search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்த இன்னும் 5 மாதங்கள் ஆகும் - அதிகாரி தகவல்
    X

    ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்த இன்னும் 5 மாதங்கள் ஆகும் - அதிகாரி தகவல்

    ஆர்.கே.நகரில் தேர்தலை நடத்த இன்னும் 5 மாதங்கள் ஆகும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    சென்னை:

    காலியாக உள்ள தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத் தேர்தல் நடத்தி, அடுத்த எம்.எல்.ஏ.யை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவுகள் வலியுறுத்துகின்றன.

    அந்த வகையில் கடந்த பொதுத்தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணமடைந்ததால், வரும் ஜூன் 4-ந் தேதிக்குள் அந்தத் தொகுதிக்கு எம்.எல்.ஏ. ஒருவரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையில் இந்தியத் தேர்தல் கமிஷன் இறங்கியது.

    இந்த நிலையில், வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுத்ததாக அரசியல் கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இதையொட்டி அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.

    வருமான வரித்துறையின் சோதனை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதில், ரூ.89 கோடி அளவுக்கான பண பட்டுவாடா தொடர்பாக ஆவணங்கள் சிக்கின. இதுபற்றி வருமான வரித்துறையுடன் இந்திய தேர்தல் கமிஷன் பேச்சுவார்த்தை நடத்தியது. அந்தத் தொகுதியில் பண பட்டுவாடா நடந்தது அதன் மூலம் உறுதி செய்தது.

    அதைத் தொடர்ந்து ஆர்.கே.நகரில் நடக்க இருந்த இடைத் தேர்தல் வாக்குப்பதிவை ரத்து செய்து நேற்றுமுன்தினம் நள்ளிரவில் இந்தியத் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. பண பட்டுவாடா காரணத்துக்காக தமிழகத்தில் தேர்தல் நிறுத்தப்படும் 3-வது நிகழ்வு இதுவாகும்.

    முன்னதாக இதே குற்றச்சாட்டுக்காக அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நிறுத்தப்பட்டு இருந்தது.

    ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலுக்கான அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அங்கு அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டுவிட்டன. அதுபோல கண்காணிப்புப் பணிக்காக நியமிக்கப்பட்ட குழுக்களில் இடம் பெற்றிருந்தவர்கள், பார்வையாளர்கள் அனைவரும் முன்பு இருந்த அரசுப் பணிக்கு திரும்ப அனுப்பப்படுகின்றனர்.

    இந்தத் தேர்தலுக்காக பல அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து பிறப்பித்திருந்த உத்தரவும் இனி திரும்பப் பெறப்படும். எனவே, அங்கு ஏற்கனவே இருந்த அதிகாரிகள் மீண்டும் பணிக்கு திரும்புவார்கள்.

    ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தலை மீண்டும் எப்போது நடத்த வாய்ப்புள்ளது என்று கேட்டபோது அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    காலியாக உள்ள தொகுதிகளில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தலை நடத்தி எம்.எல்.ஏ.யை தேர்வு செய்யவேண்டும் என மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்கள் கூறுகின்றன.

    ஆனால் 2 காரணங்களுக்காக இடைத் தேர்தலை நடத்தாமல் இருக்கலாம் என்றும் அதே சட்டப்பிரிவுகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 151 ஏ பிரிவின் ஏ மற்றும் பி ஆகிய துணைப் பிரிவுகளில், “காலியாகும் ஒரு தொகுதிக்கு ஒரு ஆண்டுக்குள் தேர்தல் நடக்க வாய்ப்பிருக்கும் சூழ்நிலையில் அங்கு இடைத்தேர்தல் நடத்தத் தேவையில்லை.

    மேலும், 6 மாத காலத்துக்குள் அங்கு தேர்தல் நடத்த இயலாத இக்கட்டான சூழ்நிலை இருக்கும்பட்சத்தில் அதுபற்றி மத்திய அரசிடம் தெரிவித்துவிட்டு இடைத் தேர்தலை நிறுத்தி வைக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

    எனவே, ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஜூன் 4-ந் தேதிக்குள் இடைத் தேர்தலை நடத்தி எம்.எல்.ஏ.யை தேர்வு செய்யும் கட்டாயம் இந்திய தேர்தல் கமிஷனுக்கு இல்லை.

    அந்தத் தொகுதியில் நடந்த பண பட்டுவாடா விபரங்களையும், உடனே தேர்தல் நடத்தினால் பண பட்டுவாடாவின் தாக்கம் அந்தத் தேர்தலில் எதிரொலிக்கக் கூடும் என்ற தகவலை மத்திய அரசிடம் இந்தியத் தேர்தல் கமிஷன் தெரிவிக்கும். அதன்படி, பார்த்தால், இன்னும் 5 மாதங்களுக்கு ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

    வருமான வரித்துறையிடம் அறிக்கை பெற்றுவிட்டு இந்திய தேர்தல் கமிஷன் மேல் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. அதன்படி, அ.தி.மு.க. அம்மா அணியின் வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு, ‘ஏன் உங்களை வேட்பாளர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கூடாது’ என்று விளக்க நோட்டீசு அனுப்பப்படும்.



    அவர் பதில் கொடுப்பதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். அந்த வகையில் இந்த நடவடிக்கை முடிவதற்கு சில மாதங்கள் ஆகிவிடும். அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் டி.டி.வி.தினகரன் 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

    அதுபோல இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கும் 17-ந் தேதியன்று விசாரணைக்கு வருகிறது. விசாரணை முடிந்து சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டால் பிரச்சினை இல்லை. ஆனால் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும்வரை சின்னம் தொடர்பாக முடிவு செய்யப்படவில்லை என்றால், ஏற்கனவே பெற்றிருந்த சின்னங்களை அ.தி.மு.க.வின் 2 அணியினரும் மீண்டும் பெறுவதில் சிக்கல் இருக்காது.



    தேசியக் கொடியை தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தியது கடும் நடவடிக்கைக்கு உரிய குற்றமாகும். அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதுதொடர்பான புகைப்பட ஆதாரங்களில் காணப்படும் நபர்களுக்கு 3 ஆண்டு வரை ஜெயில் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

    அதுபோல சுயேச்சை வேட்பாளர்கள் சிலர் திடீரென்று வேறு வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்தது தேர்தல் நடத்தை விதிமீறல் குற்றமாகும். அதுபோன்ற சிலரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷனுக்கு தேர்தல் பார்வையாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

    இந்தத் தேர்தலை முன்னிட்டு 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் கமிஷனுக்கு ரூ.1.10 கோடி செலவாகியுள்ளது. இங்கு போட்டியிட மனு செய்து இருந்த வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இதற்காக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×