search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசியல் நிலவரம்: பிரதமர் மோடி - எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை
    X

    தமிழக அரசியல் நிலவரம்: பிரதமர் மோடி - எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை

    இன்று மாலை டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். அப்போது இருவரும் தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தவுள்ளனர்.
    சென்னை:

    சசிகலா தலைமையிலான அ.தி.மு.க. அம்மா அணியையும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியையும் ஒன்றாக இணைக்க சமீபத்தில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    அ.தி.மு.க.வினர் ஒன்றுபட்டால்தான் இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற முடியும் என்பதால் இரு அணிகளையும் இணைக்க சிலர் மனப்பூர்வமாக ஆதரவு கரம் நீட்டினார்கள். ஆனால் சிலர் தங்களின் இப்போதைய பதவியும் அந்தஸ்தும் பறிபோய் விடும் என்ற பயத்தில் இணைப்பு முயற்சிக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார்கள்.



    ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறுகையில், “தங்களுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் எந்த பதவியும் முக்கியமல்ல, சசிகலா குடும்பத்தின் தலையீடு இருக்கக் கூடாது அவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்” என்கிறார்கள்.

    ஆனால் இதை ஏற்க அ.தி.மு.க. அம்மா அணி தலைவர்கள் மறுத்து வருகிறார்கள். இதனால் அ.தி.மு.க. இரு அணிகளின் இணைப்பு முயற்சி ஒரு கட்டத்துக்கு மேல் நகரவில்லை. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.

    அப்போது அவர், தமிழ்நாட்டில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, வறட்சி நிவாரணம், விவசாய கடன் தள்ளுபடி, நீட் தேர்வு விவகாரம் போன்றவை குறித்து பேசியதாக கூறப்பட்டது. ஆனால் உண்மையில் அவர்கள் தமிழக அரசியல் நிலவரம் பற்றியே அதிகம் பேசினார்கள். குறிப்பாக அ.தி.மு.க. அம்மா அணியினரின் செயல்பாடுகள் பற்றி ஓ.பி.எஸ். விளக்கமாக பிரதமரிடம் எடுத்துக் கூறினார்.



    மேலும் சசிகலா, டி.டி.வி. தினகரனின் தலையீடு தொடர்ந்து நீடிப்பதாகவும் சிறைக்குள் இருந்தபடி சசிகலா ஆட்சியை நடத்த முயற்சிகள் செய்வதாகவும் பிரதமரிடம் அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியினர் கூறியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, அ.தி.மு.க. அம்மா அணி மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பிதுரையை அழைத்து பேசினார்.

    இந்த சந்திப்புகளுக்கு பிறகே டி.டி.வி.தினகரன் மீது ராசியான தேர்தல் தேதிக்காக ரூ.10 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார் என்று டெல்லி போலீசார் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். மத்திய அரசின் இந்த அதிரடியால் அ.தி.மு.க. அம்மா அணி தலைவர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

    மத்திய அரசின் செயல்பாடுகளை எதிர்த்து எதை யுமே செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.

    மோடியை ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை இருவரும் அடுத்தடுத்து சந்தித்ததன் மூலம் தமிழக அரசியல் விவகாரத்தில் மத்திய அரசு நேரடியாக தலையிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதை உறுதிபடுத்தும் வகையில் அடுத்த கட்டமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இன்று டெல்லி செல்ல உள்ளார்.

    டெல்லியில் இருந்து சென்னை வந்த தம்பிதுரை அடுத்தடுத்து கடந்த இரு தினங்களாக எடப்பாடியுடன் ஆலோசனை நடத்தினார். நேற்று பிற்பகல் தலைமை செயலகத்துக்கு வந்த தம்பி துரை, எடப்பாடியுடன் சுமார் 1 மணி நேரம் பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வது குறித்து அறிவிப்பு வெளியானது.

    இன்று (செவ்வாய்க் கிழமை) மாலை டெல்லி செல்லும் எடப்பாடி பழனி சாமி நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். அப்போது இருவரும் தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

    குறிப்பாக அ.தி.மு.க. இரு அணிகளின் இணைப்பு பற்றியும் ஓ.பி.எஸ்.க்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் மீண்டும் அ.தி.மு.க.வில் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகள் கொடுப்பது பற்றியும் பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி பேசக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் நாளை நடைபெற உள்ள மோடி - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    அ.தி.மு.க. இரு அணி தலைவர்களும் போட்டி போட்டு பிரதமர் மோடியை சந்திப்பதால் விரைவில் அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சசிகலா இல்லாத அ.தி.மு.க.வை உருவாக்க மத்தியில் ஆளும் பா.ஜ.க. முயற்சி செய்வதாக தெரிகிறது. எனவே அ.தி.மு.க. அம்மா அணி மூத்த தலைவர்கள் பலர் தவிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. இரு அணிகளையும் மத்தியில் ஆளும் பா.ஜ.க., தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது உறுதியாகியுள்ளதால், ஜூலை மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரை அ.தி.மு.க. ஆதரிக்கும் என்பதும் உறுதியாகி விட்டது. கடந்த 2002, 2007, 2012-ம் ஆண்டுகளில் நடந்த ஜனாதிபதி தேர்தல்களின் போதும் பா.ஜ.க. வேட்பாளருக்கு அ.தி.மு.க. ஆதரவு கொடுத்தது குறிப்பிடத்தக்கது. எனவே பா.ஜ.க.வை மீண்டும் ஆதரிப்பதில் அ.தி.மு.க.வினருக்கு எந்த தயக்கமும் இருக்காது.

    ஆனால் பிரதமர் மோடி மூலம் ஓ.பி.எஸ். அணியினர் கொடுத்து வரும் நெருக்கடிகள்தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தவிப்பை உருவாக்குகிறது. இதை சமாளிக்க அ.தி.மு.க. அம்மா அணியினரும் பிரதமர் மோடியை அனுசரித்து செல்லத் தொடங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு சில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டிருப்பது நீறுபூத்த நெருப்பாக மாறி உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில்பாலாஜி, தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட 8 எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினார்கள்.

    அப்போது அவர்கள் “அ.தி.மு.க. இரு அணிகளையும் இணைப்பது, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த தினவிழாவை கொண்டாடுவது உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உடனே எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும்” என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.

    8 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் இந்த நடவடிக்கையால் தலைமை செயலகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 8 பேரும் போர்க் கொடி உயர்த்தி இருப்பதாக பேசப்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.

    அந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் கலந்து கொண்டனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை எப்படி சமாளிப்பது என்று அவர்கள் தீவிர ஆலோசனை நடத்தினார்கள். அதிருப்தியாளர்களுக்கு உடனடியாக பதவி கொடுக்க இயலாது என்பதால் அவர்களை அமைதிப்படுத்த மாற்று ஏற்பாடாக என்ன செய்யலாம் என்று விவாதித்தனர்.

    அது மட்டுமின்றி மத்திய அரசு கொடுக்கும் நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்வது? தினகரன் மீதான வழக்குகளில் எத்தகைய நிலை எடுப்பது? அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை எப்போது கூட்டுவது? நடிகர் ரஜினியால் எழுந்துள்ள அரசியல் பரபரப்பை அடக்குவது எப்படி? என்பது போன்ற பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

    முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தலைமையில் 12 முக்கிய அ.தி.மு.க. நிர்வாகிகள் அதிருப்தியில் மாறி இருப்பதும் எடப்பாடி பழனிசாமிக்கு தலைவலியாக மாறியுள்ளது. சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமையில் 16 எஸ்.சி.,எஸ்.டி. எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு முக்கிய இலாகா வேண்டும் என்று வலியுறுத்தி வருவதும் அ.தி.மு.க. அம்மா அணியினருக்கு அச்சுறுத்தலாக நீடித்தப்படி உள்ளது.

    மொத்தத்தில் சுமார் 30 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களையும் சமரசம் செய்து கொண்டு, மத்திய அரசின் நெருக்கடிகளையும் சமாளித்து கொண்டு செல்ல வேண்டிய நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.

    இதன் காரணமாக அ.தி.மு.க. ஆட்சி ஓராண்டு நிறைவு செய்ததை கூட மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாத நிலையில் அ.தி.மு.க. அம்மா அணியினர் உள்ளனர்.

    Next Story
    ×