்சி அல்லது பூண்டு இவற்றில் ஏதேனும் ஒன்றின் காரம் மேற்படி சாரத்தில் இறங்கினால் போதுமானது. பலவிதமான காரங்களும் அதில் இறங்க வேண்டியதில்லை. ஒருவேளை அதீத சளிப் பிடித்த நேரத்தில் அவ்வாறு பலவிதமான காரங்களையும் உள்ளடக்கி சூப்புத் தயாரித்தால் பாதகமில்லை. எப்பொழுது சூப்பு என்றாலும் தொண்டையைப் பிடிக்கும் காட்டத்துடன் தயாரிப்பது சூப்புக்குரிய நற்பலனைத் தராது. மாறாக உரிய பலன் கிடைக்காமல் போய்விடும். சூப்பு மட்டுமே அல்ல. எந்த உணவு தயாரித்தாலும் அதன் மூலப் பண்பும், மூலச் சுவையும் கெடாமல் தயாரிக்க வேண்டும்.

    வாழைக் கிழங்கு சாறு, சூப்பிற்கு அடுத்து வழக்கமான கூட்டுப் பொரியலாகத் தயாரித்தும் உண்ணலாம். கூட்டுப் பொரியலாகத் தயாரிக்கும் போதும் செரிமானத்திற்குக் கடினமான கடலைப் பருப்புப் போன்றவற்றைத் தவிர்த்து செரிமானத்திற்கு எளிய பாசிப்பருப்பு அல்லது தேங்காய்ப் பூ, வெங்காயம் ஆகியவற்றை மட்டுமே துணைப் பொருளாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    கூட்டுப் பொரியலாகச் செய்வதோடு தேங்காய்ப் பாலில் வேகவிட்டு சொதி போலவும் சமைத்து சோற்றுடன் பிசைந்து சாப்பிடலாம். அல்லது சப்பாத்திப் பூரிக்குத் துணைப் பதார்த்தமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

    வாழைத் தண்டு, வாழைக் கிழங்கில் உள்ள நீர்த் தன்மைக்கு நேர் மாறாகக் கெட்டித் தன்மை உடையது வாழைக் காய். வாழைக்காயை  நாம் அதிகமும் உணவில் சேர்த்துக் கொள்கிறோம். ஆனால் அதன் கெட்டித் தன்மையைக் கணக்கில் கொண்டு பிற காய்களுடன் சேர்த்துச் சமைப்பதே சிறந்தது. வளரிளம் பருவத்தினருக்கு வாழைக் காய் மிகச் சிறந்த உணவாகும். சதைப் பற்றிற்கும், சதை உறுதிக்கும் மிகவும் ஏற்றது வாழைக் காய். அதையும் இளைய பருவத்தினருக்கு ஏற்ற விதமாக எண்ணையில் இட்டுப் பொரித்துச் சமைப்பது பரவலாக இருக்கிறது. காரத்தூள் சேர்த்து அடிக்கடி எண்ணையில் பொரித்து உண்பது மலச் சிக்கலையும் வயிற்றுப் புண் போன்ற தொல்லைகள் உருவாக ஏதுவாகி விடும். தற்கால இளையவர்களுக்கு மலச் சிக்கல் என்பது சர்வ இயல்பான நோயாகி விட்டது. எனவே கெட்டித் தன்மை மிகுந்த வாழைக் காயை மேலும் இறுகலாக்கும் வண்ணம் பெரித்து உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

    வாழைக் காயை நீள நீளமாக அரியும் போது நிறம் கறுத்து விடும். எனவே அதனை எலுமிச்சைச் சாறு கலந்த நீரில் போட்டு பின்னர் சமைக்க வேண்டும். குறிப்பாக கேரட், பீன்ஸ் போன்ற நீர்க் காய்களுடன் தேங்காய்ப் பால் விட்டு அவியலாகவோ, சொதியாகவோ சமைத்து உண்ணலாம். அவ்வாறு உண்ணும் போது கெட்டியான மலச் சிக்கலை உருவாக்கும் அதே வாழைக் காய் சிறந்த மலம் இளக்கியாகச் செயலாற்றும். அல்லது வாழைக் காயை மேலுள்ள பச்சைத் தோலை மட்டும் உரித்து எடுத்து விட்டு உள்ளே உள்ள நார்ப் பகுதியை நீக்காமல் அப்படியே நீரில் போட்டு வேக வைக்க வேண்டும். முக்கால் வேக்காடு வெந்த பிறகு எடுத்து ஆறவிட்டு காரட் துறுவியில் சீவித் துறுவலாக்கி வெங்காயம், கடுகு உ.பருப்பில் தாளிதம் போட்டு தேங்காய்ப்பூ சேர்த்து பிட்டு போலச் சமைத்து உண்ணலாம்.

    அவ்வாறு பிட்டாகச் சமைப்பது செரிக்க எளிதாக இருக்கும். ஆகையால் எந்த வயதினரும் உண்ணலாம். குறிப்பாக மலச் சிக்கலுக்கு மிகவும் நல்லது. வாழைக் காயானது பிற கிழங்கு வகைகளுக்கு நிகராக வாயுத் தொல்லைத் தரக்கூடியது. எனவே அதனை செரிமானத்திற்கு ஏற்ற வகையில் சமைத்து உண்பதே செரிக்கவும், அதன் நற்பலனைப் பெறவும் பொருத்தமாக இருக்கும்.
    பழம் என்றாலே நம்மிடத்தில் பழத்தின் பொதுப் பெயராக இல்லாமல் வாழைப் பழத்தையே குறிப்பதாக உள்ளது. அந்தளவிற்கு வாழைப்பழம் நம்முடைய வாழ்வில் முக்கிய இடம் பிடித்து விட்ட ஒன்று.
    Next Story
    ×