search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • கடந்த முறை கர்நாடகா மாநிலத்தில் 25 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
    • தெலுங்கானாவில் 4 இடங்களில் வென்றிருந்தது.

    பா.ஜனதா கூட்டணி 400 இலக்கை நிர்ணயித்து மக்களவை தேர்தலை சந்தித்து வருகிறது. தனியாக 370 இலக்கை நிர்ணயித்துள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் நாளை நடைபெற இருக்கிறது. தேர்தல் பிரசாரத்தின்போது இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள் பா.ஜனதா 200 இடங்களை கூட தாண்டாது எனக் கூறி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி 15 இடங்களுக்கும் குறைவாகத்தான் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் இந்த முறை தென்மாநிலங்களில் எங்களுடைய செயல்பாடு சிறப்பானதாக இருக்கும் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-

    கிழக்கு, மேற்கு, வடக்கு அல்லது தெற்கு என எங்கும் 400 இடங்களுக்கு மேல் நாங்கள் பெறுவோம் என்று நாட்டின் சூழல் தெரிவிக்கிறது. தெற்கில் இதுவரை இல்லாத வகையில் இந்த முறை செயல்பாடு மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

    பிரதமர் நரேந்திர மோடி மீது நாட்டில் நம்பிக்கையும், உற்சாகமும் நிறைந்த சூழல் நிலவுகிறது. விவசாயிகள், பெண்கள், ஏழைகள், இளைஞர்கள் பிரதமர் மோடி நம்பிக்கை வைத்துள்ளனர். அவருக்கு ஆதரவு கொடுப்பது பற்றி ஆர்வமாக உள்ளனர்.

    நாட்டின் பாதுகாப்பையும் வளத்தையும் உறுதிப்படுத்த மோடிக்கு பெரும்பான்மையான 400 இடங்களை வழங்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    கடந்த மக்களவை தேர்தலின்போது பா.ஜனதா கர்நாடகா மாநிலத்தில் 25 இடங்களில் வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் 4 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரியில் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.

    • வளைகுடா பகுதியில் 17 இந்தியர்களுடன் சென்ற இஸ்ரேல் கப்பலை ஈரான் சிறைபிடித்தது.
    • இஸ்ரேல் கப்பலில் இருந்த இந்தியர்களில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் நாடு திரும்பினார்.

    புதுடெல்லி:

    இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் நடந்து வருகிறது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா பகுதியில் சென்ற இஸ்ரேலுக்குச் சொந்தமான சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்தது. விசாரணையில், கப்பலில் இருப்பவர்களில் 17 பேர் இந்தியர்கள் என தெரியவந்தது.

    இதற்கிடையே, சரக்கு கப்பலில் உள்ள 17 ஊழியர்களை மீட்கும் பணி நடந்துவந்தது.

    இந்நிலையில், கப்பலில் இருந்த இந்திய ஊழியர்கள் 17 பேரில் டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் விடுவிக்கப்பட்டார். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த இவர் இன்று பத்திரமாக நாடு திரும்பியதால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கப்பலில் மீதமுள்ள 16 இந்தியர்களுடன் தொடர்பில் உள்ளோம். பாதுகாப்பாக இருக்கும் அவர்களை விரைவில் மீட்போம் என தெரிவித்துள்ளது.

    • பா.ஜனதா அதன் பிரிவான அமலாக்குத்துறை மூலமாக கெஜ்ரிவால் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சி செய்கிறது.
    • கெஜ்ரிவாலுக்கு வீட்டில் சமைத்து வழங்கப்படும் உணவை நிறுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள்.

    கெஜ்ரிவால் ஜாமின் பெறுவதற்கான இனிப்பு வகைகள் மற்றும் மாம்பழங்கள் சாப்பிடுகிறார் என அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இனிப்பு அதிகமாக சாப்பிட்டு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து அதன்மூலம் ஜாமின் பெற முயற்சிப்பதாக தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் பொய் சொல்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்வதற்கு மிகப்பெரிய சதி நடக்கிறது என டெல்லி மாநில மந்திரி அதிஷி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அதிஷி கூறியதாவது:-

    பா.ஜனதா அதன் பிரிவான அமலாக்குத்துறை மூலமாக கெஜ்ரிவால் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சி செய்கிறது. கெஜ்ரிவாலுக்கு வீட்டில் சமைத்து வழங்கப்படும் உணவை நிறுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள். சர்க்கரையுடன் தேனீர் குடிப்பதாகவும், இனிப்புகள் சாப்பிடுவதாகவும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் பொய் கூறியுள்ளது. அது முற்றிலம் பொய். கெஜ்ரிவால் கெஜ்ரிவால் செயற்கை இனிப்பை எடுத்து வருகிறார்.

    சர்க்கரை அளவு குறைவது உயிருக்கு ஆபத்தானது என்பதால் நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் அல்லது ஏதேனும் சாக்லேட் எடுத்துச் செல்லுமாறு டாக்டர்கள்களால் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். உருளைக்கிழங்குடன் பூரி சாப்பிடுவதாக அமலாக்கத்துறை சொல்கிறது. இவ்வளவு பொய் சொன்னதற்காக அமலாக்கத்துறை கடவுளுக்கு பயப்பட வேண்டும். நவராத்தியின் முதல் நாளில் மட்டும் பூரி சாப்பிட்டார். வீட்டு உணவை நிறுத்துவதற்காக இந்த பொய்கள் எல்லாம் அமலாக்கத்துறை மற்றும் பா.ஜனதாவல் பரப்பப்படுகிறது.

    கடந்த சில நாட்களில் இருந்து கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 300 mg/dl-க்கு அதிகமாக உள்ளது. ஆனால் திஹார் ஜெயில் அதிகாரிகளால் இன்சுலின் மறுக்கப்படுகிறது. வீட்டில் சமைத்த உணவை நிறுத்தி கெஜ்ரிவாலை கொல்ல சதி நடக்கிறது.

    இவ்வாறு அதிஷி தெரிவித்துள்ளார்.

    • ராகுல் காந்தி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வெளியிடும் அறிக்கையில் வயநாடு அவரது குடும்பம் என குறிப்பிடுவது நமக்குத் தெரியும்.
    • சிலர் வீடுகளை மாற்றுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒருவர் குடும்பத்தை மாற்றிவிட்டார் என்பதை நாம் முதன்முறையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்த முறை அமேதி தொகுதியில் போட்டியிடவில்லை.

    2014 தேர்தலில் அமேதியில் ராகுல் காந்தி- ஸ்மிரிதி இரானி போட்டியிட்டனர். ராகுல் காந்தி வெற்றி பெற்றார். 2019-ம் ஆண்டு இருவரும் மீண்டும் போட்டியிட்டனர். அப்போது ராகுல் காந்தி வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார்.

    தற்போது ஸ்மிரிதி இரானி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுகிறார்.

    வயநாட்டில் வருகிற 26-ந்தேதி வாக்குப்பதி நடைபெற இருக்கிறது. அமேதியில் மே 20-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில் ராகுல் காந்தி குடும்பத்தை மாற்றிவிட்டார் என ஸ்மிரிதி இரானி என விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஸ்மிரிதி இரானி கூறியதாவது:-

    ராகுல் காந்தி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வெளியிடும் அறிக்கையில் வயநாடு அவரது குடும்பம் என குறிப்பிடுவது நமக்குத் தெரியும். சிலர் வீடுகளை மாற்றுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒருவர் குடும்பத்தை மாற்றிவிட்டார் என்பதை நாம் முதன்முறையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏப்ரல் 26-ந்தேதிக்குப் பிறகு அவர் இங்கு வரும்போது, நம்மை மதம் மற்றும் ஜாதி அடிப்படையில் பிரிக்க முயற்சி செய்வார்.

    அவர் சனாதனத்திற்கு எதிரானவர் என்பது தெரிந்த பிறகும், ராமபக்தர்கள் அவரை ராம் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைத்தனர். அமேதியை பிரதிநிதித்துவப்படுத்தியவர் (எம்.பி.) ஆணவத்தால் அழைப்பை மறுத்தது வருத்தமளிக்கிறது" என்றார்.

    ராகுல் காந்தியை விமர்சனம் செய்திருந்த நிலையில், அமேதி தொகுதிக்காக ஸ்மிரிதி இரானி செய்த ஐந்து பணிகளை தெரிவிக்கட்டும் என காங்கிரஸ் தலைவர் சவால் விட்டுள்ளார்.

    • காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்று பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
    • இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது எனவும் இது டீப்பேக் AI தொழிற்நுட்பத்தின் கீழ் உருவாக்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது

    நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்று பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், "நமது சோகமான வாழ்க்கை, நமது பயம், நமது வேலையின்மை மற்றும் பணவீக்கத்தை கொண்டாடுவதுதான் மோடிஜியின் நோக்கம். ஏனென்றால், நம் இந்தியா இப்போது அநீதியின் காலத்தை நோக்கி மிகவும் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. எனவே நாம் நமது வளர்ச்சி மற்றும் நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது. அதனால்தான் நாம் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்" ஏன்னு ரன்வீர் சிங் பேசுகிறார்.

    இந்நிலையில் இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது எனவும் இது டீப்பேக் AI தொழிற்நுட்பத்தின் கீழ் உருவாக்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    அண்மையில் பாலிவுட் பிரபல நடிகர் ரன்வீர் சிங் நடிகை க்ரிதி சனோனுடன் வாரணாசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றிருந்தார். அதன் பின்பு அந்த ஆன்மீக அனுபவங்களை அவர் ANI செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்து கொண்டார்.

    அந்த அசல் வீடியோவில், "உத்தரபிரதேசத்தின் வாரணாசி, காசி கோவிலில் தனது அனுபவம் மற்றும் அந்த நகரத்தில் பிரதமர் மோடி கொண்டு வந்த வளர்ச்சி குறித்து ரன்வீர் சிங் பேசுகிறார்.

    அந்த வீடியோ தான் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு எடிட் செய்து பரப்பப்பட்டு வருகிறது.

    இதற்கு முன்னதாக, அமீர் கான் கூட ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவு தருவதாக கூறும் டீப்பேக் AI வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த வீடியோ போலியானது என அமீர் கான் மும்பை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்திருந்தார்.

    பல வருடங்களுக்கு அவர் தொகுத்து வழங்கிய 'சத்யமேவ ஜெயதே' நிகழ்ச்சியில் இருந்து இந்த டீப்பேக் வீடியோ உருவாக்கப்பட்டிருந்தது.

    • கேரளாவில் இந்தியா கூட்டணி 20 இடங்களில் வெற்றி பெறும் என நம்புகிறேன்.
    • இந்த முறை பா.ஜனதா போட்டியிடும் இடங்களில் டெபாசிட் கூட வாங்காது என நினைக்கிறேன்.

    மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது. பா.ஜனதா கூட்டணி இந்த தேர்தலில் 400 இடங்கள் என்ற இலக்குடன் களம் இறங்கியுள்ளது. தனியாக 370 இடங்கள் என பா.ஜனதா இலக்கு நிர்ணயித்துள்ளது.

    பா.ஜனதா இந்த இலக்கை எட்ட வேண்டுமென்றால் தென்இந்தியாவில் அதிகப்படியான இடங்களை பிடித்தாக வேண்டும். தென்இந்தியாவில் கர்நாடாகாவை தவிர மற்ற மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் பா.ஜனதா சாதித்தது கிடையாது.

    இந்த முறை தமிழகம் மற்றும் கேரளாவில் கால் பதிக்க தீவிரம் காட்டி வருகிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் பிரதமர் மோடி அதிக அளவில் பிரசாரம் மேற்கொண்டார். அடிக்கடி இரண்டு மாநிலங்களுக்கும் வருகை தந்து ரோடு ஷோ நடத்தியதுடன் பொதுக்கூட்டத்திலும் பேசி வாக்கு சேகரித்தார்.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தென் இந்தியாவில் (தமிழ்நாடு-39, கேரளா-20, கர்நாடகா-28, ஆந்திரா-25, தெலுங்கானா-17) உள்ள 130 இடங்களில் பா.ஜனதா எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பதை கணித்துள்ளார்.

    இது தொடர்பாக ரேவந்த் ரெட்டி கூறுகையில் "தென்இந்தியாவில் சுமார் 130 தொகுதிகள் உள்ளன. பா.ஜனதா கஷ்டப்பட்டு 12 முதல் 15 இடங்களை கைப்பற்றப் போகிறது. மற்ற அனைத்து இடங்களும் இந்தியா கூட்டணிக்கு செல்லும்.

    கேரளாவில் இந்தியா கூட்டணி 20 இடங்களில் வெற்றி பெறும் என நம்புகிறேன். இந்த முறை பா.ஜனதா போட்டியிடும் இடங்களில் டெபாசிட் கூட வாங்காது என நினைக்கிறேன். தெலுங்கானாவில் இந்தியா கூட்டணி 17 இடங்களில் 14-ல் வெற்றி பெறும்.

    2023 சட்டமன்ற தேர்தலின்போது சந்திரசேகர ராவ் என்ன செய்தாரோ? அதேபோன்று பா.ஜனதா தற்போது பிரசாரம் மேற்கொள்கிறது. சந்திரசேகர ராவ் 100 இடங்களில் வெற்றி பெறுவோம் என்றார். ஆனால் அவருக்கு கிடைத்தது 39 இடங்களே. அதேபோன்று தற்போது பா.ஜனதா செய்து மக்களை குழப்ப முயற்சி செய்து வருகிறது. ஆனால் வாக்காளர்கள் பா.ஜனதாவுக்கு பாடம் புகட்டுவார்கள்" என்றார்.

    பா.ஜனதாவுக்கு கடந்த தேர்தலில் புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. தெலுங்கானாவில் 4 இடங்களில் வெற்றி பெற்றது. கர்நாடகாவில் 28 இடங்களில் 25-ல் வெற்றி பெற்றது.

    • பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது
    • அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், 2 மக்களவைத் தொகுதிகளுடன் சேர்த்து 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக நாளை முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நடைபெறுகிறது.

    அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், 2 மக்களவைத் தொகுதிகளுடன் சேர்த்து 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது.

    சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 2 ஆம் தேதியும், மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதியும் எண்ணப்படுகின்றன.

    இதையொட்டி, மாநிலத்தில் 2,226 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 228 மையங்களை தோ்தல் அதிகாரிகள் நடந்து மட்டுமே சென்றடைய முடியும். அந்த அளவிற்கு தேர்தல் அதிகாரிகளுக்கு சவால் நிறைந்த பணி, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ளது. சீன எல்லையொட்டிய அருணாச்சலப் பிரதேசம் கடுமையான நிலப்பரப்புகளைக் கொண்டது. அதிலும் 61 வாக்குப்பதிவு மையங்களுக்கு 2 நாள்களும், 7 மையங்களுக்கு 3 நாள்களும் கால் நடையாக நடந்து செல்ல வேண்டியிருக்கும்.

    இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் கஷேங் என்ற மலைக்கிராம வாக்குச்சாவடிக்கு அதிகாரிகள் சிரமப்பட்டு பயணிக்கும் வீடியோவை தேர்தல் ஆணையம் பகிர்ந்துள்ளது.

    • அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் அளிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளார்.
    • இதுதொடர்பான வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடந்து வருகிறது.

    புதுடெல்லி:

    டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 21-ம் தேதி கைதுசெய்தனர்.

    இதற்கிடையே, தனக்கு ஜாமின் அளிக்க வேண்டும் என கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கு டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் பெறுவதற்கு வசதியாக மாம்பழங்கள் மற்றும் இனிப்புகளை அதிகளவில் சாப்பிட்டு வருகிரார். அதன்மூலம் சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் என்றும், அதன்மூலம் அவர் ஜாமின் பெற முயற்சி செய்கிறார் என்றும் அமலாக்கத்துறை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

    அமலாக்கத்துறை வேண்டுமென்றே இதுபோன்ற புகார்களை முன் வைக்கிறது என கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

    இதையடுத்து, கெஜ்ரிவாலுக்கு அளிக்கப்படும் உணவு குறித்த விவரங்களை தாக்கல் செய்யும்படி சிறைத்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.

    • கடந்த 2023ல் நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியது
    • கான்ஸ்டபிளாக இருந்த போதும் உதய் கிருஷ்ணா ரெட்டியை அழைத்த சர்கிள் இன்ஸ்பெக்டர் சுமார் 60 போலீசார் முன்னிலையில் திட்டி அவமானப்படுத்தியுள்ளார்

    கடந்த 2023ல் நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 1,016 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அவமானப்படுத்திய நிலையில் தனது போலீஸ் கான்ஸ்டபிள் வேலையை ராஜினாமா செய்த உதய் கிருஷ்ணா ரெட்டி இந்த யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று தேசிய அளவில் 780வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    சாதாரண அரசுப் பள்ளியில் தெலுங்கு வழியில் படித்த உதய் கிருஷ்ணா ரெட்டிக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது. கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து 2018- வரையில் காவல்துறையில் கான்ஸ்டபிளாக அவர் பணியாற்றி வந்தார். கான்ஸ்டபிளாக இருந்த போதும் உதய் கிருஷ்ணா ரெட்டியை அழைத்த சர்கிள் இன்ஸ்பெக்டர் ஒருவர் தனிப்பட்ட வெறுப்பு காரணமாக சுமார் 60 போலீசார் முன்னிலையில் திட்டி அவமானப்படுத்தியுள்ளார்.

    இதனால் விரக்தி அடைந்த உதய் கிருஷ்ணா ரெட்டி அன்றைய தினமே போலீஸ் பதவியை ராஜினாமா செய்தார். பதவி விலகிய நிலையில், தீவிர பயிற்சி மேற்கொண்டு தற்போது யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

    தனது இந்த சாதனை குறித்து பேசிய உதய் கிருஷ்ணன் ரெட்டி, "என்னை அவமானப்படுத்திய சர்கிள் இன்ஸ்பெக்டர் தனது தவறை ஒருநாள் உணர்வார். உயர் அதிகாரிகளுக்கும் கடை நிலை ஊழியர்களுக்கும் இடையே உள்ள பெரிய இடைவெளியை களைய நான் முயற்சிப்பேன்

    780வது இடம் பெற்றுள்ள உதய் கிருஷ்ணா ரெட்டி, இந்திய வருவாய் சேவைக்கு நியமிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. எனினும், இந்திய நிர்வாகப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வரை தொடர்ந்து தேர்வு எழுதப்போவதாக உதய் கிருஷ்ணா ரெட்டி கூறியுள்ளார்.

    • இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் பிளவை உருவாக்க சதி நடக்கிறது
    • பாஜக வேட்பாளரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

    1984-ம் ஆண்டு முதல், ஹைதராபாத் தொகுதி ஏஐஎம்ஐஎம் வசம் உள்ளது. முதலில் சுல்தான் சலாவுதீன் ஓவைசி பின்னர் 2004 முதல் அவரது மகன் அசாதுதீன் ஒவைசி என 40 வருடங்களாக ஓவைசிகளின் குடும்ப கோட்டையாக ஹைதராபாத் உள்ளது.

    நான்கு முறை எம்.பி-யாக இருந்த அசாதுதீன் ஒவைசி, 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த முறை அவருக்குப் போட்டியாக தொகுதியில் செல்வாக்கான மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார்.




    இந்நிலையில் பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கின் ராம நவமி ஷோபா யாத்திரை இன்று நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை மீறி நடநத ராமநவமி கொண்டாட்டத்தின் போது

    ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா, மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவது போன்ற செய்கை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.



    பாஜக வேட்பாளரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரி பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்நிலையில் ராஜா சிங்கின் ராம நவமி ஷோபா யாத்திரைக்கு அனுமதி மறுத்த தெலுங்கானா அரசை மாதவி லதா கடுமையாக கண்டித்து உள்ளார்.

    இது குறித்து மாதவி லதா கூறியதாவது :-



    "சமீபத்தில் ரம்ஜான் கொண்டாட்டங்களுக்கு போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால் தற்போது தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி ஷோபா யாத்திரைக்கு அனுமதி மறுத்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளின் போது தான் ரம்ஜான் கொண்டாட்டம் இருந்தது.

    தற்போது ராஜா சிங்கிற்கு ஏன் அனுமதி வழங்கவில்லை. அவர் நீண்ட காலமாக ராம நவமி ஷோபா யாத்திரை நடத்தி வருகிறார். தற்போது இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் பிளவை உருவாக்க சதி நடக்கிறது " என  அவர் கூறினார்.

    • 2021 சட்டமன்ற தேர்தலின்போது பல்வேறு மீடியாக்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளை மக்கள் புறந்தள்ளிவிட்டு எல்டிஎஃப் கூட்டணிக்கு வாக்களித்தார்கள்.
    • தற்போதைய கணிப்புகள் பணம் கொடுத்து போடப்பட்ட செய்திகள் (paid news) போன்று இருப்பதாக மக்கள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.

    கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான எல்டிஎஃப் (LDF), காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் (UDF), பா.ஜனதா ஆகியவை போட்டியிடுகின்றன. இடதுசாரி கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. பல மீடியாக்கள் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முன்னணி வகிப்பதாக தெரிவித்துள்ளன.

    இந்த கருத்துக் கணிப்புகளை அம்மாநில முதல்வர் பினராயி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பினராயி விஜயன் கூறுகையில் "நம்பகத்தன்மையின்மை அல்லது ஒருதலை பட்சம் ஆகியவற்றின் காரணமாக சில குறிப்பிட்ட செய்திகள் பணம் கொடுத்து போடப்பட்ட செய்திகள் (Paid News) என முத்திரை குத்தப்படுகின்றன. அதே அடிப்படையில் சில கணிப்புகள் பரப்பப்பட்டு வருகின்றன.

    2021 சட்டமன்ற தேர்தலின்போது பல்வேறு மீடியாக்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளை மக்கள் புறந்தள்ளிவிட்டு எல்டிஎஃப் கூட்டணிக்கு வாக்களித்தார்கள். தற்போதைய கணிப்புகள் பணம் கொடுத்து போடப்பட்ட செய்திகள் போன்று இருப்பதாக மக்கள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.

    கணக்கெடுப்பு நடத்தும் முறை, தகவல் சேகரிப்பில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை, முடிவு எப்படி கணிக்கப்படுகிறது போன்ற தகவல்களை வெளியிடாமல் தேர்தலுக்கு முந்தைய கணக்கெடுப்பு முடிவுகள் வெளியாகின்றன. அவற்றின் உண்மைத் தன்மை மக்களுக்குத் தெரியாது. சில ஏஜென்சிகளால் ஆதரிக்கப்படும் இந்த புள்ளிவிவரங்கள் மக்களை தவறாக வழிநடத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளன.

    கேரள மக்கள் தங்கள் அரசியல் கருத்துகளை உருவாக்க போலியான செய்திகளையோ அல்லது போலியான கணக்கெடுப்பு அறிக்கைகளையோ நம்பியிருக்கமாட்டார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

    கேரளாவில் மொத்தம் 20 மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    • 1984-ம் ஆண்டு முதல், ஹைதராபாத் தொகுதி ஏஐஎம்ஐஎம் கட்சியே வெற்றி பெற்று வருகிறது
    • ஹைதராபாத் தொகுதியில், 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒவைசி தோற்கடித்தார்

    1984-ம் ஆண்டு முதல், ஹைதராபாத் தொகுதி ஏஐஎம்ஐஎம் கட்சியே வெற்றி பெற்று வருகிறது. முதலில் சுல்தான் சலாவுதீன் ஓவைசி பின்னர் 2004 முதல் அவரது மகன் அசாதுதீன் ஒவைசி என 40 வருடங்களாக ஓவைசிகளின் குடும்பத்தின் கோட்டையாக ஹைதராபாத் உள்ளது.

    நான்கு முறை எம்.பி-யாக இருந்த அசாதுதீன் ஒவைசி, 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    இந்த முறை அவருக்குப் போட்டியாக அந்த தொகுதியில் பாஜக சார்பில் மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார்.

    அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாதவி லதா, தெலங்கானா மாநிலம் மெட்சல் மாவட்டத்தில் உள்ள செங்கிசெர்லா கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம்களின் சான்றிதழ்களை சரிபார்க்க மத்திய அரசை அணுகி வலியுறுத்துவேன் என்று தெரிவித்தார்.

    மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் செங்கிசேர்லாவில் முஸ்லிம் குடும்பங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதுகுறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். ஏனெனில், செங்கிசேர்லாவில் உள்ளவர்களிடம் போலி ஆதார் அட்டைகள் உள்ளிட்ட பிற ஆவணங்கள் உள்ளன.

    இவர்கள் அனைவரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடியேறினர். கிராமத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்து பெண்களை முஸ்லிம்கள் தாக்கினர்

    இந்துக்களை தாக்கி கிராமத்தில் இருந்து வெளியேற்ற சதி நடக்கிறது. இதனால் தான் குடியுரிமை திருத்த சட்டம் தேவை என்று இஸ்லாமியர்களை மத ரீதியாக தாக்கி பேசினார்.

    இந்நிலையில், தெலங்கானாவில் நடைபெற்ற ராம நவமி நிகழ்ச்சியின்போது மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுப் போல் மாதவி லதா செய்கை காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஐதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதாவின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரி பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    ×