search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • மத்திய மந்திரி அமித்ஷாவை மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே நேரில் சந்தித்தார்.
    • இதனால் மக்களவை தேர்தலில் பாஜக-மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா இடையே கூட்டணி உறுதியாக வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, டெல்லியில் இன்று உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே உடனிருந்தார்.

    இந்தச் சந்திப்பின் மூலம் மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் பா.ஜ.க. மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா இடையே கூட்டணி உறுதியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த கூட்டணி உறுதியானால் மகராஷ்டிர தலைநகர் மும்பையில் போட்டியிட நவநிர்மாண் சேனாவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேசமயம், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு மும்பை தொகுதியில் குறிப்பிடத்தக்க ஆதரவு உள்ளது. சிவசேனாவில் இருந்து பிரிந்த பிறகு நவநிர்மாண் சேனாவால் அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.

    • கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி குடியுரிமை திருத்த சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
    • பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவசரமாக குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவசரமாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான இச்சட்டதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் 237 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு (DYFI), காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ், திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி மஹுவா மொய்த்ரா மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் ஒவைசி ஆகியோர் ஆகியோரின் மனுக்களும் அடங்கும்.

    இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (CAA) தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் குறித்து பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஏப்ரல் 8-ம் தேதிக்குள் ஒன்றிய அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.

    இதன்படி, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பேப்பர் தோசை முதல் பன்னீர் தோசை வரை என மக்கள் சமைப்பதில் 100-க்கும் மேற்பட்ட வகைகளை நாம் இன்றைய காலத்தில் பார்க்க முடியும்.
    • கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் 123 அடி நீளம் கொண்ட பிரமாண்ட தோசை தயாரிக்க முடிவு செய்தது.

    பெங்களூரு:

    ஆரோக்கியமான மற்றும் சுவையான காலை உணவு செய்முறை என்று வரும்போது, தோசை ஒருபோதும் ஈர்க்க தவறுவதில்லை. தென்னிந்திய சமையலில் பிரபலமாக அறியப்படும் தோசை புளித்த அரிசி மற்றும் உளுத்தம்பருப்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட மாவுடன் தயாரிக்கப்பட்டது. குறைந்த எண்ணெய் நெய்யுடன் ஒரு ஒட்டாத பாத்திரத்தில் தயாரிக்கப்படுகிறது. பேப்பர் தோசை முதல் பன்னீர் தோசை வரை என மக்கள் சமைப்பதில் 100-க்கும் மேற்பட்ட வகைகளை நாம் இன்றைய காலத்தில் பார்க்க முடியும்.

    இந்த நிலையில் பெங்களூரு பொம்மசந்திராவில் எம்.டி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் 123 அடி நீளம் கொண்ட பிரமாண்ட தோசை தயாரிக்க முடிவு செய்தது. அதன்படி 75 சமையல் கலைஞர்கள் குழுவுடன் எம்.டி.ஆர். புட்ஸ் நிறுவனம் இணைந்து லார்மன் கிச்சன் எக்யூப்மென்ட் மூலம் தோசை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. 110 முறை தோல்விக்கு பிறகு அவர்கள் 123 அடி நீள தோசையை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தனர்.


    இந்த தோசை 54 அடி 8.69 அங்குலம் இருந்தது. 37.5 மீட்டர் நீளம் கொண்டது. சிவப்பு அரிசி மாவை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. பெங்களூரில் உள்ள எம்.டி.ஆர். தொழிற்சாலையில் இந்த மகத்தான சாதனை நிகழ்த்தப்பட்டது.

    இந்த தோசை தயாரிப்பில் தலைமை சமையல்காரராக செயல்பட்ட செப் ரெஜி மேத்யூ தனது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றி, "எம்டிஆரில் ஒரு வரலாற்று மைல்கல்லை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 123.03 அடி நீளமான தோசைக்கான கின்னஸ் உலக சாதனை பட்டத்துடன் 100-வது ஆண்டு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறோம் என தெரிவித்துள்ளார்.

    • மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் விரைவு நடவடிக்கைக் குழுக்கள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.
    • நக்சலைட்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.

    மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் காவல்துறையினருடன் இன்று நடந்த என்கவுன்டரில் 4 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளனர்.

    மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், நாசகார செயல்களில் ஈடுபடும் நோக்கத்தில், தெலுங்கானாவில் இருந்து சில நக்சலைட்டுகள், பிரன்ஹிதா நதியைக் கடந்து கட்சிரோலிக்குள் நுழைந்ததாக, நேற்று மதியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, கட்சிரோலி காவல்துறையின் சிறப்புப் போர்ப் பிரிவான சி-60 மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் விரைவு நடவடிக்கைக் குழுக்கள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

    ரெப்பன்பள்ளி அருகே உள்ள கோலமார்கா மலைப்பகுதியில் இன்று காலை சி-60 பிரிவு குழு ஒன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, நக்சலைட்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்துள்ளனர்.

    துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்ட பிறகு, அப்பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டது. இதில், நான்கு ஆண் நக்சலைட்டுகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    மேலும், அவர்களிடம் இருந்து ஒரு ஏகே-47 துப்பாக்கி, ஒரு கார்பைன், இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், நக்சல் புத்தகம் மற்றும் பிற பொருட்களும் மீட்கப்பட்டதாக அதிகாரி கூறினார்.

    உயிரிழந்த நக்சலைட்டுகள் வர்கீஸ், மக்து, இருவரும் வெவ்வேறு நக்சல் குழுக்களின் செயலாளர்கள் மற்றும் படைப்பிரிவு உறுப்பினர்களான குர்சங் ராஜு மற்றும் குடிமெட்டா வெங்கடேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • தேர்தல் ஆணையம் தனது இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    • 15 பேர் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க பதவிகளை வகிக்கின்றனர்.

    புதுடெல்லி:

    தேர்தல் பத்திர விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் பாரத ஸ்டேட் வங்கி வருகிற வியாழக்கிழமை மாலைக்குள், மறைக்ககூடிய அனைத்து தகவல்களையும் அதிலும் குறிப்பாக தேர்தல் பத்திரம் வாங்கப்பட்ட தேதி, வாங்கியவர் பெயர், ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள அடையாள எண் உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டுள்ளது.

    மேலும் இதனை தேர்தல் ஆணையம் தனது இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே ஏப்ரல் 2019-ம் ஆண்டு முதல் ஜனவரி 2024 வரையில் இடைப்பட்ட காலத்தில் மொத்தம் 333 பேர் ரூ.358.91 கோடி மதிப்பிலான பத்திரங்களை வாங்கியதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் பத்திர தரவுகளில் கூறப்பட்டுள்ளது.


    இதில் 15 பேர் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க பதவிகளை வகிக்கின்றனர். அவர்கள் மட்டும் ரூ.158.65 கோடிக்கு பத்திரங்களை வாங்கி உள்ளனர்.

    இதில் ஆர்செலர் நிறுவனத்தின் லெட்சுமி நிவாஸ் மெட்டல் ரூ.35 கோடிக்கும், ரிலைன்ஸ் லைப் சைன்சஸ் நிறுவனத்தின் லட்சுமி தாஸ் வல்லவதாஸ் ரூ.25 கோடி, ராகுல் பாட்டியா (இண்டிகோ) ரூ.20 கோடி, இந்தர் தாகுர் தாஸ் ஜெய்சிங்கனி (பாலிகேப் குழும நிறுவனங்கள்) ரூ.14 கோடி, ராஜேஷ் மன்னர்லால் அகர்வால் (அஜந்தா பார்மா லிமிடெட்) ரூ.13 கோடி என தரவுகள் காட்டுகின்றன. இவர்கள் உள்பட 15 கார்ப்பரேட் நிறுவனங்களின் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் மட்டும் வாங்கிய பத்திரங்களின் மதிப்பு மொத்த மதிப்பில் 44.2 சதவீதம் என கூறப்படுகிறது.

    • ஹேமந்த் சோரன் மனைவியை முதல் மந்திரி ஆக்குவதற்கு அண்ணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
    • 2019 தேர்தலுக்குப் பிறகு தான் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டேன் எனவும் குற்றம் சாட்டினார்.

    புதுடெல்லி:

    ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ஹேமந்த் சோரன் மீதான நில மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அப்போது சோரனின் மனைவி கல்பனாவை முதல் மந்திரி ஆக்குவதற்கு ஹேமந்த் சோரனின் அண்ணியான சீதா சோரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    2019 தேர்தலுக்குப் பிறகு தான் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டேன். வளர்ந்து விட்ட தனது 2 மகள்களையும் ஹேமந்த் சோரன் கண்டு கொள்வதில்லை என சீதா சோரன் குற்றம் சாட்டினார்.

    இதற்கிடையே, சீதா சோரன் கட்சியில் இருந்து திடீரென விலகினார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் சீதா சோரன் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். அவரை பாஜகவினர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

    • அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோருடன் இணைந்து கவிதா முறைகேடு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
    • வியாபாரிகளிடம் இருந்து வந்த பணத்தை ஆம் ஆத்மி கட்சியினர் பங்கு போட்டு கொண்டனர்

    ஐதராபாத்:

    டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் கடந்த 15-ந்தேதி தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகள் கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரை வருகிற 23-ந்தேதி வரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    இந்நிலையில் அமலாக்கத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், மதுபான கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோருடன் இணைந்து கவிதா முறைகேடு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

    மொத்த வியாபாரிகளிடம் இருந்து வந்த பணத்தை ஆம் ஆத்மி கட்சியினர் பங்கு போட்டு கொண்டனர். ஆம் ஆத்மி கட்சிக்கு கவிதா ரூ.100 கோடி வழங்கி உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
    • உத்தரவை மீறி மீண்டும் விளம்பரப்படுத்தப்பட்டதால் அவமதிப்பு வழக்கு.

    பதஞ்சலி தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி மீண்டும் விளம்பரப்படுத்தியதாக, பதஞ்சலி நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இது தொடர்பாக நிர்வாக இயக்குர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இருவரும் பதில் அளிக்கவில்லை. அதேவேளையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு இன்று ஹீமா கோலி, அசானுதீன் அமானுல்லா ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அவமதிப்பு தொடர்பாக விளக்கம் அளிக்க கேட்டுக்கொண்ட போதிலும், விளக்கம் அளிக்காமல் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளீர்கள். ஆனால் நீதிமன்றத்தில் பதில் அளிக்கவில்லை என நீதிபதிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

    மேலும், பதஞ்சலி நிர்வாக இயக்குர் ஆச்சார்யா பால்கிருஷ்ணாவுக்கு நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதேபோல் பதஞ்சலின் துணை நிறுவனரான ராம்தேவ் அடுத்த விசாரணையின்போது ஆஜராக வேண்டும். நாங்கள் தேதி அறிவிப்வோம் என நீதிபதிகள் அறிவித்தனர்.

    • ஒப்பந்தத்தில் சர்பிராஸ்கான், துருவ் ஜூரல் ஆகியோரை சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
    • மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெற ஒரு வீரர், மூன்று டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்க வேண்டும்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரியம், கடந்த மாதம் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தை வெளியிட்டது. இதில் முன்னணி பேட்ஸ் மேன்களான அய்யர், இஷான் கிஷன் ஆகியோர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டனர்.

    அவர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடாத காரணத்தால் இருவரின் மத்திய ஒப்பந்தத்தை கிரிக்கெட் வாரியம் புதுப்பிக்கவில்லை.

    இந்த நிலையில் கிரிக்கெட் வாரிய மத்திய ஒப்பந்தத்தில் இளம் வீரர்களான சர்பிராஸ்கான், துருவ் ஜூரல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட கூட்டம் நேற்று நடந்தது. இதில் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அப்போது ஒப்பந்தத்தில் சர்பிராஸ்கான், துருவ் ஜூரல் ஆகியோரை சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெற ஒரு வீரர், மூன்று டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்க வேண்டும். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான சர்பிராஸ்கான், துருவ் ஜூரல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடினர்.

    இதில் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இதையடுத்து இருவரும் மத்திய ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளனர்.

    அவர்கள் ரூ.1 கோடிக்கான (கிரேடு-சி) பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

    இதற்கிடையே உள்ளூர் கிரிக்கெட்டை மேம்படுத்த ஆலோசனைகளை வழங்க இந்திய ஆண்கள் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் வி.வி.எஸ்.லட்சுமணன், தேர்வுக்குழு தலைவர் அஜீத் அகர்கர் ஆகியோரிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

    இதற்காக அவர்கள் 3 பேர் அடங்கிய குழுவை கிரிக்கெட் வாரியம் அமைத்துள்ளது.

    இதுகுறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, ஆண்கள் அணிகளின் உள்ளூர் போட்டியை நடத்தும் போது நிறைய சிக்கல்கள் எழுந்தன. வட இந்தியாவில், குறிப்பாக ரஞ்சி டிராபியின் போது, டிசம்பர், ஜனவரில் மோசமான வானிலை காரணமாக பல போட்டிகள் பாதிக்கப்பட்டன. இதனால் ஆண்கள் உள்நாட்டு கிரிக்கெட்டை மேம்படுத்த டிராவிட், லட்சுமனண் அகர்கர் ஆகியோர் தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

    • ராம் விலாஸ் பஸ்வான் கட்சியை பிரித்து பசுபதி பராஸ் தனியாக செயல்பட்டார்.
    • ராம் விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான் தற்போது பா.ஜனதா கூட்டணியில் இணைந்துள்ளார்.

    பீகார் மாநிலத்தில் ராம் விலாஸ் பஸ்வான் மகன் கட்சியுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்துள்ளது. பா.ஜனதா 17 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களிலும், சிராக் பஸ்வான் கட்சி 5 இடங்களிலும் போட்டியிடும் என ஒப்பந்தம் ஏற்பட்டது.

    இதனால் மத்திய மந்திரியாக இருக்கும் பசுபதி பராஸ் கடும் அதிருப்தி அடைந்தார். இதனால் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    2019 மக்களவை தேர்தலின்போது பீகாரில் ராம்விலாஸ் பஸ்வானின் ராஷ்டிரிய லோக் தளம் பா.ஜனதா கூட்டணியில் இருந்தது. அவர் மத்திய மந்திரியாக இருந்தார். அவர் மறைவுக்குப்பின், அவரது சகோதரர் பசுபதி பராஸ் கட்சியை பிரித்து தனியாக செயல்பட்டார். அவருக்கு பா.ஜனதா மத்திய மந்திரி பதவியும் வழங்கியது.

    ஆனால், தற்போதைய தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பராக் பஸ்வானை (லோக் ஜனசக்தி) சேர்த்துக் கொண்டது. இதனால் பசுபதி பராஸ் கடும் அதிருப்தி அடைந்து தனது மந்திரி மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தது குறித்து பசுபதி பராஸ் கூறுகையில் "நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி 40 இடங்களுக்கு தொகுதி பங்கீடு குறித்து அறிவித்தது. எங்களுடைய கட்சி ஐந்து எம்.பி.க்களை கொண்டுள்ளது. நான் மிகுந்த நேர்மையுடன் பணியாற்றினேன். எங்களுக்கும் எங்கள் கட்சிக்கும் அநீதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நான் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.
    • தெலுங்கானா-புதுச்சேரி கவர்னர் பொறுப்புகளை ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதா கிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார்.

    புதுடெல்லி:

    தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.

    அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இதையடுத்து தெலுங்கானா-புதுச்சேரி கவர்னர் பொறுப்புகளை ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதா கிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இரு மாநிலங்களுக்கும் புதிய கவர்னர் நியமனம் செய்யும் வரை அவர் இந்த பொறுப்புகளை வகிப்பார்.

    தமிழ்நாட்டை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் பதவி விலகியதை தொடர்ந்து அதே பதவியை கவனிக்கும் பொறுப்பு மற்றொரு தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • காங்கிரசுக்கு இழுத்து, பெங்களூரு வடக்கு பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் தலைவர்களும் முடிவு செய்தார்கள்.
    • பா.ஜனதாவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் சேரும்படி எனக்கு, அக்கட்சியின் தலைவர்கள் அழைப்பு விடுத்திருப்பது உண்மை தான்.

    பெங்களூரு:

    பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜனதா எம்.பி. சதானந்தகவுடா. முன்னாள் மத்திய மந்திரியும், முன்னாள் முதல்-மந்திரியுமான இவருக்கு 71 வயதாகிறது. வயது மூப்பு உள்ளிட்ட காரணங்களால் சதானந்தகவுடாவிடம் இருந்து மத்திய மந்திரி பதவி பறிக்கப்பட்டு இருந்தது. மேலும் பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதா சார்பில் மீண்டும் பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்து இருந்தார்.ஆனால் அவருக்கு பதிலாக பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளராக மத்திய மந்திரி ஷோபா அறிவிக்கப்பட்டு உள்ளார்.

    இதன் காரணமாக சதானந்தகவுடா பா.ஜனதா தலைமை மீது அதிருப்தியில் உள்ளார். அவரை காங்கிரசுக்கு இழுத்து, பெங்களூரு வடக்கு பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் தலைவர்களும் முடிவு செய்தார்கள். இதுபற்றி சதானந்தகவுடாவுடன் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து, பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவும் சதானந்தகவுடா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று சதானந்தகவுடாவுக்கு பிறந்தநாள் ஆகும். இதையடுத்து பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ஷோபா மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் சதானந்தகவுடாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். பின்னர் சதானந்தகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னுடைய அரசியல் எதிர்காலம், நிலைபாடு என்ன? என்பது குறித்து கூற நாளை (அதாவது இன்று) டாலர்ஸ் காலனியில் உள்ள எனது வீட்டில் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளேன். அங்கு எனது அரசியல் நிலைபாடு பற்றி தெரிவிப்பேன். பா.ஜனதாவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் சேரும்படி எனக்கு, அக்கட்சியின் தலைவர்கள் அழைப்பு விடுத்திருப்பது உண்மை தான். அதுபற்றி எனது குடும்பத்தினருடன் ஆலோசிக்க வேண்டியது உள்ளது. நான் எப்போதும் தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் எடுப்பதில்லை. அதனால் குடும்பத்தினருடன் கலந்து பேசி, எனது அரசியல் எதிர்காலம் குறித்து தெரிவிப்பேன். எங்கள் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் என்னை சந்தித்து பேசினார்.

    அவர் என்ன சொன்னார் என்பதை இப்போது பகிரங்கப்படுத்த முடியாது. எனது மனதில் இருக்கும் அனைத்து விஷயங்கள் குறித்தும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது தெரிவிக்கிறேன். ஈசுவரப்பா தனது மகனுக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

    சீட் கிடைக்காதவர்கள், அதிருப்தியில் இருப்பவர்கள் பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவதற்கு முடிவு செய்திருந்தோம். அதற்குள் சுயேச்சையாக போட்டியிடுவதாக ஈசுவரப்பா தெரிவித்துள்ளார். இது அவரது தனிப்பட்ட முடிவாகும். சுயேச்சையாக போட்டியிடுவது பற்றி எங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×