search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீரடி சாய் பாபா
    X
    சீரடி சாய் பாபா

    ஆத்ம ஞானம் மேம்படுத்தும்...பாபா காட்டிய பாதை...நம்பிக்கை, பொறுமை

    சீரடி தலத்திற்கு நீங்கள் சென்று இருந்தால் சமாதி மந்திரில் நம்பிக்கை, பொறுமை என்ற இரு வார்த்தைகளும் சாய்பாபா வீற்றிருக்கும் பகுதியில் ஜொலிப்பதை பார்த்திருப்பீர்கள்.
    நம்பிக்கை, பொறுமை..

    சீரடி சாய்பாபா எத்தனையோ பொன்மொழி களையும், தத்துவங்களையும் நமக்கு தந்து இருக்கிறார். ஆனால் ரத்ன சுருக்கமாக அவர் வெளியிட்டது நம்பிக்கை, பொறுமை என்பதை மட்டுமே. இதன்மூலம் பாபா தனது பக்தர்களுக்கு மிக தெளிவான, எளிமையான பாதையை காட்டி உள்ளார்.

    “என்னிடம் முழு நம்பிக்கை வை. அதே சமயத்தில் இந்த நம்பிக்கையின் அபரிமிதமான  பலன்களை பெற பொறுமையாகவும் இரு” என்பதே இதன் அர்த்தமாகும். பாபா சொன்ன தத்துவங்களில் இது முதன்மையானதாக கருதப்படுகிறது.

    உலகம் முழுக்க உள்ள சாய்பாபா பக்தர்களுக்கு, “நம்பிக்கை, பொறுமை” பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும். சீரடி தலத்திற்கு நீங்கள் சென்று இருந்தால் சமாதி மந்திரில் நம்பிக்கை, பொறுமை என்ற  இரு வார்த்தைகளும் சாய்பாபா வீற்றிருக்கும் பகுதியில் ஜொலிப்பதை பார்த்திருப்பீர்கள்.

    சென்னை மயிலாப்பூர் சீரடி சாய்பாபா ஆலயத்திலும் நம்பிக்கை, பொறுமை பிரதானமாக காட்சி அளிக்கும். இத்தகைய சிறப்புடைய இரு வார்த்தைகளையும் சீரடி பாபா அடிக்கடி சொல்வதுண்டு. ஒரு சம்பவத்தின் மூலம் அவர் நம்பிக்கை, பொறுமையை இந்த உலகிற்கு மிக அழகாக விளக்கி சொன்னார்.

    ராதாபாய் தேஷ்முக் என்ற ஒரு பக்தை பாபா மீது மிக மிக தீவிர பக்தி கொண்டிருந்தார். பாபாவிடம் தீட்சை பெற வேண்டும் என்பது அவரது விருப்பம். ஆனால் பாபா அவருக்கு தீட்சை வழங்க மறுத்துவிட்டார்.

    இதனால் விரக்தி அடைந்த ராதாபாய் பாபா வீற்றிருக்கும் துவாரகமயி மசூதி எதிரே உண்ணா விரதம் இருக்க போவதாக உட்கார்ந்து விட்டார். அவரை அழைத்த பாபா சில உபதேசங்களை சொன்னார்....

    “என் குரு எனக்கு எந்த மந்திரமும் சொல்லி தரவில்லை. தீட்சை வழங்கவில்லை. அப்படி இருக்கும்போது நான் உங்களுக்கு என்ன மந்திரத்தை சொல்லிவிட முடியும்?

    என் குருநாதரிடம் நான் மிகுதியான அன்பு கொண்டிருந்தேன். அவரும் என்மீது ஞானப்பார்வையுடன் பாசத்தை பொழிந்தார். அதற்கு கைமாறாக என்னிடம் அவர் 2 பைசா தர வேண்டும் என்று குரு தட்சணை கேட்டார்.

    2 பைசா என்றால் பணம் என்று அர்த்தம் இல்லை. அந்த பணத்தை வைத்துக்கொண்டு அவர் என்ன செய்ய போகிறார்? அவர் 2 பைசா என்று கேட்டது 2 விசயங்களையாகும். ஒன்று உறுதியான நம்பிக்கை, மற்றொன்று ஆழ்ந்த பொறுமை.

    இந்த இரண்டையும் நான் என் குருவிடம் கொடுத்தேன். அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அதே போன்று தான் என் பக்தர்களும் இருக்க வேண்டும் என்று நான் எதிர் பார்க்கிறேன்.

    அந்த இரண்டு விஷயங் களையுமே உங்களுக்கும் நான் தருகிறேன். நம் பிக்கை, பொறுமை என்பதே என் குருவிடம் இருந்து கற்றுக் கொண்டு நான் உங்களுக்கு சொல்லும் பாடமாகும். நம்பிக்கை என்பது முழுமையானதாக இருக்க வேண்டும். என் மனது எப்போதும் என் குரு மீதே குவிந்திருந்தது. அவர்தான் தஞ்சம் என்று அவரையே நான் தியானித்து வாழ்ந்தேன். இதுதான் என் குரு மீது நான் கொண்டிருந்த நம்பிக்கை.

    அடுத்ததாக நான் பொறுமையாக காத்திருந்தேன். பொறுமையாக இருந்து என் குருவுக்கு சேவை செய்தேன். மாறி வரும் இந்த உலகில் வாழ்க்கையை கடப்பதற்கு பொறுமைதான் படகாகும்.  நம்மை சுற்றி எத்தனையோ சோதனைகளும், பாவங்களும், துயரங்களும் வரக்கூடும். இத்தகைய பேராபத்தில் இருந்து நம்மை காப்பது பொறுமைதான். எந்தவித பயத்திலும் இருந்து பொறுமை மட்டுமே நம்மை விடுவிக்கும். எனவேதான் எனது குருநாதர் என்னிடம் பொறுமையை தட்சணையாக கேட்டார்.

    நம்பிக்கை, பொறுமை இரண்டும் மிக மிக உன்னதமானவை. அவை இரண்டையும் இரட்டை சகோதரிகள் என்று சொல்லலாம்.  நம் மனதில் உள்ள நல்ல எண்ணங்களின் ராணியாக, சுரங்கமாக பொறுமை இருக்க வேண்டும். அதன் சகோதரியாக நம்பிக்கை இருக்கும். அவற்றை பிரிக்கவே முடியாது.  இந்த உண்மையை நீ உணர்ந்து கொள். நம்பிக்கை, பொறுமையோடு இரு.

    வேறு யாரிடமும் வேறுவிதமான உபதேசங் களை பெறுவதற்கு முயற்சி செய்யாதே. நம்பிக்கை, பொறுமையுடன் இருந்தால் நிச்சயமாக நீ நினைக்கும் ஆன்மீக இலக்கை அடைய முடியும். முழு மனதோடு என்னை நீ நோக்கினால் பிரதிபலனாக நான் உன்னை நோக்குவேன்.

    இந்த மசூதியில் அமர்ந்து கொண்டு நான் உண்மையைத்தான் பேசுகிறேன். இதையே சத்திய வாக்காக எடுத்துக்கொள். நம்பிக்கையையும், பொறுமையையும் ஒரு போதும் தொலைத்து விடாதீர்கள். எப்போது, எந்த பிரச்சினையை நீங்கள் எதிர்கொண்டாலும் இந்த இரண்டும் உங்களை கரை சேர்க்கும்.

    எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும், எவ்வளவு பெரிய பண்டிதராக இருந்தாலும் நம்பிக்கை, பொறுமை இல்லா விட்டால் அவர்களது வாழ்க்கை வீணாகி விடும். தாய் ஆமையானது தூரத்தில் இருந்தாலும் தனது பார்வையாலேயே தனது குட்டிகளுக்கு திருப்தியையும், மகிழ்ச்சியையும் கொடுத்து விடும். அதேபோன்று நான் எங்கிருந்தாலும் கடைக்கண் பார்வையால் என் பக்தர்களை பாதுகாப்பேன். நம்பிக்கை, பொறுமையோடு இருங்கள்.

    சாய்பாபா இவ்வாறு கூறியதும் ராதாபாய் திருப்தி அடைந்தார். நம்பிக்கை, பொறுமையுடன் இருப்பதாக சொல்லிவிட்டு விடை பெற்றார். இந்த நிகழ்வுக்கு பிறகே பாபா வழங்கிய நம்பிக்கை, பொறுமை தத்துவம் புகழ் பெற தொடங்கியது. மற்றொரு சமயம் ஒரு கதை மூலமாகவும்  பாபா இந்த கருத்தை வலியுறுத்தினார்.

    என் அன்பு குழந்தாய் உனக்கு ஒரு கதை சொல் கிறேன். கவனமுடன் கேள். எனக்கு இருக்கும் பக்தரை பற்றிய கதைதான் இது. அந்த பக்தன் என்னையே உயிர்மூச்சாக கொண்டவன். எது செய்வதாக இருந்தாலும் என்னைக்கேட்காமல் எதையும் செய்ய மாட்டான்.

    வாழ்க்கையில் அவன் பட்ட துன்பங்கள் ஏராளம். தினசரி வாழ்வை நடத்துவதற்கு கூட சில சமயங்களில் அவன் கஷ்டப்பட்டு இருக்கிறான். ஆனாலும் பாபா என்னுடன் இருக்கும் போது எனக்கு என்ன கவலை என்ற முழு நம்பிக்கை அவனிடம் இருந்தது.

    கடந்த பிறவிகளில் செய்த கர்ம வினைகள் காரணமாக அவனுக்கு கஷ்டங்களுக்கு மேல் கஷ்டங்கள் வந்தன. சில சமயங்களில் கர்ம வினைகளால் அவன் படாதபாடு பட்டான். ஆனால் ஒருநாள் கூட அந்த பக்தன் என்னை இகழ்ந்து தூற்றியதே கிடையாது.

    வேறொரு பக்தனாக இருந்தால் அவனது வீட்டில் எனக்கு இடம் இருந்திருக்காது. ஆனால் அவன் என் மீது மாறாத நம்பிக்கை கொண்டிருந்தான். அவன் வீட்டில் இருந்த எனது படங்களை அவனது உறவினர்கள் அகற்றினார்கள். ஆனால் அவன் உள்ளத்தில் இருந்து என்னை அவர்களால் அகற்ற இயலவில்லை.

    நான் அவனுடன் இருப்பதாக முழுமையாக நம்பினான். அதுமட்டுமல்ல, அதே நம்பிக்கையுடன் தனது கஷ்டங்கள் எல்லாம் நிச்சயம் ஒருநாள் தீர்ந்துவிடும். பாபா தீர்த்து வைப்பார் என்று பொறுமையாகவும் இருந்தான்.

    எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவன் சாய் சாய் என்று என்னுடைய நாமத்தையே உச்சரித்து வந்தான். இத்தகைய நம்பிக்கையையும், பொறுமையையும் கொண்ட பக்தனுக்கு நான் போராடி அவனது கர்ம வினைகளை தீர்க்க வைத்தேன். அதன்பிறகு அவன் வாழ்விலும், ஆன்மீகத்திலும் உயர்ந்த நிலைக்கு வந்தான்.

    அந்த பக்தனின் உயர்வுக்கு மூலக்காரண மாக இருந்தது அவனது நம்பிக்கையும், பொறுமையும்தான். இவ்வாறு கூறிய பாபா தன்னை நாடி வந்த பக்தர்களிடம் அடிக்கடி நம்பிக்கை, பொறுமை பற்றி சொல்லிக்கொண்டே இருப்பார்.

    இறைவனிடமும், குருவிடமும் நாம் அன்பு காட்டும்போது எள் முனை அளவுகூட சந்தேகம் வரக்கூடாது. துளி அளவுகூட சஞ்சலம் இல்லாமல் வழிபட வேண்டும். அப்போதுதான் அந்த பக்தி முழுமை பெறும்.

    அதுபோல நமது நியாயமான கோரிக்கை களை கடவுள் நிச்சயம் நிறைவேற்றுவார் என்று பொறுமையோடு இருக்க வேண்டும்.  நம்பிக்கை, பொறுமை இருந்தால் நீங்கள் பார்க்கும் இடங்களில் எல்லாம் என்னை காண முடியும் என்றார்.

    கர்மங்களை குறைத் துக்கொள்ள வழி, அதை தைரியமாக எதிர் கொள்வது தான். நீங்கள் எப்போதும் என்னை நினைத்துக் கொண்டு இருந்தால், என் மீது நம்பிக்கை வைத்திருந்தால் அந்த கர்மாவை அனுப விக்கும் சக்தியை நான் கொடுக்கிறேன். அந்த கர்மா கொடுக்கும் துன்பத்தால் உங்கள் மனம் அடையும் வேத னையை நான் ஏற் படாமல் செய்கிறேன். உங் களுக்குள் இருந்து அதை நான் சுமக்கிறேன்.

    சில நிலையற்ற மனிதர்கள் ஒருதடவை கவலையை இறக்கி வைப் பார்கள். மற்றொரு முறை தங்களுக்குள் சுமந்து கொண்டு திரிவார்கள். என்மீது நம்பிக்கை வைத்து அதை என்னிடம் தந்தால் அந்த சுமையை நான் சுமந்து அவர்களுக்கு வழிகாட்டுவேன்.

    துன்பம் வரும்போதுகூட என் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கை கொஞ்சம்கூட குறைய கூடாது. அப்படி இருந்தால் அவர்களுக்கு என் உதவி கண்டிப்பாக கிடைக்கும்.

    மழைக்காலத்தில் ஆறுகள் கடலில் கலப்பது போல பக்தர்கள் என்னோடு கலந்து விட்டால் போதும். அவர்களுக்கு தேவையான அனைத்தையும் நிச்சயம் நான் செய்து கொடுப்பேன். நான் இருப்பது என் பக்தர்கள் விரும்பும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கே. இதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.

    இந்த பந்தம் நிரந்தரமாக இருக்க வேண்டுமானால் வேறு வழியே இல்லை. என்னை வழிபடும் பக்தர்கள் என்னை பரிபூரணமாக நம்புங்கள். ஒளிவுமறைவு, விளையாட்டுகள் என்னிடம் வேண்டாம். யாருடைய இதயக்கதவுகள் எனக்காக திறந்து இருக்கிறதோ அவர்களுடைய இதயத்தில் நான் நிறைந்து இருப்பேன்.

    எனக்கு விதவிதமான பூஜைகள் செய்யுங்கள் என்று எந்த பக்தரிடமும் நான் எதிர்பார்ப்பது இல்லை. ஆனால் எந்த சூழ்நிலையிலும் மாறாத நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் என்பதையே விரும்புகிறேன். அப்படி நம்பிக்கை வைத்திருக்கும் பக்தனையே நான் நேசிக்கிறேன்.

    சில பக்தர்கள் ஜாதகம், கைரேகை, ஜோதிடம் என்று அலைகிறார்கள். அதையெல்லாம் தூக்கி எறியுங்கள். என்னை மட்டும் நம்புங்கள். என்னை நம்பி என்னிடம் மனதை கொடுத்துவிட்டால் மற்ற அனைத்தையும் நானே முன்நின்று நடத்துவேன்.

    ஒவ்வொரு பக்தனும் தனது கர்ம வினைகளை அனுபவித்தே தீர வேண்டும் என்பது விதியாகும். ஆனால் என் பக்தன் என் மீது மாறாத நம்பிக்கையும், பொறுமையும் கொண்டிருந்தால் அவனது விதி மாற்றப்படும். நெருப்பில் வைக்கோல் எரிவது போன்று அவனது கர்ம வினைகள் அனைத்தையும் நான் எரித்து அவனை காப்பாற்றுவேன்.

    என்னிடம் நம்பிக்கை வைப்பவர்களை நான் கைவிடுவதில்லை. என்னை சாதாரணமாக ஏற்க கூடாது. முழுமையாக நம்பி ஏற்க வேண்டும். உங்களின் எண்ணங்களிலும், செயல்களிலும் என்னையே நம்பி மையமாக வைக்க வேண்டும். அந்த எண்ணங்களும், செயல்களும் நிச்சயம் நிறைவேறும்.

    இப்படி நம்பிக்கை, பொறுமை பற்றி சாய்பாபா நிறைய சொல்லி இருக்கிறார்.
    சரி, நம்பிக்கையை பெறுவது எப்படி? அதற்கு பாபாவை தியானிக்க வேண்டும். அந்த தியானத்துக்கும் பாபா வழிகாட்டி உள்ளார்.

    Next Story
    ×