search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போயஸ்கார்டனை கைப்பற்றவே ஓ.பி.எஸ் - தினகரன் அணி குறியாய் இருக்கிறார்கள்: குஷ்பு
    X

    போயஸ்கார்டனை கைப்பற்றவே ஓ.பி.எஸ் - தினகரன் அணி குறியாய் இருக்கிறார்கள்: குஷ்பு

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும், டி.டி.வி. தினகரனும் போயஸ் கார்டனை கைப்பற்றவே குறியாய் இருக்கிறார்கள் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தண்டையார்பேட்டை பொதுக் கூட்டத்தில் பேசினார்.
    சென்னை:

    ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசை ஆதரித்து வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் இரா.மனோகர் தலைமையில் தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் அருகில் நடந்த கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசியதாவது:-

    ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க மத்திய போலீஸ் படையை தீவிரப்படுத்துகிறது தேர்தல் ஆணையம்.

    அப்படியென்றால் கருப்பு பணத்தை பிரதமர் மோடி எப்படி ஒழித்ததாக கூற முடியும். உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. பணம் கொடுத்து தான் வெற்றி பெற்றதா என்ற சந்தேகம் எழுகிறது.

    தேர்தல் பிரசாரம் என்றால் எப்போதும் எதிர்க்கட்சிகள் மீதுதான் குற்றச்சாட்டுகள் வைக்கப்படும். ஆனால் இந்த தேர்தலில் ஓ.பி.எஸ்.- டி.டி.வி.தினகரன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.



    ஓ.பன்னீர் செல்வமும், டி.டி.வி. தினகரனும் போயஸ் கார்டனை கைப்பற்றவே குறியாய் இருக்கிறார்கள். இரட்டை இலை சின்னம் கேட்டு டெல்லி செல்லக்கூடிய அ.தி.மு.க. வினர் விவசாயிகள் பிரச்சினைகளை கொண்டு செல்லவில்லை.

    இந்த தேர்தலில் தி.மு.க.வை வெற்றி பெறச் செய்தால் பல்வேறு நலத் திட்டங்களை செய்து கொடுக்கும்.

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று விவசாயிகளை சந்திக்காமல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    மத்தியில் பல நல்ல திட்டங்களை காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்தது. மக்களுக்கு நன்மை செய்யும் கட்சி காங்கிரசும், தி.மு.க.வும் தான்.

    இன்னும் 6 மாதத்தில் தமிழகத்தில் பொதுத் தேர்தல் வரும். மக்கள் ஆட்சியாளர்கள் மீது கோபத்தில் இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    குஷ்புவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- உங்கள் பார்வையில் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?

    பதில்:- நிச்சயமாக தி.மு.க.தான் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது. கடந்த தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து புதுமுகமான சிம்லா முத்துச்சோழன் போட்டியிட்டார். ஜெயலலிதா குறிப்பிட்டு சொல்லும்படி மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்கவில்லை. 39 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில்தான் ஜெயித்தார்.

    கே:- அ.தி.மு.க.வின் இரு அணிகள் பற்றி...?

    ப:- இரு அணிகளும் மக்களுக்கு துரோகம் செய்கின்றன. மக்களை ஏமாற்ற எல்லாவழிகளையும் டி.டி.வி. தினகரன் செய்கிறார். 57 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என்கிறார். தமிழகத்தின் நிதி நிலைமையில் இது சாத்தியமா? ஆளும் கட்சிக்கு வாக்களித்தால் நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்படுமாம்.

    அப்படியானால் 122 தொகுதிகளுக்குத்தான் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரா? இல்லை அனைத்து தொகுதிகளுக்கும் முதல்வரா? என்பதற்கு பதில் சொல்லுங்கள்.

    ஒருவருக்கொருவர் துரோகம் செய்ததாக குற்றம் சாட்டுகிறார்கள். இருவருமே மக்களுக்குத்தான் துரோகம் செய்துள்ளார்கள். இரட்டை இலையை வாங்க எடுத்த முயற்சியை போராடும் விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க எடுத்தீர்களா? பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை பாராளுமன்றத்தில் ஏன் பேசவில்லை?

    இரு அணியும் ஒன்றாக இருந்ததுதானே. ஊழல் பற்றி பேச இவர்களுக்கு தகுதி இல்லை. ஊழல் வழக்கில் ஜெயலலிதா முதல் குற்றவாளி. சசிகலா ஜெயிலில் இருக்கிறார்.

    ஜெயலலிதா சமாதிக்குள் இருப்பது வேதனையானது. அவரது சமாதியில் சசிகலா செய்தது சபதமா? சாபமா? என்பது தெரியவில்லை. இப்போது அவர் உயிரோடு இல்லை. அவர் உயிரோடு இருந்தவரை எல்லோரும் வாயில்லா பூச்சிகளாகவே இருந்தார்கள். தினகரனோ மற்றவர்களோ வெளியே தலைகாட்ட முடியவில்லை.

    ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது உப்புமா சாப்பிட்டார். இட்லி சாப்பிட்டார் என்றெல்லாம் பேசினார்கள். லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே 'நான் வந்து சிகிச்சை அளித்த விவரம் மட்டும்தான் எனக்கு தெரியும். அதற்கு முன்பு நடந்த சிகிச்சை முறைகள் எதுவும் தனக்கு தெரியாது' என்றாரே. அதை மூடி மறைத்து விட்டார்களே ஏன்? மரணத்தில் மர்மம் இருப்பது வெள்ளை அறிக்கையாக வெளிவந்தே தீரவேண்டும்.

    கே:- பணப்பட்டுவாடா நடப்பதாக பா.ஜனதா குற்றம் சாட்டி உள்ளதே?



    ப:- கருப்பு பணத்தை ஒழித்துவிட்டதாக அவர்கள் தான் சொன்னார்கள். அப்படியானால் அங்கு கொடுப்பது வெள்ளைப்பணமா? கருப்பு பணமா? இல்லை செக்கா? அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

    டெல்லியில் மோடி வீட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் விவசாயிகள் போராடுகிறார்கள். ஆனால் அவருக்கு காதும் கேட்கவில்லை. கண்ணும் தெரியவில்லை. இவர்களால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×