search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் தீபா 6 நாட்கள் சூறாவளி பயணம்: திருச்சியில் 5-ந்தேதி தொடங்குகிறார்
    X

    தமிழகம் முழுவதும் தீபா 6 நாட்கள் சூறாவளி பயணம்: திருச்சியில் 5-ந்தேதி தொடங்குகிறார்

    ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தமிழகம் முழுவதும் 6 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின்போது அவர் தனக்கு ஆதரவு அளிக்கும் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
    சென்னை:

    மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதி தனது எதிர்கால திட்டம் குறித்து அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் இருந்து அ.தி. மு.க. தொண்டர்கள் தினமும் தி.நகரில் உள்ள தீபா வீட்டுக்கு வந்து தங்கள் ஆதரவை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அவர்கள் மத்தியில் தினமும் தீபா பேசி வருகிறார்.

    நேற்று திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் தீபா வீட்டில் குவிந்தனர். அவர்கள் மத்தியில் தீபா பேசியதாவது:-

    நீங்கள் தொடர்ந்து எனக்கு ஆதரவு அளித்து வருகிறீர்கள். அது எனக்கு உற்சாகமாகவும், சந்தோ‌ஷமாகவும் இருக்கிறது. தமிழ்நாடும், தமிழ் மக்களும் என்னுடைய இரண்டு கண்கள். அதை பின்பற்றித்தான் எனது மக்கள் பணி இருக்கும். எவ்வளவு தடைகள் வந்தாலும் அதை தகர்த்து மக்கள் பணிகளை நிறைவேற்றுவேன்.

    ஜெயலலிதாவின் பெயரையும், புகழையும் காப்பாற்றுவேன். அவருடைய கனவை நனவாக்கும் கடமை நமக்கு இருக்கிறது. தொடர்ந்து உங்கள் அனைவரின் கருத்துக்களையும் கேட்கிறேன். அனைவரின் ஆதரவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு தீபா பேசினார்.

    இந்த நிலையில் தீபா தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின்போது அவர் தனக்கு ஆதரவு அளிக்கும் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

    தீபா தனது சுற்றுப்பயணத்தை திருச்சியில் வருகிற 5-ந்தேதி தொடங்குகிறார். அப்போது திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளை வரவழைத்து ஆலோசனை நடத்துகிறார்.

    இதேபோல் தமிழகம் முழுவதும் 6 நாட்கள் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது ஒவ்வொரு பகுதியிலும் சுற்றுப்பயணம் செய்யும்போது அந்த மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை நடத்துகிறார். நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கருத்துக்களை கேட்டகிறார்.

    தீபாவின் பாதுகாப்புக்காக அவரது தீவிர ஆதரவாளர்கள் 30 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை தயாரித்து வழங்கும் பணி முடிந்துள்ளது. தீபா சுற்றுப்பயணம் செய்யும்போது இவர்கள் 30 பேரும் அவருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    சுற்றுப்பயணத்தின்போது தீபா கையெழுத்து இயக்கம் ஒன்றையும் நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் விண்ணப்பம் ஒன்று வழங்கப்படுகிறது. அதில் ஒவ்வொரு நிர்வாகியும் தாங்கள் அ.தி.மு.க.வின் கிளைக் கழகத்தில் எந்த பதவியை வகிக்கிறோம் என்பதை எழுதி, நான் இன்று முதல் தீபாவின் ஆதரவாளராக அவரது தலைமை ஏற்று பணி செய்ய உறுதி ஏற்கிறேன் என்று எழுதி கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களை தீபா பெறுகிறார்.

    அரியலூர் கல்லூரி சாலையில் ஜெ.தீபா பேரவை தலைமை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அலுவலகத்தை முன்னாள் எம். எல்.ஏ. பொன். இளவழகன் திறந்து வைத்து பேசியதாவது:-

    முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, மக்களால் சகித்து கொள்ள முடியாத நிகழ்வுகள் ஆட்சியிலும், கட் சியிலும் நடைபெற்று வருகின்றன. ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள அ.தி. மு.க.வில் 2,600 பேர் மட்டுமே ஒரு நபரை பொதுச்செயலாளராக நியமித்துள்ளனர். 99.90 சதவீத தொண்டர்கள் ஜெ.தீபாவுக்கு ஆதரவான மனநிலையில் உள்ளனர்.

    திருச்சியில் பிப்ரவரி 24-ந்தேதி தீபா கலந்து கொள்ளும் மாநில மாநாடு நடைபெற உள்ளது. வரும் உள்ளாட்சி தேர்தலில் தீபா நிறுத்தும் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவார்கள்.

    அதன் பிறகு ஆட்சியும், கட்சியும் அவரை தேடி வரும் சூழ்நிலை உருவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெரம்பலூரில் நடந்த தீபா ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    1.50 கோடி தொண்டர்கள் தீபா பக்கம் உள்ளனர். தீபா அ.தி.மு.க. பொதுச்செயலாளராகி முதல்வராக பதவியேற்கும் காலம் வெகு விரைவில் வரும்.

    சட்டரீதியாக தீபா பேரவை தொடங்கப்பட உள்ளது. அதற்கான அதிகார பூர்வமான உறுப்பினர் படிவம் விரைவில் வழங்கப்படும். மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குமரி மாவட்டத்திலும் அ.தி.மு.க.வினர் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தீபா பேரவையின் அலுவலகம் நாகர்கோவில் செட்டிக்குளம் சந்திப்பில் திறக்கப்பட்டது. ரிஷிவந்தியம் தொகுதி முன்னாள் அ.தி. மு.க. எம்.எல்.ஏ. தர்மலிங்கம் விழாவில் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் தர்மலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 1-ந் தேதி 3 ஆயிரம் தொண்டர்களுடன் தீபாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தேன். தமிழகம் முழுவதும் தீபாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதி அன்று முக்கிய அறிவிப்புகளை தீபா வெளியிடுவார்.

    தமிழகம் முழுவதும் தீபா சுற்றுப்பயணம் செய்யவும் உள்ளார். ஜெயலலிதா சாதாரண தொண்டரையும் அமைச்சராக்கி அழகு பார்த்தவர். வரும் தேர்தல்களில் தீபா பேரவை போட்டியிடும்.

    தொண்டர்கள், தாய்மார்கள் ஆதரவோடும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நல்லாசியுடனும் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் தீபா வெற்றி பெறுவார். அ.தி.மு.க.வில் இருந்து மேலும் பல முக்கிய பிரமுகர்களும் தீபா பேரவைக்கு வர உள்ளனர். பதவியில் இருப்பவர்கள் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள். சிறிது காலத்தில் அவர்களும் தீபா பக்கம் வந்து விடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×