search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எங்கள் வெற்றியின் பின்னணியில் பா.ஜனதா இல்லை: ஓ.பன்னீர்செல்வம்
    X

    எங்கள் வெற்றியின் பின்னணியில் பா.ஜனதா இல்லை: ஓ.பன்னீர்செல்வம்

    எங்கள் வெற்றியின் பின்னணியில் பா.ஜனதா இல்லை என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
    சென்னை:

    இரட்டை இலை சின்னம் கிடைத்தது தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



    அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். பாதையில் ஜெயலலிதா தொண்டர் இயக்கமாக, மக்கள் இயக்கமாக நடத்தி வந்தார். அதன் மூலம் 17 ஆண்டுகள் தமிழக மக்களின் தீர்ப்பினை பெற்று, நாடு போற்றும் நல்ல முதல்-அமைச்சராக தமிழக மக்களுக்கு சிறப்பான ஆட்சியை தந்தார். இந்த இரண்டு தலைவர்களின் எண்ணப்படி தான் இயக்கமும், கட்சியும், ஆட்சியும் இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்பினார்கள்.

    மாறாக பல சோதனைகள் ஏற்பட்டது. அதன் விளைவாக தேர்தல் ஆணையத்துக்கு சென்று தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அ.தி.மு.க. நம் பக்கம் தான் இருக்கும் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை தந்து இருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் ஜனநாயகத்தின் அடிப்படையில் இயக்கம், கட்சி, ஆட்சியை வெற்றிப்பாதையில் நடத்தி செல்வோம். இந்த வெற்றியை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆன்மா தான் பெற்று தந்து இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டது. தலைமைக்கழக நிர்வாகிகள் மாற்றி அமைக்கப்படுவார் களா?

    பதில்:- ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது யாரெல்லாம் கழகத்தின் பொறுப்பாளர்களாக நியமித்தார்களோ? அவர்கள் தொடர்ந்து நீடிப்பார்கள்.



    கேள்வி:- உங்கள் வெற்றிக்கு பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாக டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டி இருக்கிறாரே?

    பதில்:- அ.தி.மு.க.வின் அறுதிபெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களாலும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களாலும் ஏகமனதாக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு சட்டவிதியின் படி இந்திய தேர்தல் ஆணையத்தில் முறையிட்டோம். அதன்படி தான் இந்த தீர்ப்பு வந்து இருக்கிறது. எங்களுக்கு பின்னாலும் யாரும் இல்லை. முன்னாலும் யாரும் இல்லை.

    கேள்வி:- டி.டி.வி.தினகரன் இரட்டை இலை சின்னம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடப்போவதாக கூறி இருக்கிறாரே?

    பதில்:- கழகத்தின் சட்டவிதிப்படி கட்சியை வழிநடத்துகிறார்களா? என்று கவனிக்கின்ற பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தான் இருக்கிறது. டி.டி.வி.தினகரனுக்கு இல்லை.

    கேள்வி:- 117 எம்.எல்.ஏ.க்கள் உங்களுக்கு தேவை, ஆனால் 111 எம்.எல்.ஏ.க்கள் தான் இருக்கிறார்கள். நீங்கள் பெரும்பான்மையை இழந்துவிட்டதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்து இருக்கிறாரே?

    பதில்:- ஜெயலலிதா கஷ்டப்பட்டு உருவாக்கிய ஆட்சி இது. இந்த ஆட்சியை கவிழ்த்திட வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் டி.டி.வி.தினகரன் செயல்படுகிறார். அதை அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமட்டார்கள்.

    இவ்வாறு அவர் பதிலளித்தார்.
    Next Story
    ×