என் மலர்

  செய்திகள்

  13 மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை
  X

  13 மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா 13 மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
  சென்னை:

  அ.தி.மு.க. வளர்ச்சி பணிகள் குறித்து 4-ந்தேதி(நேற்று) முதல் 9-ந்தேதி வரை மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா கூறி இருந்தார்.

  4-ந்தேதி(நேற்று) காலையில் வடசென்னை வடக்கு, தெற்கு, தென்சென்னை வடக்கு, தெற்கு, காஞ்சீபுரம் கிழக்கு, மத்தியம், மேற்கு, திருவள்ளூர் கிழக்கு ஆகிய அ.தி.மு.க.வின் 8 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

  அதன்படி நேற்று காலை அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா காலை 10.45 மணியளவில் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் முதல் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த அவரை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வாசலில் நின்று வரவேற்றனர்.

  பின்னர் சசிகலா தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் காலை 10.50 மணியளவில் தொடங்கியது.

  இந்த கூட்டத்தில் சசிகலா பேசியதாக வெளியான தகவல் வருமாறு:-

  அம்மா(ஜெயலலிதா) இல்லாத நேரத்தில் கட்சியை ஒருங்கிணைத்து வலுப்படுத்த வேண்டிய கால கட்டத்தில் நாம் இன்று இருக்கிறோம். சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் மூலம் ஜெயலலிதாவின் மரணம் குறித்து அவதூறு பரப்புகிறார்கள். இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் அவர்களது சூழ்ச்சி, சூட்சுமங்களை முறியடிக்க வேண்டும்.

  ஜெயலலிதா மரணம் குறித்து பரப்பப்படும் அவதூறுகள் பொய்யானவை என்று மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். தெருமுனை கூட்டங்கள் வாயிலாகவும் மக்களிடம் தெளிவுப்படுத்த வேண்டும்.

  எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை வெகு விமர்சையாக கொண்டாட வேண்டும் என்று அம்மா என்னிடம் அடிக்கடி கூறி வந்தார். எனவே அவரது ஆசையை நிறைவேற்றும்விதமாக எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை ஜனவரி 17-ந்தேதி முதல் ஓராண்டுக்கு வெகு விமர்சையாக கொண்டாட வேண்டும். ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கவிதை போன்ற பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கிட வேண்டும். பரிசளிப்பு விழாவில் நானும் கலந்து கொள்வேன். எம்.ஜி.ஆரின் தபால் உறை, நாணயம் வெளியிடுவதற்கு தலைமை கழகம் முயற்சி எடுத்து வருகிறது.

  பிப்ரவரி 24-ந்தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாளையும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும்.

  இவ்வாறு சசிகலா பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

  திருவள்ளூர் மேற்கு, வேலூர் கிழக்கு, மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, தெற்கு ஆகிய 5 மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதி செயலாளர்கள், தொகுதிவாரியான பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டத்தை சேர்ந்த எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், சார்பு அமைப்புகளின் மாவட்ட செயலாளர்களுடன் நேற்று மாலையில் சசிகலா ஆலோசனை நடத்தினார்.

  மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன், செய்தி தொடர்பாளர் பொன்னையன் உள்பட மூத்த நிர்வாகிகளும், அ.தி.மு.க.வின் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டம் தொடங்கியவுடன் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பதவியேற்ற சசிகலாவுக்கு மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்துக் கூறினர். தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்க வேண்டுகோள் விடுத்தனர்.

  தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் இன்று(வியாழக்கிழமை) காலையிலும், சேலம் மாநகர், சேலம் புறநகர், நாமக்கல், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் மாலையிலும் சசிகலா ஆலோசனை நடத்த உள்ளார்.

  Next Story
  ×