search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    நீர்நிலை மராமத்து பணி ஒதுக்கீட்டில் ரூ.75 கோடி கமி‌ஷன் வசூலிக்க திட்டம்: வைகோ குற்றச்சாட்டு
    X

    நீர்நிலை மராமத்து பணி ஒதுக்கீட்டில் ரூ.75 கோடி கமி‌ஷன் வசூலிக்க திட்டம்: வைகோ குற்றச்சாட்டு

    நீர்நிலை மராமத்து பணி ஒதுக்கீட்டில் ரூ.75 கோடி கமி‌ஷன் வசூலிக்க திட்டம் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள கண்மாய்கள் தூர் வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு முறையாக நீரைத் தேக்கி வைத்து விவசாயிகளுக்கு உதவிட வேண்டும் என்பதை ம.தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    தற்சமயம் உலக வங்கி நிதியுதவியுடன் நவீன முறையில் நீரைத் தேக்கி வைத்து நீர்ப்பாசனத்திற்கு பயன்படுத்த மேலாண்மைத் திட்டத்தின் கீழ் 640 கோடி ரூபாய் அளிக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள சுமார் 3000 கண்மாய்களை சீரமைக்கும் பணிக்கு ஆகஸ்ட் 1 முதல் 11 வரை தமிழகம் முழுவதும் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு உள்ளன.

    தற்போது அந்த ஒப்பந்தப் பணிக்கு தகுதியானவர்களுக்கு வேலை அனுமதி வழங்குவதற்கு முன்பாக பொதுப்பணித்துறையின் மண்டல தலைமைப் பொறியாளர் பொறுப்பில் உள்ளவர்கள், தத்தமது மாவட்ட நிலையில் உள்ள அலுவலர்களிடம், ஒப்பந்தக்காரர்களிடம் கராராகப் பேசி 11.5 சதவீத கமிசனை வருகின்ற 21.08.2017 திங்கள் மாலை 4 மணிக்குள் அதிகாரத்தில் உள்ள முக்கியப் பிரமுகரிடம் ஒப்படைத்திட வேண்டுமென வலியுறுத்தி உள்ளதாக தெரிகிறது.

    இதில் சட்டவிரோதமாக சுமார் 75 கோடி ரூபாய் கமிசன் வசூலிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால், பொதுப்பணித்துறையின் கீழ்மட்ட அலுவலர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். ஒப்பந்தக்காரர்களிடம் வசூலித்து கமிசனை கொடுத்துவிட்டு வேலை அனுமதி வழங்க முடியாத நிலை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    விவசாயிகளின் நீராதாரத்தை மேம்படுத்த வேண்டிய கண்மாய் குடிமராமத்துப் பணிகளையும் விட்டு வைக்காமல் கோடிக் கணக்கில் கொள்ளை அடிக்க முயற்சிக்கும் தமிழக அரசுக்கும், பொதுப்பணித் துறைக்கும் ம.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    விவசாயிகளின் நீரா தாரத்தை மேம்படுத்தவும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும், வீணாகும் மழை நீரைத் தேக்கி வைக்கவும் இக்குடிமராமத்துப் பணிகள் தரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது நிச்சயமானதாகும். இதில் ஊழல் கமிசனுக்கு இடம்பெறாமல் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகின்றேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×