search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகளுக்கு உடனே வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்: ராமதாஸ்
    X

    விவசாயிகளுக்கு உடனே வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்: ராமதாஸ்

    விவசாயிகளுக்கு உடனே வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்துவதற்காக வந்த மத்தியக் குழு, அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு சென்னை திரும்பியிருக்கிறது. குறைந்த உறுப்பினர்களுடன் வந்து அவசர, அவசரமாக நடத்தப்பட்ட ஆய்வு பெயரளவில் தான் அமைந்திருந்ததே தவிர, களநிலையை கண்டறியும் வகையில் அமையவில்லை. இந்த ஆய்வு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

    தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் பருவ மழை பொய்த்திருக்கிறது. வரலாறு காணாத வறட்சியால் தமிழகத்தில் குறுவை, சம்பா ஆகிய இரு பருவ நெற்பயிர்களும், பிற பயிர்களும் கருகிவிட்டன. பயிர்கள் கருகியதால் ஏற்பட்ட இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் இதுவரை 250-க் கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்திருக்கின்றனர்.

    சென்னை வந்து கடந்த 23.01.2017 அன்று முதல்-அமைச்சரை சந்தித்து பேசிய மத்தியக் குழு, அடுத்த இரு நாட்களில் கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு திரும்பியுள்ளது. இது எவ்வாறு சாத்தியம் என்பது தெரியவில்லை. மொத்தம் 9 பேர் கொண்ட மத்தியக் குழு தமிழகத்திலுள்ள அதிகாரிகளையும் சேர்த்துக் கொண்டு நான்கு குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்திருக்கிறது. எப்படி பார்த்தாலும் ஒரு குழு ஒரு நாளைக்கு 3 முதல் 4 மாவட்டங்களில் ஆய்வு செய்ய வேண்டும்.

    வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து பாதிப்பின் அளவை கணக்கிடுவதற்கு பதிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்காட்சியை பார்க்கும் பார்வையாளர்களைப் போல சுற்றுலா சென்று திரும்பி வந்திருக்கின்றனர் மத்தியக் குழுவினர். மத்தியக் குழுவின் ஆய்வு திருப்தி யளிக்கும் வகையில் இல்லை.

    மத்திய குழுவினரின் ஆய்வு ஏமாற்று வேலையாகவும், கண் துடைப்பு நாடகமாகவும் அமைந்திருக்கிறது என்பது தான் உண்மையாகும். இந்த ஆய்வின் மூலம் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு நியாயமான இழப்பீடு கிடைக்க வாய்ப்பில்லை.

    மத்திய அரசு வறட்சி நிவாரண நிதி வழங்கும் வரை காத்திருந்தாலோ, மத்திய அரசு வழங்கும் நிதியைத் தான் உழவர்களுக்கு பகிர்ந்து வாழ வேண்டும் என்றாலோ விவசாயிகளின் துயரங்களை எள் முனையளவும் தீர்க்க முடியாது; உழவர்களின் தற்கொலைகளையும் தடுக்க முடியாது. எனவே, மத்திய அரசு நிதி உதவி வழங்கும் வரை காத்திருக்காமல் தமிழக அரசே அதன் சொந்த நிதியில் இருந்து நிவாரணம் வழங்க வேண்டும்.

    பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும், நிலமற்ற தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.25 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும். நிபந்தனையின்றி அனைத்து உழவர்களின் பயிர்க்கடனையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். அத்துடன், அதிர்ச்சியிலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்த 250க்கும் மேற்பட்ட உழவர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
    Next Story
    ×