search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உரையாற்றினார்.
    • ராஜாவின் ஆன்மா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இன்று ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் நிறைவு விழா நடைபெற்றது.

    இதில், இந்தியா கூட்டணியை சேர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட முக்கிய தலைவர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உரையாற்றினார்.

    இப்போது அவர் பேசியதாவது:-

    இந்து மதத்தில் சக்தி என்ற வார்த்தை உள்ளது. ஒரு சக்திக்கு எதிராக நாம் போராடுகிறோம். அது என்ன சக்தி என்பது கேள்வி.

    ராஜாவின் ஆன்மா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இல்லாமல் மோடியால் வெற்றிப் பெற முடியாது. இது உண்மை.

    ராஜாவின் ஆன்மா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் மற்றும் நாட்டின் ஒவ்வொரு நிறுவனத்தின் ஆன்மா அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறையிலும் உள்ளது.

    மகாராஷ்டிராவை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் காங்கிரசை விட்டு வெளியேறி என் அம்மாவிடம் கதறி அழுதார். 'சோனியா ஜி, இந்த சக்தியை எதிர்த்துப் போராட எனக்கு தெம்பு இல்லை என்பதில் நான் வெட்கப்படுகிறேன். நான் சிறைக்குச் செல்ல விரும்பவில்லை' என்றார்.

    ஆயிரக்கணக்கான மக்கள் இப்படி அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தல் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
    • பிரதமர் மோடி செய்த காரியம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் பிராஜகளம் பொதுக்கூட்டம் இன்று மாலை ஆந்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது. ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் பால்நாட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் 2024 பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க., ஜன சேனா கட்சி மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்த பொதுக் கூட்டத்தில் ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உரையாற்றினார். அப்போது, பொதுக் கூட்டத்தை பார்க்க வந்த தொண்டர்களில் சிலர், அங்கிருந்த மின்கம்பத்தில் ஏறினர். இதை பார்த்ததும் பிரதமர் மோடி செய்த காரியம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

     


    ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உரையின் போது தொண்டர்கள் மின்கம்பத்தில் ஏறுவதை பார்த்த பிரதமர் மோடி, உடனே குறுக்கிட்டு பவன் கல்யாணிடம் உரையை நிறுத்துமாறு கூறினார். தொண்டர்களிடம் பேசிய பிரதமர் மோடி, அவர்களை மின் கம்பத்தில் இருந்து கீழே இறங்க வலியுறுத்தினார்.

    "அங்கு மின் வயர்கள் உள்ளன. அங்கு என்ன செய்கின்றீர்கள்? உங்களது உயிர் எங்களுக்கு விலைமதிப்பற்றது. தயவு செய்து கீழே இறங்குங்கள். ஊடகத்தினர் உங்களது புகைப்படங்களை எடுத்துள்ளனர். இப்போது கீழே வாருங்கள். அங்கிருக்கும் காவலர்கள், தயவு செய்து மக்களை பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால், எங்களுக்கு அது மிகுந்த வலியை ஏற்படுத்திவிடும்," என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தனது இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார். பிறகு, ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் தனது உரையை முடித்தார்.

    • நிதிஷ்குமார், 2024 மக்களை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க இந்தியா கூட்டணியை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டார்
    • இந்தியா கூட்டணி உருவாகி தொகுதி பங்கீடு நடைபெறும் நேரத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்தார்

    கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜக நிதிஷ்குமார் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. மறைந்த ராம் விலாஸ் பஸ்வான் கட்சியும் கூட்டணியில் அங்கம் வகித்தது.

    மக்களவை தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் நிதிஷ்குமாருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பாஜக கூட்டணியில் இருந்து விலகி, லாலு கட்சியுடன் இணைந்து முதல்வரானார்.

    பாஜகவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்த நிதிஷ்குமார், 2024 மக்களை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க இந்தியா கூட்டணியை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டார். இந்தியா கூட்டணி உருவாகி தொகுதி பங்கீடு நடைபெறும் நேரத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்தார். மோடி முன்னிலையில் இனிமேல் ஒருபோதும் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன் எனத் தெரிவித்தார்.

    இந்நிலையில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் காலித் அன்வர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "13 கோடி பீகார் மக்களும், பீகாரிகள் என்பதால் எங்கள் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச்சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) போன்ற எதுவும் தேவைப்படாது என நிதிஷ்குமார் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார்" என்று தெரிவித்தார்.

    பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் பீகாரில் குடியுரிமை திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அண்மையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 2019-ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

    2014 டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. அதன் காரணமாக இந்த சட்டம் அப்போது அமலுக்கு வரவில்லை.

    • சகோதரர் ராகுல் காந்திக்குக் கூடிய மக்கள் பெருந்திரள் பா.ஜ.க.வைத் தூக்கமிழக்கச் செய்தது
    • பா.ஜ.க.வை நாம் இப்போதே நிறுத்தி ஆகவேண்டும். அதுதான் நம் இலக்கு!

    மும்பையில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    இந்நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். பின்பு பேரறிஞர் அண்ணா எழுதிய மாபெரும் தமிழ்க்கனவு புத்தகத்தின் ஆங்கில பதிப்பை ராகுல்காந்திக்கு அவர் பரிசளித்தார்.

    அந்த நிகழ்வில் பேசிய மு.க. ஸ்டாலின், "எனது அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்கு எனது வாழ்த்துகளைக் கூறுவதற்காக இங்கு நான் வந்திருக்கிறேன். கன்னியாகுமரியில் அவரது இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கி வைத்த பெருமிதத்துடன் இங்கு நிற்கிறேன். உங்கள் பயணம் இன்று மும்பையை அடைந்துள்ளது. விரைவில் அது டெல்லியை எட்டும்! இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும்.

    ராகுல் காந்தி அவர்கள் எங்குச் சென்றாலும் பெரும் திருவிழாவைப் போல அந்த இடம் காட்சியளிக்கிறது. அப்படியொரு வரவேற்பையும் அன்பையும் மக்கள் அவர் மீது பொழிகிறார்கள். இந்தப் பயணத்தினிடையே அவர் பல இடர்களைப் பாஜக அரசின் மூலம் எதிர்கொண்டார். அவரது பயணத்துக்கு அனுமதி மறுக்க என்னென்னவோ காரணங்களைச் சொல்லிப் பார்த்தார்கள். தடைகளை மீறி ராகுல் காந்தி அவர்கள் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

    சகோதரர் ராகுல் காந்திக்குக் கூடிய மக்கள் பெருந்திரள் பா.ஜ.க.வைத் தூக்கமிழக்கச் செய்தது. அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்தார்கள். ஆனால் அவர் உச்சநீதிமன்றம் வரை சென்று வென்றார். மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து முழங்கினார்.

    இந்தப் பயணம் ராகுல் காந்தி என்ற தனிமனிதரின் பயணம் இல்லை. இது இந்தியாவுக்கான பயணம். அதனால்தான் இது இந்திய ஒற்றுமை நியாயப் பயணம். (Bharat Jodo Nyay Yatra) இந்தியாவுக்கு இப்போது தேவை ஒற்றுமைதான். மக்களைப் பிளவுபடுத்தும் பாஜக விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும். கடந்த பத்தாண்டுகளில் மோடி செய்தது இரண்டே இரண்டுதான். ஒன்று வெளிநாட்டுப் பயணங்கள். மற்றொன்று பொய்ப் பிரசாரம்.

    பா.ஜ.க.வை நாம் இப்போதே நிறுத்தி ஆகவேண்டும். அதுதான் நம் இலக்கு! இந்தியா கூட்டணியை நாம் உருவாக்கிய நாளில் இருந்து, இந்தியா என்ற சொல்லையே பா.ஜ.க தவிர்க்கத் தொடங்கிவிட்டது. அந்த அளவுக்கு அச்சத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் பிரதமர் மோடி நம் கூட்டணி குறித்து அவதூறு செய்து வருகிறார். இந்தியா கூட்டணி ஊழல் கூட்டணி என்கிறார். ஆனால், ஊழலில் ஊறிய கட்சி பா.ஜ.க.தான் என்பதைத் தேர்தல் பத்திர ஊழல் அம்பலப்படுத்தி விட்டது. 6000 கோடி ரூபாயைத் தேர்தல் பத்திரங்கள் மூலம் திரட்டியது யார்? இது பா.ஜ.க.வின் நவீன ஊழல்! இப்படிப்பட்ட பிரதமர் ஊழல் குறித்து வாய்திறக்கலாமா? தனது தோல்விகளையும் ஊழல்களையும் திசைதிருப்பவே நம் மீது மோடி குற்றம் சாட்டுகிறார்.

    நாம் மக்களுக்கு நன்மை செய்ய அரசியலுக்கு வந்தவர்கள். கேளிக்கைக்காக அன்று! இந்தியாவின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள நாட்டின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சகோதரர் ராகுல் காந்தி பயணித்திருக்கிறார். பா.ஜ.க.வால் சீரழிக்கப்பட்ட நம் இந்தியாவை மீட்பதற்கான பயணம் இது.

    தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இனி பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றே நமது இலக்கு. பா.ஜ.க.வை விடப் பெரிய ஆபத்து இந்தியாவுக்கு வேறு இல்லை. அவர்களிடம் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.

    ராகுல் காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை நியாயப் பயணத்தின் உண்மையான வெற்றி என்பது பா.ஜ.க.வை வீழ்த்துவதில்தான் அடங்கியிருக்கிறது. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பயணம் டெல்லியைக் கைப்பற்றி, அனைத்துத் தரப்பினருக்குமான, மதச்சார்பற்ற, உண்மையான கூட்டாட்சி அரசை அமைப்பதில் நிறைவுற வேண்டும். இந்தியாவைக் காப்பாற்ற உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்! இந்தியாவே எழுக" என்று மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். 

    • தேர்தல் பத்திரங்கள் மூலம் தி.மு.க. கட்சி ரூ. 656.8 கோடி பெற்று இருக்கிறது.
    • யார் கொடுத்துள்ளார்கள் என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளது.

    லாட்டரி அதிபர் மார்டினின் பியூச்சர் கேமிங் மற்றும் ஓட்டல் சர்வீசஸ் நிறுவனம் இந்தியாவில் அதிகளவு தேர்தல் பத்திரங்களை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இவர் வாங்கிய தேர்தல் பத்திரங்களில் ரூ. 509 கோடி மதிப்பிலான பத்திரங்களை தமிழ் நாட்டில் ஆளும் தி.மு.க. கட்சிக்கு வழங்கியுள்ளார்.

    தேர்தல் பத்திரங்கள் மூலம் தி.மு.க. கட்சி ரூ. 656.8 கோடி பெற்று இருக்கிறது. இந்தியாவில் நடைமுறையில் உள்ள தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு யார் வேண்டுமானாலும் பத்திரங்கள் வடிவில் நிதி வழங்க முடியும்.

    இது தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் எவ்வளவு நிதி பெற்றுள்ளது, அதனை யார் கொடுத்துள்ளார்கள் என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளது.

    அதன்படி பியூச்சர் கேமிங் நிறுவனம் ரூ. 1368 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. இதில் 37 சதவீதம் தொகையை பியூச்சர் கேமிங் நிறுவனம் தி.மு.க. கட்சிக்கு வழங்கி உள்ளது. பியூச்சர் கேமிங் மட்டுமின்றி மேகா இன்ஜினியரிங் நிறுவனம் ரூ. 105 கோடியும், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் ரூ. 14 கோடியும், சன் டி.வி. ரூ. 100 கோடியும் வழங்கி உள்ளது.

    • ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3 ஆயிரத்து 600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
    • அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3 ஆயிரத்து 600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    இதில், இடைத்தரகர்கள் மூலம் ரூ.360 கோடி லஞ்ச பணம் இந்தியர்களுக்கு கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கான பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்படும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல், துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டு, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். பிறகு டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், சிறையில் உள்ள கிறிஸ்டியன் மைக்கேல் தன்னை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான மனுவில் தான் கைது செய்யப்பட்ட வழக்கில் அதிகபட்ச தண்டனை ஐந்து ஆண்டுகள் தான். அந்த வகையில், இந்த வழக்கில் தான் இதுவரை ஐந்து ஆண்டுகள் மூன்று மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    தன் மீது சுமத்தப்பட்டு இருக்கும் வழக்கில் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிலையில், வழக்கின் விசாரணை முழுமையாக நிறைவடையும் முன்பே ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது.

    • தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
    • தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நிதியில் கிட்டத்தட்ட 50% பாஜகவுக்கே சென்றுள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

    அதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக தேர்தல் நிதியாக ரூ.6,986 கோடி பெற்றுள்ளது. அதிகபட்சமாக 2019- 20ம் ஆண்டில் மட்டும் பாஜகவிற்கு ரூ.2,555 கோடி தேர்தல் நிதியாக வந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நிதியில் கிட்டத்தட்ட 50% பாஜகவுக்கே சென்றுள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரூ.1,397 கோடியும், காங்கிரஸ் கட்சி ரூ.1,334.35 கோடியும், சந்திரசேகர் ராவ்-ன் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி ரூ.1,322 கோடியும் நிதி பெற்றுள்ளது

    தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளான திமுக ரூ.656 கோடியும், அதிமுக ரூ.6.05 கோடியும் நன்கொடை பெற்றுள்ளது

    • 2018-19ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய தேர்தல் பத்திர விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
    • ஏற்கனவே, 2019-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி வரை பெற்ற தேர்தல் பத்திர விவரங்கள் வெளியானது

    தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திடம் விவரங்களை ஒப்படைத்தது. அதில் நன்கொடையாளர்கள் அளித்த தொகை, கட்சிகள் பெற்றுக்கொண்ட தொகை ஆகிய விவரங்கள் தனி தனியாக இருந்தது.

    இதனையடுத்து, உச்சநீதிமன்றம் "அரசமைப்பு சாசன அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திற்கு வழங்கவில்லை.

    தேர்தல் பத்திரத்தின் எண், தேர்தல் பத்திரத்தை வாங்கிய நபர், எந்த கட்சிக்கு அவர் நிதி வழங்கியுள்ளார். எவ்வளவு பணம். டெனாமினேசன் (denomination) ஆகியவற்றை வழங்க வேண்டும். திங்கட்கிழமைக்குள் வழங்க வேண்டும். மேலும், பேப்பர் வடிவில் இருக்கும் அனைத்து தகவல்களையும் டிஜிட்டலாக்க வேண்டும்" நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

    2018-19ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய தேர்தல் பத்திர விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. https://www.eci.gov.in/candidate-politicalparty என்ற இணையதளத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம். ஏற்கனவே, 2019-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி வரை பெற்ற தேர்தல் பத்திர விவரங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது.
    • ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என நேற்று தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார் அறிவித்தார்.

    அதன்படி, வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது.

    மேலும், மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது.

    மக்களவை, சட்டமன்ற மற்றும் இடைத்தேர்லுக்கு ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், அருணாச்சல பிரதேசம், சிக்கிமில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, சட்டப்பேரவைக்கு ஜூன் 4ம் தேதிக்கு பதிலாக ஜூன் 2ம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    மக்களவை தேர்தலுக்கு ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    • நேற்று முதலே தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தது.
    • வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பான புகார் தெரிவிக்கலாம்.

    இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என நேற்று தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார் அறிவித்தார்.

    அதன்படி, வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    மேலும், மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று முதலே தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தது.

    இந்நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பான புகார்களை பொதுமக்கள் வருமான வரித்துறையிடம் தெரிவிக்கலாம்.

    1800 425 6669 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், 94453 94453 என்ற Whatsapp எண் மூலமாகவும் புகார்களைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • வரும் மக்களவை தேர்தலில் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
    • வரும் 20ம் தேதி முதல் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கவுள்ளது.

    சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, 2016 சட்டமன்றத் தேர்தலில் மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டி போட்டது. அதன்பிறகு வந்த 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது.

    இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. எனினும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

    இதனை அடுத்து மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என சீமான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்தார். அவ்வழக்கில், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பாரதீய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இதனையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றம், சீமான் மனுவை தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

    அந்த வழக்கு விசாரணையில், நாம் தமிழர் கட்சி சார்பில் விவசாயி சின்னத்தை வேறு கட்சிக்கு ஒதுக்கி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்த கட்சி சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

    நாம் தமிழர் கட்சி தொடர்ந்து கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

    இந்த வழக்கில் நாம் தமிழர் கட்சிக்கு ஏன் கரும்பு விவசாயி சின்னத்தை கொடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், உரிய பதிலை இந்திய தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. ஹோலி விடுமுறைக்கு பிறகு வழக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், வரும் 20ம் தேதி முதல் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கவுள்ளது. ஆதலால் வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு விரைந்து விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இதனையொட்டி, கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை நாளை காலை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

    • இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களால் நோன்பு நோற்கப்படுகிறது.
    • தங்கியிருக்கும் இடத்திலேயே நமாஸ் செய்து வந்துள்ளனர்.

    குஜராத் பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வடநாட்டு மாநிலங்களில் முஸ்லீம் மக்கள் மீது அடிக்கடி தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் ரம்ஜான் பண்டிகை வரவிருப்பதை ஒட்டி, இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களால் நோன்பு நோற்கப்படுகிறது.

    அந்த வகையில், குஜராத் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கும் விடுதியில் நமாஸ் செய்து வந்துள்ளனர். அவர்கள் தங்கியிருக்கும் பல்கலைக்கழக தங்கும் விடுதி அருகில் மசூதி எதுவும் இல்லை என கூறப்படுகிறது. மசூதி எதுவும் இல்லாத காரணத்தால் அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலேயே நமாஸ் செய்து வந்துள்ளனர்.

    அப்படி நமாஸ் செய்யும் போது, அங்கு வந்த கும்பல் மாணவர்களை சரமாரியாக தாக்கியது. மேலும், அவர்கள் நமாஸ் செய்த அறையில் இருந்த லேப்டாப், மொபைல் போன் மற்றும் இதர பொருட்களை உடைத்துள்ளனர். இதோடு அவர்களது இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி இந்த விவாகரம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஆப்பிரிக்க நாடுகள், ஆப்கான்ஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளை சேர்ந்த மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தாக்குதலில் படுகாயம் அடைந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த மாணவர் ஒருவர், "அவர்கள் எங்களை தாக்கினர். அறையில் வைக்கப்பட்டு இருந்த லேப்டாப்கள், மொபைல் போன்களை உடைத்து, இருசக்கர வாகனங்களையும் உடைத்தனர்."

    "தாக்குதலில் ஆப்கானிஸ்தான், இலங்கை, தர்க்மெனிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளை சேர்ந்தவர்கள் காயமுற்றனர். போலீஸ் வருவதற்குள் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து கிளம்பிவிட்டது. தாக்குதலில் காயமுற்ற மாணவர்கள் குறித்து அவர்களது தூதரகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது," என தெரிவித்தார்.

    ×