search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் நடப்பது குதிரை பேர ஆட்சி: மு.க.ஸ்டாலின்
    X

    தமிழகத்தில் நடப்பது குதிரை பேர ஆட்சி: மு.க.ஸ்டாலின்

    மக்கள் தேர்ந்து எடுத்தது ஜெயலலிதா ஆட்சி. இப்போது நடப்பது குதிரை பேரத்தால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஆட்சி என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
    சென்னை:

    ரம்ஜான் பண்டிகையையொட்டி கொளத்தூர் தொகுதியில் 1,200 இஸ்லாமிய குடும்பங்களுக்கு சட்டை, புடவைகள், பிரியாணி அரிசி உள்பட பொருட்களையும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் 50 பேருக்கு கல்வி உதவித்தொகை, 4 பேருக்கு மருத்துவ நிதி உதவி, 6 பேருக்கு தையல் எந்திரங்கள் ஆகிய நலத்திட்ட உதவிகளையும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரியார் நகரில் நடந்த இவ்விழாவில் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றி பேசியதாவது:-

    மாட்டிறைச்சிக்கு மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சி தடை போட்டு இருக்கிறது. நாம் என்ன சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்று முடிவு செய்கிற உரிமை நமக்கு உண்டு. அதை வேறு யாரும் திணிக்கக்கூடாது, அந்த உரிமையில் யாரும் தலையிடவும் கூடாது.

    ஆனால், எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்று சொல்லும் ஒரு அகங்காரமிக்க, சர்வாதிகாரமிக்க ஆட்சியாக மட்டுமல்ல, மதவாத கட்சி என்பதை வெளிக்காட்டும் வகையில் நடைபெறும் ஆட்சியாக பா.ஜ.க. அரசு மத்தியில் நடக்கிறது. ஆனால், அதை தட்டிக்கேட்க முடியாத ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.



    சில பத்திரிகையாளர்கள் என்னிடத்தில், ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்று சொல்கிறீர்களே, இது நியாயமா?’ என்று கேட்டார்கள். மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டது தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி. இப்போது நடப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியல்ல, குதிரை பேரத்தால் நடக்கும் ஆட்சி.

    எனவே, ஏழை, எளிய மக்களுக்கு விரோதமான, சிறுபான்மை சமுதாயத்தினருக்கு எதிரான ஆட்சியாக இன்றைக்கு ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. இதையெல்லாம் நீங்கள் புரிந்து கொண்டு, எதிர்வரும் காலகட்டத்தில், ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் மக்களைப் பற்றி சிந்திக்கக்கூடிய, உங்களுக்காக பாடுபடக்கூடிய, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தலைமையில் பீடு நடை போடக்கூடிய தி.மு.க. ஆட்சி அமைய நீங்கள் எல்லாம் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். 
    Next Story
    ×