search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
    X

    போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

    குட்கா ஊழலை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டு போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் துறையான வருமானவரித்துறை, தலைமை செயலாளர் ராமமோகன ராவிடம் அளித்த குட்கா ஊழல் குறித்த கோப்புகள் தலைமை செயலகத்தில் இருந்து காணாமல் போய்விட்டது என்று வெளிவந்துள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த முதன்மை இயக்குனர் பாலகிருஷ்ணன் நேரடியாக கோட்டைக்குச் சென்று தலைமைச் செயலாளரை சந்தித்து கொடுத்த கோப்பு காணவில்லை என்ற செய்தி குட்கா ஊழலில் சம்பந்தப்பட்ட முன்னாள் காவல்துறை ஆணையர்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரை காப்பாற்ற நடைபெற்ற மிகப்பெரிய கூட்டுச் சதியாக தெரியவருகிறது.

    தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையில் ரூ.250 கோடி வரி ஏய்ப்பும், போலீஸ் கமிஷனர்கள் மற்றும் அமைச்சர்களின் ரூ.40 கோடி குட்கா ஊழலும் 8-7-2016 அன்று நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாமூல் விவரங்கள் அடங்கிய கோப்பு 12-8-2016 அன்று தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகனராவிடம் கொடுக்கப்பட்டது. அதன் இன்னொரு நகல் தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. அசோக் குமாரிடமும் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

    வருமான வரித்துறையின் இந்த கோப்பு மீது விசாரிக்க டி.ஜி.பி. அசோக்குமார் முயற்சி செய்ததால்தான் போலீஸ் துறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டது. 2016-ம் ஆண்டு நவம்பர் 4-ந் தேதி வரை டி.ஜி.பி.யாக இருக்க வேண்டிய அசோக்குமார் கட்டாயமாக விருப்ப ஓய்வில் இரவோடு இரவாக வெளியேற்றப்படுகிறார். அந்த பதவிக்கு குட்கா டைரியில் இடம் பெற்றுள்ள டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார். அதுவும் உளவுத்துறை டி.ஜி.பி.யாக அவரை நியமித்து, சட்டம் - ஒழுங்கு பதவியை கூடுதல் பொறுப்பாக பார்க்க உத்தரவிடப்பட்டது.

    பல மூத்த டி.ஜி.பி.க்கள் இருந்தும் உளவுத்துறைக்கும், சட்டம்-ஒழுங்கிற்கும் ஒரே டி.ஜி.பி.யாக டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டதே குட்கா விவகாரத்தை மூடி மறைப்பதற்காகத்தான். அப்போது டி.ஜி.பி.க்கு கொடுத்த வருமானவரித்துறை கோப்பு நகலும் காணாமல் போயிருக்கிறது.

    ராமமோகன ராவ் வீட்டில் ரெய்டு செய்யப்பட்டு, அவர் மாற்றப்பட்ட பிறகு புதிய தலைமைச் செயலாளராக பதவியேற்றார் கிரிஜா வைத்தியநாதன். தலைமைச் செயலாளர்தான் மாறினாரே தவிர தலைமைச் செயலாளர் அலுவலகம் மாறவில்லை. ஆகவே பொறுப்பேற்றதும் ராமமோகன ராவிடம் இருந்த கோப்புகள் எல்லாம் கிரிஜா வைத்தியநாதனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். அதுதான் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் உள்ள நடைமுறை. ஒரு வேளை அந்த கோப்புகள் கிடைக்கவில்லை என்றால் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் எழுதிய கடிதத்தின் அடிப்படையிலாவது கிரிஜா வைத்தியநாதன் அந்த கோப்பை எங்கே என்று கேட்டிருக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் குட்கா டைரியில் இடம் பெற்றுள்ள டி.கே.ராஜேந்திரனை டி.ஜி.பி.யாக நியமிக்கும்போது அந்த கோப்புகளை கொண்டு வாருங்கள் என்று உத்தரவிட்டு இருக்க வேண்டும்.

    கடைசிக் கட்டமாக ஐகோர்ட்டில் கிரிஜா வைத்தியநாதன் தன் பெயரில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த போதாவது வருமான வரித்துறை வழங்கிய கோப்பு தலைமைச் செயலகத்தில் இல்லை என்ற உண்மையை ஐகோர்ட்டு நீதிபதிகள் முன்பு கூறியிருக்க வேண்டும். பொறுப்புள்ள பதவியில் இருக்கும் கிரிஜா வைத்தியநாதனின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரும்பியவாறு டி.ஜி.பி.யாக டி.கே.ராஜேந்திரனை நியமிக்க தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இந்த அளவிற்கு சட்ட விரோதமாக அனைத்து ஒத்துழைப்பும் வழங்கியிருக்கிறார் என்பது தமிழகத்தில் உள்ள 350-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தலைகுனிய வைத்துள்ளது. குட்கா ஊழல்கள் செய்தி தாள்களிலும், தொலைக்காட்சிகளும் தினசரி விவாதங்களாக வந்த பிறகும் டி.கே.ராஜேந்திரனின் பொறுப்பில் உள்ள மாநில உளவுத்துறையும் குட்கா மாமூல் விவரங்களை மறைக்க உடந்தையாக இருந்திருப்பது கவலையளிக்கிறது.

    ஆகவே “குட்கா” தொடர்பான வருமான வரித்துறை கோப்புகள் காணாமல் போனதற்கு முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ், கிரிஜா வைத்தியநாதன், தற்போது டி.ஜி.பி.யாக இருக்கும் டி.கே.ராஜேந்திரன் ஆகிய மூவரும் முழுப் பொறுப்பாவார்கள். இவ்வளவு பெரிய ஊழலை மறைத்து, சட்டமன்றத்தில் இதுகுறித்த விவாதம் எழுந்தபோது இந்த கோப்பு காணவில்லை என்பதை சட்டமன்றத்திற்கும் மறைத்து, குட்கா டைரியில் இடம்பெற்றவரையே கட்டுப்பாடும், ஒழுக்கமும் மிக்க தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாகவும் நியமித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசு நிர்வாகத்தை அனைத்து விதத்திலும் சீரழித்து விட்டார்.



    ஆகவே குட்கா ஊழலை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டு, டி.ஜி.பி. ராஜேந்திரனை பதவிநீக்கம் செய்து நேர்மையான ஒரு டி.ஜி.பி.யை கண்ணியமிக்க தமிழக காவல்துறைக்கு நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அத்துடன் முதல்-அமைச்சர் பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு சுதந்திரமான விசாரணை நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    Next Story
    ×