search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    நீட்டை புதைக்குழிக்கு அனுப்பும்வரை ஓய மாட்டோம்: திருச்சி பொதுக்கூட்டத்தில் ஜவாஹிருல்லா ஆவேசம்
    X

    நீட்டை புதைக்குழிக்கு அனுப்பும்வரை ஓய மாட்டோம்: திருச்சி பொதுக்கூட்டத்தில் ஜவாஹிருல்லா ஆவேசம்

    நீட் தேர்வை புதைக்குழிக்கு அனுப்பும் வரை ஓய மாட்டோம் என திருச்சியில் நடைபெற்ற எதிர்கட்சிகள் பொதுக்கூட்டத்தில் ஜவாஹிருல்லா ஆவேசமாக பேசினார்.
    திருச்சி:

    நீட் தேர்வுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சியில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தடைவிதித்த நிலையில், பொதுக்கூட்டத்திற்கான அனுமதியை கடைசி நேரத்தில் திரும்ப பெறுவதாக காவல்துறை கூறியது. ஆனாலும், திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் தொடங்கியது.

    இக்கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஹவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் தலைவர்கள் திருமாவளவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் ராமகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின் தொடக்கத்தில், நீட் தேர்வுக்கு எதிராக போராடி உயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இக்கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேசியதாவது:-

    மருத்துவக் கனவுகளோடு வாழ்ந்த ஆயிரக்கணக்கான அனிதாக்கள் இருக்கிறார்கள். அவர்களின் கனவுகளை எல்லாம் குழிதோண்டி புதைக்கும் திட்டம் இந்த நீட் தேர்வு. இந்த நீட் தேர்வை கொண்டு வந்துள்ள பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சுகாதார வசதியை பார்க்க முடியாது. பிறந்த குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்துபோகும், சாதனைக்குரிய ஆதித்யநாத் ஆட்சிதான் அவர்களின் ஆட்சி.

    இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் 24 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. சவால் விடுகிறோம், இதில் 10 விழுக்காடு கல்லூரிகளைக் கூட நீங்கள் ஆளும் (பா.ஜ.க.) மாநிலங்களில் ஏற்படுத்த முடிந்ததா?‘

    நீட் மூலம், வெளிமாநில மாணவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு மாணவர்களும் மருத்துவ இடங்களை ஆக்கிரமிக்கும் அளவுக்கு சதி வந்துள்ளது. இது சர்வதேச சதி. அந்த சதிக்கு பா.ஜ.க.வும், இங்கு இருக்கும் பா.ஜ.க. பினாமிகளும், குதிரை பேர எடப்பாடி பழனிச்சாமி அரசும் ஒத்துப்போய் உள்ளன.

    வெளிநாட்டவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. நம் வசதியை கபளீகரம் செய்வதற்காக கொண்டு வரப்பட்டதுதான் நீட். தமிழ்நாட்டில் நீட்டுக்கு முன் படித்த மருத்துவ மாணவர்களில் 71 சதவீத மருத்தவர்கள் தமிழ்நாட்டில் மருத்துவம் செய்கிறார்கள். 51 சதவீதம் பேர் அரசு மருத்துவர்களாக இருக்கறார்கள்.

    நீட் வந்தால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்றால், நம் கிராமப்பறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ வசதிகளை செய்ய முடியாத நிலை ஏற்படும். ஏழை, எளியவர்களுக்கு மருத்துவ வசதி கிடைக்காத நிலை வரும்.

    தமிழிசை சொன்னதுபோல் கல்விப்புரட்சி நடைபெறவில்லை, மக்களை ஏமாற்றக்கூடிய புரட்டுத்தனத்தை பா.ஜ.க. செய்கிறது.


    தகுதி என்று சொல்கிறார்கள். இந்த தகுதி இப்போது சந்தி சிரிக்கிறது. நீட் தேர்வு முடிவுகளை ஹேக் செய்து மாற்றிய தகவல் அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக சிலரை டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது. எனவே, தகுதி-திறமை என்று சொல்வதெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள மக்களை வஞ்சிக்கக்கூடிய மிகப்பெரிய மோசடி. இதை மோசடி ஆட்சியான மோடி ஆட்சி அமல்படுத்தி வருகிறது. இந்த நீட் இல்லாமலேயே மிகத் திறமையான மருத்துவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இவர்கள் எல்லாம் தங்கள் சொந்த தகுதியில் வந்தவர்கள்.

    சமூக நீதியை, மாநில உரிமைகளை, தமிழர்களின் உரிமைகளை நசுக்கக்கூடிய மோடி ஆட்சியை, எடப்பாடி ஆட்சியை வீழ்த்தும் வரை ஓய மாட்டோம். தொடர்ந்து போராடுவோம். நீட் தேர்வை புதைக்குழிக்கு அனுப்பும் வரை ஓய மாட்டோம். இந்த நீட் எதிர்த்து போராடுவதற்காக சிறை செல்லவும் தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×