search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா இனி எனது சகோதரி அல்ல- திவாகரன் ஆவேசம்
    X

    சசிகலா இனி எனது சகோதரி அல்ல- திவாகரன் ஆவேசம்

    சசிகலா எனது சகோதரி அல்ல என்றும் அவரை இனி முன்னாள் சகோதரி என்றே அழைப்பேன் எனவும் மன்னார்குடியில் திவாகரன் கூறினார் #Sasikala #TTVDhinakaran #Dhivakaran
    மன்னார்குடி:

    சசிகலா குடும்பத்தில் அவரது சகோதரர் திவாகரனுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது.

    தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கியது குறித்து எங்களது குடும்ப உறுப்பினர்களிடம் ஆலோசிக்கவில்லை. மேலும் தினகரன் தன்னிச்சையாகவே செயல்படுகிறார் என்று திவாகரன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் "தற்போது திவாகரன் உடல்நலக்குறைவால் உளறிக்கொண்டு இருக்கிறார். இதை யாரும் பெரிது படுத்த வேண்டாம்" என்று தினகரன் கூறினார்.

    இதனால் இருவருக்கும் இடையே மோதல் விஸ்வரூபமெடுத்ததால் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே கடந்த மாதம் 29-ந் தேதி மன்னார்குடியில் திவாகரன் ‘அம்மா அணி’ என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

    மேலும் புதிய கட்சிக்கு தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நியமிக்க போவதாகவும், சென்னை, மன்னார்குடியில் கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கும் என்று தெரிவித்தார்.

    திவாகரனின் புது கட்சி அறிவிப்பு குறித்து பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் மனவேதனையில் இருந்து வந்தார். இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சசிகலா தனது வக்கீல் செந்தூர் பாண்டியன் மூலம் திவாகரனுக்கு ஒரு நோட்டீசை அனுப்பினார்.

    அதில் சசிகலா பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக்கூடாது என்றும் எனது அக்கா, என் உடன்பிறந்த சகோதரி எனும் உரிமையை கோரி சசிகலாவை பற்றி ஊடகங்களில் பேசி வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    சசிகலா வக்கீல் மூலம் கொடுத்த நோட்டீசால் திவாகரன் கடும் அதிர்ச்சி அடைந்தார். புதிய கட்சியான அம்மா அணியை தொடர்ந்து நடத்துவதா? அல்லது வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் மன்னார்குடியில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் இன்று காலை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நிர்வாகிகள் கூறிய கருத்துக்களை அவர் கேட்டறிந்தார்.

    இதையடுத்து திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


    சசிகலா குடும்பத்தில் இருந்து நான் விடுப்பட்டதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். நான் எப்போது இந்த நிலை வரும் என்று எதிர்பார்த்து இருந்தேன்.

    சசிகலாவின் தம்பி என்ற ஒரே காரணத்தால் தான் எனது வீட்டில் 2,3 முறை வருமான வரி சோதனை நடந்தது. சிறைக்கும் சென்று உள்ளேன். நான் ஆன்மீகவாதி, ஆராய்ச்சியாளர். ஆன்மீகவாதியான நான் பல கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தி உள்ளேன். நான் நடத்தி வரும் கல்லூரியில் 4000 மாணவிகள் படித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் கல்லூரியை விட்டு வெளியே செல்லும் போது நல்ல பண்புகளை பெற்று செல்கிறார்கள்.

    எங்கள் குடும்பத்தை மன்னார்குடி மாபியா கும்பல் என்று சொல்கிறார்கள். என்னால் இதை தாங்கி கொள்ள முடியவில்லை. இனிமேல் அந்த பெயர் இருக்காது. சசிகலா எனது சகோதரி அல்ல. அவரை இனி முன்னாள் சகோதரி என்று அழைப்பேன். திவாகரன் என்ற பெயரை மட்டுமே விரும்புபவன்.

    என்னை பற்றி சசிகலாவிடம் டி.டி.வி.தினகரன் அவதூறு கூறி வருகிறார். சசிகலாவை தூண்டி விட்டு என் மூலம் பழி வாங்க நினைக்கிறார். சசிகலாவை பழிவாங்க தினகரன் துடிக்கிறார். நான் தொடங்கிய அம்மா அணி கட்சி பணி தொடரும். தவறுகளை நான் என்றும் தட்டி கேட்பேன். எங்களது கட்சியில் தீபா வந்தால் சேர்ப்பேன். அதைபோல் வேறு யாரும் வந்தாலும் சேர்த்துக்கொள்வோம்.

    நான் சில உண்மைகளை கூறியதால் தினகரனுக்கு கோபம் வந்தது. வெற்றிவேல் மூலம் தூண்டி விட்டார். வெற்றிவேல் காங்கிரசில் இருந்து வந்தவர்.

    தினகரன் என்னை பற்றி அவதூறாக பேசி வருகிறார். நான் மன நிலை பாதிக்கப்பட்டு பேசுவதாக கூறுகிறார். காவிரி பிரச்சனையில் நான் எவ்வளவு தெளிவாக பேட்டியில் கூறினேன் என்பது எல்லோருக்கும் தெரியும். கெட்ட எண்ணம் காரணமாக தினகரன் என்னை பற்றி தொடர்ந்து பேசி வருகிறார்.

    தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி கொண்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் பாதி சரியில்லாமல் உள்ளது. இதை அவர் திருத்திக் கொள்வார் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Sasikala #TTVDhinakaran #Dhivakaran
    Next Story
    ×