search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பி.எஸ். அணியில் இருந்து ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. விலக முடிவு?
    X

    ஓ.பி.எஸ். அணியில் இருந்து ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. விலக முடிவு?

    ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்து கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    கணபதி:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. இதில் சசிகலா தரப்பில் ஒரு அணியாகவும், ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஓ. பன்னீர் செல்வம் தனி அணியாக பிரிந்து சென்றதும் அவருக்கு கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி முதலில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இதையடுத்து மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு அளித்தனர்.

    சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதால் 2 அணிகளையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது இதுவரை நிறைவேறவில்லை.

    ஆனாலும் ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., தொடர்ந்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். சமீபத்தில் ஓ.பன்னீர் செல்வம் சிகிச்சைக்காக கோவை வந்த போதும் அவரை ஆறுக்குட்டி வரவேற்று அழைத்து வந்தார்.

    அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை ஓ. பன்னீர்செல்வம் மாவட்டந்தோறும் சந்தித்து வருகிறார். கோவைக்கு வருகிற 29-ந் தேதி வருகை தருகிறார். இதற்கான விழா பந்தல் அமைக்கும் பூமி பூஜை கொடிசியாவில் இன்று காலை நடந்தது. இதில் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். மேலும் அவர் அணி மாற போவதாகவும் தகவல் பரவியது.

    இது குறித்து ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.விடம் கேட்ட போது அவர் கூறியதாவது,

    ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டத்துக்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது. இதில் கலந்து கொள்ள எனக்கு முறையான அழைப்பு இல்லாததால் நான் புறக்கணித்தேன்.

    கோவையில் எனது தொகுதி மிகப்பெரிய தொகுதி ஆகும். இந்த தொகுதியில் 4 லட்சத்து 5 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். எனவே தொகுதி மக்களிடமும், கட்சி நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்தி வருகிறேன். அவர்கள் சொல்லும் முடிவு படி செயல்படுவேன். என்னை பொறுத்தவரை தொகுதி மக்கள் தான் முக்கியம். எனவே விரைவில் எனது முடிவை அறிவிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஓ.பன்னீர் செல்வம் அணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் எடப்பாடி அணியில் சேர போகிறார்கள் என்ற தகவல் பரவி வந்த நிலையில் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.வின் இந்த அறிவிப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

    எனவே திருப்பூரில் நாளை நடக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., அவரது அணியில் இணையலாம் என்று கூறப்படுகிறது. இதனால் எடப்பாடியின் செல்வாக்கு மேலும் அதிகரித்துள்ளது.

    நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தில் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. பேசும் போது தனது தொகுதிக்கு வளர்ச்சி திட்டப்பணிகளை செய்து கொடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×