search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின் நடத்தும் முரசொலி பவளவிழாவில் வைகோ பங்கேற்கிறார்
    X

    மு.க.ஸ்டாலின் நடத்தும் முரசொலி பவளவிழாவில் வைகோ பங்கேற்கிறார்

    மு.க.ஸ்டாலின் நடத்தும் முரசொலி பவளவிழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்கிறார். 24 தலைவர்களும் ஒரே மேடையில் பேசுகிறார்கள்.

    சென்னை:

    முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 5-ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டம் முன்னதாக கடந்த 11-ந்தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பலத்த மழை பெய்ததால் அன்று ரத்து செய்யப்பட்ட விழா தற்போது நடைபெறுகிறது.

    தி.மு.க. செயல் தலைவரும், முரசொலி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான மு.க.ஸ்டாலின் நடத்தும் இந்த கூட்டத்துக்கு, கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். முதன்மை செயலாளர் துரைமுருகன், மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் முரசொலி விழாவில் கலந்து கொள்கின்றனர்.

    இந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் வீரமணி, காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கலந்து கொள்கிறார்கள்.

    மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய சமூக நீதி இயக்க தலைவர் பேராசிரியர் எஸ்றா சற்குணம், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி தலைவர் பொன்.குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி அமைப்பாளர் என்.ஆர்.தனபாலன்.

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், தமிழ் மாநில தேசிய லீக் பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப், அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் அம்மாவாசி, அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில பொதுச் செயலாளர் கதிரவன், ஆதி தமிழர் நிறுவனர் அதியமான், தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்ட 24 தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

    தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று தனிக் கட்சியை நடத்தி வரும் வைகோ, கடந்த சில ஆண்டுகளாகவே தி.மு.க. எதிர்ப்பை கடுமையாக காட்டி வந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் கூட்டணியை உருவாக்கி மாற்று அணியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். விஜயகாந்தை முன்னிலைப்படுத்தி தேர்தலை சந்தித்த மக்கள் நலக் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இதன் பின்னர் அந்த கூட்டணி கலகலத்து காணாமல் போய்விட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தி.மு.க. தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார் வைகோ. அப்போது பேட்டி அளித்த அவர் கருணாநிதியுடனான பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன் முரசொலி விழாவில் பங்கேற்பேன் என்றும் அறிவித்தார்.


    இதனையடுத்து விழா அழைப்பிதழில் புதிதாக வைகோவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. கருணாநிதியை வைகோ சந்தித்த பின்னரே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கருணாநிதி மீது எப்போதுமே அளவு கடந்த பாசத்தை வெளிப்படுத்துவார்.

    இதற்கு முன்னர் பல்வேறு கால கட்டங்களில் அவர் அதனை வெளிப்படுத்தி வந்துள்ளார். கருணாநிதியை பற்றி பேசும்போது அவர் கண்ணீர் வடித்த சம்பவங்களும் உண்டு.

    பல ஆண்டுகளுக்கு பின்னர், தி.மு.க. தலைவர்களுடன் ஒரே மேடையில் வைகோ கலந்து கொள்வது தி.மு.க., ம.தி.மு.க. தொண்டர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த கூட்டத்தில் வாழ்த்துரை வழங்கும் வைகோ கருணாநிதியுடனான தனது பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து பேசுவார் என்றும், இது நிச்சயம் 2 கட்சி தொண்டர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருக்கும் என்றே கருதப்படுகிறது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டதே தி.மு.க. வின் தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது.

    எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்த கட்சி தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க தி.மு.க. திட்ட மிட்டுள்ளது. அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் அது மெகா கூட்டணியாகவே இருக்கும். அதற்கான அச்சாரமாகவே இது உள்ளது.

    அ.தி.மு.க.வுடன் கை கோர்த்து பாரதீய ஜனதா கட்சி தமிழகத்தில் கால் பதிக்க திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. இதனை முறியடிக்கும் விதத்திலேயே தி.மு.க.வுடன் அனைத்து எதிர்க்கட்சிகளும் கை கோர்க்க திட்டமிட்டுள்ளன.

    ஜெயலலிதா இருந்த போது அ.தி.மு.க. அணியில் இருந்த சேதுராமன், எர்ணாவூர் நாராயணன், திருப்பூர் அல்தாப், வேல்முருகன் கதிரவன் உள்ளிட்டோரும் முரசொலி விழாவில் பங்கேற்கிறார்கள். இவர்களும் தேர்தல் களத்தில் தி.மு.க.வுடன் நிச்சயம் கைகோர்ப் பார்கள் என்றே தெரிகிறது.

    Next Story
    ×