search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஆட்சியை மாற்ற திட்டம்: தீவிர நெருக்கம் காட்டும் என்.ஆர்.காங்- பா.ஜனதா
    X

    ஆட்சியை மாற்ற திட்டம்: தீவிர நெருக்கம் காட்டும் என்.ஆர்.காங்- பா.ஜனதா

    புதுவையில் ஆட்சியை மாற்றும் நோக்கத்தோடு என்.ஆர். காங்., பா.ஜனதா இரு கட்சிகளும் கைகோர்த்து இணக்கமாக செயல்பட்டு வருகிறது. இது புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    புதுச்சேரி

    ஜனாதிபதி தேர்தலையொட்டி பா.ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா புதுவை வந்திருந்தார். ஜனாதிபதி தேர்தலில் புவையின் பிரதான எதிர்கட்சியான என்.ஆர்.காங். அ.தி.மு.க. பா.ஜன தாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமியை சந்தித்த அமித்ஷா ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்ததோடு புதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்பட பா.ஜனதா உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளித்தார்.

    இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நேரடியாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை புதுவை சட்டமன்றத்திற்கு நியமித்து காங்கிரசுக்கு நெருக்கடி அளித்தது. இந்த நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்திற்குள் அனுமதிக்க முடியாது என சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். இருப்பினும் ஆட்சி மாற்றத்திற்கான வித்தாகவே நியமன எம்.எல்.ஏக்களின் நியமனம் கருதப்பட்டு வந்தது.

    சமீபத்தில் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான ஒருசில மணி நேரங்களிலேயே என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமி பா.ஜனதா வேட்பாளர் வெங்கையநாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    இதன் மூலம் பா.ஜனதா, என்.ஆர்.காங். உறவு வலுப்பட ஆரம்பித்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது.

    இதையொட்டி என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புதுவை மாநிலம் முழுவதும் பேனர், சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடத்தக்க வகையில். பா.ஜனதா சார்பிலும் ரங்கசாமியை வாழ்த்தி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

    கூட்டணி கட்சி தலைவரான ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்து கால்பந்து வீரர் ரொனால்டோ போலவும், டென்னிஸ் வீரர் பெடரர் போலவும் சாம்பியன் ரங்கசாமி என சித்தரித்து பா.ஜனதாவை சேர்ந்த ஊசுடு தொகுதி சாய் சரவணன் பேனர் வைத்துள்ளார். கிராமப் புறங்களிலும் ஒரு சில பகுதியில் பா.ஜனதாவினர் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்து சுவர் விளம்பரங்கள் செய்துள்ளனர்.

    சட்டமன்ற தேர்தலின் போது என்.ஆர்.காங். மற்றும் பா.ஜனதா தனித்து போட்டியிட்டனர். தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தோடு இரு கட்சிகளும் கைகோர்த்து இணக்கமாக செயல்பட்டு வருகிறது. இது புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    Next Story
    ×