search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராம மோகனராவை பணிநீக்கம் செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
    X

    ராம மோகனராவை பணிநீக்கம் செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

    தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட ராம மோகனராவை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்துள்ளார்.
    தர்மபுரி:

    தர்மபுரி எம்.பி. டாக்டர் அன்புமணி ராமதாஸ், தர்மபுரி மாவட்டம் கடத்தூர், பொம்மிடி பகுதிகளில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது கடத்தூரில் உள்ள ஏரி தூர்வாரும் பணியை அவர் பொக்லைன் எந்திரம் ஓட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    தமிழகத்திற்கு தேவையான நீர்மேலாண்மை திட்டங்களை அ.தி.மு.க., தி.மு.க. அரசுகள் செயல்படுத்தவில்லை.

    தமிழகத்தில் மொத்தம் உள்ள விவசாய சாகுபடி பரப்பு 47 லட்சம் ஹெக்டேர். இதில் 17 லட்சம் ஹெக்டர் மானாவாரி சாகுபடி பரப்பு. மீதமுள்ள 30 லட்சம் ஹெக்டேர் மட்டுமே பாசனவசதி தேவையுள்ள விவசாய நிலங்கள் ஆகும். தமிழகத்தில் நிறைவேற்றப்படாமல் உள்ள நீர்பாசன திட்டங்களை முழுமையாக செயல்படுத்த ரூ.40 ஆயிரம் கோடி தேவை. இதன்படி ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதியை ஓதுக்கீடு செய்து நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றினால் தமிழகத்தின் சராசரி மழையளவான 922 மி.மீ. மழையால் கிடைக்கும் நீரை கடலில் கலக்காமல் சேமிக்க முடியும். இதன் மூலம் தமிழகம் முழுவதும் செழுமையான பகுதியாக மாறும்.

    பசுமைத்தாயகம் அமைப்பின் மூலம் தமிழகத்தில் இதுவரை 1,000 ஏரிகளை தூர்வாரி உள்ளோம். தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் கடந்த 2001-2002-ம் ஆண்டுகளில் 100 ஏரிகளை தூர்வாரி உள்ளோம்.

    ஏரிகளை தூர்வாரும் பணியை மக்கள் இயக்கமாக மாற்றி செயல்படுத்த வேண்டும். பா.ம.க.விற்கு 5 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பு கிடைத்தால் தமிழகத்தில் நீராதாரங்களை பாதுகாக்கவும், விவசாயத்தையும், விவசாயிகளை பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுப்போம்.

    தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 610 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் பல ஆண்டுகளாக முறையாக தூர்வாரப்படவில்லை. தர்மபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 10 நீர்பாசன திட்டங்களை ரூ.250 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தினால் இந்த மாவட்டத்தை சேர்ந்த 3 லட்சம் இளைஞர்கள் வேலைதேடி வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் சென்றுள்ள நிலை மாறும்.

    இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி பேசினார்.

    இதைத்தொடர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பொம்மிடி ரெயில்நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். ரெயில் பயணிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    பொம்மிடி ரெயில்நிலையத்தில் குடிநீர், கழிப்பறை வசதிகளை மேம்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். இந்த வழியாக திருப்பதி செல்லும் 2 ரெயில்கள் பொம்மிடி ரெயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி செல்லவேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தின் தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட ராம மோகனராவை பணிநீக்கம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×