search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டசபையில் அமைதி காக்கும் ஓ.பி.எஸ். அணி
    X

    சட்டசபையில் அமைதி காக்கும் ஓ.பி.எஸ். அணி

    தமிழக சட்டசபையில் எந்தப் பிரச்சனையையும் கிளப்பாமல் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் அமைதி காத்து வருகிறார்கள்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீப காலமாக ஓ.பி.எஸ். அணியினர் அமைதி காத்து வருகிறார்கள்.

    முன்பு அடிக்கடி அமைச்சர்களையும், அரசையும் ஓ.பி.எஸ். அணியினர் கடுமையான குற்றச்சாட்டுகளால் தாக்கிப் பேசி வந்தனர். இடையில் இரு அணியையும் இணைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தை தொடங்கப்படாமல் அதற்கான குழுவும் கலைக்கப்பட்டு விட்டது. அதன்பிறகு ஓ.பி.எஸ். அணியினர் அமைதியாகி விட்டனர்.

    மத்திய அரசின் தலையீடு காரணமாக சமரச போக்குடன் செயல்படுவதாக தகவல் வெளியானது. அதற்கு ஏற்றபடி எங்களால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எந்த நெருக்கடியும் ஏற்படாது. கவிழ்க்க மாட்டோம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். அதற்கு எடப்பாடி பழனிசாமி அணியினர் வரவேற்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தற்போது நடைபெறும் சட்டசபை கூட்டத்திலும் ஓ.பி.எஸ். அணியினர் அமைதி காத்து வருகிறார்கள். கேள்வி நேரத்தின்போது மட்டும் கேள்வி எழுப்பி பதில் பெற்று வருகிறார்கள். மற்றபடி முக்கியமான பிரச்சனைகளில் ஒதுங்கியே இருக்கிறார்கள்.

    வெளிநடப்பு எதுவும் செய்யாமல் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்கிறார்கள். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். அதுவரை தர்ம யுத்தம் தொடரும் என்று ஓ.பி.எஸ். அணியினர் வெளியில் பேசி வந்தனர்.

    சட்டசபையில் இது தொடர்பாக கூட எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பது மற்ற கட்சியினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
    Next Story
    ×