search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதிக்காத அமைச்சரின் சட்டமன்ற உரையை எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தது ஏன்?: புதிய தகவல்
    X

    மதிக்காத அமைச்சரின் சட்டமன்ற உரையை எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தது ஏன்?: புதிய தகவல்

    சட்டசபையில் மானிய கோரிக்கை மீது அமைச்சர் எம்.சி. சம்பத் பதில் அளித்து உரையாற்றியபோது சில அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் புறக்கணித்தது ஏன் என்பது தொடர்பாக புதிய தகவல்கள் கிடைத்துள்ளது.
    சென்னை:

    சட்டசபையில் தொழில் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.



    அப்போது வணிக வரித்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் பதில் அளித்து பேசினார்.

    அவரது உரையை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பண்ருட்டி சத்யா, சிதம்பரம் பாண்டியன், விருத்தாசலம் கலைச்செல்வன், காட்டுமன்னார் கோவில் முருகுமாறன் ஆகிய 4 பேரும் புறக்கணித்தனர். அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சபையை விட்டு எழுந்து சென்று விட்டனர்.

    சட்டசபையில் மானிய கோரிக்கை மீது அமைச்சர் பதில் சொல்லும் போது ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சபையில் இருப்பது வழக்கம். ஆனால் நேற்று ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் அமைச்சரின் பதில் உரையை புறக்கணித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். அவரை சட்டசபையில் புறக்கணித்த 4 எம்.எல்.ஏ.க்களும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்தான். இவர்களுக்குள் ஏற்கனவே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

    இவர்கள் கடலூர் மாவட்ட நிகழ்ச்சிகளில் அமைச்சர் சம்பத்தை புறக்கணித்து வருகின்றனர். இப்போது சட்டசபையிலும் அவரை புறக்கணித்துள்ளனர்.

    இதுபற்றி சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. கே.ஏ.பாண்டியனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    அமைச்சர் எம்.சி.சம்பத் மாவட்டத்தில் உள்ள 4 எம்.எல்.ஏ.க்களையும் மதிப்பதில்லை. எங்களுடன் பேசுவதும் கிடையாது. தொகுதி பிரச்சினை பற்றி கேட்பதும் கிடையாது.

    நாங்கள் 4 பேரும் அம்மா தயவால் நேரடியாக எம்.எல்.ஏ. சீட் வாங்கினோம். அது எம்.சி. சம்பத்துக்கு பிடிக்கவில்லை.

    எங்கள் தேர்தல் பிரசாரத்துக்கும் அமைச்சர் சம்பத் வந்ததில்லை.

    நோட்டீசில் பெயர் போட்டும் அவர் நிகழ்ச்சிகளுக்கு வருவது கிடையாது. மாவட்ட அமைச்சர் என்ற முறையில் தொகுதி நிலவரம் எதையும் அவர் கண்டு கொள்வது கிடையாது.

    நாங்கள் இதுபற்றி மேலிடத்தில் ஏற்கனவே புகார் தெரிவித்திருக்கிறோம். முதல்-அமைச்சரிடமும் புகார் சொல்லி உள்ளோம்.

    எங்களை மதிக்காமல் உதாசீனப்படுத்தும் அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் பேச்சை புறக்கணித்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சட்டசபையில் ஏற்கனவே ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ., தங்கதமிழ்ச்செல்வன் பேச வாய்ப்பு தருவதில்லை என்று சபாநாயகருடன் வாக்குவாதம் செய்து சபையை புறக்கணித்துள்ளார்.

    அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்களான தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் மாட்டு இறைச்சி பிரச்சினையில் வெளிநடப்பு செய்தனர். நேற்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேரறிவாளன் விசயம் குறித்து பேசி உள்ளனர்.

    ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கட்டுக்கோப்பாக இருந்தனர். ஆனால் இப்போது அந்த கட்டுப்பாட்டை காண முடியவில்லை.

    Next Story
    ×