search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாழைத்தண்டு
    X
    வாழைத்தண்டு

    இயற்கைத் தரும் இனிய வாழ்வு - உணவே மருந்தான வாழைத்தண்டு

    வாழைத் தண்டினை சாறாக அருந்துவதோடு சூப்பாகவும் அவ்வப்போது எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக குளிர்காலங்களில், சளித் தொல்லை உடையவர்கள் வாழைத்தண்டின் பயனைப் பெறுவதற்கு சூப்பாக எடுத்துக் கொள்வதே சிறந்தது.
    வாழைத்தண்டுச் சாற்றினைப் போல உடலில் உள்ள கெட்ட நீரினை அகற்றும் பிறிதொரு மருந்து இல்லவே இல்லை. ஆனால் அதனைப் பயன்படுத்துவதற்கு எச்சரிக்கை உணர்வு தேவை. மிகவும் அளவோடு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அளவுக்கு மீறிப் பயன்படுத்தும் போது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். அந்த எதிர்விளைவுகள் உடலை மிக மோசமாகப் பலவீனப்படுத்துவதுடன் எந்த நிலைக்கும் இட்டுச் செல்லும்.

    மருந்தாக இல்லாமல் ஆரோக்கிய உணர்வுடன் அவ்வப்போது எடுத்து வந்தால் எலும்பு மஞ்ஞை முதற்கொண்டு ரத்தம் வரை அத்தனையும் முழு ஆற்றல் பெற்று சுறுசுறுப்பாகவும் ஆளுமைத் திறனோடும் விளங்கலாம்.

    வாழைத் தண்டினை சாறாக அருந்துவதோடு சூப்பாகவும் அவ்வப்போது எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக குளிர்காலங்களில், சளித் தொல்லை உடையவர்கள் வாழைத்தண்டின் பயனைப் பெறுவதற்கு சூப்பாக எடுத்துக் கொள்வதே சிறந்தது. சூப்பு என்பது தண்டினை அரைத்து சாறாக்கிக் காய்ச்சுவதல்ல. தண்டினைப் பொடியாக அரிந்து போட்டு நீர் விட்டுக் காய்ச்சினால் இறங்கும் சாறாகும்.

    மிகவும் பொடியாக அரிந்து போட்ட வாழைத்தண்டோடு கால் அங்குல அளவிற்கு இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம் ஆகியவற்றை மிதமான அளவில் சேர்த்து அதாவது பிற சேர்மானங்களின் சுவை வாழைத்தண்டு ரசத்தின் துவர்ப்புச் சுவையை விட மிகாத அளவிற்கு சுவை கூட்டி அருந்த வேண்டும். இவ்வாறு அருந்துவது உடலுக்கு நல்ல வெப்பத்தை அளிப்பதோடு உடலில் மிகுந்துள்ள கெட்ட வாயுவை அகற்றும்.

    இயற்கை மருத்துவம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் தற்காலத்தில் அங்கங்கே வாழைத்தண்டு சூப்பு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில் அளவைக் கூட்டவும், வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகவும் வாழைத்தண்டு சாரத்தைக் காட்டிலும் பிறவற்றின் சுவை மிகுந்து விடுகிறது. ஆகையால் வாழைத்தண்டின் வாயிலாகக் கிடைக்க வேண்டிய நற்பலன்கள் கிடைக்காது. நாம் சொன்னபடி வாரத்திற்கு ஒருமுறை சாதாரணமாகவே வீட்டில் குழந்தைகள் உட்பட அனைவரும் குடித்து வந்தால் எந்த நோயும் யாருக்கும் அண்டாது.

    பொதுவாகவே எந்த வயதிலும் யாருக்கும் சளி, இறுமல், காய்ச்சல், வயிற்றுப் போக்கு ஏற்படுவது இயல்பு தான். ஆனால் நாம் சொல்லும் ஆரோக்கியக் குறிப்புகளைப் பின்பற்றி வந்தால் தற்காலிகமாக வந்துபோகும் மேற்படி நோய்கள் அவ்வப்போது வந்தாலும் உடல் பலவீனமடையாது. விரைவிலேயே இயல்பு நிலைக்கு மீண்டு விடும். மேற்கொண்டு மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கல், பித்தப்பைக் கல், முட்டிவலி, நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நீண்ட கால நோய்கள் தோன்றுவதற்கு வாய்ப்பு இல்லை.

    வாழைத்தண்டு சூப்பு என்பது மருந்து அல்ல. உணவின் ஒரு பகுதியே ஆகும். பசி தோன்றும் நேரத்தில் வயிற்றில் ஏதும் இல்லாமல் சூப்புப் பருகினால் உடனே வேறெதும் வயிற்றை அடைக்கும்படி உண்ணக் கூடாது. அப்படி உண்டால் அபூர்வமான சத்தும், நற்பலனும் தரக்கூடிய வாழைத்தண்டு சூப்பின் பலன்கள் கிடைக்காமல் போகும்.

    வாழைத்தண்டினை வெட்டியதும் நிறம் கறுக்கத் துவங்கி விடும். எனவே சிறிதளவு எலுச்சைச் சாற்றினை அதனுடன் சேர்த்தால் நிறம் மாறாது. வாழைத்தண்டு சூப்புத் தயாரிக்கும் போது அதன் துவர்ப்புச் சுவை மாறாத அளவிற்குச் சிறிதளவு தேங்காய்ப் பாலையும் சேர்த்துக் கொள்ளலாம். தேங்காய்ப் பால் சேர்த்தால் சூப்பின் நிறம் கவர்ச்சிகரமாக இருக்கும். எனவே சூப்பாகக் குடிக்கத் தயங்கும் இள வயதினரும், குழந்தைகளும் சூப்பு அருந்துவதில் ஆர்வம் காட்டுவார்கள்.

    வாழைத் தண்டினை காரட் துருவியில் கீற்றாகத் துருவி வடிகட்டியில் போட்டுச் சாற்றினைப் பிழிந்து எடுத்து விட வேண்டியது. பத்துத் துளிகள் எலுமிச்சைச் சாற்றினை அதனோடு போட்டுப் புரட்டி விட்டு உடன் தேங்காய்ப் பூவையும், சிறிதளவு மிளகுத் தூள், உப்பு ஆகியவற்றைக் கலந்து வைத்தால் சுவையான வாழைத்தண்டுப் பச்சடி தயார். இந்தப் பச்சடி, மலச் சிக்கல் தொல்லை உடையவர்களுக்கு மிகவும் ஏற்றதாகும். வயிற்றுப் புண், வாய்ப் புண், குடல்ப் புண், நெஞ்செரிச்சல் போன்ற அனைத்திற்கும் இது சிறந்த மருந்தாக இருக்கும்.

    காலையில் அலுவலுக்குச் செல்வதற்கு முன்பாக சாப்பிட்டு விட்டுச் செல்ல சூழலோ, அவகாசமோ இருக்காது. அது போன்ற நேரங்களில் வாழைத்தண்டுத் துறுவலோடு, தேங்காப்பூவும், எலுமிச்சைச் சாறும், மிளகுத் தூளும், உப்பும் போட்டு பிடியளவு அவல் கலந்து டப்பாவில் வைத்து விட்டால் நன்றாக ஊறி விடும். போன இடத்தில் அவகாசம் கிடைக்கும் போது ஸ்பூனில் எடுத்துச் சாப்பிட எல்லாம் ஊறி நன்றாக இருக்கும்.

    வழக்கமாக வெளியில் சாப்பிடும் சிற்றுண்டியில் உள்ள மாவுப் பொருட்களும், பழைய எண்ணையும் சேர்ந்து உண்டதும் ஏற்படுத்தும் சோர்வு வாழைத்தண்டு, அவல் சிற்றுண்டியில் இருக்காது. வயிற்றை அடைத்தது போன்ற உணர்வு இருக்காது என்பதால் அலுவலக வேலைகள் வழக்கத்திற்கு மாறான சுறுசுறுப்போடு இருக்கும்.

    நமது உணவுப் பொருட்களிலேயே அதிக நார்ச்சத்து உடையது வாழைத்தண்டு தான். நாம் உணவில் அதிகளவில் மாவுத் தன்மை உடையவற்றைத் தான் எடுத்துக் கொள்கிறோம். மாவுத் தன்மை வயிற்றிலும், குடலிலும், உணவுப் பாதையிலும் படியப்படிய முதலில் அது சளி வடிவில் வெளியேறும். சளிக்கு நாம் மருந்து எடுத்துக் கொண்டால் வெளியேற வேண்டிய சளி உள்ளுக்குள்ளேயே தங்கி விடும். இவ்வாறு தங்கும் சளி சிலருக்கு மாவுப் படிவமாக மாறும். அல்லது வயிற்றில் அமிலமாக மாற்றம் அடைந்து விடும்.
    இந்த அமிலம் தான் பலருக்கு அவ்வப்போது நெஞ்செரிச்சலையும் உணவுக்குழலில் புளித்த ஏப்பத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. உணவுச் செரிமானத்திலும் பெருங் குழப்பத்தையும் உண்டு பண்ணும். வயிற்றில் அமிலம் தேங்கத் துவங்கி விட்டால் சாப்பிட்ட நிமிடத்தில் இருந்து வயிறு உப்பலாக இருக்கும். மீண்டும் பசியே வராதோ என்று நினைக்கும் அளவிற்கு வயிறு கல்லைத் தின்றது போல திம்மென்று இருக்கும்.

    ஆனால் திடீரென்று பசி வரும். ஒருமலையையே விழுங்கி விடலாம் என்ற அளவிற்கு ஆவேசமான பசியாக இருக்கும். அந்தப் பசிக்கு வெறித்தனமாக உணவின் எதிரே அமர்ந்தால் இரண்டு கவளம் உள்ளே போனதும் வால்வு மூடிக் கொண்டது போல உணவு உள்ளே இறங்க மறுக்கும். ஒரு விதமான திணறல் உணர்வு ஏற்படும். இத்தகைய உணர்வு ஏற்படுகிறவர்களுக்கு சர்வ நிச்சயமாக உடலில் அமிலத் தேக்கம் அதிகரித்து விட்டது என்று பொருள்.

    இந்த அமிலத்தை முறிக்க சரியான மாற்று மருந்தோ மாத்திரைகளோ அல்ல. அல்லது தயிர் சாதமோ அல்ல. பலருக்கும் தயிர்ச் சோறு உண்டால் சற்று நேரத்திற்கு இதமாக இருப்பது போல இருக்கும். ஆனால் சாப்பிட்ட ஒருமணி நேரத்திற்குப் பின்னர் முன்னிலும் மோசமான மந்த நிலை ஏற்படும். அமிலத்தை முறிப்பதற்கு வழிதெரியாமல் அது உடனிருக்கும் ஒன்றாகவே ஏற்கப் பழகி விடுவார்கள். ஆனால் உடல் நாளுக்கு நாள் பலவீனப்பட்டுக் கொண்டே போகும். வயிறு மட்டும் பெருக்கும். ஆனால் கை கால்கள் சூம்பிக் கொண்டே போகும். இந்நிலையில் ரத்தத்தில் சர்க்கரை அளவைச் சோதித்தால் அதிகமாக இருக்கும். உடலியல் ரீதியாக அப்படி இருப்பதே சரியாகும்.

    ஆனால் இப்பொழுது நீங்கள் குறைக்க வேண்டியது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அல்ல. மாறாக வயிற்றில் உள்ள அமிலத்தை. அமிலத் தேக்கத்தைக் குறைக்கக் குறைக்க செரிமானத் தன்மை மேம்படும். செரிமானம் மேம்பட மேம்பட உண்ட உணவில் இருந்து சர்க்கரை உடனடியாக ரத்தத்ததில் ஏறாது. உண்ட உணவின் தன்மையும், உடலின் செரிமானத் தன்மையும், செரித்த உணவை எரிக்கும் உழைப்பும் சரியான விகிதத்தில் இருந்தால் சர்க்கரை ரத்தத்தில் மிகுதியாகாது.

    நமது இயக்கத்தின் ஆதாரம் சர்க்கரை தான். நமது உணவில் உள்ள சர்க்கரையை எரித்து முடிக்கும்படியாக நமது உழைப்பு முறையை வைத்துக் கொண்டால் செரிமான மண்டலத்தின் இயக்கம் சீர் கெடாமல் இருக்கும். உடலின் வளர்ச்சி கட்டம் நிறைவை எட்டும் முப்பது வயதுவரை சர்க்கரை நோய் யாருக்கும் வருவதில்லை. மிக அரிதாக சிலருக்கு இயல்பிலேயே இளம் வயதில் சர்க்கரையை ஏற்கும் இன்சுலின் சுரப்பு போதுமானளவு இருப்பதில்லை. அதற்குக் காரணம் மரபுக் குறைபாடாக இருக்கலாம். நாம் இங்கே வாழைத்தண்டு பயன்பாட்டில் சர்க்கரையை இணைத்துப் பேசுவதால் சர்க்கரைக்கு வாழைத்தண்டு சாறோ, சூப்போ முழுமையான தீர்வு என்று புரிந்து கொள்ளக் கூடாது.

    ஆனால் வாழைத்தண்டுப் பயன்பாட்டை சிறு வயது முதலே நமது உணவில் முக்கிய இடம் பிடிக்குமாறு பார்த்துக் கொண்டால் சர்க்கரை நோய்க்குரிய வேர்க் காரணத்தை நம்மால் தடுக்க முடியும் என்று புரிந்து கொள்ள வேண்டும். முன்னர் சொன்னது போல உடலில் அமிலத் தன்மை மிகுந்து விட்டால் வாழைத் தண்டு முழுமையான தீர்வு அளிக்கும். செரிமானத்தையும், மலச் சிக்கலையும் தீர்ப்பதில் அளப்பரிய பங்காற்றும்.

    வாழைத்தண்டினை அப்படியே சீவலாக வெட்டிப் போட்டு மோர்க்குழம்பு செய்யும் பழக்கம் தமிழகத்தில் சில பகுதிகளில் உண்டு. அதேபோல தேங்காய்ப் பால் விட்டும் மிதமான கார, புளிப்புச் சுவையில் குழம்பு செய்வதும் நல்ல பலன் கிடைக்கும். வாழைத்தண்டினை நீள வாக்கில் அரிந்து போட்டு தேங்காய் விழுது சேர்த்து அவியலாகச் சமைத்து உண்ணலாம்.
    வாழைத்தண்டு சீவலை அரிசிமாவும், கடலை மாவும் கலந்த கலவையில் தோய்த்து பஜ்ஜியாகப் போடும் முறை பரவலாகி வருகிறது. இது வாழைத்தண்டு சாறு, வாழைத்தண்டு சூப்பு அளவிற்குப் பலன் தராது என்றாலும் மற்ற பஜ்ஜிகளுக்கு இது தேவலாம். வாழைத்தண்டின் நார்ப் பண்பு கெடாமல் எந்த வகையில் எடுத்தாலும் அதன் பலன் நமது உடலுக்குக் கிடைக்கவே செய்யும்.

    வாழைத்தண்டினை தேங்காய் விழுது, பாசிப்பருப்பு போன்றவைச் சேர்த்து குறைவான அளவு காரம் சேர்த்து கூட்டாகச் சமைத்து சோற்றுடன் பிசைந்து உண்ணலாம். நிறைய சத்துக்கள் மிகுந்த வாழைத்தண்டு செரிக்கச் சற்றுக் கடினமானது. எனவே அதனை நீர்க்கவோ அல்லது பிற இலகுவான மூலப் பொருட்களுடனோ இணைத்துத் தான் உண்ண வேண்டும். அப்போது தான் செரிமானம் எளிதாக இருக்கும்.

    பலர் வாழைத்தண்டு பொரியல் சமைத்து உண்கிறார்கள். பொரியலாகச் சமைக்கும் பொழுது அதன் நீர்த்தன்மை வற்றடிக்கப்படுகிறது. அத்தோடு அதனுடன் கடலைப் பருப்பு சேரும்போது செரிமானம் இன்னும் கடினமாகி விடும். எனவே நீர்த்த தன்மையில் கூட்டுப்போல சமைத்து உண்பதே சிறந்தது. வாழைத்தண்டினை உணவில் சேர்ப்பது ஒரு பழக்கமாக மாறி விடுமானால் ரத்தம் சுத்தமாவதுடன் செரிமானத் திறன் அதிகரிப்பதோடு உடல் பொலிவும் ஊக்கமும் அதிகரிக்கும். உடலில் திறனும், பொலிவும், ஊக்கமும் அதிகரித்தால் இயல்பாகவே ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.

    வாழையின் தண்டு குறித்து மட்டுமே நாம் இங்கே பார்த்துள்ளோம். அதன் பழங்கள், காய், பூ, இலை என அனைத்துமே நல்ல பலனைத் தருவனவே ஆகும். ஆனால் இன்றைய வேளாண்முறையும், வணிகத் தலையீடும் பெருஞ்சிறப்பு மிகுந்த வாழைப்பழத்தின் நற்பலன்களைக் கெடுத்து வைத்துள்ளது.

    மிகையான விளைச்சலுக்காக வாழைமரத்திற்கு அதிக உரம் போடுகிறார்கள். அதுபோக பழத்தாரினை சந்தைக்குக் கொண்டு செல்லும் போது உதிர்ந்து வீணாகி விடுவதைத் தவிர்க்க காயாகவே ஏற்றிச் செல்லுகிறார்கள். சந்தைப்படுத்தும் இடத்தில் காயைப் பழுக்க வைக்கும் புகை மூட்டம் போடுவதற்கான வசதி மற்றும் பொருட்களைச் சேமித்து வைக்கும் இட வசதி போன்றவை பொருட் செலவு மிக்கதாக இருக்கும் என்பதால் காயின் மீது இரசாயனப் பூச்சு தெளித்து மேற்தோலை நிறம் மாற்றி பழம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி சந்தைப்படுத்துகிறார்கள்.

    வாழைக்காய்த் தோலின் மீது தெளிக்கப்பட்ட இரசாயனம் பழத்தின் சதைப்பகுதிக்கு செல்லும். எனவே வாழைப்பழத்தின் இயல்பான சத்துக் கெடுவதுடன், நச்சுத் தன்மையையும் அடையும்.

    Next Story
    ×