என் மலர்

  செய்திகள்

  தமிழக அமைச்சர்கள் விவசாயிகள் மரணத்தை கொச்சைப் படுத்துவதா?: முத்தரசன் கண்டனம்
  X

  தமிழக அமைச்சர்கள் விவசாயிகள் மரணத்தை கொச்சைப் படுத்துவதா?: முத்தரசன் கண்டனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விவசாயிகளின் மரணம் குறித்து அமைச்சர்களின் கருத்து மிகத் தவறானது மட்டுமின்றி கண்டனத்திற்குரியது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

  சென்னை:

  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  கடலூர் மாவட்டத்தில் பாதிப்புகளை பார்வையிடச் சென்ற தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், அதேபோல் திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் விவசாயிகள் மரணத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் பேட்டி அளித்துள்ளனர்.

  வறட்சியால் விவசாயிகள் இறப்பு என்பது பொய்யான, தவறான தகவல் என்றும், வயது முதிர்வு, நோய், உடல் உபாதைகள் போன்ற காரணங்களால் இறந்துள்ளனர் என்றும், எதிர்க்கட்சிகள் தேவையற்ற பீதியை ஏற்படுத்தி ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.

  அமைச்சர்களின் கருத்து மிகத் தவறானது மட்டுமின்றி கண்டனத்திற்குரியதாகும். அமைச்சர்கள் இருவரும் அன்றாட நாளிதழ்களை தவறாமல் படிப்பதுடன் தொலைக்காட்சி செய்திகளையும் பார்த்திட வேண்டும்.

  அவர்களது கட்சி நாளேட்டையும், தொலைக்காட்சியையும் மட்டுமே பார்த்து விட்டு தாங்கள் அமைச்சர்களாக நீடிக்கிறோமா என்ற செய்திகளை மட்டும் பார்த்து மனம் திருப்தி அடையக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.

  தமிழ்நாட்டை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவித்து போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

  இறந்த விவசாயிகள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம், விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும், ஆண்டு முழுவதும் வேலை, தின ஊதியம் ரூ.400, பயிர்க்கடன்கள் முழுமையாக ரத்து செய்தல், சென்ற ஆண்டு கொடுக்காமல் உள்ள பயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்கல், கரும்பு விவசாயிகளுக்கான பாக்கித் தொகை கொடுத்தல், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4000-ம், பொங்கலுக்கு அரிசி, வெல்லம், பருப்பு, கரும்பு இவைகளுடன் ரூ.500 ரொக்கம் விலையில்லா அரிசி மாதம் 30 கிலோ ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துதான் போராட்டமும், அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. என்பதனை இரு அமைச்சர்களுக்கும் நினைவூட்டுகின்றோம்.

  முதல்-அமைச்சர், இரு அமைச்சர்களின் பொறுப்பற்ற பேச்சுகளை கண்டிப்பதுடன் விரைவான நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமாய் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  Next Story
  ×