search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஆர்.கே.நகர் தேர்தலில் எடப்பாடி - தினகரன் அணிகள் முதல் பலப்பரீட்சை
    X

    ஆர்.கே.நகர் தேர்தலில் எடப்பாடி - தினகரன் அணிகள் முதல் பலப்பரீட்சை

    சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் எடப்பாடி - தினகரன் அணியிடையே நடைபெறும் முதல் பலப்பரீட்சையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சென்னை:

    ஜெயலலிதாவின் மரணத்தால் காலியான ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்திருந்த நிலையில் அரசியல் கட்சிகளும் களத்தில் குதித்தன.



    அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவால் சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பி.எஸ். தலைமையில் இன்னொரு அணியும் அப்போது இருந்தது.

    இதன் காரணமாக இரட்டை இலை சின்னம் தேர்தல் கமி‌ஷனால் முடக்கி வைக்கப்பட்டிருந்தது. சசிகலா அணி சார்பில் போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் தொப்பி சின்னத்திலும், ஓ.பி.எஸ். அணி வேட்பாளரான மதுசூதனன் இரட்டை மின் கம்பம் சின்னத்திலும் போட்டியிட்டனர். ஆனால் பணப்பட்டு வாடா புகார் காரணமாக ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதன் பின்னர் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் சசிகலா அணியில் இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் கை கோர்த்தார். இருவரும் இணைந்து, சசிகலா அணிக்கு தலைமை தாங்கிய தினகரனை ஓரம் கட்டினர். ஆனால் அவரோ 18 எம்.எல்.ஏ.க்களை தன்னுடன் வைத்துக் கொண்டு ஆட்டம் காட்டினார். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் கவர்னரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும் புகார் அளித்தனர்.

    இதனால் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். அணிகள் ஒன்றாக இணைந்து நாங்கள்தான் ஒன்றுபட்ட அ.தி.மு.க. எனவே இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தன. இதற்கு எதிராக தினகரனும் மனு அளித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணையம் கடந்த 8 மாதங்களுக்கும் மேல் விசாரணை நடத்தி வந்தது.

    இதனை தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் இரட்டை இலை சின்னம் விவகாரத்திலிருந்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

    இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைத்ததை வரலாற்று சாதனையாக எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். அணியினர் கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் இரட்டை இலை சின்னத்தை மட்டுமே வைத்துக் கொண்டு இனி வெற்றி பெற முடியாது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    தினகரனும் கணிசமான அ.தி.மு.க.வினரை தன்வசம் வைத்திருப்பது போன்ற தோற்றமும் காணப்படுகிறது. இதனால் இரட்டை இலை சின்னம் கிடைத்த பிறகும் தேர்தல் களத்தில் வெற்றி என்பது ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு சவாலான வி‌ஷயமாகவே இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    ஜெயலலிதா இல்லாத வெற்றிடம், தினகரன் எதிர்ப்பு உள்ளிட்டவை புதிய அ.தி.மு.க.வுக்கு கடும் சோதனையையே ஏற்படுத்தும் என்கிற கருத்தும் பரவலாக உள்ளது. இதற்கான பலப்பரீட்சையாகவே ஆர்.கே.நகர் தேர்தல் களம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இப்போதே கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. சார்பில் மதுசூதனனே மீண்டும் போட்டியிட உள்ளார். இரட்டை இலை சின்னத்தில் அவர் களம் இறங்குகிறார்.

    அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தினகரனும் தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறார். கடந்த முறை போட்டியிட்ட தொப்பி சின்னத்திலேயே அவர் களம் இறங்குகிறார். இவர்களுக்கு இடையே தேர்தல் களத்தில் போட்டி பலமாகவே இருக்கும்.

    தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், பா.ஜனதா சார்பில் இயக்குனர் கங்கை அமரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டு தயம் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இப்போதும் அதுபோன்று ஒரு போட்டியே நிலவுகிறது.

    இருப்பினும் அ.தி.மு.க.- தி.மு.க.-தினகரன் ஆகியோருக்கு இடையே கடும் பலப்பரீட்சையாக இருக்கும். இதில் வெற்றி பெறப்போவது யார்? என்பதும் மிகப் பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.

    முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற்றுவிட்ட தெம்புடன் ஆர்.கே.நகர் தேர்தலில் களமிறங்கும் எடப்பாடி-ஓ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு ஆளும் கட்சி என்பது கூடுதல் பலமாகும். கடந்த காலங்களில் நடந்த பெரும்பாலான இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றியை ருசித்துள்ளது.



    எனவே ஆர்.கே.நகர் தேர்தலில் ஜெயலலிதா மற்றும் இரட்டை இலை சின்னத்தை முன்னிறுத்தி வெற்றி பெறும் முனைப்பில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் உள்ளனர்.

    ஆர்.கே.நகர் வெற்றியே இரட்டை இலையை மீண்டும் துளிர்க்க விடும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

    அதே நேரத்தில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளராக தொகுதி முழுவதும் சுற்றி மக்களை சந்தித்த அனுபவத்துடன் தினகரன் களம் இறங்குகிறார்.

    இது அவருக்கு ஓரளவு பலமாக பார்க்கப்பட்டாலும் அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டது பின்னடைவாக அமைந்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, இவர்கள் இருவரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு ஆர்.கே.நகரில் வெற்றி பெற தி.மு.க. காய் நகர்த்தி வருகிறது.

    Next Story
    ×