search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனல்மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் பி.தங்கமணி
    X

    அனல்மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் பி.தங்கமணி

    ‘தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை’, என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.
    சென்னை:

    சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், உதனப்பள்ளி கிராமத்தில் தொடங்கப்பட உள்ள தனியார் தொழிற் பூங்காவிற்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்சார துறை அமைச்சர் பி.தங்கமணி முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. தொடர்ந்து மின்கட்டணம் செலுத்தும் எளிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் வாரிய தலைவர் எம்.சாய்குமார், எரிசக்தி துறை முதன்மை செயலாளர் விக்ரம் கபூர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் பி.தங்கமணி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு 3 ஆயிரம் வசூல் மையங்கள் மூலம் எளிமையான முறையில் மின்கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொடர்ந்து தமிழகத்தில் தொழில் தொடங்கி வருகின்றன. அவர்களுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.



    நிலக்கரி தட்டுப்பாட்டால் அனல்மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதில் உண்மை இல்லை. அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி அனுப்பப்பட்டு வருகிறது.

    மழைக்காலம் தொடங்கிவிட்டதால் தேவையான கருவிகளுடன் மின்சார வாரியம் தயார் நிலையில் உள்ளது. காற்று, மழை அதிகம் ஏற்படும் போது பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனை மின்தடை என்று தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.

    ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்று பவர்களை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை வரும் பிப்ரவரி மாதம் முதல் அமல்படுத்த உள்ளோம்.

    வடசென்னை பகுதியில் சாம்பல் கலக்கப்பட்ட பகுதியில் நடிகர் கமல்ஹாசன் பார்ப்பதற்கு முன்பாகவே நாங்கள் பார்த்து, போதிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×