search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 வார கால அவகாசம் கேட்டதற்கு கர்நாடக தேர்தல் காரணம் அல்ல- எச். ராஜா
    X

    2 வார கால அவகாசம் கேட்டதற்கு கர்நாடக தேர்தல் காரணம் அல்ல- எச். ராஜா

    காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனையில் 2 வார கால அவகாசம் கேட்டதற்கு கர்நாடக தேர்தல் காரணம் அல்ல என்று கோவையில் எச்.ராஜா கூறினார். #BJP #HRaja #CauveryIssue #CentralGovt
    கோவை:

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சனையில் மத்திய அரசு 2 வார கால அவகாசம் கேட்டுள்ளது. இதற்கு காரணம் தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட அம்சம் தான் ஆகும்.

    காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனையில் கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதி மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 9 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். இதில் 5 பேர் மத்திய அரசின் நீர்வளத்துறையை சேர்ந்தவர்கள்.

    மேலும் 4 பேர் தமிழகம், கேரளா, கர்நாடகம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதில் கேரளாவை சேர்ந்த கம்யூனிஸ்டு அரசும், கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் அரசும் உறுப்பினர்களை சேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டதால் தான் மத்திய அரசு கூடுதல் அவகாசம் கேட்டு உள்ளது.

    காவிரி மேலாண்மை வாரியத்துக்கும், கர்நாடக தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கர்நாடக காங்கிரஸ் அரசு ஊழலில் திகைத்து வருகிறது. இதனை மக்கள் பார்த்து கொள்வார்கள். பாரதிய ஜனதா அரசு ஊழலுக்கு எதிராக போராடி வருகிறது.

    கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் சி.ஆர். நந்தகுமார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படாதது வருத்தம் அளிக்கிறது.

    ஏற்கனவே கோவையில் பாரதிய ஜனதா அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. சமீப காலமாக சட்டத்தை கையில் எடுத்து கொண்டு வன்முறையில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    ஐ.பி.எல். போட்டியின் போது காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பாரதிய ஜனதா அலுவலகத்தை முற்றுகையிட போவதாக தி.மு.க. கூறி உள்ளது. பிரதான எதிர்கட்சியான தி.மு.க. இது போன்று நடத்துவது கண்டிக்கத்தக்கது.


    தமிழகத்தில் மோடிக்கு எதிராகவும், பாரதிய ஜனதாவுக்கு எதிராகவும் இந்துக்களுக்கு எதிராகவும் பேசி வருவது வாடிக்கையாகி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் அமைச்சர் ஜெயக்குமார் உங்களை விமர்சித்து உள்ளாரே? என கேட்ட போது அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்றார்.

    மேலும் அவரிடம் எஸ்.வி. சேகர் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசி உள்ளார். அவர் மீது உங்கள் கட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லையே என கேள்வி எழுப்பிய போது, எஸ்.வி. சேகர் வேறு ஒருவர் அனுப்பிய பதிவை தவறாக வெளியிட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார். மேலும் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அவரது முன் ஜாமீன் மனு கோர்ட்டில் விசாரணையில் உள்ளதால் இதில் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. கோர்ட்டு முடிவு செய்யும்.

    குட்கா வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது குறித்து கேட்ட போது, இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு உள்ளதால் அதிகாரிகள் தலையீடு இருக்க வாய்ப்பில்லை. சி.பி.ஐ. நேர்மையாக விசாரிக்கும்.

    ஒருவர் குற்றம் சாட்டப்பட்டு விட்டால் அவர் குற்றவாளி என்பது கிடையாது. வழக்கில் நிரூபிக்கும் வரை எதுவும் சொல்ல முடியாது என்றார். #BJP #HRaja #CauveryIssue #CentralGovt
    Next Story
    ×